#100UNICORNS | ‘யுனிக்’ கதை 38 - Dailyhunt - இருவர் எழுப்பிய மீடியா கோட்டை!
இன்று இந்தியர்கள் உள்ளங்கைகளில் மொபைல் மூலம் உலக நடப்புகளை அறிவதற்குப் பின்னால் வீரேந்திர குப்தா, டெய்லிஹன்ட் பங்கு பெரியது.
2020-ல் கொரோனா பெருந்தொற்றின் துவக்கத்தில், இந்திய ஸ்டார்ட் அப் துறையானது சாதனை எண்ணிக்கையில் யூனிகார்ன் நிறுவனங்களை உருவாக்கியது. மொத்தம் 11 யூனிகார்ன் நிறுவனங்கள் அந்த ஆண்டில் உருவான நிலையில், அவற்றில் இரண்டு நிறுவனங்கள் மீடியா சம்பந்தப்பட்டவை. அதில், ஒன்றுதான் நம்மில் பலரின் அன்றாட வாழ்வில் இடம்பெற்றுள்ள ‘டெய்லிஹன்ட்’ (Dailyhunt).
செய்திகளை தொகுத்து வழங்கும் நிறுவனம் டெய்லிஹன்ட். இந்த டெய்லிஹன்ட் யூனிகார்ன் அந்தஸ்து பெற்ற கதைதான் இன்றைய யூனிகார்ன் பார்வை. வீரேந்திர குப்தா, வெர்சே இன்னோவேஷன் இந்த இரு பெயர்கள் தான் டெய்லிஹன்ட் கதைக்கு மூலம்.
டெய்லிஹன்ட்டின் தாய் நிறுவனம் தான் 'வெர்சே இன்னோவேஷன்'. இந்த இரண்டு நிறுவனங்களும் வீரேந்திர குப்தா எண்ணத்தில் உதித்தவை.
வீரேந்திர குப்தா யார்?
வீரேந்திர குப்தா என்கிற விரு குப்தா, ஜோத்பூரில் உள்ள பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷனில் இன்ஜினியரிங் பட்டமும், மும்பை ஐஐடியில் மேலாண்மையில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். குப்தா தனது தொழில் வாழ்க்கையை OnMobile நிறுவனம் மூலம் தொடங்கினார். அவரின் முதல் பணி மார்க்கெட்டிங்.
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியராக BPL மொபைல், பார்தி செல்லுலார், ட்ரைலாஜி போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒரு தசாப்த காலம் பல்வேறு நிலைகளில் பணியாற்றினார். இந்த ஒரு தசாப்த கார்ப்பரேட் வாழ்க்கை குப்தாவுக்கு கிட்டத்தட்ட போரடிக்க தொடங்கியது. அப்படி சொல்வதை விட, மொபைல் துறை எங்கு செல்கிறது என்பதைப் பார்ப்பதுதான் அப்போது அவரது ஆர்வமாக இருந்தது. இந்த ஆர்வம் தொலைத்தொடர்பு துறையில் புதிதாக எதாவது ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியது. விளைவு 2007-ல் வெர்சே இன்னோவேஷன் நிறுவனத்தை முதல்முறையாக தனது 36-வது வயதில் தொடங்கினார்.
இந்தியா, ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் போன்ற நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பு, சொத்து, திருமணம், செய்தி மற்றும் கல்வி பற்றிய தகவலை எஸ்எம்எஸ் மூலம் வழங்கும் நோக்குடன் ஒரு மதிப்பு கூட்டப்பட்ட சேவை (VAS) நிறுவனமாக வெர்சே இன்னோவேஷன் தொடங்கப்பட்டது.
முக்கிய ‘மூவ்’...
தான் நினைத்த வெற்றியை வெர்சே இன்னோவேஷன் கொடுத்தாலும், குப்தாவின் தாகம் தீரவில்லை. ஏனென்றால், 2010 வாக்கில் இந்தியாவில் அதிகரிக்க தொடங்கிய ஸ்மார்ட்போன்கள், இணைய பயன்பாடு ஆகியவை அவரின் தூக்கத்தை கெடுத்தது. ஸ்மார்ட்போன்கள், இணையத்தின் மூலமாக ஏற்படப்போகும் வணிகத்தை கணித்த குப்தா, அதற்காக எடுத்துவைத்த மூவ் தான் Eterno Infotech நிறுவனத்தை வாங்கியது.
நோக்கியா நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களான உமேஷ் குல்கர்னி மற்றும் சந்திரசேகர் சோஹோனி ஆகியோர் தொடங்கிய Eterno Infotech நிறுவனம் Newshunt என்கிற பெயரில் ஆங்கிலத்திலும், வடமொழியிலும் செய்திகளை வழங்கி கொண்டிருந்தது.
