'இது தமிழ்நாட்டின் பெருமை’ - G20 மாநாட்டில் வைக்கப்பட்டுள்ள ‘உலகின் பிரமாண்ட நடராஜர் சிலை’யை வடிவமைத்த சுவாமிமலை ஸ்தபதிகள்!
நமது நாட்டின் பெருமையைக் கூறும் வகையில், ஜி20 மாநாடு நடைபெறும் அரங்கத்தின் வாயிலில், ரூ.10 கோடி செலவில் 18 டன் எடையில், 28 உயரத்தில் வைக்கப்பட்டுள்ள பிரமாண்ட நடராஜர் சிலையைச் செய்த சுவாமிமலையைச் சேர்ந்த ஸ்ரீகண்டன் ஸ்தபதி யுவர்ஸ்டோரிக்கு பிரத்யேகப் பேட்டி அளித்துள்ளார்.
Induja Raghunathan
Saturday September 09, 2023 , 6 min Read
தலைந்கர் புது டெல்லியில் 'G20 மாநாடு' நடைபெறவிருக்கும் பாரத் மண்டபத்தின் முகப்பில் வைக்கப்பட்டுள்ள 'உலகின் பெரிய நடராஜர் சிலை' நம் தமிழ்நாட்டில் இருந்து சென்றுள்ளது தெரியுமா?
மாநாட்டிற்கு வரும் உலகத் தலைவர்கள் பிரமிப்படையும் வகையில் செதுக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட சிலையை தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலையில் வசிக்கும் ஸ்ரீ தேவ சேனாதிபதி சிற்பக்கூட ஸ்தபதியான ஶ்ரீகண்ட ஸ்தபதி மற்றும் குழுவினரால் முற்றிலும் கைகளால் செய்யப்பட்டுள்ளது.
G20 மாநாட்டில் நடராஜர் சிலை
அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் உறுப்பினர்களாக உள்ள அமைப்பு ஜி20. இதன் உச்சி மாநாடு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டில் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு, நமது தலைநகர் டெல்லியில் இன்றும், நாளையும் (செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில்) இந்த ஜி20 மாநாடு நடக்க இருக்கிறது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உலகின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் செல்வாக்கு மிக்க தலைவர்கள் பலர் டெல்லி வந்தடைந்துள்ளனர். இதனால் ஒட்டுமொத்த டெல்லியும் பாதுகாப்பின் உச்சத்தை தொட்டு உள்ளது.
முன்னதாக நமது நாட்டின் பெருமையைக் கூறும் வகையில், மாநாடு நடைபெறும் அரங்கத்தின் வாயிலில் வைப்பதற்காக, மத்திய அரசின் கலாசாரத்துறையின் கீழ் இயங்கும், ’இந்திரா காந்தி நேஷனல் சென்டர் ஆஃப் ஆர்ட்ஸ்’ சார்பில், சோழர் கால நடராஜர் சிலை வடிவமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்தச் சிலையை வடிவமைக்கும் பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது என தேசிய அளவில் பல திறன் மதிப்பீடுகள் செய்யப்பட்டன.
சுவாமிமலை ஸ்தபதிகளின் கைவண்ணம்
அதன் அடிப்படையில், தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலையைச் சேர்ந்த ஸ்ரீ தேவ சேனாதிபதி சிற்பக்கூட ஸ்தபதிகளான ராதாகிருஷ்ணன், ஶ்ரீகண்டன், சுவாமிநாதன் ஆகியோரிடம் இந்த சிலையை உருவாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அவர்களும் மத்திய அரசு விரும்பியபடியே, தத்ரூபமாக சோழர்கால நடராஜர் சிலையை வடிவமைத்துக் கொடுத்துள்ளது.
சிலையின் பிரமாண்டம், தத்ரூபம் உள்ளிட்டவை பலரையும் கவர்ந்திருக்கும் நிலையில், பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், நடராஜர் சிலை குறித்துப் பதிவிட்டிருந்தது தமிழகத்தின் சிற்பக்கலைக்கு பெருமைக்கு பெருமை சேர்ப்பது போல் அமைந்துள்ளது.
