விண்வெளி நடுவே ராஜ விநாயகர்: Chandrayaanக்கு ஒரு சமர்ப்பணம்!
மும்பை லால்பாக் ராஜா விநாயகர் சிலையின் இந்த ஆண்டு கரு விண்வெளியில் விநாயகர். ISRO-வுக்கு நன்றி தெரிவிக்க மும்பைவாசிகள் செய்துள்ள ஏற்பாடு இது.
மும்பையில் விநாயகர் சதூர்த்தி கோலாகலமாகக் கொண்டாடப்படும், அந்தவகையில் விநாயகர் சதூர்த்தி ஏற்பாடுகள் மும்பையில் மும்முரம் அடைந்து உள்ளது. பொது இடங்களில் பிள்ளையார் சிலையை நிறுவி வழிபாடு செய்வதற்காக விதவிதமான சிலைகள் தயாராகி வருகின்றன. குறிப்பாக மும்பை லால்பாக்கில் நிறுவப்படும் பிரசத்திப்பெற்ற லால்பாக் ராஜா விநாயகர் சிலையின் இவ்வருட கரு விண்வெளியாகும். சந்திராயன் 2 வின் வெற்றியை முன்னிட்டே இந்த தீம் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு வருகிற 2-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை 11 நாட்கள் உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. அதனால் வருகின்ற செப்டம்பர் 7 ஆம் தேதி சந்திராயன் 2 நிலவில் தரை இறங்கவுள்ள நிலையில், அதில் இருந்து அனுப்பப்படும் முதல் புகைப்படம் நாடு முழுவதும் நேரடியாக காட்டப்படும்; அந்நிகழ்வை லால்பாக் ராஜா மண்டலிலும் நேரடியாக காட்சிப்படுத்தப்படும்.
“சந்திராயன் 2 விநாயகர் சதூர்த்தியின் போது தரையிறங்குவது தற்செயல் தான், சில மாதங்களாகவே விண்வெளி கருவை கொண்டு லால்பாக் ராஜா விநாயகரை கொண்டாடும் எண்ணம் இருந்தது. இஸ்ரோ விற்கு ஒரு சின்ன சமர்ப்பணம்,”
என்று ஹிந்துஸ்தான் டைம்ஸிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார் பாலாசாஹேப் காம்ப்ளே, லால்பகராஜா மண்டல் தலைவர்.
கடந்த வருடத்தின் கரு 'சுற்றுசூழலை பாதுகாப்போம்' இதனால் மொத்த அலங்காரமும் இயற்கையான சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்களை வைத்து செய்யப்பட்டது. இந்த முறை விண்வெளி கரு என்பதால் இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார் கலை இயக்குனர் நிதின் தேசை.
இம்முறை பல LED திரைகளைக் கொண்டு பந்தல் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது, இது குறித்து பேசிய நிதின் தேசை,
“பக்தர்கள் பந்தலுக்கு தரிசிக்க வரும்பொழுது விண்வெளியில் இருப்பதுப்போல் உணறுவார்கள். இது அனைத்திற்கும் அப்பாற்பட்டவர் என விநாயகரை குறிக்கும்,” என்கிறார்.
பந்தலில் வைக்கப்படும் சிலையின் உயரம் 22 அடி ஆகும், இங்கு தரிசிக்க வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்கு சிசிடிவி கேமரா, உலோக கண்டுபிடிப்பு இயந்திரம், அவர்கள் வசதிக்கு கழிப்பறை, குளியலறை, பெண்களுக்கு குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் அரை என அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.