கூலி வேலை செய்து படிக்கவைத்த பெற்றோர்; தமிழில் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி சாதித்த சரவணன்!
தாய்மொழி வழியில் கல்வி கற்போர்க்கு நல்ல புரிதல் கிடைப்பதால் வெற்றி இலக்கை எளிதில் அடைந்துவிடலாம் என நிரூபித்த ஈரோட்டைச் சேர்ந்த சரவணன்.
தாய்மொழி வழியில் கல்வி கற்போர்க்கு நல்ல புரிதல் கிடைப்பதால் வெற்றி இலக்கை எளிதில் அடைந்துவிடலாம் என்பதை நிரூபித்துள்ளார் தமிழ் வழியில் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ள ஈரோட்டைச் சேர்ந்த சரவணன்.
டெல்லியின் ஃபரிதாபாத்தில் தற்போது ஐ.ஆர்.எஸ். பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் அவரை நேர்காணல் கண்டது தமிழ் யுவர் ஸ்டோரி. ஏழ்மை, வறுமை நிலையிலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த தான் எப்படி வெற்றி இலக்கை அடைந்தார் என்பதை நம்முடன் பகிர்ந்து கொண்டார்...
2015ம் ஆண்டு மத்திய குடிமைப் பணிகள் தேர்வாணையம் நடத்திய இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வில் தேர்வை மட்டுமின்றி நேர்காணலையும், தமிழ் வழியில் எதிர்கொண்டு தரவரிசைப்பட்டியலில் 366வது இடத்தை பெற்றுள்ளது எனக்கு மிக்க மகிழ்ச்சி என்று உற்சாகத்தோடு உரையாடலைத் தொடங்கினார் சரவணன்.
“என்னுடைய சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் பவானி வட்டத்தை அடுத்த மயிலம்பாடி கிராமம். நான் தாழ்த்தப்பட்ட (ST) சமூகத்தை சேர்ந்தவன், என்னுடைய பெற்றோர் கூலித் தொழிலாளர்கள். ஆனால் ஏழ்மையும் வறுமையும் என்றுமே வெற்றிக்குத் தடையில்லை, கல்வியால் அதை சாத்தியமாக்கிக் கொள்ளலாம் என்பதில் நான் சிறு வயது முதலே அசையா நம்பிக்கை வைத்திருந்தேன்,” என்று தன்நம்பிக்கை அனல் பறக்கப் பேசுகிறார் சரவணன்.
கல்விச் செல்வமே சிறந்தது
தொடக்கநிலை முதல் 10ம் வகுப்பு வரை எங்கள் ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் கல்வி கற்றேன். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றதால் அந்தியூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி, எனக்கு 11 மற்றும் 12ம் வகுப்பு கல்வியை இலவசமாக வழங்கியது. அதிலும் முதல் மதிப்பெண் பெற்று உயர்கல்வியை தொடர முடியாத நிலையில் மனஉளைச்சலோடு வீட்டில் முடங்கிக் கிடந்த போது அப்போதைய தமிழக முதல்வர் கல்லூரியில் இலவசமாகக் கல்வி கற்பதற்கான சலுகையையும், நிதிஉதவியையும் வழங்கியதாகச் சொல்கிறார் அவர்.
அரசின் உதவி கிடைத்ததால் நான் சென்னை எம்.ஐ.டி. கல்லூரியில் ஏரோநாட்டிகல் என்ஜினியரிங் படித்தேன். ஏரோநாட்டிகல் பிரிவை நான் தேர்ந்தெடுக்க எனக்கு முன்உதாரணமாக இருந்தது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் என்று கூறுகிறார் சரவணன்.
பொறியியல் பட்டம் பெற்ற பின் இரண்டு ஆண்டுகள் பெங்களுரில் டிசிஎஸ் நிறுவனத்தில் மாதம் ரூ. 50 ஆயிரம் சம்பளத்தில் பணியில் சேர்ந்தேன், இருந்த போதும் ஐஏஎஸ் கனவு எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. அன்றாட பிழைப்பிற்கே எங்கள் குடும்பம் கஷ்டப்படும் நிலையில் ஐஏஎஸ் தேர்விற்கு தயாராவதற்கான செலவுகளை நானே பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால் அப்போது அந்தப் பணி எனக்குத் தேவைப்பட்டது என்று தேர்வையொட்டி தான் எவ்வாறு நிதி திட்டமிடல் செய்தார் என்பதை தெரிவிக்கிறார் சரவணன்.
