Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

#100UNICORNS | ‘யுனிக்’ கதை 36 - CARS24: விக்ரம் சோப்ராவின் விடாமுயற்சியில் தோனி முதலீட்டில் உருவான யுனிகார்ன்!

2021-ல் கார்ஸ்24 யூனிகார்ன் நிறுவனமாக உயர்வதற்கு முந்தைய ஆண்டு தோனி இந்நிறுவனத்தில் பெரிய முதலீடுகளை செய்தார். தோனி மட்டுமல்ல இன்னும் பலர் கார்ஸ்24-ல் முதலீடுகளை குவிக்க காரணம், விக்ரம் சோப்ரா.

#100UNICORNS | ‘யுனிக்’ கதை 36 - CARS24: விக்ரம் சோப்ராவின் விடாமுயற்சியில் தோனி முதலீட்டில் உருவான யுனிகார்ன்!

Thursday June 27, 2024 , 5 min Read

கிரிக்கெட் உலகில் மகேந்திர சிங் தோனியின் புகழ் அனைவரும் அறிந்ததே. ஆனால், பிசினஸ் உலகில் தோனி..? ஆம், பிசினஸ் உலகிலும் தோனி வெற்றிகரமான தொழிலதிபரே. தோனி ஏற்கெனவே பல நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். அவற்றில் பல ஸ்டார்ட்-அப்களும் உள்ளன. அப்படி தோனி முதலீடு செய்த ஸ்டார்ட்-அப் ஒன்று யூனிகார்ன் அந்தஸ்த்தை எட்டிப் பிடித்தது என்பதை பற்றிய கதைதான் இந்த யூனிகார்ன் எபிசோடு.

கல்லூரியில் தோல்வி, ஆசையாக தொடங்கிய பிசினஸ் தோல்வி என தொடர் தோல்விகளை எதிர்கொண்டால் நாம் எந்த நிலைமையில் இருப்போம்? இக்கதையின் நாயகன் விக்ரம் சோப்ரா இந்த தோல்விகளை தனக்கான படிப்பினையாக எடுத்துக்கொண்டு எடுத்த பாய்ச்சல்தான் ‘கார்ஸ்24’ (Cars24) எனும் யூனிகார்ன் நிறுவனம்.

vikram chopra cars24

Cars24 உதயம்

‘கார்ஸ்24’ என்பது பழைய கார்களை ஆன்லைன் மூலம் விற்கப்படும் தளம். செகண்ட் ஹேண்ட் கார்களை விற்பனை செய்வதில் முதலிடத்தில் உள்ளது கார்ஸ்24. 2015-ம் ஆண்டு விக்ரம் சோப்ரா தனது நண்பர்களான மெஹுல் அகர்வால், கஜேந்திர ஜாங்கிட் மற்றும் ருச்சித் அகர்வால் ஆகியோருடன் இணைந்து ‘கார்ஸ்24’ நிறுவனத்தை தொடங்கினார். தொடங்கிய ஐந்தே ஆண்டுகளில் நவம்பர் 24, 2020 அன்று 200 மில்லியன் டாலர் நிதி திரட்டி யூனிகார்ன் கிளப்பில் நுழைந்தது நிறுவனம்.

ஆன்லைனில் செகண்ட் ஹேண்ட் கார்களை விற்பதை தவிர, நேரடி ஷோ ரூம்கள் மூலமாகவும் கார்ஸ்24 வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றி வருகிறது. தற்போதைய நிலையில், இந்தியாவில் 35 நகரங்களில் 155-க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன.

இங்கு ஒரு மணி நேரத்தில் வாடிக்கையாளர்கள் தங்களின் காரை விற்கவும் முடியும். அதேபோல், ஒரு மணிநேரத்தில் காரை வாங்கவும் முடியும். அந்த அளவுக்கு தொழில்நுட்ப உதவியுடன் கார்ஸ்24 செயல்பட்டு வருகிறது. கார்களுக்கான விலையை தற்போது ஏஐ தொழில்நுட்பம் கொண்டு மதிப்பிடுக்கிறது இந்நிறுவனம்.

2021-ல் கார்ஸ்24 யூனிகார்ன் நிறுவனமாக உயர்வதற்கு முந்தைய ஆண்டு தோனி இந்நிறுவனத்தில் பெரிய முதலீடுகளை செய்தார். தோனி மட்டுமல்ல இன்னும் பலர் கார்ஸ்24-ல் முதலீடுகளை குவிக்க காரணம், விக்ரம் சோப்ரா.

cars24 founders

கஜேந்திர ஜாங்கிட், விக்ரம் சோப்ரா, ருச்சித் அகர்வால் மற்றும் மெஹுல் அகர்வால்

தோல்விக்கு பின் வெற்றி...

