ஏஐ முதன்மை ஸ்டார்ட்-அப்'களுக்கு $1 மில்லியன் வரை நிதியுதவி - புதிய திட்டம் அறிவித்த கிரிஷ் மாத்ரூபூதம்!
ஏஐ சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக ’Together AI Studio” திட்டத்தை துவக்கியிருப்பதாக ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவனர் கிரிஷ் மாத்ரூபூதம் தெரிவித்துள்ளார்.
ஏஐ சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக ’டுகெதர் ஏஇ ஸ்டூடியோ” (Together AI Studio) திட்டத்தை துவக்கியிருப்பதாக பிரெஷ்வொர்க்ஸ் நிறுவனர் கிரிஷ் மாத்ரூபூதம் தெரிவித்துள்ளார்.
அடுத்த தலைமுறை ஏஐ நிறுவனங்களை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கிரிஷ் மாத்ரூபூதம் லிங்க்டுன் இன் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
"ஏஐ நுட்பம்; தொழில்துறையை இதற்கு முன் இல்லாத வேகத்தில் மாற்றி அமைத்து வருகிறது, அடுத்த பத்தாண்டுகளில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய நிறுவனங்கள் ஏஐ நுட்பத்தை முதன்மையாக கொண்டிருக்கும் என நம்புகிறேன்," என குறிப்பிட்டுள்ளார்.
ஏஐ நுட்பம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், டுகதர் ஃபண்ட் (Together Fund), எதிர்காலத்தை மாற்றி அமைக்க கற்பனை செய்யும் ஏஐ நிறுவனர்களை ஆதரிப்பதில் இரட்டிப்பு கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக ஏஐ நுட்பத்தை முதன்மையாக கொண்ட ஸ்டார்ட் அப் முயற்சிகளை வளர்த்தெடுக்கும் வகையில், `டுகெத்ர் ஏஐ ஸ்டூடியோ` திட்டத்தை அறிமுகம் செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ் ஏஐ முதன்மை ஸ்டார்ட் அப்களுக்கு ஒரு மில்லியன் டாலர் வரை நிதி வழங்கப்படும். உலகலாவிய வளர்ச்சிக்கு அமெரிக்க மற்றும் இந்திய வலைப்பின்னல் உதவி அளிக்கப்படும். உலகத்தரம் வாய்ந்த வல்லுனர்கள், வழிகாட்டிகளை அணுகலாம். அமெரிக்கா அணுகல் கொண்ட தெளிவான 12 வார பயிற்சி திட்டமும் வழங்கப்படும்.
பி2பி சேவைகள், ஏஐ நுட்பம் சார்ந்த சுகாதார தீர்வுகள், பாதுகாப்பு மற்றும் தானியங்கி ஏஐ சேவை, அடுத்த தலைமுறை ஏஐ சேவைகள் (குவாண்டம் ஏஐ, மனித கம்ப்யூட்டர் இடைமுகம்) உள்ளிட்ட துறைகளில் ஸ்டார்ட் அப்களை ஊக்குவிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பரப்பில் செயல்படும் ஸ்டார்ட் அப்களை பரிந்துரை செய்யுமாறும் அழைப்பு விடுத்துள்ளார் கிரீஷ் மாத்ருபூதம்.
இது தொடர்பாக விண்ணப்பிக்க இணையதளம்: https://together.fund/ai/
Edited by Induja Raghunathan