2 ஆண்டுகளுக்குப் பின்னர் என்னுடைய சகோதரி மகேஷ்வரியும் அவருடைய கணவரும் இணைந்து என்னை வேலையை ராஜினிமா செய்துவிட்டு ஐஏஎஸ் தேர்விற்கு தயாராகும்படி வலியுறுத்தினர். என்னால் முடியும் என்று அவர்கள் எனக்கு தூண்டுகோலாக இருந்தனர் என்று சொல்லும் சரவணன், எங்கள் குடும்பத்தின் ஏழ்மைச் சூழ்நிலையில் நல்ல வருமானம் வரும் ஒரு பணியை விடுவதற்கு பெற்றோர் என்ன சொல்வார்களோ என்று தயங்கினேன் ஆனால் என்னுடைய அப்பா ‘உன்னால் முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் வேலையை விட்டுவிட்டு பரீட்சைக்கு நீ தயாராகு’ என்று கூறியதை நினைவுகூர்கிறார் சரவணன்.
சென்னையில் மனிதநேயம் அறக்கட்டளை மற்றும் T.I.M.E கல்வி நிலையத்தில் இணைந்து ஐ.ஏ.எஸ் பணிக்கான தேர்வை 2014ம் ஆண்டு எழுதினேன் முதல் முறையிலேயே தேர்ச்சி பெற்று தரவரிசைப்பட்டியலில் 995வது இடத்தைப் பெற்றேன் என்று கூறும் சரவணன் அவர்கள் குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரி. அவருக்கு பள்ளி தவிர வீட்டில் கல்வி கற்பிக்கவோ, நவீன வசதிகளோ இல்லை தானாக முயன்று இந்த நிலையை அவர் அடைந்திருக்கிறார்.
டெல்லியில் உள்ள இந்திய வருவாய்ப் பணிகள் (I.R.S.) துறையில் தற்போது நான் பயிற்சியில் இருக்கிறேன், எனினும் ஐ.ஏ.எஸ். கனவு என்னை துரத்திக் கொண்டே இருந்ததால் 2015ம் ஆண்டு மீண்டும் தேர்வு எழுதினேன் இரண்டு முறையும் தேர்வை தமிழ் வழியிலேயே எழுதினேன். Prelims மட்டும் ஆங்கிலத்தில் எழுத வேண்டும் மற்றபடி நான் விருப்பப்பாடமாக தேர்வு செய்தது தமிழ் மொழியைத் தான் என்று கூறும் அவர்,
தாய் மொழியில் கல்வி கற்கும் போது அது நல்ல புரிதலை ஏற்படுத்தும். நம்பிக்கை இருந்தால் மொழி ஒரு தடை இல்லை நமக்கு ஆங்கிலம் தெரியவில்லையே என்ற ஏற்றத்தாழ்வை மறந்து நமக்குத் தெரிந்த விஷயத்தில் நாம் உறுதியாக இருக்க வேண்டும் என்று ஆலோசனையும் கூறுகிறார் சரவணன்.
எந்த மொழியாக இருந்தாலும் அதை ஒரே வருடத்தில் எளிதில் கற்றுக்கொள்ள வேண்டும் ஆனால் இதற்கெல்லாம் அவசியமான ஒன்று நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கை மட்டுமே என்கிறார் அவர். சரவணன் ஐ.ஏ.எஸ்-க்கான நேர்காணலையும் தமிழிலேயே எதிர்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் பணத்தில் படித்தவர் இன்று மக்கள் தலைவன்
நான் மக்கள் பணத்தில் படித்தேன் அதனால் மக்கள் தலைவனாகி அவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பது சிறு வயதிலேயே என்னுள் எழுந்த தீப்பொறி என்று சொல்லும் சரவணன், தன்னுடைய பெற்றோருக்கும், சமூகத்தினருக்கும் இன்னும் ஐ.ஏ.எஸ் என்றால் என்ன என்றே தெரியாது கலெக்டர் என்றால் தான் தெரியும் என்று ஆதங்கப்படுகிறார். அப்படிப்பட்ட எங்கள் சமூகத்தின் புதிய தலைமுறையினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு அவர்களுக்கு தான் ஒரு முன்உதாரணமாக அமைந்திருப்பதை எண்ணி மகிழ்கிறார் அவர்.
