விதை முதல் விருட்சம் வரை லாபம் கொடுக்கும் ‘அஸ்வகந்தா’ சாகுபடி!
நோய் எதிர்பாற்றலை மேம்படுத்த உதவும் மருத்துவ குணம் பொருந்திய ஆயுர்வேத மூலிகை அஸ்வகந்தா.
'வரும் முன் காப்போம்’ என்கிற கருத்து நம் மனதில் ஆழப்பதிந்திருந்தாலும் கொரோனா பெருந்தொற்று போன்ற நோய் பரவல் இதை மேலும் வலியுறுத்திக் காட்டியிருக்கின்றன.
நோய் எதிர்ப்பாற்றல் குறைந்தவர்களை ஏராளமான நோய்கள் பாதிப்பதால், நோய் எதிர்ப்பாற்றலை மேம்படுத்தும் உணவு வகைகளையும் மருந்துகளையும் மக்கள் தேடித்தேடி வாங்குவதையும் உட்கொள்வதையும் நாம் பார்க்கிறோம். இதன் தேவைகள் பன்மடங்கு அதிகரித்துள்ளன.
அந்த வகையில் நோய் எதிர்பாற்றலை மேம்படுத்த உதவும் மருத்துவ குணம் பொருந்திய ஆயுர்வேத மூலிகை அஸ்வகந்தா. அஸ்வகந்தாவின் வேர், மரம், விதை என அனைத்துமே பயனுள்ளது. இதனால் அஸ்வகந்தா சாகுபடியில் நல்ல லாபம் ஈட்டமுடியும்.
அஸ்வகந்தா பலன்கள்
அஸ்வகந்தா நம் நோய் எதிர்பாற்றலை மேம்படுத்துவதுடன் நரம்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. பக்கவாதம், முதுகுத்தண்டு பிரச்சனைகள் போன்றவற்றிற்கு பயன்படுகிறது. இதில் ஆண்டி-ஆக்சிடெண்ட் பண்புகள் உள்ளன. இதனால் உணவில் சேரும் கொழுப்பின் அளவு கட்டுப்படுத்தப்படுகின்றன. இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கின்றன.
இவை தவிர அஸ்வகந்தா நினைவாற்றலை மேம்படுத்துகிறது. ரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. சருமப் பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வளிக்கிறது.
அஸ்வகந்தா சாகுபடி
விவசாயிகளுக்கு அஸ்வகந்தா சாகுபடி நல்ல லாபத்தை அளிக்கிறது. அஸ்வகந்தா வேர்களின் தரத்தைப் பொறுத்து விலை நிர்ணயிக்கப்படுகின்றன. வேர்கள் அடர்த்தியாக இருந்தால் அதிக விலை கிடைக்கும். அஸ்வகந்தா வேர்கள் ஒரு கிலோ 150-200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன.
அஸ்வகந்தா நீர் தேங்கியிருக்கும் களிமண் போன்றவற்றைக் காட்டிலும் மண் வளம் குறைந்த தரிசு, மணல் சார்ந்த இடம், சிவப்பு மண் போன்றவற்றில் பயிரிடுவது சிறந்தது. மண்ணின் pH அளவு 6-7 இருக்கவேண்டும். விதைப்பதற்கு முன்பு மாட்டு சாணத்தை நிலத்தில் இடுவது நல்லது. இதனால் போதிய ஊட்டச்சத்துக்களுடன் அஸ்வகந்தாவின் வேர்ப்பகுதி தடிமனாக வளரும்.
விதைகள் வரிசையாக நடப்படும். அல்லது தெளிப்பு முறையில் விதைகள் தெளிக்கப்படும். விதைத்த 5 மாதங்களில் விளைச்சல் பார்க்கலாம். அனைத்து பருவநிலைகளில் நன்றாக வளரக்கூடியது அஸ்வகந்தா. இந்தப் பயிரை அரிதாகவே நோய் தாக்கும்.
முதலீடு மற்றும் லாபம்
ஒரு ஹெக்டேரில் அஸ்வகந்தா சாகுபடி செய்ய சுமார் 40-50 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்யவேண்டியிருக்கும். ஒரு ஹெக்டேரில் சுமார் 800-1000 கிலோ வரை அஸ்வகந்தா கிடைக்கும். அதாவது, ஒன்றரை லட்ச ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். இதில் 50 ஆயிரம் ரூபாய் செலவு போக ஒரு லட்ச ரூபாய் நிகர லாபம் கிடைக்கும்.
மேலும், ஒரு ஆண்டிற்கு இரண்டு முறை சாகுபடி செய்யமுடியும் என்பதால் ஆண்டு வருமானமும் இரண்டு லட்சம் வரை கிடைக்கும். இதுதவிர ஒரு ஹெக்டேரில் சுமார் 50 கிலோ வரை விதைகள் கிடைக்கும். இந்த விதைகளை ஒரு கிலோவிற்கு 130-150 ரூபாய் வரை விற்பனை செய்யமுடியும். மரத்தின் இதர பகுதிகளையும் விற்பனை செய்யமுடியும். மொத்தத்தில் அஸ்வகந்தா சாகுபடியில் முதலீடு செய்யும் தொகையிலிருந்து 3-4 மடங்கு அதிக லாபம் கிடைத்துவிடும்.