நக்சல் பகுதிகளில் அழிந்த பள்ளிக்கூடங்கள்; குழந்தைகளின் கல்வியை மீட்டெடுக்கும் சமூக ஆர்வலர்!
பொறியியலாளரான ஸ்ரீவஸ்தவா தொடங்கிய தன்னார்வ அமைப்பு 25,000 குழந்தைகளின் கல்வியை மீட்டெடுத்து, முடிவில்லா வன்முறைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், இழந்த நம்பிக்கையையும் திருப்பி அளிக்கிறது.
பொறியியலாளரான ஸ்ரீவஸ்தவா தொடங்கிய தன்னார்வ அமைப்பு 25,000 குழந்தைகளின் கல்வியை மீட்டெடுத்து, முடிவில்லா வன்முறைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இழந்த நம்பிக்கையையும் திருப்பி அளிக்கிறது.
சத்தீஸ்கர் மாநிலம் அப்பகுதியில் நிலவும் நக்சல் நடவடிக்கைகளுக்கு பெயர் போனது. இதன் காரணமாக, மாநிலத்தின் சுக்மா மற்றும் பிஜாப்பூர் போன்ற பகுதிகளின் வளர்ச்சி முற்றிலும் பின்தங்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, மாவோயிஸ்டுகளின் வன்முறையில் சிக்கித் தவிக்கும் சுக்மா மாவட்டத்தில், கிட்டத்தட்ட 40,000 குழந்தைகள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டனர்.
கடுமையான வறுமையிலும், உயிரை இழக்க நேரிடும் என்ற அச்சத்திலும் வாழும் இந்தக் குழந்தைகள் அடிப்படைக் கல்விக்கான வாய்ப்பை இழந்தனர். இந்நிலை நீடிப்பதற்கு முட்டுக்கட்டை போட்ட, ஆஷிஷ் ஸ்ரீவஸ்தவாவுக்கு நன்றி.
ஆம், தொழில்ரீதியாக பொறியியலாளரான, அவர் டெல்லியில் அவரது கார்ப்பரேட் வேலையை விட்டுவிட்டு, இந்தியா முழுவதும் பயணம் செய்யத் தொடங்கினார். அவரது பயணத்தின் போது, தண்டேவாடா பகுதியை நோக்கிய அவரது பயணம் அவரை உலுக்கியது. நக்சல் வன்முறையால், இப்பகுதியில் குழந்தைகளின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டதை அவர் கவனித்தார்.
விளைவாக, 2016ம் ஆண்டு ஆஷிஷ் ஸ்ரீவஸ்தவா மற்றும் அவரது மனைவி ஷாலினி ஸ்ரீவஸ்தவா, நண்பர்கள் விகாஸ் சுக்லா மற்றும் நீரஜ் நாயுடு ஆகியோருடன் இணைந்து "சிஸ்க்ஷர்த்" (Sisksharth) எனும் அமைப்பை நிறுவினார்.
சிக்ஷார்த் என்பது பழங்குடியின குழந்தைகளுக்கு சூழல் மற்றும் கலாச்சார ரீதியாக பொருத்தமான கல்வி வழங்கி அதன் மூலம் அதிகாரம் அளிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பாகும். ஒரு சில குடியிருப்புப் பள்ளிகளில் குழு கற்பித்தலாக தொடங்கி, இன்று பிராந்தியத்தில் நூற்றுக்கணக்கான பள்ளிகளில் பரவியிருக்கும் இயக்கமாக வளர்ந்துள்ளது.
பள்ளியை விட்டு வெளியேறிய 40,000 குழந்தைகளில், 25,000 பேருக்கு மீண்டும் சரியான கல்வியை பெற வைத்துள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனம் தற்போது அரசு பள்ளிகள் மூலம் கல்வியை வழங்குகிறது, ஆனால் அவர்களின் பாடத்திட்டத்தை மறுவடிவமைப்பு செய்து கற்பிக்கும் முறையை மேம்படுத்தியுள்ளது.
சிக்ஷார்த்தின் தோற்றம்..!
