திடீரென விற்பனையில் அசத்தும் ‘பாக்கெட் சைஸ்’ அரசியலமைப்பு புத்தகம் - பின்னணி என்ன?
இந்திய அரசியலமைப்பின் கருப்பு - சிவப்பு ‘பாக்கெட் சைஸ்’ புத்தகம், சந்தையில் அதிகம் விற்பனையாகி வருகிறது. இந்த புத்தகத்தை வெளியிட காரணமாக இருந்தவர் யார்?
அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ‘இந்திய அரசியலமைப்பு’ குறித்து அதிகம் பேசப்பட்டது. தேர்தல் முடிவுகள் வெளியாகி மூன்றாவது முறையாக பிரதமராகி உள்ளார் நரேந்திர மோடி. இந்த சூழலில் இந்திய அரசியலமைப்பின் கருப்பு - சிவப்பு ‘பாக்கெட் சைஸ்’ புத்தகம், சந்தையில் அதிகம் விற்பனையாகி வருகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2023-ல் மொத்தமாக 5,000 பிரதிகள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளது இந்த புத்தகம். நடப்பு ஆண்டின் ஒரே காலாண்டில் 5,000 பிரதிகள் என்ற எண்ணிக்கையை விற்பனையில் இந்தப் புத்தகம் கடந்துள்ளது.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அனைத்தும் எந்திர மயமாகி உள்ள வேளையில் இந்த புத்தகம் சந்தையில் அதிகம் விற்பனையாக காரணம் என்ன? இந்த புத்தக வடிவமைப்பின் பின்னணி குறித்தும் அறிவோம்.
சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அரசியலமைப்பு சாசனம் எழுதப்பட்டது. குடியரசு நாடான இந்தியாவில் மக்களின் அடிப்படை உரிமை குறித்து விரிவாக பேசும் அரசியலமைப்பு சாசனத்தை எளிய வடிவில் பாக்கெட்களுக்குள் வைத்துக் கொள்ளும் அளவுக்கு வடிவமைக்க வேண்டும் என்ற யோசனை மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் உடையது. அவரே இந்த பாக்கெட் சைஸ் பதிப்பு புத்தகத்தை எழுதியவரும் கூட.
அது குறித்து அவர் ஆங்கில நாளிதழில் தெரிவித்தது,
"அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பது தொடர்பான மெசேஜ் எப்படி மக்கள் மத்தியில் சென்றடைந்தது என்பதை நான் பார்க்க வில்லை. ஆனால், இந்தத் தேர்தல் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அதிகாரமளிக்கும் அரசியலமைப்பு சாசன புத்தகத்தை தங்களது இல்லங்களில் அவசியம் வைத்திருக்க வேண்டுமென்ற புரிதலை தந்துள்ளது. அந்த வகையில் அது எனக்கு மகிழ்ச்சி," என அவர் சொல்லியுள்ளார்.
கடந்த 2009-ல் இந்த பாக்கெட் சைஸ் அரசியலமைப்பு சாசனத்தின் முதல் பதிப்பு வெளியாகி உள்ளது. பெரும்பாலான இளம் வழக்கறிஞர்கள் அரசியலமைப்பு சட்டம் குறித்த அறியாமல் இருந்தது இந்த பாக்கெட் சைஸ் வடிவ புத்தகத்துக்கான ஐடியாவை கொடுத்துள்ளது. இதனை வழக்கறிஞர்கள் தங்களது ‘கோட்’ பாக்கெட்டில் வைத்துக் கொள்ளும் வகையில் இருக்க வேண்டுமென்றும் அவர் விரும்பியுள்ளார்.
லக்னோவை சேர்ந்த ஈஸ்டர்ன் புக் கம்பெனி (EBC) என்ற நிறுவனம் தான் இந்த புத்தகத்தை பதிப்பித்து, சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. மொத்தம் 624 பக்கங்களை இந்த புத்தகம் கொண்டுள்ளது. விலை உயர்ந்த மெல்லிய எடையிலான பைபிள் பேப்பர் பயன்படுத்தப்பட்டுள்ளது. சிவப்பு நிற கவர், கருப்பு நிற பார்டர், பொன் நிறத்தில் எழுதப்பட்டுள்ள வாசகம் என புத்தகத்தின் அட்டைப்பக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 20 சென்டிமீட்டர் நீளம், 10.8 சென்டி மீட்டர் அகலம் கொண்டுள்ளது இந்தப் புத்தகம்.
இதுவரை மொத்தம் 16 பதிப்புகள் வெளிவந்துள்ளன. இதில் கடந்த பிப்ரவரி முதல் மே வரையிலான நாட்களில் மட்டும் 5,000-க்கும் மேற்பட்ட ‘பாக்கெட் சைஸ்’ அரசியலமைப்பு புத்தகம் விற்பனை ஆகியுள்ளது, என சொல்கிறார் இபிசி இயக்குனர்களில் ஒருவரான சுமித் மாலிக். ஆண்டுக்கு சுமார் 3,000 முதல் 4,000 என்ற எண்ணிக்கையில் தான் இந்த புத்தகத்தின் விற்பனை இருக்கும். பெரும்பாலும் வழக்கறிஞர்கள், சட்டம் பயிலும் மாணவர்கள் மற்றும் சட்டக் கல்லூரிகளை சேர்ந்தவர்கள் இதனை வாங்கி வந்தனர்.
ஆனால், 2024 தேர்தல் அனைத்தையும் மாற்றி உள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மொத்தமாக இம்முறை புத்தகங்களை வாங்கி உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இந்த புத்தகத்தின் விலை ரூ.875 என உள்ளது. இருந்தாலும் சாமானிய இந்திய மக்கள் இப்போது இதனை வாங்க ஆர்வம் காட்டி வருவதாக மாலிக் தெரிவித்துள்ளார். இந்தப் புத்தகத்தின் முன்னுரையை முன்னாள் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் எழுதியுள்ளார்.
இந்த பாக்கெட் சைஸ் புத்தகத்தை தொகுத்த சங்கரநாராயணன், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், மாணவர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கும் பரிசாக வழங்கியுள்ளார். காங்கிரஸ் கட்சியும் தனது தொண்டர்கள் மற்றும் மக்களுக்கு இந்த புத்தகத்தை வழங்கியுள்ளது.
கடந்த 2017-ல் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு இந்தப் புத்தகத்தை பிரதமர் மோடி பரிசளித்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இந்தப் புத்தகத்தை இபிசி பதிப்பகம் பரிசாக வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது வழக்கறிஞர்கள், அரசியல் ஆர்வலர்கள் மற்றும் சாமானிய மக்கள் என பலரும் இந்தப் புத்தகத்தை இணையவழியில் ஆர்டர் செய்து வருவதாக தகவல்.
Edited by Induja Raghunathan