NVIDIA AI NeMo மூலம் மொழி மாதிரிகளை உருவாக்க ஜோஹோ திட்டம்!
சென்னையை தலைமையகமாக கொண்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனம் ஜோஹோ, என்விடியா ஏஐ திறன் கொண்ட மேடையை பயன்படுத்தி, மொழி மாதிரிகளை (LLMs) உருவாக்கி தனது சாஸ் சேவைகளில் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.
சென்னையை தலைமையகமாக கொண்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனம் ஜோஹோ , என்விடியா ஏஐ (NVIDIA AI) திறன் கொண்ட மேடையை பயன்படுத்தி, மொழி மாதிரிகளை (LLMs) உருவாக்கி தனது சாஸ் சேவைகளில் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த மொழி மாதிரிகளை உருவாக்கிய பிறகு, அவை ஜோஹோவின் ஏழு லட்சத்திற்கும் மேலான வாடிக்கையாளர்களுக்கு மேனேக் இஞ்ஜின் மற்றும் ஜோஹோ இணையதளம் வாயிலாக கிடைக்கும்.
என்விடியா ஏஐ மேடை என்விடியா நிமோ மற்றும் என்விடியா ஏஐ எண்டர்பிரைஸ் மென்பொருளை உள்ளடக்கியது. இதற்கான அறிவிப்பு, மும்பையில் நடைபெற்ற என்விடியா ஏஐ மாநாட்டில் வெளியிடப்பட்டது.
கடந்த ஓராண்டாக, நிறுவனம், என்விடியா ஏஐ நுட்பம் மற்றும் ஜிபியூக்களில், பத்து மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது மற்றும் இந்த ஆண்டு மேலும் 10 மில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளது.
"தற்போது சந்தையில் உள்ள பெரும்பாலான எல்.எல்.எம்கள் நுகர்வோர் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டவை மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு அதிக அம்சங்கள் கொண்டிருக்கவில்லை. பல்வேறு வகையான வர்த்தக பயன்களுக்கு ஏற்ற மொழி மாதிரிகளை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம்,” என்று ஜோஹோ ஏஐ பிரிவு இயக்குனர் ராம்பிரகாஷ் ராமமூர்த்தி கூறினார்.
மேலும், ஜோஹோ துவக்கத்தில் இருந்து வாடிக்கையாளர்களின் தனியுரிமை பாதுகாப்பில் கவனம் செலுத்துகிறது. என்விடியா ஏஐ மென்பொருளின் முழு தொகுப்பை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் ஏஐ முதலீட்டின் பலனை செயல்திறனோடு பெற வழி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது.
ஜோஹோ கடந்த பத்தாண்டுகளாக, தனது சொந்த ஏஐ நுட்பத்தை உருவாக்கி வருவதோடு, அவற்றை தனது நூற்றுக்கும் மேற்பட்ட சேவைகளில் பொருத்தமாக இணைத்து வருகிறது. ஏஐ தொடர்பான நிறுவன அணுகுமுறை பல அடுக்குகளை கொண்டதாக உள்ளது.
நிறுவனம் வழக்கமான மொழி மாதிரிகளில் இருந்து வேறுபட்ட குறுகிய, சிறிய மற்றும் நடுத்தர எல்.எல்.எம்களை உருவாக்கி வருகிறது. இவற்றை வர்த்தக நிறுவனங்கள் பல்வேறு பயன்பாட்டிற்காக கையாளலாம். பல்வேறு மாதிரிகளை பயன்படுத்துவதால், அதிக தரவுகள் இல்லாத நிறுவனங்களும் ஏஐ பயனை பெறலாம்.
“பல்வேறு வகையான ஏஐ மாதிரிகளில் இருந்து தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பு, நிறுவனங்கள் தங்கள் தேவைக்கேற்ற ஏஐ தீர்வுகளை பயம்படுத்த உதவும்,” என்று என்விடியா தெற்காசிய நிர்வாக இயக்குனர் விஷால் தூபர் கூறினார்.
என்விடியாவின் கூட்டு மூலம், ஜோஹோ தனது மொழி மாதிரிகள் உருவாக்கத்தை விரைவாக்கி கொள்ளும். மேலும், தனது மொழி மாதிரிகள் மேம்பாட்டிற்காக NVIDIA TensorRT-LLM –ஐ சோதனை பார்த்து வருகிறது என இது தொடர்பான செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Induja Raghunathan