விக்ரம் சோப்ரா... கார்ஸ்24 வரலாற்றை இவரில் இருந்தே தொடங்குவது சிறந்ததாக அமையும். குர்கான் பகுதியைச் சேர்ந்த விக்ரம் சோப்ரா மிடில் கிளாஸை சேர்ந்தவர்தான். மிடில் கிளாஸ் மக்கள் பெரும்பாலும் ஒரு வேலையை பெறுவதில்தான் கவனம் செலுத்துவார்கள். விதிவிலக்காக விக்ரம் சோப்ராவுக்கு சிறுவயது முதலே தொழில்முனைவுக்கான கனவுகள் இருந்தன. அவரின் தந்தை எலெக்ட்ரிக்கல் இன்ஜினியர்.

பாம்பே இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பிடெக் மற்றும் எம்டெக் இன்ஜினியரிங் ஆகிய இரண்டிலும் பட்டம் பெற்ற விக்ரமுக்கு இக்கல்லூரி தொழில்முனைவுக்கான ஆர்வத்தை மேலும் அதிகப்படுத்தியது. 28 வயதில் அமெரிக்காவின் வார்டன் பிசினஸ் பள்ளியில் எம்பிஏ படிக்கும் வாய்ப்பு கிட்டியது. இதனை ஏற்றுக்கொண்டு அமெரிக்கா பயணப்பட்டார் விக்ரம். ஆனால், அவரால் படிப்பை தொடர முடியவில்லை. படிக்க முடியவில்லை என்பதால் அல்ல. விக்ரம் படிப்பில் சுட்டி. எனினும், அவரை படிப்பை பாதியில் விட தூண்டியது அவரின் ஸ்டார்ட்-அப் ஐடியா.

ஆன்லைன் வணிகமே அவரது ஸ்டார்ட்-அப் ஐடியா. இதனால் மதிப்புமிக்க வார்டன் பிசினஸ் பள்ளியில் எம்பிஏ படிக்கும் வாய்ப்பை துறந்து இந்தியா திரும்பினார். 2011-ம் ஆண்டு அது. ஆன்லைன் வணிகம் பெரிதாக முளைக்காத அந்த நேரத்தில் தனது ஐடியாவை உற்ற நண்பனான மெஹுல் அகர்வாலிடம் பகிர்ந்து அவரையும் துணை சேர்க்கிறார்.

மெஹுல் அகர்வால் கொல்கத்தாவின் இந்திய மேலாண்மை நிறுவனத்தில் எம்பிஏ பட்டம் பெற்றவர். பாஸ்டன் கன்சல்டிங் நிறுவனத்தில் பணிபுரிந்தவர். இந்த சமயத்தில்தான் விக்ரமுடன் சேர்ந்து பிசினஸ் உலகில் காலடி எடுத்து வைத்தார் மெஹுல். இவர்கள் இருவரும் தொடங்கியது FabFurnish எனும் ஆன்லைன் விற்பனை தளம்.

கையில் இருந்த சேமிப்பு அத்தனையும் முதலீடாக்கி தங்களின் கனவு நிறுவனத்தை தொடங்கினர். பர்னிச்சர், வீட்டு அலங்கார பொருட்கள், பெட் சீட் என பலவற்றை FabFurnish ஆன்லைன் தளம் மூலம் விற்க தொடங்கினர். முதலில் இதற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. 3 வருடங்கள் இப்படியாக சென்றது. முதலீடுகள் திரட்டி, நல்ல மார்க்கெட்டிங் செய்து ஊழியர்களையும் அதிகப்படுத்தினர்.

ஒருகட்டத்தில் 500 ஊழியர்கள் 10-12 நகரங்களில் கிளைகள் என FabFurnish-ஐ பெரிதாக்கினார். ஆனால், 3 வருடங்கள் கடந்தாலும் தாங்கள் நினைத்தபோல் பெரிய பிசினஸாக FabFurnish-ஐ மாற்ற முடியவில்லை என்பதை உணரத் தொடங்கினர் விக்ரமும், மெஹுலும். விற்பனைகள் நடந்தாலும், அவை வருமானமாக மாற்ற முடியவில்லை. இழப்புகள் அதிகமானது. இதற்கு மேலும் தாங்க முடியாது என்பதால் FabFurnish-ஐ மாற்றினர்.

