இறந்த தந்தையின் நிறைவேறா ஆசை; 50 முதியவர்களை விமானத்தில் பறக்க வைத்த திருப்பூர் தொழிலதிபர்!
தன் தந்தையை விமானத்தில் அழைத்துச் செலல் முடியவில்லையே என்ற தனது ஏக்கத்தை, தன் ஊரில் வசிக்கும் 50 முதியவர்களை கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் சென்று நிறைவேற்றியுள்ளார் பாலன் என்ற திருப்பூர் தொழிலதிபர்.
பெற்றோர்க்கு தங்கள் குழந்தைகளுக்கு அதைச் செய்ய வேண்டும், இதைச் செய்ய வேண்டும் என ஆயிரம் கனவுகள் இருப்பது போலவே, பெற்றவர்களுக்கு இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்ய வேண்டும் என ஆயிரம் ஆசைகள் மகன்/மகள்களுக்கு இருக்கும். ஆனால், முந்தையதைப் போல், பிந்தையது அவ்வளவு சுலபமானது அல்ல.
பிள்ளைகள் முட்டி மோதி, வாழ்க்கையில் நல்ல நிலையை அடையும் தருவாயில், பல பெற்றோர்கள் உயிருடன் இருப்பது இல்லை. இதனால் தங்களது ஆசையை நிறைவேற்ற முடியவில்லையே என்ற ஏக்கம் பிள்ளைகள் மனதில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.
ஆனால், அப்படி தங்களுக்குள் நினைத்து, நினைத்து உருகிக் கொண்டிருப்பதைவிட, தனது பெற்றோருக்கு செய்ய முடியாததை, அவர்களது வயதில் இருக்கும் மற்றவர்களுக்கு செய்து கொடுத்து, நிம்மதியைத் தேடிக் கொள்ள முடியும் என தன் செயலின் மூலம் நிரூபித்திருக்கிறார் பாலன் என்ற தொழிலதிபர்.
இந்த நெகிழ்ச்சியான சம்பவம் திருப்பூரில்தான் நடந்துள்ளது...

நிறைவேறாத ஆசை
திருப்பூரைச் சேர்ந்த பனியன் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பாலன். சுல்தான்பேட்டையைச் சேர்ந்த இவர், தன் தந்தையை ஒரு முறையாவது விமானத்தில் அழைத்துச் செல்லவேண்டும் என பெரிதும் ஆசைப்பட்டுள்ளார். ஆனால், அது நிறைவேறாமல் போய்விட்டது.
தன் ஆசை நிறைவேறாமல் போய் விட்டதே என அதை அப்படியே மனதிற்குள் போட்டு வைக்காமல், அடிக்கடி இது குறித்து தன் நண்பர்களிடம் பாலன் பேசி வந்துள்ளார். அப்போதுதான் அவருக்கு ஒரு யோசனை உதித்துள்ளது. அதன்படி, தன் தந்தைக்கு நிறைவேற்ற முடியாத தனது ஆசையை, அவர் வயதுள்ள மற்ற முதியவர்கள் மூலம் நிறைவேற்றி வைத்திட முடிவு செய்தார் அவர்.
இதையடுத்து, தன் நண்பர்கள் உதவியுடன் சுல்தான்பேட்டையில் உள்ள 50 முதியவர்களை கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் செல்ல முடிவு செய்தார் பாலன். முதியவர்கள் என்பதால் அவர்களை கவனித்துக் கொள்வதற்கு என தனி குழு நியமிக்கப்பட்டதுடன், மருத்துவக் குழுவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
முதியவர்களின் மகிழ்ச்சி
திருப்பூரில் இருந்து கோவைக்கு வேன் மூலம் அழைத்துச் செல்லப்பட்ட முதியவர்கள் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு மகாபலிபுரம், மெரினா கடற்கரை, வடபழனி முருகன் கோயில், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என பல தலைவர்களின் சமாதிகளுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர், மெட்ரோ ரயிலிலும் பயணித்து குதூகலப்பட்டனர். இரண்டு நாட்கள் சுற்றுலா முடித்து "வந்தே பாரத்" ரயில் மூலம் மீண்டும் திருப்பூருக்கு அழைத்து வரப்பட்டனர்.

இதுகுறித்து ஊடகங்களுக்கு பாலன் அளித்துள்ள பேட்டியில்,
“என் அப்பாவை விமானத்தில் அழைத்துச் செல்ல வேண்டும் என நான் ஆசைப்பட்ட போது, அதற்கான சந்தர்ப்ப சூழ்நிலை அமையவில்லை. தற்போது அதற்கான வசதி என்னிடம் இருந்தும் என் தந்தை உயிரோடு இல்லை. அதனால், என் தந்தை வயதில் இருக்கும் நட்பு வட்டத்தில் உள்ள குடும்பங்களில் உள்ள முதியவர்களை விமானத்தில் அழைத்துச் சென்றேன். விமானத்தில் அவர்கள் சென்றபோது அடைந்த ஆனந்தம் 'மகிழ்வித்து மகிழ்' என்ற ஆத்ம திருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது,” என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
விமானப் பயணம் என்பதை கனவிலும் நினைத்திராத அந்த முதியவர்களுக்கு, பாலன் ஏற்படுத்திக் கொடுத்த இந்த வாய்ப்பு, அவர்களைப் பெரிதும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. தங்களது ஆனந்தத்தை வெளிப்படுத்தும் வகையில், அவர்கள் சுற்றுலா சென்ற வேனில் மற்றும் கடற்கரையில் ஆடி, ஓடி, நடனம் ஆடி, பாட்டுப் பாடிய வீடியோக்கள் தற்போது சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

5ஆம் வகுப்பு அரசுப்பள்ளி மாணவர்களின் விமானப்பயண கனவை நிஜமாக்கிய தலைமை ஆசிரியர்!