Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

மதுரையில் அசத்தல்: அரசுப் பள்ளியை உயர்த்திய பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி!

மதுரை - யானைமலை அடிவாரத்தில் உள்ள அரசுத் தொடக்கப் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டுவது கூடியவண்ணம் உள்ளது.

மதுரையில் அசத்தல்: அரசுப் பள்ளியை உயர்த்திய பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி!

Monday February 05, 2018 , 4 min Read

'அரசுப் பள்ளிகளுக்கு நிகரான...' என்ற வாக்கியத்துடன் தனியார் பள்ளிகளுக்கான விளம்பரம் நம் கண்களில் படுவதற்கான சாத்தியம் உண்டா?

உண்டு. யா.ஒத்தக்கடை - மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியைப் போலவே அரசுப் பள்ளிகள் மாநிலம் முழுவதும் உருவெடுத்தால் நிச்சயம் சாத்தியமே.

 மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி - யா.ஒத்தக்கடை
 மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி - யா.ஒத்தக்கடை


மதுரை - யானைமலை அடிவாரத்தில் உள்ள இந்தப் பள்ளியில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாணவர் சேர்க்கை சரிந்துகொண்டே இருந்தது. ஆனால், தற்போது ஒவ்வொரு ஆண்டும் அட்மிஷனுக்கு பெற்றோர் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். ஒரே நாளில் நிகழ்ந்துவிடவில்லை இம்மாற்றம். இதன் பின்னணியில் தலைமையாசிரியர் தென்னவன் மற்றும் சக ஆசிரியர்களின் மகத்தான செயல்பாடுகளுடன், ஒட்டுமொத்த கிராமத்தின் பங்களிப்பும் நிறைந்துள்ளது.

யா.ஒத்தக்கடை கிராமத்தைப் பற்றி விசாரித்தாலே வியப்பூட்டும் தகவல்கள் கிடைக்கின்றன. உதாரணத்திற்கு, இந்த ஊர் மக்கள் பேசும் அரசியல் என்பது எல்லைகளைக் கடந்தது. அமெரிக்காவை முன்வைத்த சர்வதேச அநீதிகள் தொடங்கி உள்ளூர் விவகாரங்கள் வரை மக்களை வஞ்சிக்கக் கூடிய எந்தப் பிரச்சினைகளுக்கு எதிராகவும் போஸ்டர்களை இங்கே காணலாம்.

தலைமையாசிரியர் தென்னவன்
தலைமையாசிரியர் தென்னவன்


வளாகம் முழுவதுமே பசுமையான சூழல், வகுப்பறையோ கணினி மயம் என அசத்தும் யா.ஒத்தக்கடை அரசுத் தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியர் தென்னவன் கூறும்போது,

"2010-ம் ஆண்டு தலைமையாசிரியராக பதவியேற்றேன். அப்போது, எங்கள் பள்ளியில் மாணவர் சேர்க்கை சரிவை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. மாணவர் சேர்க்கையைக் கூட்டுவதற்காக வீதி வீதியாகவும் வீடு வீடாகவும் பெற்றோரை சந்தித்துப் பேசினேன். எந்தப் பலனும் இல்லை.

மாறாக, எங்கள் பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்க மறுப்பதற்கான காரணங்களைத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் மக்கள் முன்வைத்தனர். கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, பள்ளியின் கட்டமைப்புகள், ஆசிரியர்களின் அணுகுமுறைகள் தொடர்பான எதிர்மறை விமர்சனங்களை அடுக்கினர். இந்தக் குறைகள் அனைத்தையும் திருத்திக் கொண்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டேன்.

முதலில் பள்ளி மேலாண்மைக் குழுவையும், கிராம கல்விக் குழுவையும் கூட்டி விவாதித்தோம். ஆசிரியர்களின் செயல்பாடுகள் மற்றும் பள்ளியின் கட்டமைப்பு சார்ந்த குறைபாடுகளை அடையாளம் கண்டோம்.

பள்ளி வளாகம் முழுவதும் விரவியிருந்த சாக்கடையைத் தூய்மைப்படுத்த சம்பந்தப்பட்ட துறைகளை நாடினோம். யாருமே கண்டுகொள்ளவில்லை. பெற்றோர்களுக்கு இந்த விவரம் தெரிந்த பிறகு, நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊராட்சி மன்றத் தலைவரை முற்றுகையிட்டனர். அதன் எதிரொலியாக, ஊராட்சி மன்றத் தலைவர் உடனடியாக நேரில் வந்து சந்தித்தார். எங்கள் நிலையை எடுத்துச் சொன்னோம். உடனடி நடவடிக்கை எடுத்தார். அதன்பின், எங்கள் பள்ளியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த அவரும் உறுதுணைபுரியத் தொடங்கினார். பள்ளி வளாகம் முழுவதும் மரங்கள் நட்டோம். ரோட்டரி கிளப்பின் உதவியுடன் கழிப்பறை வசதிகளை மேம்படுத்தினோம்" என்றார்.