கல்லூரியில் இருந்தே பாதியில் வெளியேறியபோதும் சரி, பிசினஸை பாதியில் விற்ற போதும் சரி. விக்ரம் எதிர்கொண்ட வசைப்பேச்சுகள் ஏராளம். இந்த பேச்சுகளை தாண்டி அவருக்கு வலிகளே அதிகம் இருந்தன. தனது குழந்தை போல் பார்த்து வளர்த்த நிறுவனத்தை கைமாற்றிய வலிகளே அது. எனினும், தவறுகள் ஏற்படுவது இயல்புதானே. இதனை புரிந்துகொண்ட பாசிட்டிவாக தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டார். FabFurnish-ல் செய்த தவறுகளை ஆராயத் தொடங்கினர். தங்கள் ஆய்வுகளில் அவர்கள் பிரச்சினை என்னவென்பதை கண்டுபிடித்தனர்.

அதுதான் விநியோகம் (Supply). மக்கள் பொருட்களை வாங்குவதற்கு எப்போதும் ஆர்வமாகவே உள்ளனர். ஆனால், சரியான விநியோகம் என்பதுதான் இல்லை. அதனை சரி செய்தால் மார்க்கெட்டில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ளாலாம் என்பதை இருவருமே உணர்ந்தனர்.

மாற்றி யோசி...

FabFurnish-ல் கற்றுக்கொண்ட படிப்பினை மூலம் மாற்றி யோசிக்க தொடங்கினர் விக்ரமும், மெஹுலும். ஒருநாள் இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவரை சந்தித்துள்ளனர். அந்த நண்பர் தனது தந்தையுடன் சேர்ந்து கார் டீலர்ஷிப் பிசினெஸ் செய்து வருபவர். அந்த நண்பருடன் உரையாடிக் கொண்டிருந்த சமயத்தில்தான் பழைய கார்கள் விற்பனையிலும் விநியோக பிரச்சினை இருப்பதை அறிந்துள்ளனர்.

FabFurnish-ல் இருவரும் எதிர்கொண்ட பிரச்சினைதான் இங்கும். ஐடியா கிடைத்ததை புரிந்துகொண்ட இருவரும் மேலும் சில டீலர்ஷிப் நிறுவனங்களுக்கு சென்றுள்ளனர். அங்கும் விநியோக பிரச்சினை இருப்பதை உறுதி செய்த இருவரும் அப்போதே தங்களுக்கு ஏற்ற பிசினஸ் இதுதான் என்பதையும் உறுதிபடுத்தினர். மேலும், விநியோக பிரச்சினையை சரிசெய்தால் இந்த தொழிலில் கொடிகட்டி பறக்கலாம் என நினைத்த இருவரும் மற்ற நண்பர்களான கஜேந்திர ஜாங்கிட் மற்றும் ருச்சித் அகர்வால் உடன் 2015-ல் கார்ஸ்24-ஐ தொடங்கினர்.

மேலே சொன்னதுபோல் கார்ஸ்24 தொடங்கப்பட்டதில் இருந்து அவர்களின் கவனம் முழுவதும் விநியோக பிரச்சினையை சரிசெய்வதிலும் தான் இருந்தது. தொடங்கப்பட்ட முதல் ஐந்து ஆண்டுகளிலும் அவர்களின் கவனம் அதில்தான். கார்களை விற்பனை செய்வதை காட்டிலும் அதிகமாக கார்களை வாங்கினர். மக்கள் விரும்பும் வகையில் அனைத்து வகையான கார்கள் தங்களிடம் இருக்க வேண்டும், அப்போதுதான் விநியோக பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்பது அவர்களின் திடமான எண்ணம். அந்த எண்ணம் பலிக்கவும் செய்தது.

cars24

கார்களை வாங்குவதற்கும், விற்பதற்கும் மக்கள் தங்களை அணுக, சில மார்க்கெட்டின் யுக்திகளை கடைபிடித்தனர். அப்படியாக ஒரு பெட்ரோல் பங்கில் சென்று பெட்ரோல் போட வருபவர்களிடம் தங்களின் நிறுவனத்தை எடுத்துக் கூறி அவர்களை வாடிக்கையாளர்களாக மாற்றினர். இதில் சுவாரஸ்யமாக விக்ரம் குழுவின் முயற்சிகளை பார்த்த அந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் அங்கேயே விக்ரம் குழுவுக்கு ஓர் அறையை ஒதுக்கிக் கொடுத்துள்ளார். கார்ஸ்24ன் முதல் அலுவலகம் அதுதான்.

