Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

யூடியூப் வீடியோ பார்த்து வந்த ஆசை; 59 வயதில் எவரெஸ்ட்டில் ஏறிய கேரளப் பெண்!

கேரளாவைச் சேர்ந்த 59 வயதான வசந்தி என்பவர், யூடியூப் வீடியோக்களின் உதவியுடன் நான்கு மாதங்கள் நடைபயிற்சி மற்றும் பயிற்சிக்குப் பிறகு கடந்த மாதம் எவரெஸ்ட் அடிப்படை முகாமுக்கு தனியாக மலையேற்றம் செய்து, 'வயது வெறும் எண்' என்பதை உரக்க உணர்த்தியுள்ளார்.

யூடியூப் வீடியோ பார்த்து வந்த ஆசை; 59 வயதில் எவரெஸ்ட்டில் ஏறிய கேரளப் பெண்!

Tuesday March 25, 2025 , 3 min Read

கேரளாவைச் சேர்ந்த 59 வயதான வசந்தி என்பவர், யூடியூப் வீடியோக்களின் உதவியுடன் நான்கு மாதங்கள் நடைபயிற்சி மற்றும் பயிற்சிக்குப் பிறகு கடந்த மாதம் எவரெஸ்ட் அடிப்படை முகாமுக்கு தனியாக மலையேற்றம் செய்து, 'வயது வெறும் எண்' என்பதை உரக்க உணர்த்தியுள்ளார்.

கேரளாவின் கண்ணுார் மாவட்டத்தில் உள்ள தலிபரம்பாவைச் சேர்ந்த 59 வயதான வசந்தி செருவீட்டில், அடிப்படையில் ஒரு டெய்லர். அவருக்கோ யூடியூப்பில் வீடியோ பார்ப்பது ஃபுல்டைம் ஹாபி. ஆனால், ஏன் பார்க்கிறோம், எதற்கு பார்க்கிறோம் என்று தெரியாமல் தள்ளி தள்ளி ஷார்ட்ஸ் பார்த்து, பொழுதை கழிக்காமல் பயனுள்ளதாக பார்த்துள்ளார்.

அப்படி தான், எவரெஸ்ட் மலையேறும் மக்களின் வீடியோக்களை பார்க்கத் தொடங்கியுள்ளார். அவருக்கும் எவரெஸ்ட் மலையில் ஏறும் ஆசை வந்துள்ளது. அதில் தீவிரமாக இருந்தார். 59வயதில் அவருக்கு ஏற்பட்ட விருப்பம் வித்தியாசமாக தோன்றலாம். ஆனால், வசந்திக்கு இது புதிதல்ல. ஒரு வருடத்திற்கு முன்பாக, தாய்லாந்திற்கு சுற்றுலா செல்ல விருப்பப்பட்ட அவர், ஸ்லோவாக பயணித்து திரும்பினார். அப்பயணம் அளித்த அனுபவமும், பரவசமும் அவரை விரும்பியவற்றை செய்வதற்கான தைரியத்தை அளித்தது.

"சிறு வயதாக இருக்கும் போது, மலையேறுவதற்கு மிக உயர்ந்த சிகரம் எவரெஸ்ட் சிகரம் என்பதை படித்துள்ளோம். ஆனால், அங்கு எப்படி செல்வது அல்லது அதற்கான செயல்முறை என்ன என்பது பற்றிய எந்த ஐடியாவுமில்லை. தாய்லாந்துக்கு சென்று திரும்பிய பிறகு, வயதாகுவதற்குள் பயணிக்க கடினமான இடங்களுக்கு சீக்கிரமே சென்று பார்த்திட வேண்டும் என்று முடிவெடுத்தேன்," என்று உற்சாக குரலில் ஹெர்ஸ்டோரியிடம் பகிர்ந்தார் வசந்தி.
vasanthy

எவரெஸ்ட் மலையேற்றத்துக்கு உடல் மற்றும் மன ரீதியாக ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்த அவர், அதற்கான பயிற்சிகளை எடுத்தார்.

கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு, நாள் தவறாமல் 4 முதல் 6 கி.மீ துாரம் நடைப்பயிற்சி செய்தார். மலைப்பாங்கான பகுதியில் தான் அவர் வசித்து வந்ததால், இயல்பாகவே ஏற்ற இறக்கங்களில் நடந்த அனுபவம் அவருக்கிருந்தது. இருப்பினும், எவரெஸ்ட் மலையேற்றம் என்பதால், சீரற்ற நிலப்பரப்புகளில் நடந்து பழிக, அவரது ஸ்டாமினா அளவை அதிகரித்து உள்ளார். மலையேற்றத்துக்கு உதவும் சில பயிற்சிகளையும் யூடியூப் வீடியோக்களை பார்த்து கற்று கொண்டார். கடந்த மாதத்தில் தான் மலையேற்ற பூட்ஸூகளை அணிந்து நடக்க பயிற்சி செய்தார்.