தன்னுடைய தாயின் கல்வி அறியாமையை பற்றிச் சொல்லும் போது அவர் ஒரு சம்பவத்தை நினைவுகூர்கிறார். “நான் 6ம் வகுப்பில் பள்ளியிலேயே முதல் மதிப்பெண் பெற்றேன் (481), அது அந்தப் பள்ளியிலேயே யாரும் எடுக்காத மதிப்பெண் என எல்லோரும் என்னை பாராட்டினர், Rank cardஐ என் அம்மாவிடம் காண்பித்த போது எல்லா மாணவர்களும் 40, 50 என ரேங்க் வாங்கிஇருக்கிறார்கள், நீ மட்டும் 1 பெற்றிருக்கிறாயே என்று என்னுடைய அம்மா வருத்தப்பட்டதை நம்முடன் பகிர்ந்து கொண்டார். நான் எப்போது தேர்வு முடிவு வந்தாலும் என் அம்மாவிடம் தான் முதலில் சொல்வேன்.
2014ம் ஆண்டு தேர்வு முடிவு வந்த போதும் அவரிடம் கூறி ஆசிர்வாதம் பெற்றேன், ஆனால் இப்போது டெல்லியில் இருப்பதால் இந்த முறை ஆட்சிப் பணிக்கு தேர்வாகி இருக்கும் விவரத்தை தொலைபேசியில் தெரிவித்ததால் அவருடைய மகிழ்ச்சியை நேரில் அனுபவிக்க முடியவில்லை என்று கூறும் சரவணன், எனினும் நான் இந்தத் தகவலைத் தெரிவித்த உடன் அவருக்கு நிச்சயம் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வந்திருக்கும் என்று மெய் சிலிரிக்கிறார்.
ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றிருப்பதை அடுத்து ஐ.ஆர்.எஸ். பயிற்சியை ராஜினாமா செய்துவிட்டு அடுத்த 6 மாதங்கள் ஆட்சிப்பணிக்கான பயிற்சியில் ஈடுபட இருப்பதாகச் சொல்கிறார் சரவணன். தனக்கு முன்மாதிரியாக அமைந்தது பெற்றோரே என்று கூறுகிறார் சரவணன்,
“என்னுடைய அப்பா செல்வன் ஒரு காலத்தில் கொத்தடிமையாக விற்கப்பட்டவர், சில நாட்களில் ஒருவேளை உணவு மட்டும் உண்டு என்னை வளர்த்தார். அவருக்குக் கல்வியறிவு இல்லாவிடினும் அனுபவத்தில் அவர் பல விஷயங்களை என்னுடன் பகிர்ந்து கொள்வார், இன்றளவும் நேர்காணலுக்குச் செல்லும் முன்னர் நான் என்னுடைய சந்தேகங்களுக்கு அவரிடம் விளக்கம் பெற்றுக் கொள்வேன், அவருக்கு தொழில்நுட்ப ரீதியில் விளக்கம் அளிக்கத் தெரியாவிட்டாலும் முறையான காரணத்தோடு சரியான விளக்கத்தை புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துக் கூறுவார்” என்கிறார்.
