‘சின்ன முதலீடு; பெரிய லாபம்’ - உழைப்பால் உயர்ந்து ‘வென்றவர்கள்’ இவர்கள்!
ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும், சொல்லப்பட வேண்டிய மிகப்பெரிய நம்பிக்கையும், விடாமுயற்சிக் கதைகளும் நிறையவே ஒளிந்திருக்கும். அப்படிப்பட்ட வெற்றியாளர்களின் கதைகளைத் தேடித்தேடி, ஸ்டோரிகளாகத் தந்து வளரும் தொழில்முனைவோர் பலருக்கு நம்பிக்கை அளித்து வருகிறது தமிழ் யுவர்ஸ்டோரி.
காலத்தின் கட்டாயத்தால், குடும்பச் சூழலால், பொருளாதாரத் தேவையால் என குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பலர், துணிந்து எடுத்த முடிவால் இன்று தங்களது வாழ்க்கையையே மாற்றி வெற்றிகரமான தொழில்முனைவோர் ஆகி இருக்கின்றனர். நிறைய முதலீடு போட்டால் தான் கோடிகளில் லாபம் பார்க்க முடியும் என்பதெல்லாம் பொய் என நிரூபித்தவர்கள் அவர்கள்.
ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான முதலீட்டில் தொழில் தொடங்கி, இன்று கோடிக்கணக்கான ரூபாய் டர்ன் ஓவர் செய்யும் பலர் உழைப்பிற்கு உதாரணமாக உள்ளனர்.
இதோ அப்படிப்பட்டவர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தும் விதமாக தமிழ் யுவர்ஸ்டோரி வெளியிட்ட ஸ்டோரிகளின் தொகுப்பு.
1. 18 வயதில் சிறிய கேக் ஷாப் ஒன்றில் மாதச் சம்பளம் ரூ.700க்கு வேலை செய்தவர் விகேஷ் ஷா. அங்கு கிடைத்த அனுபவத்தையே மூலதனமாகக் கொண்டு, 99 Pancakes என்கிற பிராண்ட் தொடங்கி இன்று அவர் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டி வருகிறார்.
2017-ம் ஆண்டு மும்பையின் காலா கோடா பகுதியில் முதல் பேன்கேக் ஸ்பெஷாலிட்டி ஸ்டோர் திறந்தார். 99 ரூபாய்க்கு பேன்கேக் விற்பனை செய்யத் தொடங்கியதாலேயே பின்னாலில் தனது பிராண்டிற்கு 99 Pancakes என்ற பெயர் வைத்ததாகக் கூறுகிறார் விகாஷ்.
சிறிய அளவில் ஆரம்பித்த இவரது வியாபாரம், இன்று குஜராத், தெலுங்கானா, மத்தியப்பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு என இந்தியா முழுவதும் 65 ஸ்டோர்களாக விரிவடைந்துள்ளது.
Read Also: அன்று மாத வருமானம் 700 ரூபாய்; இன்று கோடிகளை ஈட்டும் 43 பேன்கேக் ஸ்டோர் உரிமையாளர்!
2. குடும்பச் சூழல் காரணமாக படிப்பைப் பாதியில் கைவிட்டு, விவசாயத்தில் இறங்கியவர் ஹரியானாவின் யமுனா நகரில் உள்ள டம்லா கிராமத்தைச் சேர்ந்த தரம்பிர் கம்போஜ். விவசாயத்தால் குடும்பத்தினரின் தேவையை தீர்க்க முடியாததால், டெல்லி சென்று அங்கு ரிக்ஷா ஓட்டினார். ஆனாலும் வருமானம் போதவில்லை.
தங்கள் பகுதியில் விவசாயம் செய்யப்படும் பழங்களுக்கு டெல்லியில் அதிக தேவை இருப்பதைக் கண்கூடாகக் கண்டார் தரம்பீர். எனவே மீண்டும் சொந்த ஊர் திரும்பி விவசாயத்தைத் தொடங்கினார். பழங்களைப் பதப்படுத்தும் இயந்திரங்கள் வாங்க போதுமான பணம் இல்லாததால், தானே குறைந்த செலவில் அப்படியொன்றை உருவாக்கினார்.
தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளை மூலம் தனது இயந்திரத்திற்கான காப்புரிமையும் பெற்றார். இந்த இயந்திரங்களை இந்தியா மட்டுமில்லாமல், அமெரிக்கா, இத்தாலி, நேபாளம், ஆஸ்திரேலியா, கென்யா, நைஜீரியா, ஜிம்பாப்வே, உகாண்டா உள்ளிட்ட 15 நாடுகளுக்கு விற்று, தற்போது ஆண்டிற்கு ரூ.67 லட்சம் வருமானம் ஈட்டு வருகிறார்.
Read Also: அன்று ரிக்ஷா ஓட்டுநர்: இன்று வெற்றித் தொழில் முனைவோர்: மாற்றி யோசித்து சாதித்த விவசாயி!
3. கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே சிறிய கிராமத்தில் பிறந்தவர் நாராயண். தனது 13 வயதில் வேலை தேடி மும்பை சென்றவர், அங்கு கேண்டீனில் பாத்திரம் கழுவியது வரை பல வேலைகள் செய்துள்ளார்.
இட்லி, தோசை போன்ற உணவுகள் பிரபலமாகத் தொடங்கிய நாட்களில், அதையே தன் வியாபாரத்திற்கான களமாகத் தேர்ந்தெடுத்தார் நராயண். தன் கடின உழைப்பின் மூலம், படிப்படியாக உணவகங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினார். இன்று அவரது ஷிவ் சாகர் ஈட்டரீஸ் சங்கிலித் தொடர் உணவகங்களில் சுமார் 1300க்கும் மேற்பட்டோர் வேலை பார்க்கின்றனர். ஆண்டிற்கு ரூ.75 கோடி டர்ன் ஓவர் செய்கிறார் நாராயண்.
Read Also: அன்று கேன்டீனில் பாத்திரம் கழுவியவர் இன்று ரூ.75 கோடி ஈட்டும் உணவக உரிமையாளர்!
4, பெங்களூருவைச் சேர்ந்த சித் நாயுடு, சிறுவயதில் குடும்பச்சூழல் காரணமாக பள்ளிக்கு செல்லுமுன் பேப்பர் போடும் தொழிலைச் செய்தவர். பத்தாவது வகுப்பிற்கு மேல் படிக்க முடியாமல், ரூ.3000 சம்பளத்தில் அலுவலக உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தார்.
ஆனாலும் பேஷன் உலகில் சாதிக்க வேண்டும் என்ற வெறி அவருக்குள் இருந்து கொண்டே இருந்தது. பொருளாதாரத் தேவைக்காக ஒருபுறம் உழைத்துக் கொண்டே, தனது கனவுக்கான வேலைகளை மறுபுறம் தொடங்கினார். அதன்பலனாக 2017ல் ’Sid Productions' நிறுவனத்தைத் துவக்கினார். ஓராண்டில் அவரது வர்த்தகம் செழித்து ரூ.1.3 கோடி விற்றுமுதல் ஈட்டினார். இப்போது ரூ.3 கோடி விற்றுமுதலை இலக்காகக் கொண்டுள்ளார்.
இன்று தனது 27 வயதில் மற்ற இளைஞர்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக வாழ்ந்து வருகிறார் சித்.
Read Also: பேப்பர் போட்டு மாதம் ரூ.250 சம்பாதித்த சித் இன்று பேஷன் தொழிலில் சாதித்தது எப்படி?
5. கன்னியாகுமரி மாவட்டத்தின் ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்தவர் வேலு. குடும்பத்தில் யாருக்கும் தொழில் செய்த அனுபவமில்லை. வேலு மருத்துவர் ஆகவேண்டும் என்பதே குடும்பத்தினரின் விருப்பமாக இருந்தார். ஆனால் அவர் தொழில்முனைவராக உருவெடுத்தார்.
தனது ஐந்தாண்டு கால சேமிப்பைக் கொண்டு சிறியளவில் தொடங்கிய Trivitron நிறுவனம் இன்று இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவ உபகரணங்கள் வணிகங்களில் ஒன்றாக வளர்ச்சியடைந்துள்ளது. சென்னையைச் சேர்ந்த மருத்துவ தொழில்நுட்ப நிறுவனமான Trivitron-ன் விற்றுமுதல் 700 கோடி ரூபாய்.
