சாதனை என்பது வெற்றி பெறுவது அல்ல, வெற்றியை தக்க வைப்பதே!
"பேப்பர் ப்ளேன்ஸ்" (Paper Planes) நிறுவனத்தை தோற்றுவித்த நுபுர் ஜோஷியின் தந்தை தன் வாழ்நாளின் பெரும்பகுதியை அரசு ஊழியராய் கழித்தார். அதன் பின் தனியார் நிறுவனத்தில் கொஞ்ச காலம் வேலை பார்த்தார். சொந்தமாய் தொழில் தொடங்கியபோது அவருக்கு வயது 59. அவர்தான் நுபுரின் முழு முதல் இன்ஸ்பிரேஷன்.
உனக்கு பிடித்ததை செய்ய என்னை போல் காத்திருக்காதே என்பதுதான் அவர் எனக்கு வழங்கிய அறிவுரை.
இந்த அறிவுரைதான் நியூயார்க் சட்ட பல்கலைக்கழகத்தில் முதுகலை பயின்று கார்ப்பரேட் லாயராக பணியாற்றிவந்த நுபுரை வேலையை துறந்துவிட்டு சுயதொழில் தொடங்க தூண்டியது.
பேப்பர் ப்ளேன்ஸ் தளம் உலகெங்கும் உள்ள தலைசிறந்த ஆங்கில படைப்புகளை ஒரே இடத்தில் தொகுத்துத் தருகிறது. செய்தி நிறுவனங்களின் வழக்கமான க்ளிஷேக்களை தவிர்த்து ஒவ்வொரு நாட்டின் தி பெஸ்ட் படைப்புகளை வாசகர்களுக்கு தருவதே இந்த தளத்தின் நோக்கம்.
லட்சியத்திற்காக பார்த்துகொண்டிருந்த வேலையை விடுவது அவ்வளவு எளிதாக இல்லை. "சொந்தமாய் தொழில் தொடங்கி ஜெயிப்பேனா இல்லையா எனத் தெரியாத நிலையில், என் இத்தனை வருட உழைப்பை சட்டென விட தயக்கமாய் இருந்தது. ஆனால் வித்தியாசமாய் யோசிப்பவர்களுக்கு இங்கே கிடைக்கும் வரவேற்பு எனக்கு தைரியம் அளித்தது. எதையும் சமாளிக்கலாம் என்ற எண்ணத்தை மக்கள் கொடுக்கும் அந்த வரவேற்பு தைரியம் கொடுத்தது" என்கிறார் நுபுர்.
தோல்வி பயம்
உண்மையில் தோற்றுவிடுவோமோ என்ற பயம்தான் நுபுருக்கு தேவையான உந்துதலை அளித்தது.
"ஐந்து வருட வேலைக்கு பின், ஒரு சின்ன ஓய்வு தேவைப்பட்டது. நிறைய படிக்கவும், நிறைய பயணம் செய்யவும் அந்த காலம் பயன்பட்டது. என் பயம்தான் இந்த ஓய்விற்கு என்னைத் தள்ளியது".
அப்படியான ஓய்வில்தான் அவர் ஒரு வித்தியாசமான இதழை படிக்க நேர்ந்தது. இண்டிபெண்டென்ட் பப்ளிஷிங் கீழ் வரும் ஒரு இதழை அவர் படிப்பது அதுவே முதல்முறை. "இதுவரை அப்படி ஒரு இதழை நான் படித்ததே இல்லை. செய்திகள் தொடங்கி டிசைனிங் வரை எல்லாமே புதிதாய் இருந்தது. பெய்ரூட்டிலிருந்து வெளிவரும் ஒரு இதழ், அரேபிய மக்களைப் பற்றிய தெளிவான புரிதலை அளித்தது. பார்சிலோனாவிலிருந்து வெளிவரும் ஒரு இதழ் இன்டீரியர் டிசைன் பற்றிய தகவல்களை அக்குவேறு ஆணிவேராக அலசியது. பெர்லினிலிருந்து வெளிவந்த ஒரு இதழ் உலகின் சிறந்த கிரியேட்டர்களை அடையாளம் காட்டியது' என குதூகலக்கிறார் நுபுர்.