இணைய வணிகத்தில் ஒரு மாற்றத்தைத் தொடங்க நினைத்த விரு குப்தாவுக்கு Newshunt சரியான தளமாக அமைந்தது. Nokia's Symbian OS-ல் மட்டுமே இயங்கிகொண்டிருந்த Newshunt 2011-ல் குப்தா கைக்கு வந்தபிறகு ஆண்ட்ராய்டு, ஐஒஎஸ் தளங்களிலும் செயல்படத் தொடங்கியது.
மாத்தி யோசி...
இந்தியாவில் ஆண்ட்ராய்டு போன்களின் எழுச்சி Newshunt-ன் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருந்தது. இதனால் Newshunt விரைவாகவே Dailyhunt என பெயர் மாற்றம் பெற்றது. பெயர் மாற்றத்தோடு நில்லாமல் சேவையிலும் மாற்றத்தை கண்டது. ஆங்கிலத்திலும், வடமொழி சேவை என்பதில் இருந்து மாத்தி யோசித்தார் குப்தா.
2010 காலகட்டத்தில் இணையம் என்பது ஆங்கிலம் பேசும் பயனர்களை மட்டுமே குறிவைத்து நடந்து கொண்டிருந்ததை இந்தியாவில் மற்ற மொழி பேசும் மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என நினைத்தார். அந்த மாற்று சிந்தனை டெய்லிஹன்ட் 14 மொழிகளில் செய்தி சேவைகளை வழங்கியது.
இந்தியா ஒரு பிரதானமாக ஆங்கிலம் பேசும் சந்தை கிடையாது. இந்திய குடிமக்களில் 10 சதவீதம் பேர் மட்டுமே ஆங்கிலம் படிக்கிறார்கள். மேலும் இந்திய மக்கள் இந்தி, பெங்காலி, தெலுங்கு, தமிழ் மற்றும் பிற உள்ளூர் மொழிகளில் அதிக கல்வியறிவு பெற்றுள்ளனர்.
”இந்திய மக்களுடன் அவர்களுடைய மொழியில் பேசாவிட்டால் அவர்கள் இணையத்தைப் பயன்படுத்த மாட்டார்கள். ஆங்கிலம் பேசும் மேலடுக்கு கூட்டத்தை விட இவை மிகப் பெரிய சந்தையை உருவாக்குகின்றன. எனவே, எந்த மொழியையும் எந்த தொலைபேசியிலும் எங்களால் வழங்க முடியும். அதுதான் நாங்கள் வழங்க நினைத்தது, வழங்கியது” - இது ஒருமுறை வீரேந்திர குப்தா சொன்னது.
குப்தாவின் இந்த வாதம் மெய்யானது. இந்தியாவின் சந்தை எது என்பதை அறிந்து அதில் சேவைகளை வழங்க தொடங்கிய டெய்லிஹன்டை இந்திய மக்கள் நேசிக்க தொடங்கினர். விளைவு, பெரிய வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைத்தது டெய்லிஹன்ட்.
உமாங் வருகையும் அசுர வளர்ச்சியும்
அடுத்தடுத்து Sequoia Capital, Matrix Partners, Omidyar Network, Falcon Edge Capital முதலீடுகளை குவித்தன. ஆப்லாவேவ், கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் 100 மில்லியன் டாலர் நிதியுடன் ஆரம்பித்த பத்தாண்டுகளுக்குப் பிறகு, டெய்லிஹன்ட் யூனிகார்ன் அந்தஸ்து பெற்றது.
தற்போது 300+ மில்லியன் பயனாளிகளைக் கொண்டுள்ள டெய்லிஹன்டுக்கு நிகர போட்டியாளர் ஃபேஸ்புக். ஏனென்றால் ஃபேஸ்புக்கும் இந்திய மொழிகளில் கன்டென்ட் சேவைகளை வழங்கி வருகிறது. இதனையும் திறம்பட சமாளித்த வீரேந்திர குப்தா, ஒரு கட்டத்தில் ஃபேஸ்புக் இந்தியாவின் முன்னாள் நிர்வாகி உமாங் பேடியை தனது பக்கம் இழுத்து டெய்லிஹன்டின் இணை நிறுவனராக்கினார்.
யார் இந்த உமாங் பேடி?