பிரமாண்ட நடராஜர் சிலையை வடிவமைத்த ஸ்ரீகண்ட ஸ்தபதியிடம் இது குறித்து யுவர்ஸ்டோரி தமிழ் பிரத்யேக பேட்டி எடுத்தது. அவர் கூறியதாவது...
சோழர்கால சிற்பக்கலை பிரபலம்
“இந்தியாவில் சேரர், சோழர், பாண்டியர் என மூன்று பிரிவுகளில் சிற்பக்கலை பயன்பாட்டில் உள்ளது. இதில், சோழர் கால சிற்பக்கலை உலகளவில் மிகவும் பிரபலமானது. சுவாமிமலையில் சோழர்கள் காலத்திலிருந்து ஐம்பொன்னில் சிலைகள் செய்யப்பட்டு வருகின்றன.
“நாங்கள் பரம்பரை பரம்பரையாக சிலைகள் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். எங்கள் தந்தை தேவசேனா ஸ்தபதி தேசிய விருது பெற்றவர். தஞ்சாவூர் கோவிலுக்கான சிலைகளை செய்து கொடுத்தது எங்கள் மூதாதையர்கள்தான். நாங்கள் இப்போது ஒன்பதாவது தலைமுறையாக சிலை தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகிறோம்,” என்றார்.
சோழர் கால சிற்பக்கலை முறையில் முற்றிலும் அனைத்தும் கைகளால் செய்யப்படுவதாகும். பூம்புகாரில் கலக்கும் காவேரி நீரில் இருந்து சுவாமிமலையில் கிடைக்கும் வண்டல் மண் இந்த சிலைகள் செய்ய மிகவும் ஏற்புடையதாகவும், சிறந்த பிடிமானம் கொண்டதாகவும் இருப்பதால் இங்கு நாங்கள் இந்த தொழிலை தொடர்ந்து செய்து வருகிறோம்.
“சுவாமிமலையில் எங்களைப்போன்று 500க்கும் மேற்பட்ட சிற்பக் கலைஞர்களும், 100க்கும் மேற்பட்ட பட்டறைகளும் உள்ளது. இதுவே எங்களின் தொழில்,” என்றார்.
G20 மாநாட்டிற்கு தேர்வானது எப்படி?
அண்மையில், ஜி20 மாநாட்டில் வைப்பதற்காக மிகப்பெரிய அளவிலான நடராஜர் சிலையை வடிவமைக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் டெண்டர் விடப்பட்டது. அதில் இந்தியாவில் இருந்து பல சிற்பக்கலை வல்லுனர்கள் கலந்துகொண்டனர்.
”நாங்களும் டென்டரில் கலந்துகொண்டு, எங்களின் திறமைகள் பற்றியும், நாங்கள் ஏற்கனவே செய்துள்ள சிலைகள், சோழர் கால சிலையின் சிறப்புகள் பற்றிய பவர்பாயிண்ட் ப்ரெசண்டேஷனை செய்தோம். எங்களின் வேலைபாட்டைக் கண்டு மத்திய அரசு எங்களுக்கு இந்த ப்ராஜக்டை அளித்தனர்.”
அதன்படி, நான், எனது அண்ணன் ராதாகிருஷ்ண ஸ்தபதி மற்றும் எனது தம்பி சுவாமிநாத ஸ்தபதி ஆகியோர் தலைமையில், நாற்பதுக்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் சேர்ந்து இந்தச் சிலையை, சோழர்கள் கால முறைப்படி பழைமை மாறாமல் செய்து கொடுத்துள்ளோம், என்றார்.
”இந்த நடராஜர் சிலையானது 28 அடி உயரமும், 21 அடி அகலமும் கொண்டுள்ளது. இந்தச் சிலையின் மேல் பகுதி 18 டன் எடை, பீடம் 5 டன் என மொத்தம் 23 டன் எடை கொண்டது. 10 கோடி ரூபாய் மதிப்பில் இந்தச் சிலை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதனை முழுமையாக செய்து முடிக்க 6 மாத காலங்கள் ஆகி இருக்கிறது,” என்றார்.
