Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகளின் கற்றலை சுலபமாக்கும் ஏஐ கருவி உருவாக்கிய மதுரை பேராசிரியை!

மதுரை பேராசிரியை தமிழ்ச்செல்வி தொழில்நுட்பத்தின் மூலம் சிறப்புக் குழந்தைகளின் அன்றாட கற்றல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு மெய்நிகர் கருவியை கண்டுபிடித்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்.

ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகளின் கற்றலை சுலபமாக்கும் ஏஐ கருவி உருவாக்கிய மதுரை பேராசிரியை!

Tuesday March 01, 2022 , 4 min Read

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மூலம் இடர்களில் இருப்பவர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்ற அப்துல் கலாமின் சிந்தனைகளையே தன்னுடைய வாழ்நாளிலும் நடைமுறைபடுத்தி வருபவர் மதுரையைச் சேர்ந்த பேராசிரியை தமிழ்ச்செல்வி.

கலாம் எப்படி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குறைந்த எடை கொண்ட செயற்கை கோள்களை உருவாக்கித் தந்தாரோ அதைப் போலவே தமிழ்ச்செல்வியும் மெய்நிகர் தொழில்நுட்பத்தின் மூலம் சிறப்புக் குழந்தைகள் எனப்படும் ஆட்டிசம் குழந்தைகளின் கற்றல் முறையில் இருக்கும் கஷ்டங்களை குறைத்து அவர்களின் புரிதலில் முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.

தமிழ்ச்செல்வி

மாணவிகள் சாய் நவீனா ஸ்ரீ, பவானி தேவியுடன் பேராசிரியை தமிழ்ச்செல்வி

சாதாரண குழந்தைகளின் வளர்ச்சிக்கும் ஆட்டிசம் குழந்தைகளுக்கான வளர்ச்சிக்கும் பல வித்தியாசம் இருக்கிறது. ஆட்டிசம் குழந்தைகள் ஒரே விதமாக இருப்பதில்லை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குறைபாடு இருக்கிறது, அவர்களின் அன்றாட செயல்களே பெற்றோருக்கு மிகச்சிரமம் எனும் போது கற்றல் என்று வரும் போது அது அவர்களுக்கு மேலும் ஒரு சுமையாகவே இருக்கிறது.

“நான் ரோபாடிக்ஸில் பிஎச்.டி முடித்துவிட்டு 2014ம் ஆண்டில் சிறப்புக் குழந்தைகளுக்காக கண்டுபிடித்த ஒரு கருவி தோல்வியிலேயே முடிந்தது. ஏனெனில் அதில் குழந்தைகள் விளையாடினார்களே தவிர எதையும் கற்றுக்கொள்ளவில்லை, கற்றலில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அடுத்து என்ன செய்யலாம் இதில் வேறு என்ன டெக்னாலஜி இருக்கிறது என்று தேடிய போது தான் Cognitive science என்ற ஒன்றைப் பற்றி படித்தேன்.

இதில், மூளையில் இருக்கும் சிந்தனைகள் எப்படி செயல்பாடுகளாக மாறுகிறது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது, இதனுடன் உளவியல் போன்ற மூளை சார்ந்த பல விஷயங்களைப் படிக்கத் தொடங்கினேன். அப்போது தான் ஒரு விஷயம் புரிந்தது ஆட்டிசம் குழந்தைகளும் எல்லா விஷயங்களையும் உள்வாங்குகிறார்கள் ஆனால் நரம்பியல் கோளாறால் அதனை அவர்கள் சரிவர செயல்பாட்டில் வெளிப்படுத்துவதில்லை என்பதை அறிந்தேன் என்கிறார் தமிழ்ச்செல்வி.

என்னுடைய தேடலின் நீட்சியாக தொடர்ந்து virtual reality மற்றும் augmented reality தொழில்நுட்பத்தை படிக்கத் தொடங்கினேன். என்னுடைய ஆராய்ச்சியின் முடிவில் இவை அனைத்துமே அதிகசெலவு செய்தால் மட்டுமே செயல்படுத்த முடியும் உயர் தொழில்நுட்பம், நிதி ஆதரவு இருந்தால் மட்டுமே சாத்தியம் என்பதை புரிந்து கொண்டேன்.

“அதனால், முதலில் AR தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆட்டிசம் குழந்தைகளின் கவனச்சிதறல்களைக் குறைத்து அவர்கள் என்ன பார்க்கிறார்களோ அதனை உணர்ந்து அதற்கான செயல்பாட்டை வெளிப்படுத்தும் கற்றல் முறையை அறிமுகப்படுத்தினேன்.”

