17 ஆண்டுகள் புற்றுநோயுடன் போராட்டம்; கிராம மக்களுக்கு டெலிமெடிசன் மையங்கள் திறந்து உதவிடும் சந்தீப் குமார்!
சிறுவயதில் எலும்பு புற்றுநோயுடன் 17 ஆண்டுகள் போராடி அதிலிருந்து மீண்ட சந்தீப் குமார், கிராமப்புற மக்களுக்கு சுகாதார சேவைகளை மலிவு விலையில், அணுகக்கூடியதாக கிடைக்க, டெலிமெடிசன் மருத்துவ மையங்களை நடத்தும் லாப நோக்கற்ற நிறுவனம் DigiSwasthya Foundation தொடங்கி 20,000 நோயாளிகளுக்கு சேவை அளித்துள்ளார்.
சந்தீப் குமாருக்கு 12 வயது இருந்தபோது, அவருக்கு எவிங் சர்கோமா என்ற எலும்பு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. சரியான நோயறிதலைக் கண்டறிந்து, சிகிச்சையைத் தொடங்குவதற்கு, கிட்டத்தட்ட ஆறு மாத காலம் மாவட்ட மற்றும் நகர மருத்துவமனைக்கு பல முறை வலம்வர வேண்டியிருந்தது.
உத்தரபிரதேசத்தின் சாந்த் கபீர் நகர் மாவட்டத்தில் உள்ள கதைச்சா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தீப் குமார். வளர்ந்து வரும் கிராமத்தில் திறமையான சுகாதாரப் பராமரிப்பு கிடைக்காததால், மருத்துவ சிகிச்சைகளைப் பெற அருகிலுள்ள கோரக்பூருக்கு கிட்டத்தட்ட 65 கி.மீ தூரம் பயணிக்க வேண்டியிருந்தது.
கிட்டத்தட்ட பதினேழு ஆண்டுகள் நீண்ட போராட்டத்திற்கு பிறகு அவர் புற்றுநோயலிருந்து மீண்டுவந்தார். ஆனால், ஆண்டுகள் கடந்தும் அவரது கிராமத்தில் விஷயங்கள் பெரிதாக மாறவில்லை. இதன் விளைவாய், சந்தீப் 2020ம் ஆண்டில் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான "டிஜிஸ்வஸ்த்யா அறக்கட்டளை" (DigiSwasthya Foundation)-யைத் தொடங்க வழிவகுத்தது. டெலிமெடிசின் மையங்கள், விழிப்புணர்வு முகாம்கள் மூலம் முழுமையான சுகாதார சேவைகளை வழங்குகிறது.

புற்றுநோயுடனான நீண்ட கால போராட்டமும்; அதன் எதிரொலியும்;
டிஜிஸ்வஸ்த்யாவின் தோற்றத்தை புரிந்து கொள்வதற்கு, முதலில் சந்தீப்பின் புற்றுநோயுடனான போராட்டம், அதிலிருந்து அவரது மீட்சி மற்றும் நாட்டின் பின்தங்கிய பகுதிகளுக்கு சுகாதாரப் பராமரிப்பு வழங்குவதற்கான அவரது நோக்கம் ஆகியவற்றை கடந்து வர வேண்டும்.
"12 வயது இருக்கும்போது, வலது கையின் ஒரு பகுதி வீங்கத் தொடங்கியது, கட்டி போன்று வந்து, பின் அது பெரிதாகியது. வீட்டில் சொன்னால், திட்டுவார்களோ என்று பயந்து கொண்டே சொல்லவில்லை. ஒருகட்டத்தில் வலியை பொறுக்க முடியாத போது, பெற்றோர்களின் சொன்னேன். ஏன்? முன்பே விஷயத்தை சொல்லலைனு பயங்கரமாக திட்டினார்கள்," என்று சோஷியல் ஸ்டோரியிடம் பகிர்ந்தார்.
தொடர்ந்து, வீட்டிலே சந்தீப்பிற்கு கைவைத்தியம் செய்துவந்தனர். ஆனால், வீட்டு வைத்தியம் பலனளிக்காதபோது, குடும்பத்தினர் அவரை உத்தரபிரதேசத்தின் பஸ்தியில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள், வீட்டிற்கும் மருத்துவமனைக்கும் மாறிமாறி அழைந்தும் என்ன நோய் என்பதையே கண்டறியவில்லை.