சிலையின் சிறப்பம்சங்கள்
வழக்கமாக கோவில்களில் உள்ள சிலைகளை பஞ்சலோகத்தில் செய்வதுதான் வழக்கம். வீட்டுப் பயன்பாட்டிற்கெனச் செய்யப்படும் சிலைகளை மூன்று லோகத்தில் செய்வார்களாம். ஆனால், தற்போது ஜி20 மாநாட்டிற்காக செய்யப்பட்டுள்ள இந்த நடராஜர் சிலை எட்டு அஷ்ட தாதுக்களால் ஆனது என்கிறார் ஸ்ரீகண்ட ஸ்தபதி.
“ஆரம்பத்தில் 40 அடி உயரமுள்ள நடராஜர் சிலையைச் செய்வதாகத்தான் மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், மாநாட்டில் பங்கேற்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உலகத் தலைவர்களுக்கு அந்தச் சிலையை நிமிர்ந்து பார்ப்பது சிரமமாக இருக்கும், சிலையில் தலைப்பகுதியை அருகில் நின்று ரசிக்க முடியாது என்பதால், பிறகு அதன் உயரம் குறைத்துக் கொள்ளப்பட்டது. எனவே, மத்திய அரசு கேட்டுக் கொண்டபடி 28 அடி உயரத்தில், 21 அடி அகலத்தில் இந்தச் சிலையை செய்து கொடுத்துள்ளோம். இதுவே தற்போது ‘உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலை’ ஆகும்.
எட்டு அஷ்ட தாதுக்களால் ஆன சிலை
உயரம், அகலம் போலவே இந்தச் சிலையானது எட்டு அஷ்ட தாதுக்களால் செய்து தரப்பட வேண்டும் எனவும் மத்திய அரசு கேட்டுக் கொண்டது. அவர்கள் விருப்பப்படியே, இந்தச் சிலையை செம்பு, பித்தளை, தங்கம், வெள்ளி, வெள்ளீயம், இரும்பு, பாதரசம் உள்ளிட்ட எட்டு அஷ்ட தாதுக்கள் பயன்படுத்தி செய்திருக்கிறோம். பாதரசம், இரும்பு, வெள்ளீயம் சேர்ந்தால் சிலையின் உறுதித்தன்மை அதிகரிக்கும். சுலபமாக அதை வெட்டவோ, அறுக்கவோ முடியாது. பல ஆயிரம் ஆண்டுகள் சேதமடையாமல் அப்படியே நிலைத்திருக்கும். அதற்காகவே இவற்றைக் கலந்து செய்திருக்கிறோம்” என்கிறார் ஸ்ரீகண்ட ஸ்தபதி.
சோழர் காலச் சிற்பக்கலை தசகாலப் பிரமாணத்தில், அளவுப் பிரமாணங்கள் சிறப்பாக இருக்கும். அதனால்தான் அவை உலகளவில் பிரபலம். உடலுக்கேற்ற தலை, தலைக்கேற்ற கை, கால்கள், விரல்கள் அமைப்பு என அளவுப் பிரமாணங்கள் மிகச் சரியானதாக இருக்கும்.
குடகில் ஆரம்பிக்கும் காவிரி ஆற்றின் பயணம் பூம்புகாரில் முடிவதற்கு முன்னதாக, சுவாமிமலையில் குறிப்பிட்ட பகுதியில் ஒரு பர்லாங் அளவில் கிடைக்கும் வண்டல் மண்ணை வைத்துதான் இவர்கள் பஞ்சலோக சிலைகள் செய்கிறார்கள். அதுவே இந்த சிலைகளின் மிகப்பெரிய சிறப்பம்சமாகக் கருதப்படுகிறது. அதனால்தான் சுவாமிமலையில் செய்யப்படும் சிலைகளுக்கு பஞ்ச சிலைகளுக்கான ஜிஐ டேக் வழங்கப்பட்டுள்ளதாக ஸ்ரீகண்ட ஸ்தபதி கூறுகிறார்.