தலைமைப் பண்பில் கிட்டத்தட்ட இரண்டு தசாப்த கால அனுபவம் கொண்டுள்ள உமாங் பேடிக்கு சேல்ஸ், கன்சல்டிங், மார்க்கெட்டிங் தவிர புரொடெக் டெவெலப்மென்டும் அத்துப்படி. இவர் வெர்சே இன்னோவேஷனில் இணைந்த பிறகு டெய்லிஹன்ட் மற்றும் ஜோஷ் நிறுவனங்களுக்கு அனைத்து யுக்திகளையும் வகுத்து கொடுத்தார்.
பிசினஸில் தொடங்கி கன்டென்ட் வரை தனது தலைமையில் மேற்கொண்டார். அதில் முக்கியமானது கருத்து கணிப்பு. கடந்த 2019 பொதுத் தேர்தலின்போதும் சரி, கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலின்போதும் சரி டெய்லிஹன்ட் மூலமாக கருத்து கணிப்பு நடத்தினார்.
கருத்து கணிப்பின் முடிவுகள் மிகச் சரியாக இருந்தன.
இதேபோல், டிக் டாக் தடைக்கு பிறகு ஜோஷ் தளத்தின் வளர்ச்சியிலும் உமாங் பேடி கவனம் செலுத்தினார். 2018-க்கு முன்னதாக ஃபேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றிய உமங் பேடி, ஃபேஸ்புக்கின் போட்டியாக அமைந்த டெய்லிஹன்டில் இணைந்த பின்னணி விரு குப்தாவின் நட்பு. அதனை தாண்டி டெய்லிஹன்டின் அபரிமிதமான வளர்ச்சியை கணித்தே இணைந்தார். அந்தக் கணிப்பு உமங் பேடி இணைந்த இரண்டே ஆண்டுகளில் உண்மையானது.
டெய்லிஹன்ட் 2020-ல் யூனிகார்ன் மதிப்பை எட்டியது. உமங் பேடியின் பணியையும், அவரின் மதிப்பையும் உணர்ந்த விரு குப்தா, அவரை விரைவாகவே இணை நிறுவனராக்கி அழகு பார்த்தார்.
உண்மையைச் சொல்லப்போனால் உமாங் பேடி இணைந்த பிறகே டெய்லிஹன்ட் யூனிகார்ன் அந்தஸ்து பெற்றது. சில சறுக்கல்கள் இருந்தாலும் ஜோஷ் எனும் குறும் வீடியோ செயலி போன்ற சில நிறுவனங்களை கையகப்படுத்தி அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
இவை அனைத்தும் சாத்தியமானது வீரேந்திர குப்தாவின் முன்னெடுப்புகள், மற்றும் உமங் பேடியின் மகத்தான உறுதுணையாலும்தான். கார்ப்பரேட் உலக போதையில் இருந்து விலகி, ஸ்டார்ட்அப் தொடங்க வேண்டும் என வேட்கையோடு இணையத்தை வணிகமாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையோடு களமாடிய வீரேந்திர குப்தா அதில் இமாலய வெற்றியை பதிவு செய்துள்ளார்.
இன்றைக்கு இந்தியர்கள் தங்கள் உள்ளங்கைகளில் இருக்கும் மொபைல் மூலம் உலக நடப்புகளை அறிந்துகொள்கிறார்கள் என்றால், அதில் வீரேந்திர குப்தாவின் பங்கு அளப்பரியது.
கார்ப்பரேட் வேலையை உதறிவிட்டு வீரேந்திர குப்தா வெர்சே இன்னோவேஷனை தொடங்கியபோது அவருக்கு வயது 36. அவர் வேலையை உதறும்போதும் சரி, ஸ்டார்ட்அப் தொடங்க வேண்டும் என்று கூறியபோதும் சரி பலரும் அவரால் முடியாது என்றே கூறினர்.
மேலும், 100-க்கு 99 ஸ்டார்ட்அப்கள் தோல்வியடைந்த புள்ளி விவரங்களையும் அடுக்கினர்.
ஆனால். குப்தாவோ புள்ளிவிவரங்களை புறந்தள்ளிவிட்டு தன் மீதும், தன் ஐடியா மீதும் நம்பிக்கை வைத்து இறங்கினார். அதன் விளைவு டெய்லிஹன்ட், தற்போது மொத்த இந்தியாவுக்குமான நம்பர் 1 செய்தி, பொழுதுபோக்கு நிறுவனமாக அசைக்க முடியாத இடத்தில் உள்ளது.
யுனிக் கதைகள் தொடரும்...
#100UNICORNS | ‘யுனிக்’ கதை 37 - Razorpay - பேமென்ட் கேட்வேயில் இரு பாயும் புலிகள்!
Edited by Induja Raghunathan