வலியில்லா சுகப்பிரசவம்; மகப்பேறு பராமரிப்பு வழங்கும் ‘போதி மையம்’ தொடங்கிய சுஜிதா!
ஒரு பெண் தாய்மை அடையும்போது தான் முழுமை அடைகிறாள் என்று கூறுவார்கள்; அதனால் பெண்களுக்கு பிரசவம் என்பது ஒரு மிக நெருக்கமான ஒன்று. முதல் முறை கற்பமடையும் பெண்களுக்குள் 1000 கேள்விகள் ஓடும், இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாகவும், இன்றைய காலத்தில் சவாலாக இருக்கும் சுகப்பிரசவத்தை சுலபமாக்கும் நோக்குடன், ‘போதி மகப்பேறு பராமரிப்பு மையத்தை’ 'Bodhi Pregnancy care' துவங்கியுள்ளார் திருச்செங்ககோட்டைச் சேர்ந்த இளம் தாய் சுஜிதா.
இந்த மையத்தில் மகப்பேறு பராமரிப்பு, கருத்தரிப்புக்கு முன் பராமரிப்பு, கருத்தரிப்பிற்காக எடை குறைப்பு, பிரசவதிற்கு பின் எடை குறைப்பு, கருவிலே குழந்தையை தயார் செய்தல் என ஒரு பெண், கர்பம் அடைவதற்கு முன்பிருந்து குழந்தை பெற்ற பின் வரை தெரிந்துக்கொள்ள வேண்டிய அனைத்தும் கற்றுத்தரப்படுகிறது.
இது குறித்து நம்மிடம் பேசிய ‘போதி’ நிறுவனர் சுஜிதா,
“நான் கர்பமாக இருக்கும் பொழுது எனக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு எல்லாமே சிறந்ததாக இருக்க வேண்டும் என்று நிறைய ஆய்வு செய்தேன். அப்பொழுது பிறந்ததே இந்த யோசனை, 6 வருடங்களாக இதற்குத் தேவையான படிப்பை படித்து, பல ஆய்வுகளுக்கு பின் ’போதி’ துவங்கினேன்,” என தெரிவிக்கிறார்.
பொறியியல் பட்டதாரியான இவர், தன் படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைத்தும், தன் பிரசவத்தின் போது மகப்பேறு பராமரிப்பில் ஆர்வம் ஏற்பட்டு துணிச்சளுடன் இதற்கான படிப்பை படித்துத் துவங்கியுள்ளார்.
தன் குடும்பத்தில் அனைவரும் சுய தொழிலில் இருந்தவர்கள் என்பதால் வியாபாரம் செய்யும் தொழில் துறையையே சுஜிதாவை தேர்ந்தெடுக்கக் கூறியுள்ளனர், ஆனால் அவருக்கோ சேவை ரீதியான தொழில் செய்யவே ஆர்வம் இருந்தது. மேலும் இது போன்ற புதிய சிந்தனை கொண்ட சேவை மையங்கள் மெட்ரோ சிட்டியில் திறந்தால்தான் வெற்றி பெற முடியும் என்றனர்.
இருப்பினும் சுஜிதா தன் நம்பிக்கையுடன் 2019 ஆம் ஆண்டு தன் சொந்த சேமிப்பில் இருந்து முதலீடு செய்து, திருச்செங்கோட்டில் இம்மையத்தை துவங்கி வெற்றி கண்டுள்ளார்.
இந்த மையத்தின் கருவை மக்களுக்கு தெரிவிப்பதே சவாலாக இருந்தது, பலர் இது மகப்பேறு மருத்துவமனை என்றே நினைத்து கொள்கின்றனர். சுலபமாக சொல்ல வேண்டும் என்றால், கற்பத்தின் போது பெண்களுக்கு 1000 கேள்விகளும் குழப்பங்களும் இருக்கும், இதை அனைத்தும் மருத்துவர்களிடம் கேட்க முடியாது.
பிரசவம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கவும், ஒரு பெண்ணை சுகப்பிரசவதிற்கு தயார் செய்து, பிரிசவத்தின் பயத்தை முழுமையாக போக்குகிறது இம்மையம். மேலும் வலி இல்லா பிரசவதிற்குத் தேவையான பயிற்சியையும் அளிக்கிறோம் என தெரிவிக்கிறார் சுஜிதா.
’போதி’ துவங்கிய முதல் மாதம் இதற்கு பெரிதும் வரவேற்பை பெறவில்லை என்று கூறும் சுஜிதா, அதன் பின் 3 தாய்மார்கள் பங்கேற்று இன்று ஆன்லைன் சேவை வரை முன்னேறியுள்ளதாக மகிழ்வுடன் பகிர்கிறார்.
“இது போன்ற மையங்கள் பணக்காரர்களுக்கு என்ற பிம்பம் உள்ளது, ஆனால் அரசு மருத்துவத்தில் பிரசவம் பார்த்த ஒரு தாய் எங்கள் சேவை வேண்டும் என்று என் வகுப்பில் சேர்ந்தார், இதுவே எனது முதல் வெற்றி என்கிறார்,” சுஜிதா.
’போதி’ மையத்தில் பயிற்சி பெற்ற பெண்கள் பிரசவத்தின் போது நன்கு ஒத்துழைப்பதாகவும், சுலபமாக பிரசவம் செய்ய முடிகிறது என்றும், போதி பயிற்சி பெற்ற பெண்கள் தனியாக தெரிகின்றனர் என்று தனியார் மருத்துவமனை ஒன்று இவரது நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.
கோரோனா காலத்திலும் ஆன்லைன் மூலம் ஒன் ஆன் ஒன் பயிற்சி அளிக்கிறார் சுஜிதா. இது மட்டுமின்றி தற்பொழுது தன் கணவருடன் இணைந்து லில்பி என்னும் குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தை துவங்கும் முயற்சியில் உள்ளார்.
இவரது சேவையை பெற: ’போதி’ முகநூல் | வலைபக்கம் | தொடர்பு என் : 7010690274