வாக்குப்பதிவு தகவல்களை உடனடி அறிய தேர்தல் கமிஷன் அறிமுகப்படுத்தியுள்ள செயலி!
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பதிவான வாக்குப்பதிவு சதவீதத்தை அறிய வேண்டுமா? உங்கள் கையில் உள்ள போனிலேயே இந்தத் தகவல்களை தெரிந்து கொள்வதற்கான ‘Voter Turnout' வோட்டர் டர்ன் அவுட் செயலியை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.
மக்களவைத் தேர்தல் ஏழு கட்டமாக நடைபெற்று வருகிறது. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நேற்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் விவரத்தை வாக்காளர்கள் உடனடியாக அறிந்து கொள்ளும் வகையில் தேர்தல் ஆணையம், ’வோட்டர் டர்ன் அவுட்’ எனும் செயலியை ஆண்ட்ராய்டு போன்களுக்காக அறிமுகம் செய்துள்ளது. உடனுக்குடன் இந்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
‘Voter Turnout' செயலியை தரவிறக்கம் செய்து நிறுவியதும், கீழ்ப்பக்கத்தில் இரண்டு விதமான வாய்ப்புகள் பட்டன் வடிவில் அளிக்கப்பட்டிருப்பதை பார்க்கலாம். இடப்பக்கம் பட்டனை கிளிக் செய்தால் மாநிலங்கள் மற்றும் தொகுதிகள் அளவில் மொத்தமாக பதிவான வாக்குகள் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
வலப்பக்கம் உள்ள பட்டனை அழுத்தினால், மாநிலம், மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதி அளவிலான தனிப்பட்ட வாக்குப்பதிவு விவரங்களைப் பார்க்கலாம். குறிப்பிட்ட மாநிலத்தை கிளிக் செய்தால் அங்கு பதிவான வாக்குகள் மற்றும் தொகுதிவாரியான தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். குறிப்பிட்ட தொகுதியை தேர்வு செய்தும் வாக்குப்பதிவு விவரங்களை பார்க்கலாம்.
மக்களவைத் தொகுதிகளில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் அதிகாரிகள் இந்த தகவல்களை குறிப்பிட்ட நேரங்களில், பதிவேற்றுவார்கள் என தேர்தல்ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே, உத்தேச வாக்குப்பதிவு தகவல்களை வாக்குப்பதிவு நடைபெறும் போதே உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும் என்றும் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
தேர்தல் முடிந்தவுடன், வாக்குப்பதிவு தொடர்பான முழு விவரமும் மாநிலங்கள் மற்றும் தொகுதிவாரியாக அளிக்கப்படும். ஆண், மற்றும் பெண் வாக்காளர்கள் தொடர்பான தகவல்களையும் தெரிந்து கொள்ள முடியும்.
இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகளை கடந்த 2014 தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு விவரங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. ஆக, இந்த தேர்தல் தொடர்பான அலசலில் நீங்களும் ஈடுபட விரும்பினால் அதற்கான ஆய்வில் ஈடுபடுவதற்கான தகவல்களை தேர்தல் ஆணையம் உங்கள் உள்ளங்கையிலேயே அளித்துள்ளது.
ஆக, வாக்குப்பதிவு தகவல்களை தெரிந்து கொள்ள நாளிதழ்களையோ, செய்தித் தளங்களை நாட வேண்டும் என்றில்லை, நேரிடையாக தேர்தல் ஆணைய செயலி மூலமே இந்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கட்டமாக வாக்குப்பதிவு முடிந்தவுடன் அதற்கான தகவல்கள் இந்த செயலியில் பதிவேற்றப்படும். இரண்டு மணி நேரங்களுக்கு ஒரு முறை வாக்குப்பதிவு தகவல்கள் அளிக்கப்படும் என்றும், தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் இந்த செயலி ஒரு மைல்கல் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துளளது.
ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு முறைகேடு தொடர்பான புகார்களை அளிக்க உதவும் சிவிஜில் (cVIGIL) மற்றும் வாக்காளர்களுக்கான உதவி சேவையான லெப்லைன் (Voter Helpline) உள்ளிட்ட செயலிகளையும் அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வோட்டர் டர்ன் அவுட் செயலி விவரங்கள் அறிய: Voter Turnout App