“நான் தோல்வியில் இருந்துதான் பாடம் கற்றுக்கொள்கிறேன். வெற்றியில் இருந்து பாடம் கற்பது கடினம். ஒருவர் தனக்கு ஆர்வம் இருக்கும் பகுதியில் செயல்படத் தொடங்கி, விடாமுயற்சியுடன் தடைகளைத் தகர்த்தெறிந்தால் பணம் தானாக வந்து சேரும்,” என்கிறார் 52 வயதான வேலு.
Read Also: குமரியில் பிறந்து சென்னையில் நிறுவனம் தொடங்கி ரூ.700 கோடி டர்ன்ஓவர் வணிகத்தை கட்டமைத்த Dr.வேலு!
6. தெலுங்கானாவின் பெட்டபள்ளி எனும் சிறிய ஊரில் வளர்ந்த பனிராஜ் 12ம் வகுப்பை முடித்ததும் டைப்ரைட்டிங் கற்றுக்கொண்டார். அதன் பிறகு கரீம்நகர் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராகச் சேர்ந்தார். அங்கு குமாஸ்தாவாக பதவி உயர்வு பெற 20 ஆண்டுகள் ஆனது.
அதிக வருமானம் ஈட்ட ஐடி தொழிலே சிறந்தது எனக் கருதினார் பனிராஜ். எனவே அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டு, 2006ல் புனேவைச்சேர்ந்த ஐடி சேவை நிறுவனத்தில் செயல் உதவியாளராக பணியில் சேர்ந்தார். அங்கு கிடைத்த அனுபவங்களைக் கொண்டு 5 மில்லியன் டாலர் ஆண்டு வருமானம் கொண்ட 'ஓஜாஸ் இன்னவேட்டிவ் டெக்னாலஜி' (Ojas Innovative Technology Pvt Ltd) நிறுவனத்தின் சி.இ.ஓவாக பின்னாளில் உருவானார்.
Read Also: அன்று அலுவலக உதவியாளர்; இன்று பல கோடி மதிப்பு ஐடி நிறுவனத்தின் உரிமையாளர்!
7. ஷாப்பர்ஸ் ஸ்டாப், பிக்பஸார், @ஹோம், ஹவுஸ்புல் உள்ளிட்ட பல பிரபல சில்லறை வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றியவர் புஷ்பேந்திரா. அங்கு பர்னீச்சர்களின் தேவையைப் பற்றி, கண்கூடாகக் கண்ட அவர், தானும் ஒரு தொழில்முனைவோர் ஆவது எனத் தீர்மானித்தார்.
தனிப்பட்ட சேமிப்பு மற்றும் குடும்பத்திடன் கடன் வாங்கிய ரூ.18 லட்சம் தொகையை வைத்துக்கொண்டு, தனது நண்பருடன் 2017ல் ஹைதராபாத்தில் பர்னீச்சர் ஷோரூமை துவக்கினர் புஷ்பேந்திரா. ஆரம்பத்தில் வியாபாரம் நஷ்டத்தில் இயங்கவே, வர்த்தகத்தை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டார் அவர்.
கடைசி முயற்சியாக இ-காமர்சை முயற்சிக்கத் தீர்மானித்து, தற்போது அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் புஷ்பராஜ். ஃபிளிப்கார்ட் மூலம் தனது வியாபாரத்தை விரிவு படுத்தினார். இப்போது மாதம் ரூ.1 கோடி விற்பனையை நோக்கி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது புஷ்பேந்திராவின் நிறுவனம்.
Read Also: மூடப்படும் நிலையில் இருந்து மீண்டு, 5 நாட்களில் ரூ.2 கோடி வருமானம் ஈட்டிய தொழில் முனைவோர்!