இதற்கு குழந்தைகள் மற்றும் பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து டெல்லியில் இருக்கும் DST (Department of Science and Technology)யின் CSRI (Cognitive Science and Research Institute) இடம் இந்த முறையை அடுத்த தொழில்நுட்பமான மெய் நிகராக உருவாக்குவதற்கு ரூ.25 லட்சம் நிதி உதவி கேட்டு விண்ணப்பித்தேன். மத்திய அரசின் அந்தத் துறையானது ஆட்டிசம் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு ரூ.36 லட்சம் நிதியுதவி அளித்தது என்று மகிழ்ச்சியோடு கூறுகிறார் இவர்.

இந்த நிதியை வைத்து நான் பணியாற்றும் மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியிலேயே ஒரு மெய்நிகர் அறையை அமைத்தோம். ஒரு மெய் நிகர் உலகிற்குள் செல்வதற்கு ஒரு கருவியை தலையில் அணிந்து கொண்டால் வெளிஉலகின் தொடர்பை துண்டித்துவிட்டு உள்ளார்ந்து வேறு உலகில் இருப்பார்கள்.

“அந்த வர்ச்சுவல் உலகில் பார்க்கும் காட்சிகளுக்கு ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் நன்கு பதிலளிக்கத் தொடங்கினர். இந்த முறையால் அவர்களுக்கு ஒரு விஷயத்தை எளிதில் கொண்டு சென்று அதனை உணர்த்த முடிந்தது. அந்த விஷயம் அவர்களைச் சரியான முறையில் சென்றடைந்தது என்பதையும் கண்கூடாகப் பார்க்க முடிந்தது.”  

பொதுவாக ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கும் போது உலக நாடுகளில் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் தயாரிப்போம், ஆனால், நாங்கள் சற்று வித்தியாசமாக இங்கே இருக்கும் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் பெற்றோர் மற்றும் ஆசிரியரின் தேவை என்பதை கேட்டறிந்து அதற்கான தீர்வுகளைத் தருவதற்கு முயற்சித்தோம்.

எங்களுடைய மெய்நிகர் கருவியை சென்னையில் இருக்கும் லிப்மெட், பெங்களூருவில் செயல்படும் Nimhans, மதுரையில் செயல்படும் Spark மற்றும் Rakshana child care centre, புதுச்சேரியில் சிறப்புக் குழந்தைகளுக்காக செயல்படும் பள்ளிகள் போன்று  மூளை மற்றும் நரம்பியல் சார்ந்து செயல்படும் பல்வேறு இடங்களுக்குச் சென்று பரிசோதித்துப் பார்த்ததிலும் குழந்தைகளிடம் நல்ல முன்னேற்றத்தை காண முடிந்தது எனது ஆராய்ச்சிக்கு கிடைத்த வெற்றியே.  

மெய்நிகர்

மெய் நிகர் கருவியுடன் கற்கும் மாணவன்

மத்திய அரசின் நிதியை முழுமையாகப் பயன்படுத்தி உயர் தொழில்நுட்பக் கருவிகளை வாங்கி அதனை நமக்கு ஏற்றவாறு மாற்றியமைத்து உருவாக்கிய இந்த மெய்நிகர் முயற்சிக்கு மருத்துவர்களிடம் இருந்தும் கருத்துகளைப் பெற்றோம்.

மதுரை Ahana hospital-லில் உளவியல் பிரிவு மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்று மேலும் சில மாற்றங்களைச் செய்து சிறப்பானதாக்கினோம். பெரும்பாலானவர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இதனை ஒரு கருவியாக உற்பத்தி செய்து வர்த்தகம் செய்வதற்காக அரசிடம் காப்புரிமை கோரியுள்ளோம், என பகிர்ந்தார்.

ARதொழில்நுட்பத்திற்கும் காப்புரிமை கிடைத்துவிட்டது, VR தொழில்நுட்பத்தின் காப்புரிமை அனுமதிக்காகக் காத்திருக்கிறோம். என்னுடைய இந்த ஆராய்ச்சி சர்வதேச ஜர்னலில் வெளியாவதற்கு அமெரிக்காவின் ஆர்ஷ்லேண்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக இருக்கும் தமிழர் சத்யபிரகாஷ் மிகவும் உதவியாக இருந்ததை நினைவு கூர்கிறார் தமிழ்ச்செல்வி.