தொடரும் பாரம்பரிய முறை
“சிற்ப சாஸ்திர விதிப்படி முதலில் தேவையான சிற்பத்தின் மாதிரியை மெழுகில் வடிப்போம். பின்னர் அதன் மீது வண்டல்மண் பூசி, தேவையான கம்பிகளைச் சொருகி, அதற்கும் மேல் களிமண்ணைப் பூசி வெயிலில் நன்கு காய வைப்போம். பிறகு குறிப்பிட்ட முறையில் உள்ளே இருக்கும் மெழுகை உருக்கும்போது, நமக்குத் தேவையான சிலையின் மோல்ட் கிடைக்கும். அதில், சரியான பதத்தில் தேவையான உலோகங்களை உருக்கி ஊற்றி சிலையை வடிப்போம்.
இறுதியில் சிலையின் மேலுள்ள மண் பகுதியை உடைத்து விட்டு, உள்ளே இருக்கும் சிலையின் பாகங்களை கைகளாலேயே தேவையான திருத்தங்கள் செய்து, கடைசியில் அதனை மெருகேற்றுவோம். சோழர் காலத்தில் இருந்தே இந்த முறையில் தான் சுவாமிமலையில் சிலைகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நடராஜர் சிலையும் அப்படி உருவாக்கப்பட்டது தான்.
உலகிலேயே முதன்முறை
உலகத்திலேயே இவ்வளவு பெரிய சிலையை ஒரே வார்ப்பில் செய்தது இதுதான் முதன்முறை. இதற்கு முன் யாரும் இப்படிச் செய்ததில்லை. மத்திய குழு பல திருத்தங்களைச் செய்துதான் இந்த சிலையின் மாடலை தந்தார்கள். இறுதியில் நாங்கள் செய்த மெழுகு சிலையை பிரபல தமிழக நடனக்கலைஞர் பத்மா சுப்ரமணியம், தன் கையாலேயே நடன முத்திரையோடு துவக்கி வைத்தார்.
”அந்தத் தருணத்தை எங்களால் மறக்கவே முடியாது. ஏனென்றால் வார்ப்படம் செய்வது என்பது ஒரு குழந்தையை பிறக்க வைக்கும் தருணத்திற்கு ஈடானது. வார்ப்படம் சரியாக அமைந்தால்தான் நாங்கள் சிலை இறுதி வேலையை ஆரம்பிக்க இயலும். இல்லாவிட்டால் அவ்வளவு நாள் நாங்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் வீணாகி விடும்,” என இந்த சிலை செய்ய ஆரம்பித்த நாட்கள் முதல், அது ஜி 20 மாநாட்டு அரங்கத்தில் நிற்க வைக்கப்பட்ட நாள் வரை கிடைத்த அனுபவங்களைப் பகிர்கிறார் ஸ்ரீகண்ட ஸ்தபதி.
சுவாமி மலையில் செய்யப்பட்ட இந்த நடராஜர் சிலை 36 டயர் கொண்ட கண்டெய்னர் லாரியில் டெல்லி கொண்டு செல்லப்பட்டது. அப்போது அந்தச் சிலையுடனேயே ஸ்ரீகண்ட ஸ்தபதி உட்பட அவரது குழுவினர் 20 பேரும் உடன் சென்றுள்ளனர். டெல்லியில் சிலை சென்று சேர்ந்ததும், அங்கு வைத்து மேலும் இருபத்தைந்து சதவீதம் தீர்மானத்தை செய்து, நடராஜரை நல்ல படியாக நிற்க வைத்துவிட்டுத் தான் இந்தக் குழு தமிழகம் திரும்பியுள்ளது.
சவால்களும், பெருமையான தருணமும்
“இதுவரை 12 அடி வரையிலான நடராஜர் சிலைகளை நாங்கள் செய்துள்ளோம். முதன்முறையாக 28 அடி நடராஜர் சிலை செய்யும்போது, அந்த மெழுகு மோல்டை மூன்று கிரேனை வைத்துதான் மண்ணை பிரட்டினோம். அப்போதுதான் சிலைக்கு ஏதாவது சேதாரம் ஆகி விடுமோ எனப் பயந்தோம்.
