Stock News: இந்திய பங்குச் சந்தையில் 5 நாட்களுக்குப் பின் கொஞ்சம் நம்பிக்கை!
கடந்த 5 வர்த்தக நாட்களில் தொடர்ச்சியாக வீழ்ச்சி நிலவி வந்த இந்திய பங்குச் சந்தையில் நம்பிக்கை துளிர்விடும் வகையில் சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் சற்றே ஏற்றம் கண்டுள்ளன.
கடந்த 5 வர்த்தக நாட்களில் தொடர்ச்சியாக வீழ்ச்சி நிலவி வந்த இந்திய பங்குச் சந்தையில் நம்பிக்கை துளிர்விடும் வகையில் சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் சற்றே ஏற்றம் கண்டுள்ளன. சர்வதேசப் போக்குகள் பாதகமாக இருந்தாலும் கூட, உள்ளூர் முதலீட்டாளர்களின் ஆர்வத்தால் இந்த ஏற்றம் நிலவுகிறது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (பிப்.25) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 117.57 புள்ளிகள் உயர்ந்து 74,571.98 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 31.3 புள்ளிகள் உயர்ந்து 22,584.65 ஆக இருந்தது.
ஐந்து நாட்களுக்குப் பின் பங்குச் சந்தைகளில் பச்சை விளக்கு ஒளிர்வது முதலீட்டாளர்களுக்கு நிம்மதியைத் தந்துள்ளது.
இன்று முற்பகல் 11.20 மணியளவில் சென்செக்ஸ் 163.35 புள்ளிகள் (0.22%) உயர்ந்து 74,617.76 ஆகவும், நிஃப்டி 10.50 புள்ளிகள் (0.047%) உயர்ந்து 22,563.85 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை வர்த்தகம் வீழ்ச்சியுடன்தான் நிறைவு பெற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் சியோல், ஷாங்காய், டோக்கியோ மற்றும் ஹாங்காங் என அனைத்திலும் சரிவு நிலவுகிறது. இந்த சர்வதேச சந்தைகளின் தாக்கமும் இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலித்து வருகிறது

குறிப்பாக, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் வரிவிதிப்பு தொடர்பான புதிய அச்சறுத்தல்களும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டாததும் இந்தியப் பங்குச் சந்தைகளில் தடுமாற்றம் நிலவ காரணமாக இருக்கிறது. எனினும், உள்ளூர் சிறிய முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில் காட்டும் ஆர்வத்தின் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தை சற்றே மீண்டுள்ளது.
ஏற்றம் காணும் பங்குகள்:
எம் அண்ட் எம்
பாரதி ஏர்டெல்
பஜாஜ் ஃபைனான்ஸ்
நெஸ்லே இந்தியா
இண்டஸ்இண்ட் பேங்க்
டைடன் கம்பெனி
மாருதி சுசுகி
ஐசிஐசிஐ பேங்க்
கோடக் மஹிந்திரா பேங்க்
ஐடிசி
இஃன்போசிஸ்
டாடா ஸ்டீல்
ஏசியன் பெயின்ட்ஸ்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
ஹெச்டிஎஃப்சி பேங்க்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
எஸ்பிஐ
டாடா மோட்டார்ஸ்
அல்ட்ரா டெக் சிமென்ட்ஸ்
டெக் மஹிந்திரா
டிசிஎஸ்
விப்ரோ
ஆக்சிஸ் பேங்க்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 16 பைசா குறைந்து ரூ.86.88 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan