கர்நாடக இசைக்கான புதிய குறியீடுகள்; இந்திய இசையில் புரட்சி செய்யும் ரமேஷ் விநாயகம்!
கர்நாடக இசைக்கான குறியீடுகளை உருவாக்கி பரந்த அளவிலான மக்களை இசை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் இசையுலகில் புரட்சி செய்துள்ள ரமேஷ் விநாயகத்தின் இசை அமைப்பாளர் முதல் ஸ்டார்ட் அப் நிறுவனர் வரையிலான அவரது பயணம்...
ஓர் மாலை பொழுதில் பசுமையான வயல்களுக்கு மத்தியிலிருந்த பெரிய மரத்தின் அடியில் ரமேஷ் விநாயகம் சற்று இளைப்பாற அமர்ந்தார். அருகிலிருந்த கோவிலில் கர்நாடக இசையை கலைஞர்கள் பாட, ஸ்பீக்கர் வழியே அதை கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மிதிவண்டியை மிதித்து கொண்டு வந்த ஒருவர், பீடியை பற்ற வைத்து கொண்டே அருகிலிருந்தவரிடம், 'இது ஆனந்தபைரவி ஏலே...?' என்று மலையாளத்தில் கேட்கிறார். அதாவது, பாடகர் ஆனந்த பைரவி ராகத்தை தானே பாடுகிறார், என்று கேட்கிறார்.
- ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் நடந்த இந்த சம்பவத்தின் மூலம், இந்திய பாரம்பரிய இசையின் ஈர்ப்பு வரம்பற்றது என்ற ரமேஷின் நீண்டகால நம்பிக்கையை மீண்டும் வலியுறுத்தியது. வெறிச்சோடிய சாலையில் பீடிப் புகைக்கும் சைக்கிள் ஓட்டுபவர் ஆனந்தபைரவி போன்ற சிக்கலான கர்நாடக ராகத்தை சரியாக அடையாளம் காண முடிந்தால், நிச்சயமாக சாமானியர்கள் இந்த கலை வடிவத்தைப் பற்றிய புரிதலுடன் இருப்பார்கள் என்று உணர்த்தியது.
இருந்தாலும் ஒரு பிரச்சினை. நடைமுறையில் உள்ள கற்பித்தல் முறையானது குருவிற்கும் சீடருக்கும் இடையே உள்ள ஒருவருக்கொருவர் தொடர்புகளை பெரிதும் நம்பியிருந்தது. இந்த அணுகுமுறையால், இசை சென்றடையக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தியது. ஏனெனில், அவர்கள் நாள் முழுவதும் ராகத்தின் ஒவ்வொரு குறிப்பையும் பலமுறை பாட வேண்டியிருந்தது.
மேற்கத்திய மற்றும் இந்திய பாரம்பரிய இசைக்கலைஞரான ரமேஷ் விநாயகம், குரு இல்லாத நேரத்திலும், மாணவர்கள் தாங்களாகவே படித்து பயிற்சி செய்யக் கூடிய குறியீடான முறைதான் இதற்கு முன்னோக்கி செல்லும் வழி என்பதை அறிந்திருந்தார். ஆனாலும், மேற்கத்திய கிளாசிக்கல் இசையைப் போலல்லாமல், இந்திய பாரம்பரிய இசையின் ஒவ்வொரு குறிப்பும் துல்லியமாகவும் நிலைத்தன்மையுடனும் இசைக்கப்படும். இந்திய பாரம்பரிய இசை கமக்கங்களை பெரிதும் நம்பியுள்ளது. ஒரு காகிதத் தாளில் பாரம்பரிய இசைக் குறியீடுகள் மூலம் துல்லியமாகப் படம்பிடிப்பது கடினமானது. தெளிவாகச் சொல்வதென்றால், இந்திய இசைக்கு ஒரு குறியீடு அமைப்பு உள்ளது. ஆனால், அது மிகவும் அடிப்படையானது மற்றும் அதன் அழகு மற்றும் வரம்பின் அகலத்தைப் பிடிக்க போதுமானதாக இல்லை.
பீடி பிடித்து கொண்டிருந்த அந்த சைக்கிள் ஓட்டுனருடன் சந்திப்புக்குப் பிறகு இரண்டு தசாப்தங்களில், ரமேஷ் ‘அழகிய தீயே’, ‘நளதமயந்தி’ உட்பட பல படங்களுக்கு இசையமைத்து புகழ்பெற்ற இசையமைப்பாளராக மாறினார். நள தமயந்தி உட்பட பல தென்னிந்திய திரைப்படங்களுக்கு பாடல்கள் மற்றும் பின்னணி இசையமைத்தார். இசைக் கலைஞராக அவர் வெற்றி பெற்ற போதிலும், இந்திய இசையை பரந்த மற்றும் எளிதான அணுகல் மூலம் அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற அவரது கனவை அவர் மறக்கவில்லை.
பாரம்பரிய கற்பித்தல் முறைகளால் அதன் அழகும் ஆழமும் மட்டுப்படுத்தப்பட்டு விடக்கூடாது என்று, பாரம்பரிய இசையை அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பதில் ரமேஷ் உறுதியாகினார்.
பசி, துாக்கம் தொலைத்த நாட்கள்;
இசைக் குறீயிட்டை உருவாக்க துாண்டிய ஒரு கணம்..!
2010ம் ஆண்டு ஸ்ருதி இதழுக்காக, ரமேஷ் பழம்பெரும் வயலின் கலைஞரான வி.எஸ்.நரசிம்மனை பேட்டி கண்டார். அவருடனான நீண்ட உரையாடலில் ரமேஷ் அவரது மனதில் என்றென்றும் எழும் கேள்வியான, 'இந்திய இசை பாரம்பரியம் எப்போது தனக்கென ஒரு பயனுள்ள மற்றும் திறமையான குறியீட்டு முறையை உருவாக்கும்?' எனக் கேட்டார். அதற்கு நரசிம்மனோ, 'ஏன் குறியீடு முறையை நீங்களே கண்டுபிடிக்கக்கூடாது?' என்று பதிலளித்தார். அது தான் தருணம்.
அன்று முதல் பல நாட்கள் பசி, துாக்கமின்றி இந்திய இசைக்கான குறியீட்டு முறையை உருவாக்குவதில் தீவிரமானார். சொல்லபோனால், அவருக்கு தூங்குவதற்கு மருந்து தேவைப்பட்டது. சில நேரங்களில், அது கூட உதவவில்லை.
"இறுதியாக, ஒரு நாள் அதிகாலை இந்த மூன்று-வரி விஷயம் (அவர் கண்டுபிடித்த குறியீட்டு முறை) என்னிடம் இருந்தது. அது யுரேகா தருணம். பிறகு அது சாத்தியம் என்று தெரிந்தது. இது மிக மிக மிக சிறிய தீப்பொறிகள் மட்டுமே, ஆனால், ஒரு தீப்பொறி. பயமும் மகிழ்ச்சியும் ஒன்றாக இருந்தது. ஏனென்றால், இசை ஒரு கடல். உண்மையில் எல்லாவற்றையும் (குறியீட்டு முறை) என்னால் செய்ய முடியுமா? அதற்கு நான் போதுமானவனா?" என்ற அவர் வார்த்தைகளில் விவரிக்க முடியாத உணர்வை உணர்ந்ததாக தெரிவித்தார்.
ஆனால், இந்திய இசை சமூகம் அவரது கண்டுப்பிடிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. அவரது புதிய குறிப்புகளைப் புரிந்துகொண்டு பாராட்டிய ஒரு சிலரைத் தவிர, அவர் சென்ற எல்லா இடங்களிலும், அவர் நிராகரிப்பை எதிர்கொண்டார். சில சமயங்களில் முற்றிலும் அவமானப்படுத்தப்பட்டார். இந்த கடினமான காலகட்டத்தில்தான் விதி தலையிட்டது. சென்னையில் ஒரு கர்நாடக இசை நிகழ்ச்சியின் போது, ஸ்ரீராம் குழும நிறுவனர் ஆர். தியாகராஜனை ரமேஷ் சந்திக்க நேர்ந்தது.
நிரகாரிப்புகளும், தாமதமான அங்கீகாரங்களும்;
87 வயதான தியாகராஜன், இந்தியாவில் வங்கியற்ற மக்களுக்கு கடன் அளித்ததன் மூலம் பல பில்லியன் டாலர் சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர். ஏழைகளுக்கு சேவை செய்வது சமூக ரீதியாகவும் லாபகரமாகவும் இருக்கும் என்பதை நிரூபித்தார். வணிகம் தாண்டி அவருக்கு கர்நாடக இசை மீது ஆர்வம் இருந்தது. இசையை ஒரு தொழிலாக அவர் எண்ணவில்லை என்றாலும், இசை மீதான காதலால் இசைத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்புவோருக்கு ஆதரவளித்தார். அப்படி, கர்நாடக இசையை பரந்த பார்வையாளர்களிடம் கொண்டு செல்லும் ரமேஷின் முயற்சிகளைப் பற்றி அவர் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தார்.
அவர்களது முதல் சந்திப்பிலே தியாகராஜனால் ரமேஷுக்கு என்ன உதவி செய்ய முடியும் என்று கேட்டுள்ளார். அதற்கு, ரமேஷ் நிதி தேவை என்றுள்ளார். தியாகராஜன் உடனடியாக அவருக்கு ஒரு காசோலையை எழுதினார். தியாகராஜன் காட்டிய நம்பிக்கை தன்னை மிகவும் பொறுப்பாக உணர வைத்தது என்கிறார் ரமேஷ். ஒருமுறை, அவர் செய்த செலவுக்கான கணக்கைக் காட்டச் சென்றபோது, தியாகராஜன் அவரிடம், "ஏதாவது தவறு இருந்தால் மட்டும் வந்து பாருங்கள், உதவி தேவைப்பட்டால் வாருங்கள்" என்று கூறினாராம்.
தியாகராஜனின் ஆதரவுடன், ரமேஷ் அவரது மனைவியின் இசைப் பள்ளியை, “மியூசிக் டெம்பிள் அகாடமி”யாக மாற்றினார். ஒரு சிறிய அலுவலகத்தை நிறுவினார். மேலும், அவர் கண்டுபிடித்த 'கமகா பாக்ஸ்' (Gamaka box) நோட்டேஷன் சிஸ்டத்தை இன்னும் சிறப்பாக மாற்றியமைக்க சில இசைக்கலைஞர்களை பணிக்கு அமர்த்தினார். ஒரு சில ஆண்டுகளில், இந்த அமைப்பு முழுமையடைந்தது, ஆனால், இன்னும் சில பாரம்பரிய இசைக்கலைஞர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆஸ்திரியாவைச் சேர்ந்த இசைக்கலைஞரான, ஜெர்மி உட்ரஃப் கர்நாடக இசையை கற்றுக் கொள்வதற்காக இந்தியாவிற்கு வருகை தந்தபோது, அவர் ரமேஷையும், அவரது கமகா பாக்ஸ் நோட்டேஷன் பற்றியும் அறிந்து கொண்டார். கர்நாடக இசையைக் கற்றுக்கொள்வதற்கான சில மாற்று வழிகளைத் தேடிக்கொண்டிருந்த அவருக்கு ஒரு பரந்த கண்ணோட்டத்தையும் வெளிநாட்டினராக அதிக அணுகலையும் தரக்கூடியதாக அமைந்தது ரமேஷின் குறியீட்டு முறை.
இதைத்தொடர்ந்து, ஜெர்மனியில் இருந்து சென்னை வந்த மேற்கத்திய பாரம்பரிய இசைக்கலைஞர்கள் புதிய குறியீட்டு முறையைப் பயன்படுத்தி மேடையில் கர்நாடக ராகத்தை வாசித்தனர்.
"நாங்கள் மிகவும் பதட்டமாக இருந்தோம், கொஞ்சம் பயந்தோம். ஆனால், கமகா பாக்ஸின் இசைக்குறியீட்டுகளை பார்த்து வாசிப்பது சுலபமாக இருந்தது. இது ஒரு அழகான அனுபவமாக மாறியது. நான் ஒருபோதும் மறக்க முடியாது. இது ஒரு நம்பமுடியாத கண்டுபிடிப்பு," என்று கூறினார் இசைக்குழுவின் வயலின் கலைஞர்.
இத்தகைய நேர்மறையான பதில்களால் உற்சாகமடைந்த ரமேஷ், கமகா பாக்ஸ் நோட்டேஷன் சிஸ்டத்தை ஆராய்ச்சி செய்து, ஊக்குவித்து வந்த மியூசிக் டெம்பிள் அகாடமியை, 2020ம் ஆண்டில் மியூசிக் டெம்பிள் பிரைவேட் லிமிடெட் என்ற மியூசிக் எட்டெக் நிறுவனமாக மாற்ற முடிவு செய்தார். அதனால், 57 வயதில், ரமேஷ் ஒரு ஸ்டார்ட் அப்பின் நிறுவனர் ஆனார். மியூசிக் டெம்பிள் கர்நாடிக், ஹிந்துஸ்தானி, நாட்டுப்புற மற்றும் திரைப்படம் போன்ற இசைக் கல்வியில் புரட்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதையடுத்து, 2022ம் ஆண்டு, ஐஐடிஎம் பிரவர்தக்கில் இன்குபேட்காக ஆக விண்ணப்பித்தார். ஐஐடிஎம் பிரவர்தக் ஆனது ஸ்டார்ட்அப்களுக்கான இன்குபேட்டராக செயல்படுகிறது. அவற்றின் சிறிய பங்குகளை (அதிகபட்சம் 8%) எடுத்துக்கொண்டு, புதுமை மற்றும் தொழில்முனைவோரை வளர்க்க உதவுகிறது. இது தற்போது சுமார் 40 ஸ்டார்ட்அப்'களை ஆதரிக்கிறது. அதன்படி, ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஐஐடிஎம் பிரவர்தக் ஆகிய இரு நிறுவனங்களும், மியூசிக் டெம்பிள் நிறுவனத்தின் 5% பங்குகளை கொண்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் மியூசிக் டெம்பிள் ஸ்டார்ட்அப்பானது அதன் கமகா பாக்ஸ் நோட்டேஷன் சிஸ்டத்திற்கான காப்புரிமையைப் பெற்றது. மேலும், பல மாநில அரசாங்கங்களுடன் இசைக் கல்வித் திட்டங்களில் இந்த அமைப்பை இணைப்பதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கான மேம்பட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது. இத்திட்டங்கள் நிறைவு பெறுமாயின், நாடு முழுவதும் இசைக் கல்வியை மாற்றும் ரமேஷின் இலக்கில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
புதிய குறியீட்டு முறையானது உள்நாட்டு இசையைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். ரமேஷின் புதிய குறியீடு முறை இசை பாடங்களை ஆன்லைனில் வழங்குவதை எளிதாக்கும் என்பது நிச்சயம். இப்போதைக்கு ரமேஷுக்கு இரண்டு கனவுகள் உள்ளன. ஒன்று லண்டன் சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா தனது அமைப்பைப் பயன்படுத்தி இந்திய இசையை நிகழ்த்துவதைப் பார்ப்பது. மற்றொன்று இந்திய இசையைக் கற்றுக்கொள்ள விரும்பும் எவருக்கும், எவ்வளவு தொலைதூரத்தில் இருந்தாலும் அதை அணுக வைக்க வேண்டும்.
ஆங்கிலத்தில்: ஜர்ஷத், தமிழில்: ஜெயஸ்ரீ