ஜி20 மாநாடு அரங்கத்திற்கு முன்பு தான் சிலையை முதன்முறையாக நிற்க வைத்தோம். இரண்டு பிரமாண்ட கிரேன்களைப் பயன்படுத்தித்தான் அந்த சிலையை நாங்கள் நிற்க வைத்தோம். இரண்டு கிரேன்களையும் அகற்றியபின், ஒற்றைக் காலில் அந்த 18 டன் நடராஜர் சிலை நின்றபோது, மைய சூத்திரம் சரியாகச் செய்திருக்கிறோம் என்ற நிம்மதி எங்களுக்கு வந்தது. எங்கள் உழைப்பிற்கு, அக்கறைக்கு, தொழில்பக்திக்கு கிடைத்த பெருமையாகத்தான் அந்தத் தருணம் எங்களுக்கு அமைந்தது.”
பல வல்லுநர்கள் எங்கள் சிலையை வந்து ஆய்வு செய்து பார்த்தார்கள். 18 டன் கொண்ட சிலையை இப்படி ஒரு காலில் நிற்க வைத்திருக்கிறீர்களே என ஆச்சர்யப்பட்டார்கள். பொறியியல் படித்தவர்கள்கூட இவ்வளவு நேர்த்தியாகச் செய்ய முடியாது என எங்களைப் பாராட்டினார்கள். இந்த பாராட்டு எங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்றாக நாங்கள் கருதுகிறோம்,” என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் ஸ்ரீகண்ட ஸ்தபதி.
இதற்கு முன்னர், பெங்களூருவில் உள்ள இஸ்கான் கோவிலுக்கு மூலவர் சிலையை 3 டன்னில் செய்து கொடுத்துள்ளனர். அதேபோல், கொல்கத்தாவிற்கு அருகில் உள்ள மாயாப்பூரில் 15 டன் எடையில் அஷ்டத்தாதுவில் சிலையை செய்து கொடுத்துள்ளனராம். பத்து அடி உயரத்தில் மொத்தம் 5 சிலைகளைச் செய்ய, தேவசேனாபதி ஸ்தபதி குழுவினருக்கு ஒரு வருடம் ஆனதாகக் கூறுகின்றனர். இந்தச் சிலையை அன்பளிப்பாக அளித்த போர்டு கார் நிறுவனர் ஹென்றி போர்டின் பேரன் ஆல்பர்ட் ஹென்றி, சிலையின் தத்ரூபத்தைப் பார்த்து பாராட்டி, பத்திரம் அளித்ததை மறக்க முடியாத அனுபவமாகக் கூறுகிறார் ஸ்ரீகண்ட ஸ்தபதி.
அதேபோல், 10.5 அடி நடராஜர் சிலையை கேரளாவுக்கு செய்து கொடுத்துள்ளனர். இந்த சிலைகளைச் செய்த அனுபவத்தின் அடிப்படையிலேயே தற்போது 28 அடி உயர நடராஜர் சிலையை வெற்றிகரமாகச் செய்து முடித்ததாகவும் அவர் கூறுகிறார்.
தமிழகத்திற்கு கிடைத்த பெருமை
“நிச்சயம் நமது நடராஜர் சிலையின் பிரமாண்டத்தைப் பார்த்து ஜி20 மாநாட்டிற்கு வரும் உலகத்தலைவர்கள் பிரமித்துப் போவார்கள். இது நமது இந்தியாவிற்கு, தமிழகத்திற்கு, சுவாமி மலை சிற்பக்கலைக்கு, எங்கள் தேவசேனாபதி ஸ்தபதிக்கு கிடைத்த பெருமையாகவே கருதுகிறோம்.
பிரதமர் மோடி, ‘நம் வளமான கலாசாரம் மற்றும் வரலாற்றின் கூறுகளை கண்முன்னே நிறுத்துவதாக இருக்கிறது' என எங்கள் சிலையைப் பற்றி பதிவிட்டிருக்கிறார். இது எங்கள் உழைப்புக்குக் கிடைத்த பாராட்டு. இது மேலும் உற்சாகத்தை தந்திருக்கிறது” எனப் பெருமையுடன் கூறுகிறார் ஸ்ரீகண்ட ஸ்தபதி.