ஏஐ மூலம் காட்சி வடிவமைப்புகளை உருவாக்க உதவும் கோவை தொழில் முனைவோர்களில் ஸ்டார்ட்-அப் Sivi
பெங்களூருவில் இயங்கும் சிவி (Sivi) பயனாளிகள் பல்வேறு மொழிகளில் உடனடியாக விளம்பரங்கள், சமூக ஊடக பதிவுகள், போஸ்டர்கள் உள்ளிட்டவற்றை உருவாக்கி கொள்வதற்கான ஏஐ சேவையை அளிக்கிறது.
எல்லோராலும் கவர்ந்திழுக்கும் காட்சி வடிவங்களை உருவாக்கிவிட முடியாது. எனினும், உங்கள் வர்த்தகத்தின் அழகியல் அடையாளம், வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பதை மறுக்க முடியாது.
உதாரணமாக, மோசமாக உருவாக்கப்பட்ட விளம்பரம் வாடிக்கையாளர்களுக்கு செய்தியை உணர்த்த தவறி விற்பனை வாய்ப்பையும் இழக்கச்செய்யலாம். இது விளம்பரங்களுக்கு மட்டும் அல்ல, அனைத்து வகையான வரைகலை சார்ந்த தகவல் தொடர்பு முறைகளுக்கும் பொருந்தும்.
இந்த வடிவமைப்பு செயல்முறையை தானியங்கியமாக்க்கும் சேவையை ஏஐ மேடையான சிவி வழங்குகிறது. 2019ல் சோனா.ஜே மற்றும் ராம் கணேசன் ஆகியோரால் துவக்கப்பட்ட இந்த பெங்களூரு ஸ்டார்ட் அப் பயனாளிகள் தங்களை எதிர்பார்ப்பை சமர்பித்து ஏஐ மூலம் வடிவமைப்புகளை உருவாக்கிக் கொள்ள வழி செய்கிறது. இந்த வடிவமைப்புகளை அப்படியே பயன்படுத்தலாம், மேம்படுத்தியும் பயன்படுத்தலாம்.
இதன் சேவை பயனாளிகள் பல்வேறு மொழிகளில் உடனடியாக விளம்பரங்கள், சமூக ஊடக பதிவுகள், போஸ்டர்கள் உள்ளிட்டவற்றை உருவாக்கிக் கொள்ள வழி செய்கிறது.
சேவை உருவாக்கம்
கம்ப்யூட்டர் பொறியாளரான கணேசன், சாம்சங் நிறுவனத்தில் தனது ஏஐ பயணத்தை துவக்கினார். இயந்திர கற்றல் திட்டங்கள் பணியாற்றியவர், அமெரிக்காவில் மூன்று காப்புரிமைகளை பதிவு செய்தார். அதன் பிறகு, விற்பனை தானியங்கிமயமாக்க சேவை அளிக்கும் MineWhat Inc நிறுவனத்தை நிறுவினார்.
இந்த நிறுவனத்தில் தான் அவர் துறை சார்ந்த வல்லுனர் சோனாவை சந்தித்தார். இருவரும் பின்னர் சிவி-யில் இணைந்தனர். பிடெக் தங்க பதக்கம் பெற்ற சோனா, வடிவமைப்பில் 14 ஆண்டுக்கும் மேல் அனுபவம் பெற்றிருந்தார். கோவையை பூர்வீகமாக கொண்ட இவர்கள், பெங்களூருவில் Bridgei2i நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். மேலும், ஆக்சன்சரில் முதன்மை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.
விரும்பிய வடிவமைப்புகளை உருவாக்குவதற்கான ஏஐ மாதிரிகளில் பெரும் இடைவெளி இருப்பதை உணர்ந்த கணேசன், மற்றும் சோனா, சிவி நிறுவனத்தை துவக்கினர். ஏஐ புதிய வசதி என்பதால், எடுத்த துவக்கத்திலேயே விரும்பிய வடிவமைப்பு கிடைக்க சாத்தியமில்லை. மேலும், ஏஐ சேவை வெளிப்பாட்டில் உள்ள குறைகளும் பாதகமாக அமையலாம்.
