Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

#100UNICORNS | ‘யுனிக்’ கதை 30 - Bigbasket: ஆன்லைன் வர்த்தகத்தின் முன்னோடி ஹரி மேனனின் ஐவர் அணி!

இணையச் சந்தையில் ஃப்ளிப்கார்ட், ஸ்விக்கி, அமேசான் போன்ற நிறுவனங்களுக்கே முன்னோடியாகத் திகழ்ந்த ‘பிக்பாஸ்கெட்’டின் அசாத்திய வெற்றிப் பயணம் இது.

#100UNICORNS | ‘யுனிக்’ கதை 30 - Bigbasket: ஆன்லைன் வர்த்தகத்தின் முன்னோடி ஹரி மேனனின் ஐவர் அணி!

Saturday November 25, 2023 , 6 min Read

இ-காமர்ஸ் எனப்படும் இணையச் சந்தையே தற்போது தொழில் தொடங்க ஆசைப்படும் தொழில்முனைவோருக்கு விருப்பமான தளம். அப்படியானவர்களுக்கு இணையச் சந்தையில் ஃப்ளிப்கார்ட், ஸ்விக்கி, அமேசான் போன்ற எண்ணற்ற நிறுவனங்கள் முன்னோடியாக இருக்கலாம். ஆனால், இந்த நிறுவனங்களே முன்னோடியாகவும், இந்தியாவில் இணையச் சந்தைக்கு எதிர்காலம் உண்டு என்பதை கணித்தும் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் பின்னணியில் இருந்தவர்களின் கதையே இந்த யூனிகார்ன் அத்தியாயம்.

மெட்ரோவாசிகளுக்கு பழக்கப்பட்ட ஒரு பெயரே ‘பிக்பாஸ்கெட்’ (Bigbasket). மெட்ரோவாசிகள் மட்டுமல்ல, பாலிவுட் பாட்ஷா ஷாரூக்கானின் விளம்பர அட்ராசிட்டிகளால் இந்தியா முழுவதும் பிக்பாஸ்கெட் வெகு பிரபலம். ஆன்லைனில் காய்கறி மற்றும் மளிகை பொருள் விற்கும் தளமே ‘பிக்பாஸ்கெட்’. சுருக்கமாகச் சொன்னால் ஆன்லைன் மளிகைக் கடை.

2011-ல் தொடங்கப்பட்டபோது முதல் சுற்று நிதியிலேயே 10 மில்லியன் டாலர் திரட்டிய ஒரே ஸ்டார்ட்-அப் ‘பிக்பாஸ்கெட்’ தான். ஒரு நிறுவனம் தொடங்கப்படும்போதே இவ்வளவு நிதி திரட்டுகிறது என்றால், அதன் ஐடியா மற்றும் செயல்பாடுகள் மீது எவ்வளவு நம்பிக்கையை முதலீட்டாளர்கள் வைத்திருப்பார்கள் என்று பாருங்கள்.

முதலீட்டாளர்களின் அத்தனை நம்பிக்கைக்கும் அடித்தளமிட்டவர்கள் ஹரி மேனன், விபுல் பரேக், வி.எஸ்.சுதாகர், அபினய் சவுதாரி மற்றும் வி.எஸ்.ரமேஷ் என்னும் ஐவர் அணியே. ஒவ்வொரு அணிக்கும் ஓர் கேப்டன் இருக்க வேண்டும் அல்லவா? ‘பிக்பாஸ்கெட்’டின் இந்த ஐவர் அணிக்கு கேப்டன் ஹரி மேனன். ‘பிக்பாஸ்கெட்’ தொடங்கப்பட்டதில் முக்கியப் பங்கு வகித்தவர் இவரே.

bigbasket

ஹரி மேனன் பின்னணி

1963-ம் ஆண்டு மும்பையின் பாந்த்ராவில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த ஹரி மேனன், ஒவ்வொரு சாதாரண மனிதரைப் போலவே, தொழில்முனைவோர் உலகில் தனக்கென ஓர் இடத்தைப் பிடிக்க பெரிய கனவுகளைக் கொண்டிருந்தார். ஆனால், தனது யோசனைகளை பரிசோதிக்க போதுமான பணம் அவரிடம் இல்லை. அப்படியான நிலையில் இருந்தவருக்கு கல்வியே கைகொடுத்தது.