அடுத்ததாக தன்னுடைய வெற்றிக்கு உற்ற துணையாக இருந்ததற்கு சகோதரி மகேஷ்வரிக்கு நன்றிகளை காணிக்கையாக்குகிறார் சரவணன். என் அக்காவின் குழந்தைகள் தெய்வத்தை வழிபடும் போது மாமா கலெக்டர் ஆக வேண்டும் என்றே வழிபட்டு வந்தனர் என்று கண்கலங்கும் அவர், தான் அந்த சிறு பிள்ளைகளுக்கு சிறு வயதிலேயே கலெக்டர் பணி பற்றி புரிய வைத்திருப்பதற்கும், அவர்களுக்கு படிப்பின் அவசியத்தை உணர்த்திஇருப்பதையும் எண்ணி மகிழ்கிறார்.
கிராமப்புற மற்றும் தமிழ்வழியில் கற்கும் மாணவர்களுக்கு கூறும் அறிவுரைகள்
நாம் எந்த வழியில் கல்வியை கற்கிறோம் என்பது விஷயமல்ல ஆனால் எப்படி புரிந்து கொண்டு படிக்கிறோம் என்பதே முக்கியம் என்று கூறும் சரவணன்,
மாணவர்கள் சிறு வயது முதலே தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார். ஏழ்மையும், வறுமையும் என்றும் வெற்றிக்குத் தடைஇல்லை என்பதை மாணவர்கள் தங்கள் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும், கல்வியைவிட மிகப்பெரிய சொத்து வேறு எதுவும் இல்லை. நான் பெற்ற கல்விச் செல்வமே இன்று என்னை எங்கள் சமூக மக்களிடம் அடையாளத்தை ஏற்படுத்தித் தந்திருக்கிறது என்று பெருமைப்படுகிறார்.
கல்வியை தாழ்த்தப்பட்டஇன மக்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் சமஅளவில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் அதை நோக்கியே தன்னுடைய பயணம் இருக்கும் என்று சொல்லும் சரவணன் கல்வியால் மட்டுமே உங்களுக்கான அங்கீகாரத்தை அளிக்க முடியும் என்கிறார்.
மாணவர்கள் மாணவர்களாக இருந்தாலே இவை அனைத்தும் சாத்தியம் என்று சொல்லும் சரவணன், நாம் எத்தனை மணி நேரம் படிக்கிறோம் என்பதை விட எவ்வளவு தரமாக அதாவது படிக்கும் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு படிக்கிறோம் என்பது அவசியம் என்கிறார். நான் ஒரு நாளில் 5 மணி நேரம் படித்தாலும் நல்ல மனநிலையில் படிப்பேன் என்று தன் வெற்றியின் ரகசியத்தைச் சொல்கிறார். இன்றைய காலகட்டத்தில் மாணவர்களுக்கன வசதி, வாய்ப்புகள் ஏராளம் இதை அவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தும் அவர், அதே சமயம் தொழில்நுட்ப வசதிகள் உங்கள் பாதையை மாற்றிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.
உங்கள் இலக்கில் இருந்து வழிமாறி கவனச்சிதைவு ஏற்படும் போது உங்களுக்காக கஷ்டப்படுபவர்களையும், உத்வேகம் அளிப்பவர்களையும் எண்ணிப் பார்த்தால் தடம் மாற வாய்ப்பில்லை என்கிறார்.
எனக்கு சலிப்பு ஏற்படும் சமயங்களில் நான் என் பெற்றோரின் கடினஉழைப்பையும், இளைஞர்களின் கனவு நாயகன் டாக்டர்.அப்துல்கலாமை நினைத்துக்கொள்வேன் என்கிறார். கல்வியை அனைவருக்குமானதாக்க வேண்டும் என்பதே என்னுடைய லட்சியம் என்று கூறும் சரவணம் வெறும் பேச்சளவில் நான் நின்று விடமாட்டேன், அவற்றை செயலில் வெளிப்படுத்துவேன் என்று உறுதியாகச் சொல்கிறார் தன்னைத் தானே மெருகேற்றிக் கொண்டு பட்டை தீட்டப்பட்ட வைரமாக ஜொலிக்கும் சரவணன்.
இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்
தொடர்பு கட்டுரைகள்:
தாயுடன் வளையல் விற்ற சிறுவன் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆன கதை!
பட்டய கணக்காளர் தேர்வில் வென்று அரசுத் தூதுவரான டீ கடைக்காரர்..!