கரு தோன்றிய கதை
இந்த புத்தகங்கள் எல்லாம் இங்கே கிடைக்காதென்பதால் இவற்றை இங்கே கொண்டு வருவது செலவு பிடிக்கும் விஷயமாக இருந்தது. இதனாலேயே அந்த புத்தகங்களுக்கு இங்கே வாசகர்களும் குறைவு. "மொத்தமாய் ஆர்டர் கொடுத்தால் கொண்டு வரும் செலவு குறைவதோடு பப்ளிஷர்களிடமிருந்து தள்ளுபடியும் கிடைக்கும் எனத் தெரிந்தது. அதுபோக இங்கே இப்படியான இதழ்களை தொடர்ந்து வழங்குவதற்கு யாருமில்லை என்பதையும் தெரிந்துகொண்டேன். உடனே பிசினஸ் பண்ணும் முடிவிற்கு வந்துவிட்டேன்" என்கிறார் நுபுர்.
என்னதான் இதுகுறித்து ஆய்வுகளையும், சர்வேக்களையும் அவர் மேற்கொண்டிருந்தாலும், அதன் முடிவுகளை பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. "சர்வே முடிவுகள் எனக்கு பாதகமாய் வந்திருந்தாலும் நான் என் முடிவிலிருந்து பின்வாங்கியிருக்கமாட்டேன். காரணம் இந்த புத்தகங்கள் எல்லாமே பொக்கிஷங்கள்" என்கிறார் நுபுர்.
பேப்பர் ப்ளேன்ஸ்
நுபுர் தன் நிறுவனத்தின் பெயர்க்காரணத்தை பகிர்ந்துகொள்கிறார். "பேப்பர் என்ற பகுதி கண்டிப்பாக பெயரில் இருக்கவேண்டும் என நினைத்தேன். மேலும் நான் பேப்பர் படிக்கும் ஒரே இடம் விமானம்தான். அதனால்தான் இந்த பெயர்" என்கிறார் சிரித்துகொண்டே.
அங்கிருந்து இதழ்களை இறக்குமதி செய்தால் நிறைய செலவாகும் என்பதால் ஒரு வித்தியாசமான சந்தா முறையை கையாள்கிறார் நுபுர். "ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தலைப்பு என உலகம் முழுவதிலுமுள்ள சிறந்த இதழ்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். இந்த மாதம் என்ன தலைப்பு என கடைசி வரை உங்களுக்குத் தெரியாது. அதுவே ஒரு த்ரில்தானே" என்கிறார் நுபுல் சிரித்தபடி. சந்தாதாரர்கள் தங்களுக்கு பிடித்த ஜானர்களை முன்பே தேர்வு செய்து கொள்ளலாம். "இதனால் வாசகர்களுக்கு பிடித்த தலைப்புகளை அனுப்ப முடிகிறது. இது தவிர வாசகர்களுக்கு சர்ப்ரைஸ் விஷயங்களும் நிறையவே இருக்கின்றன" என விவரிக்கிறார் நுபுர்.
Motherland, Kyoorius போன்ற இதழ்களுக்கு இங்கே மவுசு அதிகம். இவை எல்லாம் எங்கள் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கும். கெய்ஸி பேமிலியின் ஸைன் புத்தகத்தை சீக்கிரமே விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறோம்" என்கிறார் நுபுர்.
ரிஸ்க் எடு! வெற்றி உனக்கே!
நுபுர் அறிமுகப்படுத்தும் புத்தகங்கள் எல்லாம் அந்தந்த நாடுகளில் பிரபலமானவையாக இருந்தாலும் இந்தியாவில் அவற்றின் ரீச் கம்மிதான். அதனால் இந்த தொழிலில் ரிஸ்க் அதிகம். ஆனால் அதைப் பற்றி எல்லாம் இவர் கவலைப்படவில்லை. "இதழ்கள் எப்போதும் அதிகமான வாசகர்களைக் கொண்டிருக்கின்றன. எந்த ஒரு புத்தகக்கடைக்கு சென்றாலும் அங்கே அதிகம் விற்பது இதழ்கள்தான்".