அரசுத் தொடக்கப் பள்ளியில் மேலாண்மைக் குழுவா?

ஆம், இந்தப் பள்ளியில் மாதம்தோறும் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் தவறாமல் நடைபெறுகிறது. இந்தக் குழுவில் ஊராட்சி மன்றத் தலைவர், வார்டு உறுப்பினர், பெற்றோர்கள், அங்கன்வாடி ஆசிரியர், சுகாதாரத் துறையினர், இளைஞர் மன்றத்தினர், மகளிர் சுய உதவிக் குழுவினர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். பள்ளியின் வளர்ச்சிக்கு இந்தக் குழுவின் பங்களிப்பு மிக முக்கியமானது.

ஜிஎஸ்எல்வி - பிஎஸ்எல்வி மாணவர் அமைப்பினர்
ஜிஎஸ்எல்வி - பிஎஸ்எல்வி மாணவர் அமைப்பினர்


பெற்றோர்களிடையே யா.ஒத்தக்கடை அரசுப் பள்ளி மீதான ஈடுபாடு மிகுதியாவதற்கு, இப்பள்ளி மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்த ஆசிரியர்கள் கையாண்ட உத்திகளும் முக்கியக் காரணம். இதுகுறித்து தலைமையாசிரியர் தென்னவன் மேலும் கூறியது:

"எங்கள் பள்ளியில் இரு மாணவர் அமைப்பை உருவாக்கினோம். ஒன்று - பி.எஸ்.எல்.வி. எனப்படும் பாய்ஸ் ஸ்கூல் லீடிங் வாலன்டியர்ஸ்; இன்னொன்று ஜி.எஸ்.எல்.வி. - கேர்ள்ஸ் ஸ்கூல் லீடிங் வாலன்டியர்ஸ். மாணவர்களுக்குத் தலைமைப் பண்பை வளர்க்கவே இந்த அமைப்பை ஏற்படுத்தினோம். நாள்தோறும் 8.45-க்கு பிரேயர் நடத்துவது தொடங்கி மாலை பள்ளி முடியும் வரை இந்த மாணவர்கள்தான் அனைத்தையும் வழிநடத்துவர். 

ஒண்ணாவது, ரெண்டாவது மாணவர்களை கழிவறைக்கு அழைத்துச் செல்வது, மதியம் உணவு இடைவேளையின்போது ஒழுங்குபடுத்துவது என பல்வேறு பணிகளையும் இந்த அமைப்பு மாணவர்கள் செய்வார்கள். எங்கள் பள்ளியை நிர்வகிப்பதில் இவர்களுக்கு அதிக பங்கு, என்கிறார்.

இதன் அடுத்தக்கட்டமாக திறமை சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தினோம். மாணவர்களின் கிராமியக் கலைத் திறனை வெளிப்படுத்தும் வகையில் ஏழு மணி நேரத்தில் 48 நிகழ்ச்சிகள் நடத்தினோம். மேடையில் இந்த நிகழ்ச்சியை நடத்தியதே மாணவர்கள்தான். ஆசிரியர்களாகிய நாங்கள் மேடை ஏறவே இல்லை. ஊர் மக்கள் வியந்து பாராட்டினர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு எங்களுக்கும் பெற்றோருக்கும் இடையிலான நெருக்கம் ரொம்பவே அதிகரித்தது. தங்கள் பிள்ளைகளின் திறமையை வளர்க்கும் எந்த விஷயத்துக்கு முழு ஆதரவு தருவதாகச் சொன்னார்கள்.

இந்த முயற்சிகளுக்கு மறு ஆண்டே பலன் கிடைத்தது. ஜூன் மாதம் அட்மிஷனுக்கு பள்ளியை சூழ்ந்த பெற்றோர்களை ஒழுங்குபடுத்த போலீஸ் வரவேண்டிய நிலை ஆகிவிட்டது."
டிஜிட்டல் மயமான வகுப்பறை
டிஜிட்டல் மயமான வகுப்பறை


பள்ளி வகுப்பறைகளை கணினி மயமாக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியில் சில சுவாரசியமும் அடங்கியிருக்கிறது. இதை அவர் விரிக்கும்போது, ’கற்றல் - கற்பித்தலில் கணினி பயன்பாட்டைக் கொண்டுவர விரும்பினோம். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவை அணுகியபோது ஒரு கணினி கிடைத்தது. பிறகு, பழைய கம்ப்யூட்டர்களுடன் மொத்தம் 6 கணினிகள் மூலம் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தோம்.