பிரபல பிட்ஸ் பிலானியின் முன்னாள் மாணவரான ஹரி மேனன், 1983-ல் கேரள பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியலில் பி.டெக் பட்டம், பென்சில்வேனியாவின் கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம், ஓக்லஹோமா மாநில பல்கலைக்கழகத்தில் தொழில்துறைப் பொறியியலில் எம்.எஸ் பட்டம் பெற்றவர்.

அதேபோல், கான்சிலியம் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளர் பணி, அக்சென்ச்சரில் மூன்று ஆண்டுகள் மேலாளர் பணி, இது தவிர ஆஸ்பெக்ட் i2 டெக்னாலஜி, விப்ரோ, செரஸ் கார்ப்பரேஷன், தும்ரி மற்றும் டைம்லி உள்ளிட்ட பல நிறுவனங்களில் பல துறைகளில் பணியாற்றிய அனுபவமும் கொண்டவர் ஹரி மேனன். படிப்படியாக, பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிந்ததன் மூலம் வணிக உலகத்தைப் பற்றிய நிறைய அனுபவமும் அறிவும் ஹரியை எளிதாக வந்து சேர்ந்தது. அதுவே, அவரின் தொழில்முனைவோர் ஆசைக்கும் வித்திட்டது.

'ஃபேப்மார்ட்' எனும் முதல் ஷாப்பிங் தளம்

நடிகர் கமல்ஹாசன் புதிய தொழில்நுட்பங்களை முயற்சிக்க தயங்காதவர். பிற்காலத்தில் வரவேற்பு இருக்கும் ஒன்றை முன்கூட்டியே முயற்சித்து பார்க்கும் பழக்கம் அவருக்கு உண்டு. அதேதான் ஹரி மேனனும் செய்வார். ஃப்ளிப்கார்ட் வரிசையில் இன்று எண்ணற்ற ஆன்லைன் ஸ்டோர்கள் இந்தியாவில் இருக்கலாம்.

ஆனால், ஹரி மேனன் ஃப்ளிப்கார்ட்டின் பன்சால்களுக்கு எல்லாம் முன்னோடி. ஃப்ளிப்கார்ட் தொடங்கப்படுவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது, 1999-ல் இணையச் சந்தையில் நுழைந்து ஃபேப்மார்ட் (fabmart) என்கிற பெயரில் இணையத்தில் மூலம் ஷாப்பிங் செய்யும் தளத்தை துவங்கினார்கள் ஹரி மேனன் அடங்கிய அந்த ஐவர் கூட்டணி.

bigbasket

இன்று ஃப்ளிப்கார்ட், அமேசான் செய்துகொண்டிருப்பதை 1999-ல் செய்ய முனைப்பு காட்டியது ஃபேப்மார்ட். ஆனால், இந்தியர்களுக்கு இணையம் விருந்தாளியாக கூட எட்டிப் பார்க்காத 1999-ல் தொடங்கப்பட்டது என்பதால் வந்த சுவடே தெரியாமல் போனது ஃபேப்மார்ட். தொடங்கப்பட்ட ஆண்டில் ஒரு பரிவர்த்தனை கூட ஃபேப்மார்ட் செய்யவில்லை.

என்றாலும், நம்பிக்கையை கைவிடவில்லை. இணையம் இந்தியர்களுக்கு நண்பனாகும் காலம் மாறும் என்கிற ஒற்றை நம்பிக்கையில் இணையச் சந்தை கனவை ஓரம்கட்டிவிட்டு ஆன்லைன் டு ஆஃப்லைன் சென்றது ஐவர் கூட்டணி. ஃபேப்மார்ட், 'ஃபேப்மால்' (Fabmall) என மாற்றம் செய்யப்பட்டு நிஜ கடைகள் ஆனது.

இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த ஆன்லைன்-டு-ஆஃப்லைன் சில்லறை விற்பனை நிறுவனமாக உதயமாகிய ஃபேப்மால் இந்தியா முழுவதும் ஹிட் அடித்தது. அதன் தாக்கத்தால் ஒருசில ஆண்டுகளில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா முழுவதும் 300 இடங்களில் ஃபேப்மால் உதயமாகி நல்ல வருமானத்தையும் கொடுத்தது.

இந்த வளர்ச்சியை புரிந்துகொண்ட ஆதித்ய பிர்லா குழுமம் விரைவாக ஃபேப்மாலை தன்வசம் வளைத்துக்கொண்டது. காலங்கள் கடந்தாலும், ஃபேப்மால் ஐடியா கிளிக் ஆனாலும் ஹரி மேனன் கூட்டணிக்கு ஆன்லைன் வணிகத்தின் மீதான கனவும், இந்தியர்கள் இணையத்தின் பக்கம் செல்வார்கள் என்ற நம்பிக்கையும் குறையவேயில்லை.

ஐவர் அணியின் மெய்ப்பட்ட கனவு

காலம் கனிந்தது. ஹரி மேனன் நினைத்தது நடந்தது. இந்தியர்களை இணையம் ஆட்கொண்டது. 2011-ல் ‘பிக்பாஸ்கெட்’ உதயமானது. ஆன்லைன் வணிகத்தின் மீதான நம்பிக்கையில் இந்தியர்களுக்கு இணையம் பரிச்சயமாகும் என்கிற நம்பிக்கையில், பல ஆண்டுகள் ஹரி இணையம் பக்கம் வரவில்லை. இதுதான் சரியான நேரம் என கணித்தது பிக்பாஸ்கெட்டை துவங்கினார். டாட் காம் மார்க்கெட்டுக்கு ரீச் கிடைக்கத் தொடங்கிய காலகட்டம் அது. இதனால், பிக்பாஸ்கெட்-டுக்கும் ரீச் கிடைக்க தொடங்கியது. முதலில் காய்கறிகள் தொடங்கி பின்னாளில் மளிகைப் பொருட்கள் என மெதுமெதுவாக கியரை மாற்றினார்கள்.

மற்ற ஸ்டார்ட்-அப்களைப் போலவே, பிக்பாஸ்கெட்டும் தனது வெற்றிப் பயணத்தில் அனைத்து வகையான வணிக சவால்களையும் சிரமங்களையும் கடந்து வந்துள்ளது. உலக அளவில் காய்கறிகளை வீட்டுக்கே டெலிவரி செய்யும் ஐடியாக்கள் ஜெயிக்கவில்லை. இதில் ஸ்விக்கி, ஊபர் போன்ற நிறுவனங்கள் வேறு.

ஏனென்றால் ஸ்விக்கி, ஊபர் போன்றவை பிற உணவகங்களின் சேவையை சில மணிநேரங்களில் டெலிவரி செய்பவை. காய்கறிகளை சில மணிநேரங்களில் பறித்து டெலிவரி செய்ய முடியாது. வாங்கி, ஓரிடத்தில் சேமித்து அதன்பிறகே டெலிவரி செய்ய முடியும். உலக அளவில் இதற்கு ஒரு வெற்றியடைந்த முன்னுதாரணம் இல்லை. இதனைத்தான் பிக்பாஸ்கெட்டுக்கான சவாலாக எடுத்துக்கொண்டது ஹரி அன்ட் கோ. அந்தச் சவாலை திறம்பட சமாளிக்கவும் செய்தது.

bigbasket

சொல்லி அடித்த கில்லிகள்

தொடங்கிய முதல் மூன்றாண்டுகள் தங்கள் நிறுவனத்துக்கென எந்தவிதமான விளம்பரமும் அவர்கள் செய்யவில்லை. ஏனென்றால், வாய்மொழி மூலமாக மட்டுமே பிக்பாஸ்கெட் எனும் பிராண்டு பிரபலமாக வேண்டுமென ஆசைப்பட்டார்கள். இதற்கு வேறுமாதிரியான காரணங்களை சொல்கிறார்கள் ஹரி டீம்.

