இடமாற்றம் செய்யப்பட்ட அரசுப்பள்ளி ஆசிரியர்; அவருக்காக பள்ளி மாறிய 133 மாணவர்கள்!
தெலங்கானாவில் இடமாறுதல் பெற்ற ஆசிரியரைப் பிரிய மனமில்லாமல், அவர் பணிபுரிந்த பழைய பள்ளியில் இருந்து 133 மாணவர்கள் டிசி வாங்கிக் கொண்டு, புதிய பள்ளியில் சென்று சேர்ந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.
ஒவ்வொருவர் வாழ்விலும் மறக்க முடியாத மனிதர்களில், நிச்சயம் அவர்களது மனம் கவர்ந்த ஆசிரியர்களும் இருப்பார்கள். பள்ளியில் குழந்தைகளுக்கு இன்னொரு தாயாக இருந்து, அவர்களுக்கு நல்லது, கெட்டது சொல்லிக் கொடுத்து, அவர்களை வாழ்க்கையின் உயர்ந்த இடங்களுக்கு ஏற்றி விடும் ஆசிரியப் பணி உன்னதமானது.
அதனால்தான், மாதா, பிதா, குரு, தெய்வம் என பெற்றோர்களுக்கு அடுத்த இடத்தில் வைத்து ஆசிரியர்களைக் கொண்டாடுகிறோம். பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு ஹீரோவாக இருக்கும் ஆசிரியர்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டால், அது பெற்றோரையும், மாணவ, மாணவிகளையும் எப்படிப் பாதிக்கும் என்பதற்கு ஏற்கனவே பல உதாரணச் சம்பவங்கள் இங்கே உண்டு.
இங்கே பகவான்.. அங்கே ஸ்ரீனிவாசன்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புகூட தமிழகத்தில் பகவான் என்ற ஆசிரியர் பணியிட மாற்றம் பெற்று, வேறு பள்ளிக்கு செல்ல இருந்தபோது, அவரை பிரிய மனமில்லாமல் மாணவ, மாணவியர் கண்ணீர் விட்டுக் கதறிய காட்சிகள் இணையத்தில் வைரலாகின.
தற்போதும் அப்படி ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் தெலுங்கானாவில் நடந்துள்ளது. தங்களது மனதிற்குப் பிடித்த ஆசிரியர் பணி இடமாற்றம் கிடைத்து வேறு பள்ளிக்குச் சென்றதால், அவரைப் பின் தொடர்ந்து அவர் முன்பு வேலை பார்த்த பழைய பள்ளியில் படித்த நூறுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரும் அவர் புதிதாக சென்ற பள்ளியில் சென்று சேர்ந்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாணவ, மாணவியர் இந்தளவிற்கு பாசமும், மரியாதையும் வைத்துள்ள அந்த ஆசிரியரின் பெயர் ஸ்ரீனிவாசன். இவர், தெலங்கானா மாநிலம், மஞ்சேரி மாவட்டத்தில், பொனகல் என்ற கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் கடந்த 12 ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புவரை உள்ள மாணவர்களுக்கு பாடம் எடுத்து வந்த ஸ்ரீனிவாசன், ஒரு நல்ல ஆசிரியராக மட்டுமல்லாமல், மாணவர்கள் மீது மிகுந்த அக்கறைக் கொண்ட பாதுகாவலராகவும் இருந்துள்ளார்.
படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கு கூடுதல் கவனம் தந்து, பள்ளி நேரத்திற்குப் பிறகு சிறப்பு வகுப்புகளை எடுப்பது, குடும்பச் சூழலால் படிப்பைப் பாதியில் கைவிடும் குழந்தைகளை நேரில் சென்று விசாரித்து மீண்டும் பள்ளியில் சேர்க்கச் செய்வது என தனது வேலைநேரம் தாண்டியும், மாணவர்களின் நலனில் அக்கறைக் கொண்டவராக இருந்துள்ளார்.
