Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

MSME நிறுவனங்களை மேம்படுத்த புதிய வலைத்தளம்: 'வளர் 4.O' சேவை தொடக்கம்!

தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் உருவாக்கப்பட்ட Valar 4.0 என்ற வலைத்தளத்தை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

MSME நிறுவனங்களை மேம்படுத்த புதிய வலைத்தளம்: 'வளர் 4.O' சேவை தொடக்கம்!

Thursday June 16, 2022 , 2 min Read

தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் உருவாக்கப்பட்ட Valar 4.0 என்ற வலைத்தளத்தை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தேசிய அளவிலான உயர்திறன் மையங்கள் மற்றும் தொழில் முனைவோர்களைக் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகள் மற்றும் தொழிலாளர்களைக் கொண்ட மாநிலமாகவும் தமிழ்நாடு உள்ளது. இதில், குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு மிக அதிகமாகவுள்ளது.

மாநிலத்தில் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையில் திறனை மேம்படுத்தவும், உற்பத்தியைப் பெருக்கவும், நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும், கருத்துக்களைப் பரிமாறவும், பிரச்சனைகள் மற்றும் சவால்களுக்குத் தீர்வுகாணவும், தமிழ்நாடு முதலமைச்சரின் '2030-ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் $ பொருளாதாரம்' என்ற இலக்கை அடையவும், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை Valar 4.0 வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Valar

வளர் 4.O வலைத்தளம் திறப்பு:

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஆ,ராய்ச்சியாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்களின் விவரங்கள், மற்றும் திட்டங்கள் சம்பந்தமான தகவல்களை வழங்கும் நோக்கில், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் உருவாக்கப்பட்ட புதிய இணையதளம் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகம் அருகேயுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் இன்று தலைமைச் செயலகத்தில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் சார்பில், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் உருவாக்கப்பட்ட Valar 4.0 வலைத்தளத்தை valar.tn.gov.in தொடங்கி வைத்தனர்.

Valar

இந்நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அரசு முதன்மைச் செயலர் டாக்டர் நீரஜ் மித்தல், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அரசுச் செயலாளர், அருண் ராய், மின்னாளுமை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர்விஜயேந்திர பாண்டியன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை தலைமைத் தொழில்நுட்ப அலுவலர் ராபர்ட் ஜெரார்ட் ரவி, இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் டாக்டர் வி. காமகோடி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து அமைச்சர் தா.மோ அன்பரசன் கூறுகையில்,

“எம்எஸ்எம்இ நிறுவனங்களை மேம்படுத்த வளர் 4.0 வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. எம்எஸ்எம்இ நிறுவனங்கள் இந்த வலைதளத்தை நல்ல முறையில் செயல்படுத்தி பயன்பெற வேண்டும். 242 நிறுவனங்கள், 122 பயனாளிகள் பதிவுசெய்துள்ளனர். 279 சேவைகள், 20 திட்டங்கள், 389 நிபுணர்களின் விவரங்கள் தற்போது கிடைக்கும்,” எனத் தெரிவித்தார்.

இவ்வலைத்தளத்தில் தொழில் துறையினர், சேவை வழங்குநர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள், உணவுபதப்படுத்துதல், மென்பொருள், வன்பொருள் மற்றும் பொருட்களின் தொகுப்புத் தேவைகள் (Packaging Requirements) போன்ற பல்வேறு பிரச்சனைகள், சிக்கல்கள் மற்றும் சவால்களுக்கு யோசனைகள் மற்றும் தீர்வுகள் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Valar
“வளர் 4.0 வலைத்தளம் தொழில் புரட்சியை ஏற்படுத்தும் என நம்புகின்றோம். ஆலோசனைகள், தகவல் உள்ளிட்டவை சரியாக கிடைத்தால் உற்பத்தியை பெருக்க முடியும்,” என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் வரை 242 நிறுவனங்கள் Valar 4.0 வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர். 29 நகரங்களிலிருந்து 122 பயனர்கள் தங்களின் பெயர், நிறுவனங்களின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ளும் விவரங்களை பதிவு செய்துள்ளனர். 279 சேவைகள், 20 திட்டங்கள் மற்றும் 389 நிபுணர்களின், விவரங்கள் இந்த வலைத்தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த வலைத்தளத்தைத் தமிழ்நாடு மின்னாளுமை முகமை, சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IITM) உறுதுணையுடன் வடிவமைத்து உருவாக்கியுள்ளது.