போபாலைச் சேர்ந்த எலக்ட்ரிக்கல் இன்ஜினியரான ஸ்ரீவஸ்தவா, கார்ப்பரேட் துறையில் பணிபுரிந்தபோது, நாட்டின் சமூக-அரசியல் பற்றி ஆழமாக அறிந்து கொள்வதற்காக பயணம் செய்யவேண்டும் என்ற ஆர்வத்தை பெற்றார். அவரது பயணம் அவரை சத்தீஸ்கருக்கு அழைத்துச் சென்றது. அங்கு நக்சலைட் மோதலால் ஏற்பட்ட பேரழிவு அவருக்குள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
"தொடர்ந்து பயத்தில் வளர்ந்து வரும் குழந்தைகளை மோதல்கள் எவ்வாறு பாதிக்கிறது? என்பதை நேரடியாகப் பார்த்தேன். பள்ளிகள் அழிக்கப்பட்டன அல்லது அணுக முடியாதவையாக ஆகின. மேலும், குழந்தைகளுக்கு கற்கவோ அல்லது பாதுகாப்பாக உணரவோ ஓர் இடமில்லை," என்று கூறினார்.
மோதலின் போது, 300 பள்ளிகள் அழிக்கப்பட்டன. சுக்மாவில் மட்டும் 20,000க்கும் மேற்பட்ட குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டது. தீவிர வன்முறைக்கு உட்பட்ட பகுதிகளில் பெரும்பாலான பள்ளிகள் அமைந்திருப்பதால், இந்த குழந்தைகள் கல்வியை மட்டும் இழக்கவில்லை. ஆழமான வேரூன்றிய மன அதிர்ச்சியுடன் வளர்ந்து வருகின்றனர்.
குழந்தைகளுக்கு புத்தகங்கள் மற்றும் வகுப்பறைகள் மட்டுமல்ல, அவர்களின் மனதையும் ஆன்மாவையும் வளர்க்கும் சூழலும் தேவை என்பதை ஸ்ரீவஸ்தவா உணர்ந்ததன் மூலம் "சிஸ்க்ஷர்த்" பிறந்தது.
முடிவில்லா வன்முறைகள்... முடிவுக்குவந்த கல்வி...
"2015ம் ஆண்டில், 4 ஆம் வகுப்பு மாணவர்களை அவர்கள் விரும்புவது எதையாவது வரையச் சொன்னோம். 53 மாணவர்களில் 47 பேர் வன்முறை, துப்பாக்கிகள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் போர்க் காட்சிகளை வரைந்தனர். இதுதான் அவர்களின் ரியாலிட்டியாக இருந்தது," என்கிறார் ஸ்ரீவத்சவா.
இக்குழந்தைகளுக்கு ஏற்பட்ட மோதலின் தாக்கம் அவர்களது கல்வியை மட்டும் பாதிக்கவில்லை. சிக்ஷார்த்தின் ஆய்வில், போருக்கு ஆளான குழந்தைகளில் 47% பேர் PTSD (பிந்தைய மனஉளைச்சல் சீர்கேடு) நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், 43% பேர் மனச்சோர்வின் அறிகுறிகளையும் 27% பேர் கவலையையும் அனுபவித்துள்ளனர்.
பாரம்பரியக் கல்வியால் மட்டுமே இந்த ஆழமான உளவியல் மற்றும் உணர்ச்சி வடுக்களை நிவர்த்தி செய்ய முடியாது என்பதை உணர்ந்த, சிக்ஷார்த் அமைப்பு நேர்மறையான குழந்தை பருவ அனுபவங்களை உருவாக்கும் திட்டங்களை வகுத்தது.
பழங்குடியினரின் பேச்சுவழக்குகளில் கதைசொல்லல் முதல் உள்ளூர் நாட்டுப்புறக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட காமிக் புத்தகங்கள் வரை, கல்வியை தொடர்புபடுத்தக்கூடியதாகவும், அதிகாரமளிப்பதாகவும் ஆக்கியது. உள்ளூர் மொழிகளில் கதைப்புத்தகங்களை உருவாக்குவதற்காக அமைப்பானது பிரதம் புக்ஸுடன் கூட்டு சேர்ந்தது.