“எழுத்து மற்றும் உருவங்களுக்கு இணையத்தில் பெருமளவு தரவுகள் உள்ளன. எனினும், வடிவமைப்பிற்கு போதுமான ஒருங்கிணைந்த தரவுகள் இல்லை. சிவி-யில் நாங்கள், பல அடுக்கு வடிவமைப்புகளை உருவாக்குவதற்கான அடிப்படை ஏஐ மாதிரியை உருவாக்கியுள்ளோம் மற்றும் விரும்பிய வடிவமைப்பு உருவாக்கத்திற்கு தேவையான தனித்தன்மை வாய்ந்த ஒருங்கிணைந்த தரவுகளை தயார் செய்துள்ளோம்,” என்கிறார் கணேசன்.
எழுத்து, வடிவங்கள் மற்றும் உருவங்களில் பயிற்சி அளிக்கப்பட்ட மாதிரியை நிறுவனர்கள் உருவாக்கினர். இதற்கு பயிற்சி அளிக்க 30 மில்லியன் அடுக்குகள் கொண்ட தரவுகளை வடிவமைத்தனர். இந்த மாதிரியை மெருகேற்றிய பிறகு அதை மையமாகக் கொண்டு சேவையை உருவாக்கினர்.
“ஆட்டாமிக் வடிவமைப்பு முறை மற்றும் மனித எதிர்வினை மாதிரி அடிப்படையில் சிவியை உருவாக்கினோம். பயனாளிகள் எழுத்து, பிராண்ட், ஸ்டைல் தேர்வு போன்றவற்றை குறிப்பிட்டால் சிவி அவற்றை அலசி ஆராய்ந்து செயல்படுகிறது. பின்னர், ஒரு வடிவமைப்பாளர் செயல்படுவது போலவே இயங்குகிறது,” என்கிறார் சோனா.
மிட்ஜர்னி அல்லது டால்-இ போன்ற மற்ற உருவ ஆக்கத்திறன் மாதிரிகள் போல் அல்லாமல், சிவி வடிவமைப்பு தொகுப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதால், பயனாளிகள் எந்த பொருளை வேண்டுமானாலும் உருவாக்கத்திற்கு தேர்வு செய்யலாம்.
எனினும், இதை அடைவதில் நிறுவனம் தடைகளை எதிர்கொண்டு, குறைந்த பட்ச ஒருங்கிணைந்த தரவுகளில் இருந்து இந்த மாதிரியை உருவாக்கியது. மேலும் மாதிரிக்கு பயிற்சி அளிக்க திறன் வாய்ந்த ஏஐ பொறியாளர்களை பணிக்கு அமர்த்தியது, கிளவுட் உள்கட்டமைப்பு வசதியும் தேவைப்பட்டது.
போட்டி சேவைகள்
தனது சேவை மூலம், சிவி, கலிபோரினியாவைச் சேர்ந்த கேன்வாவுடன் போட்டியிடுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனமும் இதே போன்ற சேவையை உருவாக்கினாலும், இது இப்போது ஆய்வாளர்களுக்கு மட்டுமான சேவையாக உள்ளது.
சிவி மற்றும் கேன்வா இணையதளம் வாயிலாக செயல்பட்டாலும் வடிவமைப்பிற்கான அணுகுமுறை மாறுகிறது. கேன்வா பெரிய அளவிலான எழுத்துரு, பொருட்கள், உருவங்கள் தொகுப்பைச் சார்ந்துள்ளது. வலுவான எடிட் சாதனங்களும் கொண்டுள்ளது.
சிவி எந்த இரண்டு பொருளும் ஒன்றாக இல்லாத வகையில் உருவாக்கித்தருகிறது. பயனாளிகள் தங்களுக்கான தேர்வுகளை எளிதாக மாற்றிக்கொள்ளலாம். இந்த ஆண்டு துவக்கத்தில், 12 பேர் குழு கொண்ட சிவி, வடிவமைப்பை மேலும் ஈர்ப்புடையதாக்கும் ’
gen2.0’ சேவையை அறிமுகம் செய்தது.“இன்று எங்கள் வடிவமைப்பு தரம் தொழில்முறை தரத்தின் 65 சதவீதத்தை எட்டியுள்ளது. 90 சதவீத வடிவமைப்பு தரம் கொண்ட சிவி ஜென் 3 உருவாக்க திட்டமிட்டுள்ளோம்,” என்கிறார் சோனா.
