பயனர்கள் தங்களது யுபிஐ கணக்கு மூலம் கடன் பெறுவது எப்படி? - Step-by-Step Guide
‘Credit on UPI’ என்பது குறித்த பேச்சு ஃபின்டெக் சார்ந்த வணிக பிரிவில் அதிகரித்துள்ளது. அதை எப்படி பயன்படுத்துவது எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தியாவில் மேற்கொள்ளப்படும் பணப்பரிமாற்றத்தில் சுமார் 58 சதவீதம் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படுவதாக குளோபல் டேட்டா என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. யுபிஐ, டெபிட் மற்றும் கிரெடிட் பேமெண்ட், இணைய வழியிலான வங்கி பயன்பாடு சார்ந்த பரிவர்த்தனை என அது நீள்கிறது.
மேலும், கொரோனா பரவலுக்கு பிறகு இந்தியாவில் யுபிஐ பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையும் பார்க்க முடிகிறது. மிக சுலபமாக ரூ.1 முதல் ரூ.1 லட்சம் வரையில் நாள் ஒன்றுக்கு பயனர்கள் யுபிஐ மூலம் பணம் அனுப்ப முடியும். பணம் பெறுவதற்கு லிமிட் எதுவும் இல்லை. இப்போதைக்கு பெரும்பாலான யுபிஐ பயனர்கள் தங்களது டெபிட் கார்டை அடிப்படையாகக் கொண்டு வங்கிக் கணக்கு, ப்ரீபெய்ட் வாலட் மற்றும் ஓவர் டிராஃப்ட் கணக்கு மூலம் பண பரிமாற்றம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சூழலில் ‘Credit on UPI’ என்பது குறித்த பேச்சு ஃபின்டெக் சார்ந்த வணிக பிரிவில் அதிகரித்துள்ளது. அதாவது, பயனர்கள் தங்களது யுபிஐ சார்ந்த பண பரிமாற்றத்துக்கு கடன் பெறுவது. இதற்காக டிஜிட்டல் முறையில் கடன் வழங்க விரும்பும் நிறுவனங்கள், பயனர்களின் தரவுகளை விரிவாக அலசி வருவதாகவும் தகவல். இதன் மூலம் இதில் உள்ள வாய்ப்புகளை தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் தகவல்.
யுபிஐ பரிவர்த்தனை பயன்பாடு எந்த அளவுக்கு எளிது என்பதை அதன் பயனர்கள் நன்கு அறிவார்கள். அதே பாணியில் யுபிஐ மூலம் கடன் பெறுவதும், அதனை திரும்ப அடைப்பதும் எளிது என சொல்லப்படுகிறது.
Credit on UPI:
பயனர்கள் யுபிஐ நெட்வொர்க் மூலமாக கடன் பெறுவது தான் Credit on UPI. பயனர்கள் தங்களது கிரெடிட் கார்டுகளை யுபிஐ ஹேண்டிலில் இணைத்து கடன் பெறலாம். மேலும், ப்ரீ அப்ரூவ் செய்யப்பட்ட யுபிஐ-யின் கிரெடிட் லைன்ஸ் மூலமாகவும் கடன் பெறலாம். அது எப்படி என்பதை பார்ப்போம்.
- யுபிஐ பயனர்கள் தங்களது RuPay கிரெடிட் கார்டுகளை யுபிஐ ஹேண்டிலில் இணைத்து டிஜிட்டல் முறையில் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தலாம். இது பயனர்கள் மற்றும் வணிகர்கள் என இருவருக்கும் ஆதாயம் தரும் வகையில் அமைந்துள்ளது.
- பாயிண்ட் ஆஃப் சேல்ஸ் மெஷின் மூலம் கிரெடிட் கார்டு பேமெண்ட் மேற்கொள்ளும் போது அந்த தொகையில் குறிப்பிட்ட சதவீதத்தை (1.5% முதல் 2% வரை) பயன்பாட்டுக் கட்டணமாக பயனர்கள் செலுத்த வேண்டி இருக்கும்.
- யுபிஐ லிங்க் செய்யப்பட்ட கிரெடிட் கார்டு மூலம் மேற்கொள்ளப்படும் பேமெண்ட்களில் இந்த சிக்கல் இல்லை. இதன் காரணமாகவே வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFC) மற்றும் ஃபின்டெக் நிறுவனங்கள் ‘Credit on UPI’ விவகாரத்தில் ரிசர்வ் வங்கியை நாடியுள்ளது.
ப்ரீ அப்ரூவ் செய்யப்பட்ட யுபிஐ கிரெடிட் லைன்ஸ்:
வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு (தனிநபர் மற்றும் வணிக நிறுவனங்கள்) ப்ரீ அப்ரூவ் செய்யப்பட்ட யுபிஐ-யின் கிரெடிட் லைன்ஸ் மூலமாக கடன் வழங்க அனுமதிக்கிறது. யுபிஐ பரிவர்த்தனைகள் அதிகம் மேற்கொண்டு வரும் வாடிக்கையாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு இந்த வகை கடன் வழங்கப்படும் என தெரிகிறது. இதற்கான வட்டியும் கிரெடிட் கார்டு மூலம் பெறுகின்ற கடனுக்கான வட்டியை காட்டிலும் குறைவு தானாம்.
இந்த வகை சேவையை பெற பயனர்கள்/வாடிக்கையாளர்கள் தங்களது வங்கியில் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் பயனர்களுக்கு இந்த சேவையை வங்கிகள் வழங்கும். இதன் லிமிட், பயனர்களின் வருமானம், கிரெடிட் ஸ்கோர் மற்றும் கடனை திரும்ப செலுத்திய கடந்த கால செயல்முறையை பொறுத்து இருக்கும்.
இதன் மூலம் கடன் வழங்கும் நிறுவனங்களும் ஆதாயம் ஈட்டும். அதாவது, பயனர்கள் செலவிடும் வழக்கத்தை கணக்கில் கொண்டு அவர்களை இந்நிறுவனங்கள் தொடர்பு கொண்டு கடன் வழங்கும் வரைமுறையை உயர்த்தும் வகையில் இயங்கும்.
பயனர்களை பொறுத்தவரையில் தங்களது மொபைல் எண்ணை கொண்டு மிக சுலபமாக இன்ஸ்டன்ட் முறையில் யுபிஐ மூலம் கடன் பெறும் முறை ஆதாயமாக இருக்கும். இதன் மூலம் தங்களது யுபிஐ செயலிகளில் இதனை பயன்படுத்தி தாங்கள் விரும்பும் பேமெண்ட்களை மேற்கொள்ளலாம். பயன்படுத்திய கிரெடிட் தொகைக்கு மட்டும் பயனர்கள் வட்டி செலுத்துவது, இஎம்ஐ மூலம் பணத்தை திரும்ப செலுத்துவது போன்ற வழிகளும் உள்ளது.
இப்போதைக்கு ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, கோட்டாக் மஹிந்திரா வங்கி உள்ளிட்ட வங்கிகள் இதனை குறிப்பிட்ட பயனர்களுக்கு இந்த சேவையை சோதனை அடிப்படையில் வழங்கி வருகிறது. BHIM, கூகுள் பே, பேடிஎம், மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கியின் Payzapp போன்ற யுபிஐ செயலிகளில் இந்த கிரெடிட் லைன் சேவை கிடைக்கப்பெறுகிறது.
‘உங்க GPay-க்கு தவறா பணம் அனுப்பிட்டேன்...’ - Google Pay-வில் நடக்கும் நூதன மோசடி; உஷாரா இருங்க!
Edited by Induja Raghunathan