சிக்ஷார்த் உள்ளூர் இளைஞர்களுடன் நெருக்கமாக பணியாற்றி, சமூகத்திற்குள் நம்பிக்கையை வளர்ப்பதற்காக அவர்களுக்கு ஆசிரியர்களாக பயிற்சி அளித்து வருகிறது. இந்த கல்வியாளர்கள் குழந்தைகளின் கலாச்சார சூழலுக்கும் முறையான கல்விக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க உதவுகிறார்கள்.
"நாங்கள் குழந்தைகளை இயற்கை நடைப்பயணத்திற்கு அழைத்துச் செல்கிறோம். அவர்களது சமூகத்தின் பெரியவர்களுக்குத் தெரிந்த மருத்துவ தாவரங்களைப் பற்றி குழந்தைகளுக்குக் கற்பிக்கிறோம். இது பூர்வீக அறிவை முறையான கல்வியுடன் இணைப்பதாகும்," என்றார் ஸ்ரீவஸ்தவா.
கல்வியுடன் மீட்டெடுக்கப்படும் அழகிய பால்யம்...
நக்சலைட் நடவடிக்கை ஆதிக்கம் செலுத்தும் பகுதியில் பணிபுரிவது எதிர்பாராத சவால்கள் நிறைந்தது. ஸ்ரீவஸ்தவா மற்றும் அவரது குழுவினர் விசாரணைகளை எதிர்கொண்டனர். சோதனைச் சாவடிகளில் நிறுத்தப்பட்டனர். மேலும், தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். எதற்கு தளராது பணியாற்றிய சிஸ்க்ஷர்த் இப்போது அதன் வரம்பை விரிவுபடுத்தியுள்ளது.சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா போன்ற அண்டை மாநிலங்களில் உள்ள 500 பள்ளிகளுடன் பணிபுரிகிறது.
அவற்றில் 300 பாடசாலைகள் மோதலினால் அழிந்து புனரமைக்கப்பட்ட பாடசாலைகளாகும். சிஸ்க்ஷர்தின் வெற்றிக்கு நிதியுதவி ஒரு முக்கியமான அம்சமாக உள்ளது, பெரும்பாலும் தனிப்பட்ட நன்கொடையாளர்களிடமிருந்தே அவர்களுக்கு ஆதரவு கிடைக்கிறது.
இந்தப் பிராந்தியத்தில் சிஎஸ்ஆர் நிதியுதவி வளர்ச்சியடையவில்லை. ஏனெனில், இந்த மோதல்கள் நிறைந்த பிராந்தியத்தில் பெரிய நிறுவனங்கள் அவற்றின் அடிப்படை அல்லது உற்பத்தி அலகுகள் இல்லை. ஆனால், சமீபத்திய ஆண்டுகளில், HDFC மற்றும் விப்ரோ அறக்கட்டளை போன்ற நிறுவனங்கள் உதவ முன்வந்துள்ளன.
"ஒரு குழந்தை வன்முறைக்கு மத்தியில் வளர்ந்தால், அவர்களுக்கு அமைதி என்றால் என்ன என்றே புரியாது. ஆனால் நாம் அவர்களுக்கு இரக்கத்தின் தருணங்களைக் கொடுத்தால், அவர்கள் அதை முதிர்வயது வரை கொண்டு செல்வார்கள்," என்று நம்பிக்கையின் குரலில் கூறும் ஸ்ரீவஸ்தவாவின், இலக்கு கல்வி வெற்றி மட்டுமல்ல, இரக்கமுள்ள, அனுதாபமுள்ள நபர்களாக குழந்தைகளை உருவாக்குவதாகும்.
தமிழில்: ஜெயஸ்ரீ
'ப்ளவுஸ் டிசைனிங் முதல் ட்ரேடிங் வரை' - காதுகேளாத சமூகத்துக்கான சைகைமொழி கல்வி வழங்கும் 'Yunikee'