வாடிக்கையாளர்கள்
வடிவமைப்புகளை பெரிய அளவில் உருவாக்க இந்த சேவை உதவும். ஒரே உருவம் பலவித வடிவங்களை கொண்டதாக, அதே நேரத்தில் பிராண்டின் சீரான தன்மை கொண்டதாக இருக்கச்செய்யலாம். ஒரு கிளிக்கில் வடிவமைப்பை 72 மொழிகளில் மாற்றிக்கொள்ளலாம். 17 இந்திய மொழிகளும் இதில் அடங்கும்.
“140 க்கும் மேற்பட்ட நாடுகளில் பயனாளிகள் பெற்றுள்ளோம். இவர்கள் 25 லட்சத்திற்கும் மேலான வடிவமைப்புகளை சிவி மூலம் உருவாக்கி கொண்டுள்ளனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பெரும்பாலான பயனாளிகள் உள்ளனர்,” என்கிறார் சோனா.
இ-காமர்ஸ் நிறுவனங்கள், ஃபிரிலான்சர்கள், கல்வி நிறுவனங்கள், பயண நிறுவனங்கள் போன்றவற்றை நிறுவனம் இலக்காக கொண்டிருந்தாலும் தற்போது டிஜிட்டல் விளம்பரத்துறையில் அதிகம் பயன்படுத்துப்படுகிறது.
24 ஆயிரத்திற்கும் மேலான பயனாளிகள் கொண்டுள்ளோம். இ-காமரஸ் மற்றும் விளம்பரத்துறையின் ஆரம்ப வாடிக்கையாளர்கள்,” என்கிறார் கணேசன்.
“45 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட பெரிய வரைகலை சந்தையில் செயல்படுகிறோம். 200 மில்லியன் வர்த்தக பயனாளிகளுக்கு காட்சி உள்ளடக்கம் தேவை. சிவி ஜென் 2.0 மூலம் 60 மில்லியன் பயனாளிகளை இலக்காகக் கொண்டுள்ளோம்,” என்கிறார்.
இப்போது சிவி டோக்கன் சார்ந்த விலை மாதிரியில் செயல்படுகிறது. புதிய வடிவமைப்புகளை உருவாக்க பயனாளிகள் கிரெடிட் வாங்கிக் கொள்ள வேண்டும்.
ஆறு வடிவமைப்பிற்கான டோக்கன்களை இலவசமாக அளிக்கிறது. மாதம் 160 டாலர் கட்டணத்தில் 16 ஜிபி சேமிப்பு மற்றும் வரம்பில்லா டோக்கன்களை அளிக்கிறது. நிறுவனம் இதுவரை, ஏஞ்சல் மற்றும் வர்த்தக முதலீட்டாளர்களிடம் இருந்து 6,50,000 டாலர் திரட்டியுள்ளது. தனது தொழில்நுட்பத்தை மேம்படுத்தி மேலும் பெரிய மாதிரிகளை உருவாக்கி, பயனாளிகள் பரப்பை அதிகரிக்க புதிதாக நிதி திரட்ட உள்ளது.
யுவர்ஸ்டோரியின் முன்னணி தொழில்நுட்ப நிகழ்வான டெக்ஸ்பார்க்ஸ் 2023 ல் நிறுவனம் பங்கேற்று டெக் 30 நிறுவனங்கள் பட்டியலிலும் இடம்பெற்றது.
ஆங்கிலத்தில்: சயன் சென், தமிழில்: சைபர் சிம்மன்
'ஏஐ செலவுகளை இந்தியா குறைக்கும்' - சாம் ஆல்ட்மன் கருத்துக்கு ஓலா நிறுவனர் பாவிஷ் அகர்வால் பதில்!
Edited by Induja Raghunathan