இறுதியாக, கோரக்பூரில் இரண்டு மருத்துவர்களைச் சந்தித்தனர். அவர்களில் ஒருவர் பயாப்ஸி டெஸ்ட் எடுக்கக் கூறினார். அதன்பிறகே, அவருக்கு ஹுமரஸ் எலும்பு என்று அழைக்கப்படும் வலது தோள்பட்டை தொங்கி, வலது முழங்கை வரையிலான நீண்ட எலும்பில் புற்றுநோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மறுநாள், டாடா கேன்சர் மெமோரியல் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற மும்பைக்குச் சென்றனர்.
"வலியும்,வேதனையும் அதிகமாகியது. பல டெஸ்ட்கள், ஒரு பயாப்ஸி மற்றும் ஆறு கீமோதெரபிகள் என ஒரு மாதக் காலம் கடந்தது. ஹுமரஸ் எலும்பை மாற்றுவதற்கான அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. சிகிச்சைக்கு ரூ.4.5 லட்சம் செலவாகும் என்று கூறினர். அரசு நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து நிதி ஆதரவு கிடைத்தது என் அதிர்ஷ்டம்," என்றார் சந்தீப்.

சந்தீப் குமார்.
அவரது வலது கையின் இயக்கத்தை மீண்டும் பெற அவருக்கு ஆறு மாதங்கள் பிசியோதெரபி தேவைப்பட்டது. இந்தக் காலகட்டம் முழுவதும், பல நோயாளிகளின் உதவியற்ற நிலையைக் கண்டதில், எதிர்காலத்தில் அவர்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என்பது அவரது மனதில் ஓடிக் கொண்டேயிருந்தது.
தடைகள் பல குறுக்கிடினும், சந்தீப் அவரது கல்வியை அதிக இடையூறு இல்லாமல் தொடர்ந்தார். சமூகவியலில் முதுகலைப் பட்டம், சமூகப் பணியில் முதுகலைப் பட்டம், டாடா சமூக அறிவியல் நிறுவனத்தில் சான்றிதழ் பட்டம் மற்றும் இந்திய மேம்பாட்டு மேலாண்மைப் பள்ளியிலிருந்து முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.
"நான் வி கேர் பவுண்டேஷன், அக்சஸ் லைஃப் பவுண்டேஷன், கேன்கிட்ஸ் கிட்ஸ் கேன் போன்ற பல்வேறு அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினேன். டாடா மெமோரியல் கேன்சர் சென்டர், சியோன் மருத்துவமனை, வாடியா மருத்துவமனை போன்ற பெரிய மருத்துவமனைகளுக்குச் சென்று, இந்தியா முழுவதிலுமிருந்து வந்த நோயாளிகளைப் பார்வையிட்டு, அவர்களுக்கு தங்குமிடம், உணவு, சிகிச்சை பற்றிய தகவல்களை வழங்கினேன். இதன் மூலம், நோயை எதிர்த்து போராடும் அவர்கள் தனித்து இல்லை என்பதை உணருவர்," என்றார்.
தொழில்நுட்பத்தின் உதவியில் மருத்துவம்!
குழந்தைப் பருவத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர்களை ஒன்றிணைத்து அவர்களுக்கென ஒரு குழுவைத் தொடங்கினார். அவர்கள் புற்றுநோயுடனான போராட்டம் மற்றும் குணமடைந்த அவர்களது சொந்த கதைகளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் பகிர்ந்து நம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளித்தனர்.
இதற்கிடையில், 2019ம் ஆண்டு, நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தபோது சந்தீப் அவரது கிராமத்தை நோக்கி பயணப்பட்டு கொண்டிருந்தார். ஆண்டுகள் கடந்தோடிய போதும், கிராமத்தில் சுகாதார வசதிகள் பெரிதாக மாறவில்லை. மக்கள் மருத்துவ உதவிகளை பெற சிரமப்பட்டு வந்தனர். இப்பிரச்சினையை தீர்க்க எண்ணிய அவர், அவரது வீட்டிலே மருத்துவர்களுடன், நோயாளிகள் தொலைபேசி மற்றும் வீடியோ அழைப்பு மூலம் மருத்துவ சேவைகளை பெறுவதற்கான வழிவகைச் செய்தார். பின், அச்சேவையை கிராமத்தில் உள்ள 200x200 சதுர அடி மையத்திற்கு மாற்றினார்.
