Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

விடைபெறுகிறது 'Skype' – உலகை இணைத்த மறக்கமுடியாத நினைவுகள்...

வரும் மே மாதத்துடன் Skype மூடப்படுவதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ள நிலையில், நேர்காணல்கள், வர்த்தக சந்திப்புகள், காதல் கதைகள், என இன்னும் எத்தனையோ விதங்களில் துணை நின்றுள்ள ஸ்கைப் பற்றிய நினைவலைகள் இதோ.

விடைபெறுகிறது 'Skype' – உலகை இணைத்த மறக்கமுடியாத நினைவுகள்...

Thursday March 06, 2025 , 4 min Read

நான் Skype சேவையை பயன்படுத்தியதில்லை எனும் ஒரு பொறுப்பு துறப்புடன் இந்த கட்டுரையை துவக்குவது சரியாக இருக்கும். ஏனெனில், ஸ்கைப் சேவையின் புகழ் பாடும் வகையில் இந்த கட்டுரை அமைய இருக்கிறது.

ஸ்கைப் சேவை சில மாதங்களில் மூடப்பட இருப்பதை முன்னிட்டு எழுதப்பட்டாலும், இறங்கற்பாவாக அல்லது நினைவு கூறலாக அல்லாமல், இந்த முன்னோடி சேவையை திரும்பி பார்க்கும் முயற்சியாக இது அமைகிறது. இன்னொரு விதமாக சொல்வது என்றால், ஸ்கைப் சேவையை மறு அறிமுகம் செய்யும் முயற்சி என்று கூட வைத்துக்கொள்ளலாம்.

skype

ஸ்கைப் சேவையை பயன்படுத்தியது இல்லையேத்தவிர அதன் முக்கியத்துவத்தை உணர்ந்தே இருக்கிறேன். இணைய வரலாற்றையும், அதன் முன்னோடி சேவைகளையும் இடைவிடாமல் எழுதி வருபவன் என்ற முறையில், இணைய தொலைபேசி சேவையாக அறிமுகமான ஸ்கைப்பின் வரலாற்று முக்கியத்துவத்தை மீட்டுருவாக்கம் செய்வதே இதன் நோக்கம்.

புத்தாயிரமாண்டின் துவக்கத்தில் அறிமுகமான ஸ்கைப் சேவையை, 2025ல் எப்படி அறிமுகம் செய்வது?

ஸ்கைப் என்றால் என்ன?

திரெட்ஸ் தளத்தில், ஸ்கைப் தொடர்பான நினைவுகளை பகிர்ந்து கொள்ளவும் எனும் விவாத சரட்டின் முதல் பதிவாக, ஸ்கைப் என்றால் என்ன? எனும் கேள்வி அமைந்திருப்பது ஒருவித முரண் நகை என்றே தோன்றுகிறது.

ஆம், வாட்ஸ் அப்பிற்கும், டிஸ்கார்டிற்கும் பழகிய இக்கால தலைமுறைக்கு ஸ்கைப் என்றால் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான். அதோடு, நினைத்தால் ஜூமிலும், பேஸ்டைமிலும் வீடியோ அழைப்புகளில் பேசுவது இயல்பாக இருக்கும் காலத்தில் இணையத்தில் தொலைபேசியில் பேச வழி செய்த ஸ்கைப் சேவையில் எந்தவித ஈர்ப்பும் இல்லாமல் போகலாம்.

ஆனால், ஸ்கைப் அறிமுகமான காலத்தில் அது புதுமையான சேவையாக மட்டும் அல்ல, அதற்கு நிகராக பயனுள்ள சேவையாகவும் இருந்தது. ஸ்கைப் அபிமானி ஒருவர் குறிப்பிட்டுள்ளது போல,

ஸ்கைப் அப்போது ஒரு மாயம் போலவே இருந்தது என கருதலாம். சர்வதேச அழைப்பு கட்டணம் எல்லாம் இல்லாமல், எளிதான டயல் அப் முறையில் தொடர்பு கொண்டு, பிக்சல் முகங்களை பார்த்தபடி பேசலாம்...” என ஸ்கைப் அனுபவத்தை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஸ்கைப் உற்சாகம்

