இந்தியாவில் கூகுளின் UPI Circle அறிமுகம்: பயன்படுத்துவது எப்படி?
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கூகுள் நிறுவனம் கூகுள் பே-வில் ‘யுபிஐ சர்க்கிள்’ (UPI Circle) எனும் புதிய யுபிஐ அம்சத்தை அறிமுகம் செய்தது. இதன் மூலம் வங்கிக் கணக்கு இல்லாத நபர்கள் அல்லது டிஜிட்டல் பேமெண்ட் முறையை பயன்படுத்த தயங்கும் நபர்கள், யுபிஐ பயன்படுத்தும் தங்களது குடும்ப அல்லது நண்பர்களின் கணக்கை பயன்படுத்தி யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். இந்த அம்சம் விரைவில் கூகுள் பே பயனர்களின் பயன்பாட்டுக்கு வரும் என கூகுள் தெரிவித்துள்ளது.
இதனை நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவுடன் இணைந்து கூகுள் அறிமுகம் செய்துள்ளது. பணத்தை மட்டுமே நம்பி இயங்கி வருபவர்களையும் டிஜிட்டல் பேமெண்ட் முறைக்கு ஈர்ப்பது இதன் நோக்கமாக அமைந்துள்ளது.
இந்தியாவில் தினந்தோறும் கிராமம், நகரம் என பல்வேறு இடங்களில் கோடான கோடி கணக்கான ரூபாயை யுபிஐ பயனர்கள் பணம் அனுப்பியும், பெற்றும் வருகின்றனர். நாளுக்கு நாள் யுபிஐ பரிவர்த்தனையின் எண்ணிக்கை கூடிக் கொண்டே உள்ளது. இந்தியாவில் தனிநபர்கள், வணிகர்கள் என பெரும்பாலானவர்கள் யுபிஐ பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில்தான் இந்த அம்சம் அறிமுகமாகி உள்ளது.
யுபிஐ சர்க்கிள்:
கூகுள் பே-வின் யுபிஐ சர்க்கிள் மூலம் யுபிஐ பயனர்கள், யுபிஐ பயன்படுத்தாத தங்களது குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள் ஆகியோருக்கு தங்களது யுபிஐ கணக்கின் அக்சஸை பகிர முடியும். இதன் மூலம் யுபிஐ பயனரின் கணக்கில் இருந்து அவர்களால் பேமெண்ட் மேற்கொள்ள முடியும். முக்கியமாக வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் அல்லது டிஜிட்டல் பேமெண்ட்களை மேனேஜ் செய்வதை சவாலான டாஸ்க்காக கருதும் நபர்களுக்கு யுபிஐ சர்க்கிள் சிறந்த தீர்வாக இருக்கும்.
இதில் யுபிஐ கணக்கு வைத்துள்ள நபர் பிரதான பயனர் (Primary User) மற்றும் யுபிஐ சர்க்கிள் அக்சஸை பெறுகின்ற இரண்டாவது பயனர் (Secondary User) என்று அறியப்படுகிறார்.
இரண்டு வகையாக யுபிஐ சர்க்கிளை பயனர்கள் பயன்படுத்தலாம்: யுபிஐ சர்க்கிள் அம்சத்தை பயனர்கள் இரண்டு வகையாக பயன்படுத்த முடியும். முதலாவது Full Delegation, இரண்டாவது Partial Delegation.
Full Delegation: இதில் செகண்டரி யூசர்கள் தன்னிச்சையாக பணத்தை அனுப்பிக் கொள்ளலாம். அதற்கு பிரதான பயனரின் அனுமதி எதுவும் தேவை இருக்காது. ஆனால், அதற்கான லிமிட் என்ன என்பதை பிரதான பயனர் தான் முடிவு செய்ய முடியும். அதிகபட்சமாக ஒரு மாதத்துக்கு ரூ.15,000 வரை இதில் செகண்டரி யூஸர்கள் பணம் அனுப்ப முடியும்.
Partial Delegation: இந்த முறையில் செகண்டரி யூசர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் பிரதான பயனரின் ஒப்புதல் தேவைப்படும். இதில் பரிவர்த்தனை சார்ந்த முழு கன்ட்ரோலும் பிரதான பயனரின் வசம் இருக்கும். அவரது ஒப்புதலின்றி எந்தவொரு பரிவர்த்தனையும் மேற்கொள்ள முடியாது.
யுபிஐ பேமெண்ட் சார்ந்து அடுத்தவரின் உதவியை நாடுபவர்களுக்கும், மூத்த குடிமக்களுக்கும் யுபிஐ சர்க்கிள் உதவும் என கூகுள் தெரிவித்துள்ளது. பிரதான பயனர், யுபிஐ சர்க்கிளில் செகண்டரி பயனரை இணைத்த முதல் 30 நிமிடங்களுக்கு செகண்டரி பயனரால் எந்தவித பரிவர்த்தனையும் மேற்கொள்ள முடியாது.
யுபிஐ சர்க்கிளை பயன்படுத்துவது எப்படி? -
ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் இயங்குதள பயனர்கள் இதனை பயன்படுத்தலாம். இருப்பினும், இந்த செயலியை அப்டேட் செய்வதன் மூலம் மட்டுமே இந்த அம்சத்தை தங்களால் பயன்படுத்த முடியுமா என்பதை பயனர்கள் செக் செய்யலாம். ஏனெனில், செயலியில் இதற்கான அக்சஸ் அவசியம். இந்த அம்சம் பயனர்களுக்கு கிடைக்கப்பெற்றால்…
- பிரதான பயனர் தனது ஆக்டிவ் வங்கிக் கணக்கை கூகுள் பே உடன் லிங்க் செய்திருக்க வேண்டும்.
- செகண்டரி யூசருக்கு யுபிஐ ஐடி இருக்க வேண்டும். அதோடு அவரது மொபைல் போன் எண்ணை பிரதான பயனர் தனது போனில் Save செய்திருக்க வேண்டும்.
- பிரதான பயனரின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் அனுப்ப, செகண்டரி யூஸர் தனது யுபிஐ செயலியை ஓபன் செய்ய வேண்டும். அதில் உள்ள க்யூஆர் கோட் ஸ்கேனரையும் ஓபன் செய்ய வேண்டும்.
- பிரதான பயனர்கள் தங்களது Profile படத்தை கிளிக் செய்து, யுபிஐ சர்க்கிள் பிரிவுக்கு செல்ல வேண்டும்.
- அதில் Full அல்லது Partial Delegation என்பதை முடிவு செய்து, யுபிஐ சர்க்கிளில் இணைக்க விரும்பும் பயனர்கள் மொபைல் எண்ணை தேர்வு செய்ய வேண்டும்.
- அதன் பின்னர், செகண்டரி பயனர் தங்களுக்கு வரும் இன்விடேஷன் அழைப்பை ஏற்று, யுபிஐ சர்க்கிள் செட்-அப்பை உறுதி செய்ய வேண்டும்.
- அதன்பின்னர், செகண்டரி பயனர் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். Full Delegation முறையில் மாதத்துக்கு ரூ.15,000 வரையிலும், அதிகபட்சமாக ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5,000 வரையிலும் பணம் அனுப்ப முடியும்.
- Partial Delegation முறையில் செகண்டரி பயனரின் பரிவர்த்தனை சார்ந்த கோரிக்கையை பிரதான பயனர் ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ செய்யலாம்.
- யுபிஐ சர்க்கிள் பிரிவின் மூலம் பிரதான மற்றும் செகண்டரி பயனர்கள் பரிவர்த்தனை சார்ந்த விவரங்களை நிகழ் நேரத்தில் பெற முடியும்.
- யுபிஐ சர்க்கிளில் பிரதான பயனர், ஐந்து செகண்டரி பயனர்கள் வரை சேர்க்கலாம். அதே நேரத்தில் செகண்டரி பயனர்கள் ஒரே ஒரு யுபிஐ சர்க்கிளில் மட்டுமே இருக்க முடியும்.
Edited by Induja Raghunathan