8. பீஹாரைச் சேர்ந்த சித்திக், பிபிஏ பட்டதாரி. உறவினர் ஒருவரை சந்திக்க மும்பை சென்றவர், ஐந்தாண்டுகள் கழித்து 2003ம் ஆண்டு பிரபல குடிசைப்பகுதியான தாராவியில் பை தயாரிப்புத் தொழிலைத் தொடங்கினார். நண்பர்களிடம் கடனாக 5,000 ரூபாய் பெற்றுக்கொண்டு, இவர் தொடங்கிய தொழில் இன்று COSMUS என்கிற நிறுவனமாக உருவெடுத்து 35 கோடி ரூபாய் டர்ன்ஓவர் கொண்டுள்ளது.
நான்கு இயந்திரங்களுடன் தொடங்கப்பட்டு 95 இயந்திரங்களுடன் தாராவியில் வெற்றிகரமாக இயங்கி வருகிறது COSMUS.
9. 2001-2003 ஆண்டுகளிடையே ஜெய்ப்பூர் பகுதியில் உள்ள புடவை ஷோரூம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார் அனுஜ் முந்த்ரா. அப்போது அவரது மாத சம்பளம் 1,400 ரூபாய். இந்த வருவாய் போதாது என்பதை விரைவிலேயே உணர்ந்த அவர், சூட் ஆடை வகைகளை வர்த்தகம் செய்யத் தொடங்கினார்.
எதிர்காலத்தில் மின் வணிகத்தில்தான் லாபம் அதிகம் என்பதை உணர்ந்த அனுஷ், 2012-ம் ஆண்டு Nandani Creation Pvt Ltd தொடங்கினார். மின்வணிக சந்தையில் Jaipurkurti.com என்கிற பிராண்டுடன் செயல்பட்டார். முதல் ஆண்டிலேயே இந்நிறுவனம் 59 லட்ச ரூபாய் டர்ன்ஓவரை எட்டியது.
அனுஜ் முந்த்ரா தொடங்கிய Jaipurkurti.com ஆடை வணிகம் கடந்த நிதியாண்டு 43.7 கோடி ரூபாய் டர்ன்ஓவரை எட்டியுள்ளது. 2023-ம் ஆண்டில் 100 கோடி ரூபாய் மதிப்புடைய வணிகமாக இதனை உருவாக்க கனவுகளுடன் உழைத்து வருகிறார் அனுஷ்.
Read Also: ரூ.1,400 மாத வருமானத்தில் தொடங்கி, ரூ.43.7 கோடி மதிப்பு ஆடை நிறுவனத்தை உருவாக்கிய தொழில்முனைவர்!
10. சிறுவயதில் விளையாட்டுத்தனமாக கார்களின் மீது கொண்ட காதலை, பின்னாளில் தன் தொழிலாக மாற்றிக் கொண்டவர் ஜதின். தனது 12 வயதிலேயே ‘பிக் பாய் டாய்ஸ்’ என்கிற பெயரை தீர்மானம் செய்துவிட்டார். 17 வயதில் மெர்சிடிஸ் எஸ் கிளாஸ் ரக கார் ஒன்றை புதுப்பித்து நல்ல லாபத்திற்கு விற்பனை செய்தார். இதுவே அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
தன் அப்பாவிடம் ரூ.70 ஆயிரம் கடனாகப் பெற்று 2009ல் ’பிக் பாய் டாய்ஸ்’ (Big Boy Toyz) நிறுவனத்தைத் தொடங்கினார் ஜதின். குருகிராமைச் சேர்ந்த இந்த ஸ்டார்ட் அப் பழைய கார்களைப் புதுப்பித்து, ஆடம்பர கார்களாக மாற்றி மறுவிற்பனை செய்கிறது.
மக்களின் ஆர்வத்திற்கும், எதிர்பார்ப்பிற்கும் தகுந்த மாதிரி கார்களைப் புதுப்பித்து தருகிறார் ஜதின். இதனாலேயே குறுகிய காலத்தில் அமோக வளர்ச்சி அடைந்து 300 கோடி டர்ன் ஓவர் செய்து வருகிறது பிக் பாய் டாய்ஸ்.
Read Also: 70,000 டூ 300 கோடி: ஆடம்பர கார்களை புதுப்பித்து மறுவிற்பனை செய்யும் ஜதின் அஹூஜா!