ஆராய்ச்சி அளவிலேயே நான் நின்றுவிட்ட நிலையில், 2018ம் ஆண்டில் என்னிடம் படிக்க வந்த இரண்டு மாணவிகளான பவானி தேவி மற்றும் சாய் நவீனா ஸ்ரீ, ஆட்டிசம் குழந்தைகளுக்கான இந்த கண்டுபிடிப்பில் முழுமனதோடு மென்பொருள் தயாரிப்பு பணியை செய்து வந்தனர். இவர்களின் ஆர்வத்தைக் கண்டு அவர்களை ஐஐடி கராக்பூர் மற்றும் ஐஐடி ஐதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு Internal பயிற்சிக்காக அனுப்பி வைத்தோம்.

அங்குக் கிடைத்த அனுபவத்தை வைத்து இவர்கள் இதனை ஒரு Product ஆக பலரும் பயன்படுத்தும் விதத்தில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல ஒரு ஸ்டார்ட் அப் ஆக கொண்டு வரலாம் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தினர்.  

இதனையடுத்து, கல்லூரிக்குள்ளேயே இருக்கும் Technology business incubator-களின் ஊக்கத்தினால் தொடர்ந்து இதனை ஒரு வணிகக் கருவியாக்குவதற்கான திட்டங்களுக்காக அண்மையில் கூட சென்னை ஐஐடியில் ஒரு பயிற்சியை நிறைவு செய்திருக்கிறோம்.

2021 நவம்பரில் Thiyagarajar extended reality solutions என்ற ஸ்டார்ட் அப்பை தொடங்கி அடுத்தகட்டமாக இதனை எப்படி எடுத்துச் செல்லலாம் என்ற ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறோம்.

காப்புரிமை கிடைத்த பின்னர் எப்படி செயல்படுத்தலாம் என்ற இறுதி வடிவம் பெற்றுவிடும் என்று கூறும் தமிழ்ச்செல்வி, 20 ஆண்டுகளாக பேராசிரியையாக செயலாற்றி வருகிறார்.

”எப்போதுமே சமுதாயத்திற்கு பயன் தரும் விஷயங்களை செய்ய வேண்டும் என்ற எண்ண ஓட்டம் என்னுள்ளே இருந்து கொண்டே இருக்கிறது. என்னிடம் படிக்கும் மாணவர்களிடம் கூட மக்களுக்கு பயன் தரும் கண்டுபிடிப்புகளை உருவாக்கவே ஊக்கம் தருவேன். ஒரு பொருளை வணிக நோக்கிலோ அல்லது தொழில்துறைக்கென்று உருவாக்குவதை விட மக்களுக்காக உருவாக்குவதில் ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கும்,” என்கிறார்.
autism

virtual reality

பெருந்தொற்று காலத்தில் சாதாரண குழந்தைகளே வளர்ச்சி நிலையில் பின்னடைவை சந்தித்திருக்கும் நிலையில், ஆட்டிசம் குழந்தைகளும் தெரபிகள் இல்லாததால் வளர்ச்சியில் பின்னுக்குச் சென்றுள்ளனர்.

எனவே, ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் உருவங்களை மெய்நிகரில் கொண்டு வந்து அவர்களின் சூழலை எளிதாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். இது மட்டுமின்றி டிஜிட்டல் மெய் நிகர் அனுபவத்திற்கு தலையில் அணிந்து கொள்ளும் கருவி கனமாக இருப்பதனால் அதனை தவிர்த்து கேவ் அடிப்படையிலான மெய்நிகர் உலகை அமைக்கவும் திட்டமிட்டிருக்கிறோம். இதற்கும் கூடுதல் நிதி தேவைப்படும் நிலையில் கல்லூரி மற்றும் கேபிடல் வென்சர்கள் நிதியுதவியுடன் இதனைச் செய்ய திட்டமிட்டிருக்கிறோம்.

இந்த கேவ் உலகில் குழந்தைகள் கருவிகளின் எந்தச் சுமையும் இன்றி விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கிறார் தமிழ்ச்செல்வி.  

வயது 51ஐக் கடந்தாலும் தன்னுடைய கண்டுபிடிப்புகளை வரியவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற உற்சாகத்துடன் சோர்ந்து போகாமல் பயணிக்கும் தமிழ்ச்செல்வி பல பொறியியல் மாணவர்களுக்கு உத்வேகமாக இருந்து வருகிறார்.