Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

ரூ.250 சம்பளத்தில் தொடங்கி கேன்ஸ் ரெட் கார்பெட் வரை உயர்ந்த நடிகை சாயா கதமின் கதை!

ஒரே ஆண்டில் தந்தையும், தமையனும் அடுத்தடுத்து இறந்துவிட, வாழ்க்கையில் பிடிப்பில்லாமல் பிழைப்புக்காக நடிக்க வந்தவர் சாயா கதம். இன்ரு கேன்ஸ், ஆஸ்கர் வரை அவர் உயர்ந்தது எப்படி?

ரூ.250 சம்பளத்தில் தொடங்கி கேன்ஸ் ரெட் கார்பெட் வரை உயர்ந்த நடிகை சாயா கதமின் கதை!

Monday October 14, 2024 , 3 min Read

ஒரே ஆண்டில் தந்தையும், தமையனும் அடுத்தடுத்து இறந்துவிட, வாழ்க்கையில் பிடிப்பில்லாமல் பிழைப்புக்காக சாயா செய்துவந்த பலபணிகளில் ஒன்று தான் நடிப்புப் பட்டறை. இன்று 23 ஆண்டுகளுக்கு பிறகு, Laapataa Ladies படத்தில் அவரது கதாபாத்திரம் உலகளாவிய பாராட்டுகளை வென்றது மட்டுமல்லாமல், சிறந்த அயல்நாட்டு திரைப்படப் பிரிவில் 2025ம் ஆஸ்கர் விருதுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

மராத்தி தியேட்டர் முதல் கேன்ஸ் ரெட் கார்பெட் வரை, அவரது பயணம் எதிர்பாராத திருப்பங்களும், கடின உழைப்பிற்கான வெற்றிகளும் நிறைந்தது.

இரு தசாப்தங்களுக்கு முன்பு, 2001ம் ஆண்டில், சாயா கதம் பல மாதங்களாக வீட்டை விட்டுகூட வெளியே வரவில்லை. ஏனெனில், அந்த ஆண்டு, அவரது தந்தையும், சகோதரரும் அடுத்தடுத்து இறந்தனர். அவருடைய தாய் டிமென்ஷியா எனும் சிந்தனை, நினைவாற்றல் மற்றும் பகுத்தறிவு போன்ற ஒரு நபரின் அறிவாற்றல் திறன்களைப் பாதிக்கும் நோயால் பாதிக்கப்பட்டார். அவரது நினைவில் சாயா கூட இல்லை.

இந்நிலையிலே வாழ்க்கை பிடியிலிருந்து தப்பிக்க வழிகளைத் தேடிக்கொண்டிருந்தார் சாயா. அப்போதுதான் நடிப்புப் பட்டறைக்கான செய்தித்தாள் விளம்பரத்தைக் கண்டு, நடிப்பு பட்டறையில் சேர்ந்தார். அவருடைய துக்கத்தைப் போக்க எடுக்கப்பட்ட ஒரு சாதாரண முடிவு அவருடைய வாழ்க்கையை என்றென்றும் மாற்றிவிடும் என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை.

chhaya kadam

பட உதவி: தி பெட்டர் இந்தியா

ஆம், 20 ஆண்டுகால உழைப்பில் இன்று நடிகை சாயா கதம் அனைத்து இடங்களிலும் நிறைந்துள்ளார். பெரிய திரை, சிறிய திரை ஏன்... சர்வதேச திரைப்பட விழாக்களிலும் கூட. அவருடைய சமீபத்திய படமான Laapataa Ladies இல் அவரது கதாபாத்திரம் உலகளாவிய பாராட்டுகளை வென்றது மட்டுமல்லாமல், சிறந்த அயல்நாட்டு திரைப்படப் பிரிவில் 2025 ஆஸ்கர் விருதுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

கேன்ஸ் திரைப்படவிழாவில் இருபடங்கள் மற்றும் ஆஸ்கருக்கு தேர்வாகிய படம் என அவரது நடிப்பில் வெளியாகி 3 படங்கள் ஒரே ஆண்டில் பெரும் சாதனை படைத்து அவரது கேரியரில் மிகப்பெரும் கேம் சேஞ்சராகி உள்ள நிலையில், இந்த வெற்றி ஒரே இரவில் நடந்துவிடவில்லை. அதற்குமுன் 23 வருட உழைப்பும், தோல்விகளும் நிறைந்துள்ளன...

மும்பையின் புறநகர்ப் பகுதியான கலினாவில் பிறந்து வளர்ந்த சாயா கதம், கபடி வீராங்கனை. பள்ளி நாட்களிலிருந்து விளையாட்டில் ஆர்வம் காட்டி வந்தவர் மாநில அளவிலான கபடி போட்டிகளில் பங்கேற்றுள்ளார். விளையாட்டு வீராங்கனையாக பள்ளிப் பருவம் கழிந்ததால், வளர்ந்து ஜிம் ஒன்றை வைக்க வேண்டும் என்பதையும், போலீஸாக வேண்டும் என்பதையும் கனவாகக் கொண்டிருந்தார். அவர் லிஸ்டில் இல்லாதது நடிப்பு.