’ஸ்மார்ட் போன் மற்றும் வாட்ஸ் அப் அழைப்புகளுக்கு முந்தைய காலத்தில், ஸ்கைப் சேவை அத்தனை உற்சாகம் அளிக்கக் கூடியதாக இருந்தது,” என்று இன்னொரு அபிமானி கூறியிருக்கிறார். இவற்றை எல்லாம் ஸ்கைப் மூடப்படும் அறிவிப்பு தொடர்பான பிபிசி கட்டுரை படம் பிடித்துக்காட்டுகிறது.

இணையத்தில் இன்னொரு இடத்தில், ஸ்கைப் என்றதும் வெளிநாட்டில் இருந்த பாட்டியுடன் இணையத்தில் பேசியது முதலில் நினைவுக்கு வருவதாக ஒருவர் கூறியுள்ளார்.

இந்த நினைவலைகள் ஸ்கைப் சேவையை மகத்துவத்தை கச்சிதமாக உணர்த்துகின்றன. எங்கோ இருக்கும் அன்புக்குறியவர்களை மிக எளிதாக தொடர்பு கொண்டு முகம் பார்த்தபடி பேச வழி செய்ததே ஸ்கைப் சேவையின் தனிச்சிறப்பாகும். ஸ்கைப் மென்பொருள் இதை கட்டணம் இல்லாமலும் சாத்தியமாக்கியது.

வெவ்வேறு நாடுகளில் இருந்த அன்புக்குறியவர்கள் தங்களுக்குள் தொடர்பு கொண்டு பேச வழி செய்ததோடு, ஸ்கைப் அலுவல் மற்றும் வர்த்தகம் சார்ந்த தேவைகளுக்குமான இணைய வழி தகவல் தொடர்பாக இருந்தது. ஸ்கைப்பில் நேர்காணல்கள் நிகழ்ந்திருக்கின்றன. வரத்தக சந்திப்புகள் நடைபெற்றுள்ளன. காதல் கதைகள மலர்ந்துள்ளன. இன்னும் எத்தனையோ விதங்களில் ஸ்கைப் துணை நின்றிருக்கிறது. ஸ்கைப் வகுப்புகளும் நடைபெற்றுள்ளன.

ஸ்கைப் நுட்பத்தின் ஆற்றலை விளக்கும் ஒரு பழைய கட்டுரை, இமய மலையில் இருந்து ஸ்கைப் செய்யப்பட்டுள்ளது என குறிப்பிடுகிறது. 'ஸ்கைப்பில் வருகிறேன்...' அல்லது 'ஸ்கைப் செய்கிறேன்...' என குறிப்பிடும் அளவுக்கு ஸ்கைப் சேவை இயல்பாகவும், இன்றியமையாததாகவும் இருந்திருக்கிறது. வீடியோ அழைப்புகளுக்கான மறு பெயராகவும் விளங்கியது.

skype

ஐபோனுக்கு முன்

இதெல்லாம், ஐபோனும், ஜூமும் அறிமுகமாவதற்கு முன் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உள்ளூர் செல்போன் அழைப்புக்கட்டணமே எக்கச்சக்கமாக இருந்த காலத்தில், 2003ல் இணைய வழி இலவச தொலைபேசி அழைப்பு சேவையாக ஸ்கைப் அறிமுகமானது. வி.ஓ.ஐ.பி.,என குறிப்பிடப்படும் நுட்பம் அதற்கு முன்பே இருந்தாலும், அதை அணுகுவது மிகவும் சிக்கலாகவே இருந்தது.

இணைய வழி தொலைபேசி நுட்பத்தின் தொழில்நுட்ப சிடுக்குகளை எல்லாம் நீக்கி, எளிதாக ஒரே கிளிக்கில் தொடர்பு கொள்ளும் வகையில் ஸ்கைப் மென்பொருள் அமைந்திருந்தது. இதுவே ஸ்கைப் வரவேற்புக்கும், வெற்றிக்கும் வழி வகுத்தது.

