Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

மூன்றரை வயது மகளுக்கு ‘ஜாதி, மதம் அற்றவர்’ சான்றிதழ்: தேசிய அளவில் டிரென்டிங் ஆன கோவை அப்பா!

தனது மூன்றரை வயது மகளுக்கு எந்த சாதியையும், மதத்தையும் சாராதவர் என வருவாய்த் துறை மூலம் சான்றிதழ் பெற்று, தேசிய அளவில் டிரெண்டிங் ஆகியுள்ளார் கோயம்புத்தூரைச் சேர்ந்த அப்பா ஒருவர்.

மூன்றரை வயது மகளுக்கு ‘ஜாதி, மதம் அற்றவர்’ சான்றிதழ்: தேசிய அளவில் டிரென்டிங் ஆன கோவை அப்பா!

Monday May 30, 2022 , 3 min Read

இந்தியாவைப் பொறுத்தவரை குழந்தைகளை பள்ளி, கல்லூரியில் சேர்ப்பதில் தொடங்கி, உதவித் தொகை, வேலைவாய்ப்பு என பெரும்பாலான இட ஒதுக்கீடுகள் எல்லாம் சாதி மற்றும் மதத்தின் அடிப்படையிலேயே வகுக்கப்பட்டுள்ளது. இதனாலேயே பிறந்த உடனேயே அதற்கு சாதிச் சான்றிதழையும் பெற்று விடுவது அவசியமானதாகக் கருதப்படுகிறது.

பெற்றோர் தங்களின் விருப்பப்படி, தாய் அல்லது தந்தை வழியில் சாதி மற்றும் மதச் சான்றிதழைப் பதிவு செய்து கொள்ளும் சுதந்திரம் நம் நாட்டில் உள்ளது. தமிழக அரசின் வருவாய் துறை இதற்கான சான்றிதழை வழங்குகிறது. அந்த சாதி சான்றிதழில் சம்மந்தப்பட்டவரின் சாதி, பிரிவு, மதம் உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஆனால், இட ஒதுக்கீடு பற்றி கவலைப்படாமல், பெற்றோர் தனது குழந்தையின் சாதியையோ அல்லது மதத்தையோ குறிப்பிட விரும்பவில்லை என்றால், அதற்கும் சான்றிதழ் வழங்க அரசு தயாராக இருக்கிறது என்பது நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. தற்போது இதனை செய்து காட்டி தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளார் கோவை கேகே புதுரைச் சேர்ந்த நரேஷ் கார்த்திக் என்பவர்.

naresh

கோவையில் வடிவமைப்பு நிறுவனம் நடத்தி வருகிறார் நரேஷ் கார்த்திக் (33). இவருக்கு மூன்றரை வயதில் ஜி.என்.வில்மா என்ற மகள் உள்ளார். இந்தாண்டு தனது மகளைப் பள்ளியில் சேர்ப்பதற்காக அணுகிய போது, ஒவ்வொரு பள்ளியிலும் அளிக்கப்பட்ட விண்ணப்பத்தில் ஜாதி மற்றும் மதத்திற்கான சான்றிதழை கேட்டுள்ளனர். ஆனால்,

தனது மகளின் ஜாதி மற்றும் மத விவரங்களை வெளியில் சொல்ல விரும்பாத நரேஷ், அதனை நிரப்பாமல் அப்படியே விட்டுள்ளார். இதனாலேயே அவரது விண்ணப்பம் நிறுத்தி வைக்கப்பட்டது. ஒன்றல்ல... இரண்டல்ல... சுமார் 22 பள்ளிகளில் அவரது விண்ணப்பம் இதே காரணத்திற்காக நிறுத்தி வைக்கப்பட்டதால் அவர் அதிர்ச்சியடைந்தார். எனவே, முறைப்படி அதற்கான சான்றிதழைப் பெற அவர் முடிவு செய்தார்.

கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் தனது மகள் எந்த சாதியையோ, மதத்தையோ சார்ந்தவர் இல்லை என சான்றிதழ் வழங்க வேண்டும் என நரேஷ் விண்ணப்பித்தார். அதனைத் தொடர்ந்து, தற்போது அவருக்கு அந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் பேசிய நரேஷ்,

“பள்ளிகளில் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சாதி சான்றிதழ் கேட்கின்றனர். ஆனால் மாணவர்களை பள்ளிகளில் சேர்ப்பதற்கான விண்ணப்பத்தில் சாதி, மதம் குறிப்பிடத் தேவையில்லை என கடந்த 1973ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்து உள்ளது. இது குறித்து பல பள்ளிகளுக்கும் தெரியாமல் இருந்தது தான் வேதனைக்குரிய விஷயம்.”

சாதி, மதம் ஒழிந்தால் மட்டுமே மக்களிடம் ஏற்றத்தாழ்வு நீங்கும். அதைக் கருத்தில் கொண்டு எனது மகளுக்கு கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் சாதி, மதம் சாராதவர் என்ற சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தேன். ஆனால், வருவாய் துறையினருக்கும் இதுகுறித்து தெரியவில்லை. எனவே கோவை கலெக்டரை தொடர்பு கொண்டபோது அவர் வடக்கு தாசில்தாரை தொடர்புகொள்ள அறிவுறுத்தினார். அதன் பின்னரே குழந்தைக்கு, சான்றிதழ் கிடைத்தது.

naresh family

கோவை மாவட்டத்தில் முதன் முறையாக இதுபோன்ற சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. எனது குழந்தைக்கு வருங்காலத்தில் ஜாதி ரீதியான இடஒதுக்கீடு உள்ளிட்ட எந்த சலுகையும் தேவையில்லை. ஜாதியை இணைக்க விண்ணப்பிக்க மாட்டேன் என, உறுதி அளித்துள்ளேன்.

வேலைக்காக விண்ணப்பிக்கும் போது எம்.பி.சி.,பி.சி., ஓ.சி., எஸ்.சி., எஸ்.டி., ஆகிய பிரிவுகளை குறிப்பிடுகின்றனர். அதில் என்.சி. எனப்படும் ’நோ காஸ்ட் சாதி சாராதவர்’ என்ற பிரிவை சேர்க்க வேண்டும். அப்போது தான் சாதி, மதம் சாராதவர் விண்ணப்பிக்க எளிதாக இருக்கும்,” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “புதிய நடைமுறை என்பதால் தற்போது சான்றிதழ் வழங்க காலதாமதம் ஏற்பட்டது. இனிவரும் காலங்களில் குழந்தைகளுக்கு இந்தச் சான்றிதழ் எளிதில் கிடைக்கும்,” என நரேஷ் கூறினார்.

நரேஷ் வாங்கிய இந்தச் சான்றிதழ் தற்போது தேசிய அளவில் பேசுபொருளாகி இருக்கிறது. தங்கள் குழந்தைகளுக்கும் இதுபோல் சான்றிதழ் வாங்க வேண்டும் என விருப்பப்படும் பல பெற்றோர்களுக்கு நரேஷின் செயல் முன்னுதாரணம் ஆகி இருக்கிறது என்பதை மறுக்க இயலாது.

மகளின் சான்றிதழ் விசயத்தில் மட்டுமல்ல, சமூகத்தின் மீதும் தனி அக்கறைக் கொண்டவர் நரேஷ். சிறையில் உள்ள கைதிகளின் குழந்தைகள், தண்டனை முடிந்து விடுதலையாகும் சிறார் குற்றவாளிகள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான குழந்தைகள் போன்றோரின் கல்விக்காக, ’சீட்ரீப்ஸ்’ (Seedreaps) என்ற சிறிய டிரஸ்ட் ஒன்றையும் நடத்தி வருகிறார் இவர்.

இதன் மூலம், அடிக்கடி நேரடியாக தொலைபேசி மூலம் பேசும் அளவிற்கு  மாவட்ட ஆட்சியாளருடன் நட்பில் இருக்கிறார் நரேஷ். அதனாலேயே இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டு, இந்தச் சான்றிதழைப் பெறுவதற்கு நரேஷுக்கு அம்மாவட்ட ஆட்சியாளர் உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.