ஒலிம்பிக் வெண்கலப் பதக்க நாயகன் ஆன விவசாயி மகன் 'சரப்ஜோத் சிங்'
விவசாயியான சரப்ஜோத் சிங்கின் தந்தை துப்பாக்கிச்சுடுதலை கற்பது என்பது செலவு அதிகமாகும் ஒரு விவகாரம் என்று யோசித்திருக்கிறார்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி பிரிவில் மனு பாக்கருடன் சேர்ந்து வெண்கலம் வென்ற சரப்ஜோத் சிங் ஒரு விவசாயியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இது பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள இரண்டாவது பதக்கம்.
ஹரியானாவின் அம்பாலா மாவட்டத்தின் தீன் என்ற கிராமத்தைச் சேர்ந்த சரப்ஜோத் சிங். ஜத்திந்தர் சிங் - ஹர்தீப் கௌர் இணையின் மகனான இவர் சிறு வயதில் இருந்த துப்பாக்கிச்சுடுதலில் ஆர்வங்கொண்டவர். கால்பந்து மேலும் ஆர்வம் இருந்தாலும் அதைவிட துப்பாக்கிச்சுடுதலில் ஆர்வம் அதிகமாக ஏற்பட்டுள்ளது. இதனால், 2014ஆம் ஆண்டில் துப்பாக்கிச் சுடுதலில் தனக்கு விருப்பம் இருப்பதாக தனது தந்தையிடம் சென்று கூறியுள்ளார். தந்தையிடம் கூறும்போது சரப்ஜோத் சிங்கிற்கு வயது 13 மட்டுமே.
முதலில் பொழுதுபோக்காகத்தான் துப்பாக்கிச் சுடுதலில் ஈடுபட்டார், பிறகு சீரியஸாகவே ஒரு வீரராக எழுச்சி பெற்றார். விவசாயியான அவரின் தந்தை துப்பாக்கிச்சுடுதலை கற்பது என்பது செலவு அதிகமாகுமே என்று யோசித்திருக்கிறார். இருந்தாலும் மகனின் கனவை நனைவாக்க அவரை பயிற்சியில் சேர்த்துள்ளார்.
2018ஆம் ஆண்டில் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில் சரப்ஜோத் சிங் தங்கம் வென்று நம்பிக்கை அளித்துள்ளார். அந்த நம்பிக்கையே தற்போது இந்தியாவுக்கு வெண்கலத்தை பெற்று கொடுத்திருக்கிறது.
குவாலிபிகேஷன் சுற்றில் இவர் 9வது இடத்தில் முடிந்தார், அதிக அழுத்தத்தினால் தங்கம் வெள்ளி சுற்றுக்குள் நுழைய முடியவில்லை. செவ்வாய்க்கிழமை அவர் மோசமாகத் தொடங்கினார், ஆனால், சிறிது நேரத்திற்குப் பிறகு தன் மன ஒத்திசைவைக் கண்டடைந்தார்.
சரப்ஜோத் தன்னை "பொழுதுபோக்கு துப்பாக்கி சுடும் வீரர்" என்றே அழைத்துக் கொண்டார், சீரியஸ் ஸ்போர்ட்ஸ் வீரராக தன்னை அவர் வரிந்து கொள்ளவில்லை. கால்பந்தில்தான் அவரது ஆர்வம் இருந்தது. கோடை விடுமுறைகளில் நண்பர்களுடன் துப்பாக்கிச் சூடு விளையாட்டிற்கு இவர் சென்றது கூட பெற்றோருக்குப் பிடிக்கவில்லை.
இவரது தந்தை ஜதீந்தர் சிங் ஒரு விவசாயி. ஷூட்டிங் என்பது செலவு அதிகமாகும் ஒரு விளையாட்டு என்பது அவருக்குத் தெரியும். இருப்பினும், மகனின் ஆசையை அவர் தடுக்கவில்லை. சரப்ஜோத் சிங் 50கிமீ ரயிலில் பயணம் செய்து துப்பாக்கிச்சுடுதல் பயிற்சி செய்து விட்டு தாமதமாக வருவார். சரப்ஜோத்திற்கு அப்போது வயது 16.
"ஒரு கட்டத்தில் எனக்கு இது சோர்வளித்தது. ஆனால், என் நண்பர் சேத்தன் என்னை துப்பாக்கிச் சுடுதலை தொடருமாறு வலியுறுத்தினார். அதனால், ஷுட்டிங்கில் தொடர்ந்து ஈடுபட்டேன், பொழுதுபோக்காக இருந்தது இன்று ஒலிம்பிக் கனவு வெண்கலமாக மாறியுள்ளது," என்கிறார்.
2019-ல் ஜூனியர் உலகக்கோப்பையில் தங்கம் வென்றார். இவர் படிப்பும் தொடர்ந்தது, சண்டிகாரில் உள்ள டிஏவி கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். பதக்கம் இப்போது இவரது வாழ்வையே மாற்றிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.