ஸ்கைப் சேவைக்கான தொழில்நுட்ப அடிப்படை, அதற்கு சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகமான சர்ச்சைக்குறிய கோப்பு பகிர்வு சேவை காஸாவில் அடங்கியிருந்தது என்பதையும் நினைவில் கொள்வது பொருத்தமாக இருக்கும். ஆனால், ஸ்கைப்பின் நிறுவனர்களில் ஒருவரான நிக்லஸ் ஜென்ஸ்ட்ராம், காஸா சேவை சட்ட சிக்கலுக்கு உள்ளானதில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் ஸ்கைப்பை உருவாக்கியதால் அது இணைய வெகுமக்களின் சேவையாக உருவெடுத்தது.

கைமாறிய ஸ்கைப்

ஸ்கைப் சேவை பெரும் வெற்றி பெற்ற நிலையில் முதலில் இபே நிறுவனம் அதை விலைக்கு வாங்கியது. சில ஆண்டுகளுக்கு பின் 2011ல் மைக்ரோசாப்ட் நிறுவனம் 8.5 பில்லியன் டாலருக்கு ஸ்கைப்பை கையகப்படுத்தியது.

மைக்ரோசாப்ட் கைகளுக்கு மாறிய பிறகு ஸ்கைப் தொடர்ந்து வளர்ச்சி பெற்றாலும், இணையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப மாற்றங்களால் பின்னுக்குத்தள்ளப்பட்டது என்றே சொல்ல வேண்டும். பெரும் நிறுவனமான மைக்ரோசாப்ட்டால் அதை காலத்திற்கு ஏற்ப மீட்டெடுக்க முடியவில்லை என்றும் கூறுகின்றனர்.

ஃபேஸ்புக், வாட்ஸ் அப் சேவையை வளர்த்தெடுத்தது போல மைக்ரோசாப்டால் ஸ்கைப் மாயத்தை தக்க வைக்க முடியவில்லை, என்கின்றனர். அதில் அந்நிறுவனத்திற்கு விருப்பம் இல்லை என்றும் கூட கருதப்படுகிறது.

skype

என்றென்றும் கேட்கும் ஒலி

எது எப்படியோ ஸ்கைப் தனது பழைய முக்கியத்துவத்தையும், பயனாளிகள் பரப்பையும் மெல்ல இழந்து வந்தது. கோவிட் பெருந்தொற்று காலத்தில் கூட, Zoom கவனத்தை ஈர்த்ததே தவிர ஸ்கைப் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

வீடியோ கேமை கூட முகம் பார்த்து விளையாடும் வசதி வந்து விட்ட நிலையில், வீடியோ கேம் பிரியர்களுக்கான டிஸ்கார்டு போன்ற பிரத்யேக மேடைகள் வந்துவிட்ட சூழலில் ஸ்கைப் மேலும் பின்னுக்குத்தள்ளப்பட்டது.

இந்த நிலையில் தான் மைக்ரோசாப்ட் வரும் மே மாதத்துடன் ஸ்கைப் சேவையை மூடுவதாக அறிவித்துள்ளது. ஸ்கைப் பயனாளிகள் அதன் டீம்ஸ் சேவையை ஒருங்கிணைக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.

இந்த அழைப்பு எதிர்பார்த்தது தான் என்றாலும், எண்ணற்ற ஸ்கைப் அபிமானிகளை அதன் பொற்காலத்தை நினைத்து ஏங்க வைத்துள்ளது. ஸ்கைப்பின் காலம் முடிந்துவிட்டதாக பலர் நினைத்தாலும், அதைப்போல எளிமையான சேவையை இன்றும் விரும்புவதாக கூறுபவர்களும் இருக்கின்றனர்.

ஸ்கைப் இணையத்தின் மைல்கல் சேவைகளில் ஒன்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நோக்கியாவின் மறக்க முடியாத அழைப்பொலி போல ஸ்கைப்பின் அழைப்பொலியும் கூட மறந்த முடியாதது தான். இணையத்தில் அதன் எதிரொலி கேட்டுக்கொண்டே இருக்கும்.


Edited by Induja Raghunathan