மரியாதை கலந்த பாசம்
அவர் பணியில் சேர்ந்தபோது அந்த பள்ளியில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே மாணவர்கள் இருந்துள்ளனர். ஸ்ரீனிவாசன் தனது முயற்சியால் அந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொருவரிடமும் சென்று கல்வியின் அவசியத்தை எடுத்துக்கூறி, அந்தப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரித்துள்ளார். இதனாலே அவரிடம் பயிலும் மாணவர்கள் மட்டுமின்றி, அவர்களது பெற்றோரும் ஸ்ரீனிவாசம் மீது மரியாதையும், பாசமும் வைத்துள்ளனர்.
இந்த நிலையில், ஜூலை 1ம் தேதி ஆசிரியர் ஸ்ரீனிவாசன் அக்காபெல்லிகுடா என்ற இடத்தில் உள்ள பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த பள்ளி பொனகல் கிராமத்தில் இருந்து 3 மைல் தொலைவில் உள்ளது. இந்த பணியிட மாற்றம் குறித்து கேள்விப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் பெரும் அதிர்ச்சிக்கு ஆளானார்கள். இதனால், பல மாணவர்கள், ‘வேறு பள்ளிக்குப் போகவேண்டாம் சார்’ என்று கண்ணீர் விட்டுக் கதறி அழுதுள்ளனர்.
மாணவர்களின் பெற்றோரும் ஆசிரியரின் பணியிட மாறுதலை திரும்ப பெற அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால், ‘அதற்கெல்லாம் வாய்ப்பில்லை, இடமாறுதல் இடமாறுதல் உத்தரவை திரும்ப பெற வாய்ப்பு இல்லை’ என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்து விட்டனர்.
இதனால், ஸ்ரீனிவாசன் பணியிட மாற்றம் பெற்று, புதிய பள்ளிக்குச் சென்று விட்டார். இதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்த மாணவர்கள், தங்களது ஆசிரியர் சென்ற பள்ளிக்கே தாங்களும் செல்வது என முடிவெடுத்தனர்.
அதிரடி முடிவு
அதன்படி, பொனகல் பள்ளியில் படித்த, 133 மாணவர்கள் தங்கள் டிசியை வாங்கிக் கொண்டு, ஸ்ரீனிவாசன் சென்ற அக்காபெல்லிகுடா பள்ளிக்கே சென்று சேர்ந்து விட்டனர். ஆசிரியருக்காக 133 மாணவர்கள் செய்த இந்தச் செயல் அங்குள்ள மக்களை நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
இதுதொடர்பாக ஆசியர் ஸ்ரீனிவாசன் கூறுகையில்,
“இது பெற்றோர்கள் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது. ஒவ்வொரு மாணவர்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு என் திறமைக்கு ஏற்ப, அவர்களுக்குக் கற்பித்தேனே தவிர வேறேதுவும் நான் செய்யவில்லை. அதை மாணவர்கள் ஏற்றுக்கொண்டனர். என்னை அதிகம் நேசிக்கத் தொடங்கினர்,” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘அரசுப் பள்ளிகளிலும் தற்போது தரம் உயர்த்தப்பட்டுள்ளது. பெற்றோர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,’ என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அம்மாவட்ட கல்வி அதிகாரி யாதைய்யா கூறுகையில்,
“சம்பந்தப்பட்ட பள்ளியில் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 250. அதில் பாதி மாணவர்கள் அதாவது, 133 மாணவர்கள் ஆசிரியர் ஸ்ரீனிவாசன் சென்ற புதிய பள்ளிக்கே சென்று சேர்ந்திருப்பது இதுவே முதல்முறை. இதுபோன்ற சம்பவம் எங்கும் கேள்விப்பட்டதே இல்லை. இது வியப்பை ஏற்படுத்தி உள்ளது,” என ஆச்சர்யம் தெரிவித்துள்ளார்.