‘1,000 டாலருடன் சிறிய அறையில் தொடங்கிய Dell சாம்ராஜ்யம்’ - மைக்கெல் டெல் பகிர்ந்த ஃப்ளாஷ்பேக்!
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் முன்னணி கணினி தயாரிப்பு நிறுவனமான டெல், தற்போது உலகம் முழுவதும் அதன் வேர்களைப் பரப்பி இருந்தாலும், ஆரம்பத்தில் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்ற சுவாரஸ்ய தகவலை அதன் சிஇஓ லிங்கிடு இன் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் முன்னணி கணினி தயாரிப்பு நிறுவனமான டெல், தற்போது உலகம் முழுவதும் அதன் வேர்களைப் பரப்பி இருந்தாலும், ஆரம்பத்தில் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்ற சுவாரஸ்ய தகவலை அதன் சிஇஓ லிங்கிடு இன் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
ஆலமரம் போல் மிகப்பெரிய விருட்சம் வளர்வதற்கு ஒரு சிறிய விதை தான் காரணமாக அமைகிறது. அதைப் போல தற்போது வர்த்தகத்தில் உலகம் முழுவதும் கிளை பரப்பி, விருட்சமாக விஸ்வரூபம் எடுத்திருக்கும் பல தொழில்முனைவோரும் தங்களது பிசினஸை சின்னப் புள்ளியில் இருந்து தான் தொடங்குகின்றனர். தற்போது உலகம் முழுவதும் பிரபலமான கணினி மற்றும் கணினி சார்ந்த சாதனங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள டெல் நிறுவனம் , ஆரம்பத்தில் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்ற சுவாரஸ்ய கதையை அதன் சிஇஓ லிங்கிடு இன் தளத்தில் பகிர்ந்துள்ளது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவை தலைமையாகக் கொண்டு செயல்பட்டு வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டெல் இன்க், கணினி மற்றும் அது சார்ந்த உற்பத்தி, விற்பனை, மென்பொருள்கள், நெட்வொர்க் மற்றும் சேவைகள் போன்றவற்றை மேற்கொண்டு வருகிறது.
மைக்கெல் டெல் இந்த நிறுவனத்தை 1984ல் உருவாக்கினார். இந்த நிறுவனம் உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது.
ஜனவரி 2021ம் ஆண்டின் நிலவரப்படி, டெல் உலகின் மூன்றாவது பெரிய கணினி விற்பனையாளராக இருந்தது. இன்று, இது தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய பெயர்களில் ஒன்றாக இருந்தாலும், மிகவும் எளிமையான தொடக்கத்தைக் கொண்டுள்ளது. டெல் நிறுவனத்தை அதன் நிறுவனர் மைக்கேல் சால் டெல் ஆர்வம் மற்றும் உறுதிப்பாட்டுடன் தொடங்கியுள்ளார்.
மைக்கேல் டெல், லிங்கிடு இன் தளத்தில் பதிவு செய்துள்ள ஒரு த்ரோபேக் பதிவு மூலமாக அனைவரையும் தனது 22 வயதிற்கு அழைத்துச் சென்றுள்ளார். தற்போது 57 வயதான அவர், தனது சாதனைகளைக் கொண்டாடும் பழைய செய்தித்தாள் கட்டிங்குகளை பகிர்ந்துள்ளார்.
டெல் கம்ப்யூட்டர் கார்ப்பரேஷனை ஒரு சிறிய அறையில் வெறும் 1,000 அமெரிக்க டாலர்களுடன் தொடங்கிய ஆரம்ப நாட்களை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மைக்கேல் டெல் 1987 மற்றும் 2021 இன் வருவாய் புள்ளி விவரங்களைப் பகிர்ந்துகொண்டு, தனது வளர்ச்சியை தானே தட்டிக் கொடுத்து பாராட்டியுள்ளார். அதில்,
டெல் நிறுவனம் முதல் ஆண்டில் 159 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாய் ஈட்டியதையும், 2022 நிதியாண்டில் 101 பில்லியன் அமெரிக்க டாலர்களைப் பதிவு செய்துள்ளதையும் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.
“34 வருடங்களுக்கு முந்தைய ஒரு வேடிக்கையான நினைவு நாள், 1984ல் டெல் டெக்னாலஜிஸை 1,000 அமெரிக்க டாலர்களுடன் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் ஆஸ்டினில் உள்ள அறையில் தொடங்கினேன். 1987ல் டெல் வருவாய் (FY'88): $159 மில்லியன் அமெரிக்க டாலர்கள். 2021ம் ஆண்டு (FY'22) டெல் வருவாய் $101 பில்லியன் அமெரிக்க டாலர்கள்,” என பதிவிட்டுள்ளார்.
அக்டோபர் 19, 1987, பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு, ஒரு கருப்பு நாள் - வரலாற்றில் மிக மோசமான பங்குச் சந்தை வீழ்ச்சி. ஆனால், 23 வயது இளைஞரான மைக்கேல் டெல்லுக்கு அது ஒரு அற்புதமான நாளாக அமைந்தது என அவர் லிங்கிடு இன் தளத்தில் பகிர்ந்த செய்தித்தாளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“அக்டோபர் 19ம் தேதி எப்போதும் நான் நினைவில் வைத்திருப்பேன், ஏனெனில், அன்று தான் எங்கள் நிறுவனம் 25 மில்லியன் டாலர் ஒப்பந்தம் செய்தது. கடந்த ஆண்டு டெல் கம்ப்யூட்டர் கார்ப்பரேஷன் 159 மில்லியன் அமெரிக்க டாலர்களை விற்பனை செய்தது.”
மார்ச் 4 அன்று வாஷிங்டன் டி.சி.யில் நடந்த அசோசியேஷன் ஆஃப் காலேஜியேட் தொழில்முனைவோர் மாநாட்டில், மைக்கேல் டெல் - ’சிறந்த இளம் (30 வயதுக்குட்பட்ட) தொழில்முனைவோராக’ தேர்வு செய்யப்பட்டார்.
”1983 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து, 100 பேரின் பட்டியலை ACE பெயரிட்டுள்ளது. சிறந்த இளம் வணிகர்கள், மொத்த வருடாந்திர விற்பனையால் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளனர்,” என்று மைக்கேல் தனது Linkedin சுயவிவரத்தில் பழைய செய்தியின் ஒரு பகுதியை பகிர்ந்துள்ளார்.
மைக்கேல் டெல் ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தபோது 1984ல் டெல் கம்ப்யூட்டர் கார்ப்பரேஷனை PC's Limited ஆக நிறுவினார். ஒரு தங்குமிட அறையில் இருந்து தனது வணிகத்தைத் தொடங்கிய அவர், தனிப்பட்ட கணினிகளுக்கான தனிப்பயனாக்கப்பட்ட மேம்படுத்தல்களை வழங்கினார். தனது முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறி கணினிகளை உருவாக்க ஆரம்பித்தார்.
1985 ஆம் ஆண்டில், டெல் டர்போ பிசியை (Turbo PC) அறிமுகப்படுத்தியது, டெல்லின் வடிவமைப்பைக் கொண்ட முதல் கணினி. அப்போதிருந்து, நிறுவனம் பல மென்பொருள் மற்றும் வன்பொருள் தயாரிப்புகளை உருவாக்கி உலகளாவில் முன்னணி வகித்து வருகிறது.
தகவல் உதவி - லிங்கிடு இன்