இப்படியாக படிப்படியாக வளர்ந்த சமயத்தில் தான் 2016-ல் பணமதிப்பு நீக்கம் வந்தது. மீண்டும் பூஜ்யத்தில் தொடங்குவது போன்று தொடங்கினர். ஏனென்றால், கார் டீலர்ஷிப் முழுவதும் நேரடியாக நடப்பவை. குறிப்பாக பணம் பெறுதலும், கொடுத்தலும். பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு ஆன்லைன் பரிவர்த்தனைகளை அதிகப்படுத்தி மீண்டும் பிசினஸை சூடுபிடிக்க வைத்தனர். செகண்ட் ஹேண்ட் கார் விற்பனையில் முதல் நிறுவனமாக கார்ஸ்24 பிரபலமானது.

கிட்டத்தட்ட ஐந்து வருடம் விக்ரம் உட்பட நால்வரும் 6,000 சம்பளத்தை பெற்றுக்கொண்டு நம்பிக்கையுடன் கார்ஸ்24-ன் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டனர். அதற்கேற்ப ஒருகட்டத்தில் 6,000 தொழிலாளர்கள் இதில் பணிபுரிந்தனர். ஆரம்பித்த முதல் 18 மாதங்களில் சந்தித்த நஷ்டம் கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. முதலீடுகளும் வந்தன. லாபமும் வந்தது. கொரோனாவும் வந்தது.

மீண்டும் மிகப் பெரிய சோதனை இது. உலகமே முடங்கிய இந்த சமயத்தில் இன்னும் சற்று வித்தியாசமான சேவையாக வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே சென்று கார்களை வாங்கியது கார்ஸ்24. கொரோனா சமயத்தில்தான் வாடிக்கையாளர்கள் புதிய கார்களை விட பயன்படுத்திய கார்களை வாங்குவதில் ஆர்வம் செலுத்தினர். இதுபோன்ற காரணங்களால் நான்கே மாதங்களில் கார்ஸ்24 உச்சம் பெற தொடங்கியது.

விக்ரமும், மெஹுலும் நினைத்ததுபோல் மிகப் பெரிய பிசினஸாக உருவெடுத்தது கார்ஸ்24 நிறுவனம். 2021-ல் கார்ஸ்24 யூனிகார்ன் நிறுவனமாக உயர்ந்தது. இந்நிறுவனத்தின் தற்போதையை மதிப்பு ரூ.27,000 கோடி.
Cars24

கார்ஸ்24 தற்போது 90%-க்கும் அதிகமான சந்தைப் பங்கைக் கொண்டு ஆன்லைன் யூஸ்டு கார் சந்தையின் தலைவராக அறியப்படுகிறது. இந்நிறுவனம் இதுவரை நான்கு லட்சத்துக்கும் அதிகமான பரிவர்த்தனைகளை செய்துள்ளது. இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட கார் சந்தை 2020-ல் 27 பில்லியன் டாலர் மதிப்பில் இருந்தது. அதுவே, 2026-ஆம் ஆண்டில் சுமார் 50 பில்லியன் டாலரை எட்டும் என யூகிக்கப்படுகிறது. இதனால் கார்ஸ்24 இன்னும் மிகப்பெரிய வளர்ச்சியை பெறும்.

வளர்ச்சிக்கு மத்தியில் சமீபத்தில் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்து சர்ச்சையை எதிர்கொண்டது கார்ஸ்24. சர்ச்சைகளைத் தாண்டி தோனி போன்ற முதலீட்டாளர்களால் ஆன்லைன் யூஸ்டு கார் சந்தையில் இன்னும் மிகப் பெரிய பாய்ச்சலை எடுக்க தயாராகி வருகிறார் தோனியின் உற்ற நண்பரான விக்ரம் சோப்ரா.

ஏனென்றால், அவரின் கனவு, இந்தியர்கள் அனைவரும் தங்களுக்கென கார் வைத்திருக்க வேண்டும் என்பதே. தான் கண்ட தோல்விகளையும், அதில் கற்றுக்கொண்ட படிப்பினைகளையும் மற்றவர்களுக்கு பாடமாக சொல்லிக்கொண்டே தனது கனவை நிறைவேற்றுவதற்கான ஓட்டத்தில் உள்ளார் விக்ரம் சோப்ரா.

யுனிக் கதைகள் தொடரும்...