”ஆன்லைன் வணிகத்தில், அதுவும் மளிகைப் பொருட்கள், காய்கறிகள் போன்றவற்றை டெலிவரி செய்யும் பிசினஸில் சப்ளை செயினில் என்ன மாதிரியான பிரச்சினைகள் வரும் என்பதை தொடக்கத்திலேயே முழுமையாகக் கணித்துவிட முடியாது. விளம்பரம் மூலம் நிறைய வாடிக்கையாளர்களை வணிகத்தை நோக்கி உள்ளே கொண்டு வந்துவிட முடியும். ஆனால், சப்ளை செயினில் இருக்கும் பிரச்சினைகளை முழுமையாக அறிந்துகொள்ளாமல் வாடிக்கையாளர்களை கொண்டுவந்தால் அவர்கள் சீக்கிரமாகவே வெளியேறிவிடுவார்கள். நீண்ட கால வாடிக்கையாளராக அவர்கள் இருக்க மாட்டார்கள்.”

ஹரி மேனன் கூட்டணியின் அனுபவமே இதுபோன்ற திடமான யோசனைகளை கொண்டு வந்து, அதற்கு தீர்க்கமான தீர்வையும் கண்டுபிடிக்க வைத்தது. முதலில் வாய்மொழியாக பிரபலம், அதன்பின்னரே விளம்பரம் என்பதில் உறுதியாக மூன்றாண்டுகள் இருந்து பிரச்சனைகளை ஆழத்தை அறிந்துகொண்டார்கள்.

சொன்னபடி, 3 ஆண்டுகளுக்கு பிறகே விளம்பரத்தின் பக்கம் செல்லவும் செய்தனர். பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக் கானை தங்கள் பிராண்ட் அம்பாசிடராக அவர்கள் இணைத்துக் கொண்ட பிறகு, பிக்பாஸ்கெட் சிறிய நகரங்களிலும் தங்களின் வலுவான இருப்பை உறுதிப்படுத்தியது.

தனி ராஜ்ஜியம்

வியாபாரம் பெரிதாக பெரிதாக பிரச்சனைகளும் வந்தன. டெலிவரி பாய்ஸ் உட்பட சில பிரச்சனைகள் வந்தாலும் வணிகத்தில் ஹரி கூட்டணிக்கு இருந்த அனுபவம் அவற்றை சீராக்கி, பிக்பாஸ்கெட்டை சீரான வளர்ச்சியை நோக்கி முன்னேற்றியது. 2011-ல் தொடங்கப்பட்டபோது முதல் சுற்று நிதியிலேயே 10 மில்லியன் டாலர் திரட்டிய பிக்பாஸ்கெட்டின் 2014-ல் ஆண்டு வருமானம் ரூ.178 கோடியாக இருந்தது.

2015-ல் அது ரூ.600 கோடி ஆனது. 2017-ல் ரூ.1,070 கோடி ஆனது. 2019-ல் யூனிகார்ன் அந்தஸ்த்தை பெற்றது. 2022-ம் ஆண்டு கணக்கின்படி பிக்பாஸ்கெட்டின் மதிப்பு 3.2 பில்லியன் அமெரிக்க டாலர். இவ்வளவு மதிப்பு கூட காரணம், பிக்பாஸ்கெட்டின் 64.3% பங்குகளை டாடா குழுமம் 2021-ம் ஆண்டு வாங்கியது.

டாடா குழுமம் வந்த பிறகு பிக்பாஸ்கெட்டின் வளர்ச்சியும் பல மடங்கு அதிகரித்தது. 2019 வரை இந்தியாவின் 25 நகரங்களில் டெலிவரிகளை செய்துவந்த பிக்பாஸ்கெட் பெங்களூர், புனே, சென்னை, ஹைதராபாத், மும்பை, டெல்லி, நொய்டா, விஜயவாடா - குண்டூர், மைசூர், கோயம்புத்தூர், கொல்கத்தா, அகமதாபாத் - காந்திநகர், வதோதரா, விசாகப்பட்டினம், லக்னோ - கான்பூர், குர்காவ், சூரத், நாக்பூர் என தற்போது இந்தியாவின் 100+ நகரங்களில் தங்களின் சேவைகளை வழங்கி வருகிறது.

