கொரோனா விழிப்புணர்வு: வீட்டிலேயே சானிடைசர் தயாரிப்பது எப்படி?
கொரோனா வைரசில் இருந்து நம்மைப் பாதுகாக்க வீட்டிலேயே சானிடைசர் தயாரிப்பதற்கான டிப்ஸ் இதோ:
உலக அளவில் எமர்ஜென்சி நிலையை பிரகடனப்படுத்தி இருக்கிறது கொரோனா வைரஸ். கோவிட்– 19 மனிதர்கள் மூலம் எளிதில் பரவும் என்பதை அறியாமல் உலக நாடுகள் மக்களை பலி கொடுத்து வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா பரவத் தொடங்கியுள்ள நிலையில் நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுமைக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கோவிட் வைரஸை கட்டுப்படுத்துவதற்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் சுய சுகாதாரம் மட்டுமே வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் என்று அரசும், சுகாதாரத்துறையினரும் அறிவுறுத்தி வருகின்றனர். தொடுதல் மூலமே எளிதில் பரவும் என்பதால் அடிக்கடி கைகளை கழுவுதலும் சானிடைசர்களை பயன்படுத்துவதும் அவசியம்.
ரூபாய் நோட்டுகள், ஏடிஎம் மையங்கள், கதவுகைப்பிடிகள், பொது கழிப்பறைகள், ரயில், பேருந்துகளில் பயணிக்கும் போது கைகளைக் கழுவ முடியாவிட்டாலும் சானிடைசர் பயன்படுத்தி சுத்தம் செய்வது நோய் பரவலைத் தடுக்கும்.
கொரோனா அச்சத்தால் முகக்கவசங்கள் மற்றும் சானிடைசர்களுக்கு பெரும் தேவை ஏற்பட்டுள்ளது. எத்தனை நாளில் இந்த வைரஸ் கட்டுப்படுத்தப்படும் என்று தெரியாத நிலையில் எவ்வளவு நாட்களுக்கு சானிடைசர்களை வாங்கி சேமித்து வைத்துக் கொள்ள முடியும்? வெளியில் செல்லவே அச்சமாக இருக்கும் நிலையில் கடைகளுக்குச் சென்று வரிசையில் நின்று சானிடைசர் வாங்கி வர வேண்டுமா என்ற அச்சம் ஒருபுறம்.

இவற்றில் இருந்து தப்பிக்க வீட்டிலேயே சானிடைசர்களைத் தயாரிக்கும் எளிய முறைகள் இதோ:
- குறைந்த விலையில் தரமான சானிடைசர்களை எப்படி தயாரிப்பது?
- ஐசோபுரொபைல் ஆல்கஹால் (isopropyl alcohol) – 99.8%
- கிளசரால்(glycerol) – 98%
- ஹைட்ரஜன் பெராக்சைடு(hydrogen peroxide) - 30%
சுத்தமான தண்ணீர் அல்லது கொதிக்க வைத்து ஆற வைத்த நீர் இவற்றை சேர்த்தால் தரமான சானிடைசர் தயாராகிவிடும்.
2. வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எப்படி தயாரிப்பது?
- கற்றாழை அல்லது அலோவெரா ஜெல்- 3 ஸ்பூன்
- வினிகர் – 2 ஸ்பூன்
- ரோஸ் வாட்டர் – 2 ஸ்பூன்
- வாசனை எண்ணெய் (தேவைப்பட்டால் வாசனைக்காக) – 3 சொட்டுகள்
இவற்றை ஒரு காலி பாட்டிலில் போட்டு சேமித்து வைத்துக் கொண்டு அவ்வப்போது பயன்படுத்தலாம்.
3. இரண்டே பொருட்களை வைத்து சானிடைசர் தயாரிக்கலாம்?
வேறு எந்த பொருளுமே இல்லையா கவலை வேண்டாம் டெட்டால் மற்றும் கற்றாழை இருக்கிறதா அதை வைத்தும் சானிடைசர் தயாரிக்க முடியும்.
- டெட்டால் – 3 ஸ்பூன்
- கற்றாழை – 3 ஸ்பூன்
இதை எடுத்து ஒரு காலி டப்பாவில் போட்டு நன்கு குலுக்கி வைத்துக் கொண்டு வெளியே செல்லும் போது பயன்படுத்தலாம்.
4. கிருமிகளில் இருந்து பாதுகாத்து கொள்ள ஒரு சிறிய வழி.
பழங்காலத்தில் முடி திருத்தும் கடைகளில் கல்கண்டு போல் உள்ள ஒரு கல் இருக்கும். அதை சவரம் செய்த பின்னர் தடவுவது வழக்கம். இதன் இயல்பு கிருமிகள் பரவாமல் தடுக்கும். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் படிகாரக்கல்லை 20 கிராம் வாங்கி 2 லிட்டர் தண்ணீரில், 10 கிராம் கல் உப்பு போட்டு நன்கு கலக்கி ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும். இந்த படிகார நீரை கை, முகம் நன்கு தண்ணீரில் கழுவிய பின் படிகாரம் நீரை சிறிதளவு எடுத்து கைகள் மற்றும் முகத்தில் தடவவும்.
5. தரை துடைக்கும் கிருமி நாசினி
வீட்டைச் சுத்தம் செய்யும்போது பாரம்பரியப் பொருட்களான இவற்றை கிருமி நாசினியாக பயன்படுத்தலாம். வேப்பிலை, மஞ்சள்தூள், கற்பூரம் இவற்றை வீடு துடைக்கும் நீரில் கலந்து வீடு முழுமைக்கும் கிருமி நாசினியாக துடைக்கும் போது பயன்படுத்தலாம்.
ஆல்கஹால் சேர்க்கப்பட்ட சானிடைசர்களே கொரோனா கிருமி அண்டாமல் பாதுகாப்பதற்கான வழி. எனினும் மற்ற சானிடைசர்கள் ஆபத்திற்கு உதவுபவை இவற்றை பயன்படுத்தினாலும் வெளியே சென்று வந்த பின்னர் கைகளை சோப்பு அல்லது திரவ ஹேண்ட்வாஷ் கொண்டு சுத்தமான கழுவுதல் நல்லது.
கட்டுரையாளர் : கஜலெட்சுமி