எங்கள் பெற்றோரில் ஒருவர் துப்புறவுத் தொழிலாளர். அவர் மூன்றாவது படிக்கும் தன் பிள்ளையுடன் உயர் நீதிமன்ற நீதிபதி நாகமுத்து வீட்டுக்கு துப்புறவுப் பணிக்குச் சென்றிருக்கிறார். அப்போது, அவர்கள் வீட்டு கம்ப்யூட்டர் வேலை செய்யவில்லை. அதை அந்த மாணவர் சரிசெய்திருக்கிறார். இதைப் பார்த்து அந்த நீதிபதி ஆச்சரியமடைந்தார். உடனே என் நம்பர் வாங்கி போன் செய்தார். எங்கள் பள்ளி குறித்து விசாரித்தார். அடுத்த வாரம் அவர் ஒரு தீர்ப்பு கொடுக்கிறார். அதில் குற்றவாளிக்கு தண்டனையாக, ஒரு புதிய கம்ப்யூட்டரை எங்கள் பள்ளிக்கு வாங்கித் தர வேண்டும் என்று தீர்ப்பளித்தார். அப்படிக் கிடைத்தது, ஏழாவது கம்ப்யூட்டர்.

பாடங்களைக் கற்பிப்பது மட்டுமின்றி வாழ்த்து அட்டை தயாரிப்பது, கிராஃபிக்ஸ் டிசைன் உள்ளிட்ட பலவும் கணினியில் சொல்லித் தருகிறோம். கல்வி இணைச் செயல்பாடுகள் அனைத்தையும் விளையாட்டு வடிவில் உருவாக்கி சிடிக்களில் பதிவு செய்திருக்கிறோம்.

ஒருமுறை கிராம சபைக் கூட்டத்தைப் பள்ளியில் போட வேண்டும் என்று ஊராட்சி மன்றத் தலைவரிடம் கேட்டோம். அந்தக் கூட்டத்திலேயே எங்களுக்கு புதிய கம்ப்யூட்டர்கள் வேண்டும் என்று வலியுறுத்தினோம். இதற்குப் பெற்றோர்களும் குரல் கொடுத்தனர். 15 கம்ப்யூட்டர், 3 டிவி, 50 ஃபேன்கள் வேண்டும் என்றோம். கிராமசபையும் ஒப்புக்கொண்டு தீர்மானமாகப் போட்டது. ஆனால், போதுமான நிதி இல்லை. எனவே நன்கொடை வசூலித்தோம். கிட்டத்தட்ட ரூ.3 லட்சம் வசூல் செய்து, அதை கலெக்டர் நிதியில் கட்டியபின் ரூ.9 லட்சமாகப் பெற்று எங்கள் பள்ளி வகுப்புகளை டிஜிட்டல் மயமாக்கினோம்.

முந்தைய ஆண்டுகளில் ரூ.11 லட்சம் திரட்டி மேஜை, டேபிள், பெஞ்சுகள் வாங்கினோம். இப்படியாக, கிட்டத்தட்ட ரூ.43 லட்சத்துக்கு பள்ளியில் கட்டமைப்பு வசதிகளைச் செய்திருக்கிறோம். இவற்றின் பலனாக, எங்கள் அட்மிஷனுக்காக பள்ளி வளாகத்தைத் தாண்டுவதே இல்லை. மக்களே எங்கள் பள்ளியில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றனர்," என்றார் பெருமிதத்துடன்.
 மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி - யா.ஒத்தக்கடை ஆசிரியர்கள்
 மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி - யா.ஒத்தக்கடை ஆசிரியர்கள்


அடுத்து...?

14 ஆசிரியர்களுடனும் 502 மாணவர்களுடனும் இயங்கும் யா.ஒத்தக்கடை அரசுத் தொடக்கப் பள்ளியின் வெற்றிக்குக் காரணமே பள்ளிக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் மட்டுமின்றி கற்பித்தல் முறையும்தான் என்பது தெளிவு.

"பாடங்களை படைப்பாற்றலுடன் கூடிய புதிய உத்திகளுடன் கற்பிக்கிறோம். இதனால், எங்கள் பள்ளி மாணவர்கள் எங்கு சென்றாலும் தனித்துவமாகத் தெரிந்தார்கள். ஆசிரியர் அனைவருமே குழந்தை நேய ஆசிரியர்களாக இருப்பார்கள். எல்லாக் குழந்தைகளுமே தங்கள் பெற்றோரிடமும் நண்பர்களிடமும் பேசுவதுபோல் மிக இயல்பாக ஆசிரியர்களிடம் பழகுவார்கள். இங்கு சுதந்திரமான கற்றல் இருக்கிறது.

மனப்பாடம் என்பதற்கே வேலையில்லை. இந்த வெற்றிக்கு முழு காரணம், இங்குள்ள 14 ஆசிரியர்களும் ஒரே நேர்க்கோட்டில் செல்வதுதான்.

எங்கள் அடுத்தகட்ட முயற்சி, ஒரு நூலகம் அமைப்பது. இதற்காக நூல் கொடை எனும் திட்டத்தைத் தொடங்கினோம். இதுவரை 2,000 நூல்கள் திரட்டியிருக்கிறோம். விரைவில் நூலகம் அமைத்து, மாணவர்களின் வாசிப்பை மேம்படுத்துவது நிச்சயம்" என்றார் தலைமையாசிரியர் தென்னவன்.