1000-க்கும் மேற்பட்ட பிராண்டுகள் மற்றும் 20,000-க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் என பழங்கள், காய்கறிகள் தொடங்கி பல பொருட்கள் பிக்பாஸ்கெட்டில் கிடைக்கிறது. விவசாயிகளுடன் கைகோப்பது, ஸ்டோரேஜ் ஏரியாக்களை அதிகரிப்பது, ஆர்டர் செய்தால் வீட்டுக்குப் பொருள் வர ஆகும் நேரத்தைக் குறைப்பது நாளுக்கு நாள் பிக்பாஸ்கெட் தன்னை மெருகேற்றிக்கொண்டே இருக்கிறது.

ஆன்லைன் மளிகைப் பொருட்கள் டெலிவரியில் இன்றைய தேதியில் பிக்பாஸ்கெட் தான் இந்தியாவின் நம்பர் ஒன் நிறுவனம். தினமும் ஆயிரக்கணக்கான ஆர்டர்கள், கோடிக்கணக்கில் வர்த்தகம் என ஒரு பெரிய சாம்ராஜ்ஜியத்தை நடத்தி வருகிறது பிக்பாஸ்கெட்.

bigbasket

50 வயது இளைஞன்!

கனவுக்கும், அதை சாத்தியப்படுத்துவதற்கும் வயது தடையில்லை என்பதற்கு நிகழ்கால சான்றுதான் ‘பிக்பாஸ்கெட்’ ஹரி மேனன். இந்த நிறுவனத்தை தொடங்கும்போது அவருக்கு வயது 50-ஐ நெருங்கிவிட்டது. அவருக்கு மட்டுமல்ல, கூட்டாளிகள் ஐவருக்குமே வயது அதிகம். மற்ற தொழில்முனைவோர்கள் 30 வயதுக்குள் தங்களின் சாதனைகளை புரிந்த நிலையில், ஹரி அன்ட் கோ பிக்பாஸ்கெட் சாம்ராஜ்யத்தை தங்களின் 50-வது வயதில் தான் சாதித்தார்கள். ஹரி மேனன் ஒருமுறை இப்படி குறிப்பிடுகிறார்...

“நாங்கள் மிகவும் பழமையான தொழில்முனைவோர்கள். நாங்கள் தாமதமாகவே இதைத் தொடங்கினோம். மற்றவர்கள் 25 அல்லது 26 வயதில் தொழில்முனைவு பக்கம் நகரும்போது நாங்கள் 50 வயதிலேயே வந்தோம். நான் 50 வயது இளைஞன். 50 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.”

இதே ஹரிக்கு பிக்பாஸ்கெட்டை விட மிகப் பெரிய காதல் ஒன்றிருக்கிறது என்றால், அது இசையே. இசை மீது தீராக் காதல் கொண்ட ஹரி, ஒரு கிட்டார் பிளேயர். கல்லூரிக் கலைநிகழ்ச்சி தொடங்கியவர், பிக்பாஸ்கெட் போர்டு மீட்டிங் வரை தனது கிட்டார் திறமையை காட்ட அவர் காட்டத் தவறியதில்லை. தொழில்முனைவில் முன்னேற்றம் கண்டத்துக்கு கலை ஆர்வமும் ஒரு காரணம் என ஹரி கூறுகிறார்...

“அனைத்து தொழில்முனைவர்களுக்கும் இப்படியொரு கலை ஆர்வமும் தேவை. கலை என்பது மண் சார்ந்தது; மக்களுக்கானது. ஸ்டார்ட்-அப்களும் அப்படித்தான் இருக்க வேண்டும். இதைத்தான் சிம்பிளாக ’Think local; Act global’ என்கிறார்கள். அதாவது, சர்வதேசத் தரத்தில் உள்ளூர் பிரச்னைகளுக்கான தீர்வு. அப்படி இருக்கும்பட்சத்தில் நாம் தொடங்கும் ஸ்டார்ட் அப்கள் வெற்றியே!”

ஹரியின் வாதம் சரிதானே?!


Edited by Induja Raghunathan