இசைக் கலைஞர்கள், பத்திரிக்கையாளர்கள், முதன்மை அதிகாரிகள் என பலரும் எங்கள் சந்தாதாரர்களாய் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் வாசிப்பு மீது தீராக்காதல் இருக்கிறது, வளர்ந்து வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையே எங்கள் வெற்றிக்கு சாட்சி. வேர்ல்பூல், லாண்டோர் போன்ற பெரிய நிறுவனங்களே வாடிக்கையாளராய் இணைந்திருப்பது எங்கள் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி" என்கிறார் அவர்.
சீரான வளர்ச்சி
நிறுவனத்தின் முதலாம் ஆண்டு வளர்ச்சி நுபுருக்கு திருப்தியளிப்பதாய் இருக்கிறது. "அடுத்த கட்ட பாய்ச்சலுக்கான நேரம் இது. 2016ல் எத்தனை பெருநகரங்களுக்கு எங்கள் சேவையை விரிவுப்படுத்த முடியுமோ அத்தனையையும் பண்ண வேண்டும். எங்கள் சேவையை பர்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி எங்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை கூட்ட வேண்டும். இதுதவிர்த்து எங்களுக்கு அதிக வருமானம் ஈட்டித் தரும் வகையில், கார்ப்பரேட்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றை எங்களோடு இணைக்க முயற்சித்து வருகிறோம்" என்கிறார் நுபுர். பேப்பர் ப்ளேனை ஒரு ஆல் இன் ஆல் நிறுவனமாக மாற்ற விரும்புகிறார் நுபுல்.
சவால்களும் சமாளிப்புகளும்
இந்த நிறுவனத்தை தன் சொந்த முதலீட்டில் தொடங்கி இருக்கிறார் நுபுர். இரண்டு ஃப்ரீலான்ஸ் எழுத்தாளர்கள் நிறுவனத்தின் வலைப்பூவை கவனித்துக் கொள்கிறார்கள். பாக்கி வேலைகள் அனைத்தையும் நுபுரே பார்த்துகொள்கிறார்.
"ஒரு நிறுவனத்தை தொடங்குவது எளிதுதான். அதை தொடர்ந்து இயங்க வைப்பதுதான் சவாலே. எங்களின் இந்த முயற்சியில் நிறைய சவால்களை சந்தித்திருக்கிறோம். இங்கே சொந்தமாய் தொழில் தொடங்குவது அவ்வளவு எளிதல்ல. நிறுவனத்துக்கான இடத்தை தேர்வு செய்வது, பதிவு செய்வது என செலவு பிடிக்கும் விஷயங்கள் நிறைய இருக்கின்றன" என்கிறார் இவர்.
"நான் தொடக்கத்தில் போட்ட செலவுக் கணக்குகள் அனைத்தும் ஒரு கட்டத்தில் எகிறின. இது ஏமாற்றமளிப்பதாய் இருந்தாலும் இவற்றிலிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். வர்த்தகம் என்றால் இப்படித்தான் என்பதையும் தெரிந்துகொண்டேன்" என புன்சிரிப்போடு சொல்கிறார் நுபுர்.
உண்மைதான். கேட்பதற்கு எளிதாய் இருந்தாலும் வர்த்தகம் சுலபமான விஷயமல்ல. இங்கே நீங்கள் நினைத்தபடி எல்லாம் நடக்காது. "சவால்களை முழு வீச்சில் எதிர்கொண்டு சாதிக்க எந்நேரமும் நீங்கள் தயாராய் இருக்கவேண்டும்" என ரகசியம் பகிர்கிறார் நுபுர்.
தன் நிறுவனத்தின் எதிர்காலம் குறித்து நம்பிக்கையாய் இருக்கிறார் நுபுர். வளரும் தொழில் முனைவோருக்கு அவர் கூறும் அறிவுரை இதுதான்.
உங்களின் முழுநேர வேலையை முடிந்தளவு விடாமல் இருங்கள். அது ரிஸ்க் எடுக்கத் தேவையான தைரியத்தை உங்களுக்கு அளிக்கும். உங்கள் வாடிக்கையாளர்கள் பற்றி நன்றாக ஆராயுங்கள். அவர்களை நீங்கள் திருப்திபடுத்தாவிட்டால், நீங்கள் உழைத்து சம்பாதித்து முதலீடு செய்த பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என அர்த்தம்.
இணையதள முகவரி: PaperPlanes
ஆக்கம் : ராக்கி சக்ரவர்த்தி | தமிழில் : சமரன் சேரமான்