வழியில் குறுகிட்ட தடைகளை தட்டித்துாக்கிய வசந்தி

பயிற்சிகள் மற்றும் பணச்சேகரிப்பு அனைத்தையும் முடித்து கடந்த பிப்ரவரியில், கிழக்கு நேபாளத்தில் உள்ள சாகர்மாதா தேசிய பூங்காவிற்கு வெளியே உள்ள ஒரு சிறிய மலை நகரமான லூகாவிற்கு விமானத்தில் செல்வதற்காக காத்மாண்டுவுக்குப் பயணம் செய்தார். அங்கிருந்து எவரெஸ்ட் அடிப்படை முகாமுக்கான அவரது பயணத்தை தொடங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், மோசமான வானிலை காரணமாக அவர் பயணிக்க இருந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. அடுத்து என்ன செய்வது என்று வசந்தி திகைத்து இருக்கையில், விமான நிலையத்தில் இருந்த ஒரு ஜெர்மன் தம்பதியினருடன் நட்பு ஏற்பட்டது.

"வானிலையைத் தொடர்ந்து மோசமாக இருக்கலாம் என்றும், அதனால் அடுத்த சில நாட்களுக்கு விமானங்கள் இருக்காது என்றும் கூறினார்கள். அந்தத் தம்பதியினருடன் சாலை வழியாக சுர்கேவுக்குச் சென்று வேறு பாதையில் பயணிக்க முடிவு செய்தேன்," என்றார் வசந்தி.

வசந்திக்கு உதவியாக அவரது பைகளைத் துாக்கி செல்வதற்கு சுர்கேவிலிருந்து ஒரு போர்ட்டரை நியமித்து, ஜெர்மன் தம்பதியினர் அவருக்கு உதவினர். பிப்ரவரி 15ம் தேதி அன்று அவர் தனது பயணத்தைத் தொடங்கினார். எவரெஸ்ட் அடிப்படை முகாமை அடைய வசந்திக்கு ஒன்பது நாட்கள் ஆனது.

"ஆரம்பத்தில், வானிலை தாங்கக்கூடியதாக இருந்தது. ஆனால், சில நாட்களில் மிகவும் குளிராக மாறியது. நிலப்பரப்பும் சீரற்றதாகவும், கரடுமுரடானதாகவும் இருந்தது. ஆனால், ஒரு முறை கூட என்னால் தொடர முடியாது என்று தோணவே இல்லை. சரியாக சுவாசித்துக் கொண்டு மெதுவாக நடந்தேன். குறிப்பாக உயரத்தை அடைந்தபோது, எனக்கு எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. தினமும் 4-5 மணிநேரம் நடந்தேன்," என்றார்.
vasanthy

அடுத்த இலக்கு சீனப்பெருஞ்சுவர்..!

ஒரு வழியாக சிக்கலான மற்றும் சிரமமான சிகரத்தின் உச்சிக்கு ஏறி நின்றார். அவரது இலக்கை அடைந்ததும், உலகின் உச்சியில் இருப்பதை உணர்ந்ததோடு மட்டுமல்லாமல், தான் செய்ய நினைத்ததை அடைய முடிந்தது என்பதை நிரூபித்ததில் கிடைத்த ஆனந்தம் அலாதியாக உணர்ந்ததாக பெருமிதத்துடன் கூறினார். கேரளாவின் பெருமையை அந்த இடத்தில் நிலைநிறுத்த, மாநிலத்தின் சிறப்புமிக்க கசவு புடவையை அணிந்து சிகரத்திலிருந்து புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார். இதன்மூலம், வயது என்பது வெறும் எண் என்பதை நிரூபித்த பெண்ணாக வசந்தி வரலாற்றில் இடம்பிடிப்பார்.

ஆனால், அதை விட, வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற அவரது விருப்பத்திற்காக அவர் நினைவுகூரப்பட விரும்புவதாக தெரிவித்தார். இந்த மனப்பான்மைதான் அவரை எப்போதும் வாழ்க்கையில் முன்னோக்கித் தள்ளியுள்ளது. இத்தருணத்தில் அவரது இரண்டு மகன்ள் அளித்த ஆதரவுக்கு அவர் நன்றி கூறினார்.

"பயணத்திற்கு தேவையான நிதியினை எனது சேமிப்பிலிருந்தும், என் மகன்களும் கொஞ்சம் கொடுத்தனர். மீதமுள்ளவற்றுக்கு, என் நகைகளை அடகு வைத்தேன்," என்றார்.

எவரெஸ்ட் பயணத்தை வெற்றிகரமாக முடித்து வீடு திரும்பிய வசந்தி, அடுத்த பயணத்திற்கான பணத்தைச் சேகரிக்க மீண்டும் அவரது தையல் தொழிலை தொடங்கியுள்ளார். ஆனால், இப்போது மற்ற பெண்களுக்கு தையல் கலையுடன் கற்றுக் கொடுக்க அவரிடம் நிறைய கதைகள் உள்ளன.

"என் வயதுடைய மற்ற பெண்கள் அவர்களது வாழ்நாளில் ஒரு முறையாவது இந்தப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறேன். மலைகள் எவ்வளவு அழகாக இருக்கின்றன என்பதை அவர்களிடம் பகிர்கிறேன்," என்று கூறினார்.

இப்போது, அவரது அடுத்த இலக்கு சீனப் பெருஞ்சுவருக்கு பயணம் செய்வது. ஏற்கனவே, அப்பயணத்திற்கான ஆராய்ச்சிகளை செய்ய தொடங்கிவிட்டார். உங்கள் கனவுகள் உங்களை எங்கு அழைத்துச் செல்ல முடியும் என்பதற்கு வரம்புகள் இல்லை என்பதை வசந்தியின் கதை நினைவூட்டுகிறது.

தமிழில்: ஜெயஸ்ரீ