தனது ஸ்டார்ட் அப் நிறுனத்தை விற்று 400 ஊழியர்களை மில்லினியர்கள் ஆக்கிய 46 வயது தொழில்முனைவர்!
தனது Appdynamics என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை விற்று தனது 400 ஊழியர்களை மில்லினியராக்கி இருக்கிறார் ஜோதி பன்சல் என்ற முதலாளி.
தீபாவளி நெருங்கி வருகிறது.. இந்த வருடமாவது நமது முதலாளி போனஸ் பணம் தருவாரா என்ற எதிர்பார்ப்புடன் பல தொழிலாளர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, மற்ற முதலாளிகளிடம் இருந்து வேறுபட்டு, தனது ஸ்டார்ட் அப் நிறுவனத்தையே விற்பனை செய்ததன் மூலம், தனது ஊழியர்கள் சுமார் 400 பேரை மில்லினியர்களாக்கி இருக்கிறார் ஜோதி பன்சல் என்ற 46 வயது தொழில்முனைவர்.
யார் இந்த ஜோதி பன்சல்?
ராஜஸ்தானில் உள்ள சிறிய நகரமொன்றில் பிறந்தவர்தான் ஜோதி பன்சல். டெல்லியில் உள்ள ஐஐடி-யில் கணினி அறிவியல் முடித்த இவர், கடந்த 2000ம் ஆண்டு அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் வேலைக்குச் சேர்ந்தார். 2007ம் ஆண்டு வரை அங்குள்ள பல ஸ்டார்ட் அப்களில் வேலை பார்த்த அவர், பின்னர் 2008ம் ஆண்டு ஆப்டைனமிக்ஸ் என்ற புதிய ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தானே ஆரம்பித்தார்.
நிறுவனங்களின் மென்பொருட்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்த நிகழ் நேர மதிப்பாய்வுகளை வழங்குவது தான் இந்த நிறுவனத்தின் வேலை. இதனால் பல்வேறு நிறுவனங்களும் அவர்களின் மென்பொருள்களில் ஏற்படும் பிரச்சனைகளை எளிதாக சரி செய்ய முடிந்தது. தனது திறமையான செயல்பாடுகளால், சந்தையில் ஆப்டைனமிக்ஸிற்கு நல்ல பெயரைச் சம்பாதித்துக் கொடுத்தார் அதன் தலைமை செயல் அதிகாரியான ஜோதி பன்சல்.
ஆரம்பத்தில் ஆப்டைனமிக்ஸ் வெப் செயலிகளுக்காகவே உருவாக்கப்பட்டது. மொபைல் செயலிகளுக்கான ப்ராடக்ட் இல்லை. பின்னர், மாறி வரும் தேவைகளுக்கேற்ப மொபைல் செயலிகளுக்காகவும் ப்ராடக்டுகளை உருவாக்கத் துவங்கியது. இதனால், ஆப்டைனமிக்ஸ் ப்ராடக்ட் அறிமுகமான பதினெட்டு மாதங்களில் 5-6 மில்லியன் டாலராக இருந்த வருமானம், 2014ம் ஆண்டு 70-80 மில்லியன் டாலராக உயர்ந்தது.
மில்லினியர்களான தொழிலாளர்கள்
ஆப்டைனமிக்ஸின் இந்த அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டு ஆர்வமான, அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான சிஸ்கோ, கடந்த 2017ம் ஆண்டு, 3.7 பில்லியன் டாலர்களைக் கொடுத்து, அந்த நிறுவனத்தை கையகப்படுத்தியது.
ஜோதி பன்சல் தனது ஆப்டைனமிக்ஸ் நிறுவனத்தை விற்பனை செய்தபோது, தன் நிறுவனத்தில் வேலை பார்த்த சுமார் 400க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு தனது நிறுவனத்தின் பங்குகளைப் பரிசாக அளித்திருந்தார். தற்போது ஒரு மில்லியன் டாலர் அளவுக்கு இதன் மதிப்பு தற்போது உயர்ந்து அவர்களில் பலர் 1 மில்லியன் டாலர்களையும், சிலரது பங்குகள் 5 மில்லியன் டாலர்களையும் கடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஜோதி பன்சலிடம் வேலை பார்த்த அந்த ஊழியர்கள் அனைவரும் தற்போது மில்லினியர்களாக மாறியுள்ளனர்.
இந்தத் தகவல் சமூகவலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, தங்களுக்கும் இப்படி ஒரு முதலாளி கிடைக்க மாட்டாரா என ஏக்கப் பெருமூச்சு விட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.
25 உரிமங்கள்
தற்போது அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் குடியிருக்கும் ஜோதி பன்சால், தன்னுடைய பெயரின் கீழ் 25 உரிமங்களை பெற்று வைத்துள்ளார். தொழில்நுட்ப துறையில் வல்லவராக பார்க்கப்படும் அவர், போர்ப்ஸ் நிறுவனத்தின் சிறந்த கிளவுட் கம்ப்யூட்டிங் தலைமை செயல் அதிகாரி உள்ளிட்ட பல்வேறு தொழில் சார்ந்த விருதுகளை பெற்றிருக்கிறார்.
ஆப்டைமனிக்ஸ் ஸ்டார்ட் அப்பை விற்பனை செய்த பிறகு, பிக் (BIG - Bansal Innovation Group) என்ற ஸ்டார்ட் அப் லேப்பை ஆரம்பித்தார் ஜோதி பன்சல். அதன் முதல் ஸ்டார்ட் அப்பாக, ஹார்னஸ் (Harness) என்ற ஆட்டோமேட் சாஃப்ட்வேர் டெலிவரி ப்ராசஸ் நிறுவனத்தை ஆரம்பித்தார்.
பின்னர், சைபர் செக்யூரிட்டி தளமான ட்ரேஸபில் ஏஐ (Traceable AI) என்ற இரண்டாவது ஸ்டார்ட் அப் நிறுவனத்தையும் அவர் ஆரம்பித்தார். இந்த நிறுவனங்களின் மதிப்பு சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.