மையத்தினை இருபாதியாக பிரித்தார். அறையின் ஒரு பாதியில் நோயாளிகளின் தனியுரிமையை காக்கும் பொருட்டு மறைவான சூழலை உருவாக்கி, ஒரு பெரிய திரை வழியாக மருத்துவர்களுடன் பேசும் வசதியை ஏற்படுத்தினார். மறுபாதியினை, நோயாளிகளின் வருகையை பதிவு செய்யும் செவிலியர்களுக்கான அறையாக அமைத்தார். முதல் மையத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சந்தீப் அதே மாவட்டத்தில் இன்னொன்றைத் திறந்தார். மேலும், பீகாரின் முசாபர்பூரில் ஒரு மையத்தையும், மகாராஷ்டிராவில் பால்கர் மற்றும் தேக்வாடி ஆகிய பகுதிகளிலிலும் மையத்தைத் திறந்தார்.

"டிஜிஸ்வஸ்த்யா அறக்கட்டளையின் கீழ் சாந்த் கபீர் நகரில் ஒரு டெலிமெடிசின் மையத்தைத் தொடங்கினேன். மக்கள் முதலில் வீடியோ அழைப்புகள் மூலம் மருத்துவர்களைத் தொடர்புகொள்வது குறித்து சந்தேகம் கொண்டிருந்தனர். ஊசி போடாமலோ அல்லது மருத்துவரிடம் நேரில் பேசாமலோ இது என்ன மாதிரியான ஆலோசனை என்று அவர்கள் யோசித்தார்கள். நாட்டின் சிறந்த மருத்துவமனைகளில் இருந்து சில சிறந்த மருத்துவர்களை இப்போது அணுக முடியும் என்பதை நம்புகின்றனர்," என்றார்.
டயர்-1 சிட்டியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை, டாடா கேன்சர் மெமோரியல் சென்டர், ஜேஜே மருத்துவமனை, வாடியா மருத்துவமனை, கேஇஎம் மருத்துவமனை, லீலாவதி மருத்துவமனை, சியோன் மருத்துவமனை போன்ற மருத்துவமனைகளின் மருத்துவர்களை இந்த குழுவில் சேர்த்துள்ளார். சில மருத்துவர்கள் கிளினிக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை வசூலிக்கிறார்கள், மற்றவர்கள் சார்பற்ற முறையில் சேவை வழங்குகின்றனர்.
ஆனால், நோயாளிகளிடமிருந்து எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. சிகிச்சைக்கு பிறகான மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. நோயாளிகளுக்கு மேல் சிகிச்சைக்காக பிற மருத்துவமனைகளையும், மருத்துவர்களையும் பரிந்துரைக்கின்றன. மேலும், கடுமையன சந்தர்ப்பங்களில் சிகிச்சைக்கான நிதியுதவியை ஏற்பாடு செய்கின்றது. டிஜிஸ்வஸ்த்யா உடன் கூட்டு சேர்ந்துள்ள லேப்கள் மற்றும் மருந்தகங்களில் அவரகளது நோயாளிகளுக்கு 59% தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
இதுவரை, இந்த அறக்கட்டளை 21,300க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சேவை வழங்கியுள்ளது. 115 சுகாதார நிபுணர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். இது இந்தியா முழுவதும் 594+ சுகாதார விழிப்புணர்வு மற்றும் டெலிகன்சல்டேஷன் முகாம்களை நடத்தியுள்ளது. 6,50,000 பயனாளிகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவி புரிந்துள்ளது.
இது 22 ஊழியர்களைக் கொண்ட குழுவுடன் இயங்கும் மையத்தில் 17 பேர் முழுநேரமாக பணிபுரிகிறார்கள். தொடக்கத்தில் மையத்தினை நடத்துவதற்கு நிதி திரட்டுவது மிகப்பெரிய சவாலாக இருந்தது. முதல் ஆண்டில், மையத்தைத் தொடங்க அவரது சேமிப்புகள் அனைத்தையும் பயன்படுத்தினார். அவர் இப்போது CSR நிதிகள்மற்றும் இந்த நோக்கத்தை நம்பும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து பணம் திரட்டத் தொடங்கியுள்ளார்.
"எதிர்காலத்தில் நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் 100 டெலிமெடிசின் மையங்களைத் திறப்பதே எனது குறிக்கோள்..." என்று தீர்க்கமாக கூறிமுடித்தார் சந்தீப்.