"நான் மாநில அளவிலான கபடி வீராங்கனை, அதனால் அந்த திசையில் செல்ல நினைத்தேன். சில காலத்திற்குப் பிறகு இலக்கு, சொந்தமாக உடற்பயிற்சி கூடம் அல்லது காவல்துறையில் சேருவது என்று மாறியது. ஆனால், நடிகையாக வேண்டும் என்று நினைத்துகூட பார்க்கவில்லை. நடிப்பு என் வாழ்வில் தற்செயலாக நடந்த ஒன்று. குடும்பச் சூழல் காரணமாக பல ஆண்டுகள் வருமானத்திற்காக பல கரடுமுரடு பணிகளை பார்த்தேன். அதன் இறுதியாக மராத்தி நாடக உலகை அடைந்தேன். மக்கள் நடிப்புத்துறைக்குள் நுழைவது எளிது என்று நினைக்கிறார்கள். எனது முதல் நாடகத்தை நடிக்க எனக்கு ஆறு வருடங்கள் ஆனது. அதன் பிறகும் எளிதாக அமையவில்லை," என்று பிடிஐ-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார் அவர்.

நாடகம் டூ சினிமா...

நாடகங்களிலிருந்து மராத்தி படங்களில் நடிக்கும் வாய்ப்பினை பெற்றார். நடிப்பு அவரது லிஸ்டில் இல்லாத ஒன்று என்றாலும், நடிப்பின் மீது பெருக்கெடுத்த ஆர்வத்தை கொண்டிருந்தார்.

அவருடைய முதல் பாலிவுட் படமான சிங்கம் ரிட்டர்ன்ஸில் அவர் ஒரே ஒரு காட்சியில் மட்டுமே இடம்பெற்றிருந்தார். தொடர்ந்து பட வாய்ப்புகளும், அங்கீகாரங்களும் கிடைக்கத் தொடங்கின. வெற்றிகள் இருந்தபோதிலும், கதம் ஒரு "நடிகை போல் இருக்கிறேனா" என்ற சந்தேகத்தை அடிக்கடி உணர்ந்தார்.

தோற்றம், தொடர்புகள் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேசும் திறன் ஆகியவற்றைக் கொண்டு வெற்றியைத் தீர்மானிக்கும் ஒரு துறையில், முறையாகப் பயிற்சி பெறாத கதம், அவ்வப்போது அவருக்கான இடம் தானா இது என்று சந்தேகித்துள்ளார்.

"ஒரு நாளைக்கு 250 ரூபாய்க்கு நடிக்க ஆரம்பிச்சேன். என்னைச் சுற்றியிருந்த அனைவரும் இளமையாகவும், புத்திசாலியாகவும் இருந்தனர். நான் விரும்புவதை அடைய மற்றவர்களை விட கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆனால் அதற்கு தயாராக இருக்கிறேன்," என்றார்.
chhaya kadam

பட உதவி : the states man

2013ம் ஆண்டு நாகராஜ் மஞ்சுளே இயக்கிய 'ஃபேண்ட்ரி' திரைப்படம் அவருக்கு திருப்புமுனை அமைந்தது. தேசிய விருது பெற்ற இப்படத்தில் சாதி ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடும் பெண்ணாக அவரது நடிப்பு விமர்சனப் பாராட்டைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, அவர் 'சைரட்' மற்றும் 'நியூட்' போன்ற மராத்தி படங்களில் மறக்க முடியாத பாத்திரங்களில் நடித்தார், இது துறையில் அவரது இருப்பை மேலும் உறுதிப்படுத்தியது.

மேலும், 2022ம் ஆண்டில், அவர் அமிதாப் பச்சனுடன் 'ஜூண்டில்' படத்தில் அவரது மனைவி ரஞ்சனாவாக நடித்தார். தொடர்ந்து பல படங்களை நடித்து மக்கள் மத்தியில் தனக்கென பெயரை சம்பாதித்து கொண்டார். நடிகரான பிறகு, தேசிய திரைப்பட விருதைப் பெறுவதும், பல்வேறு வேடங்களில் நடிப்பதும் அவரது கனவாக இருந்தது. ஆனால், கேன்ஸ் போன்ற விழாவில் அவரது விருப்பப்பட்டியலில் கூட இல்லை, என்று அவர் கூறினார்.

2001ம் ஆண்டு நடிப்புப் பட்டறைக்கு அறிமுகமாகிய நிலையில் அன்றிலிருந்து 23 ஆண்டுகள் கழித்து, கதம் ஒருமுறை அல்ல, இரண்டு முறை கேன்ஸ் விழாவில் திரையை அலங்கரித்தார். கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்ற பயல் கபாடியாவின் 'ஆல் வி இமேஜின் ஆஸ் லைட்', மற்றும் கரண் கந்தாரியின் சகோதரி 'மிட்நைட்' ஆகிய அவரது இரு படங்கள் கேன்ஸ் திரைப்படவிழாவில் திரையிடப்பட்டன.

இந்நிலையிலே, இந்தாண்டு ஆஸ்கர் விருதின் சிறந்த வெளிநாட்டு படப்பிரிவில் போட்டியிட அவர் நடித்த 'லாபதா லேடீஸ்' திரைப்படத்தை அனுப்புவதாக இந்திய திரைப்பட கூட்டமைப்பு, சமீபத்தில் அறிவித்தது, அவரது கேரியரில் புதிய மைற்கல்லாக மாறி, இளம் தலைமுறையினருக்கான இன்ஸ்பிரிஷனாக உள்ளார் சாயா கதம்.

தமிழில்: ஜெயஸ்ரீ