உலக அளவில் ரூ.1,000 கோடி மதிப்பில் 12 பில்லியன் ஊதுபத்திகளை விற்கும் ‘சைக்கிள் பிராண்ட்’
சைக்கிள் பியூர் அகர்பத்திஸ் நிறுவனத்தை 1948 ல் துவக்கிய என்.ரங்காராவ், துவக்கினார். இன்று உலகின் 75 நாடுகளுக்கு, ஆண்டுக்கு ரூ.1,000 கோடி ஊதுபத்திகளை விற்பனை செய்யும், நிறுவனமாக வளர்ந்திருக்கிறது.
சிறு வயதிலேயே பெற்றோர்களை இழக்க நேர்வது வாழ்க்கையையே மாற்றிவிடும். இந்த நெருக்கடிக்கு உள்ளாகும் சிலர் சோகத்தில் மூழ்கலாம், இன்னும் சிலர் அதிலிருந்து வலுவாக மீண்டு வரலாம்.
என்.ரங்கராவ், தனது எட்டாவது வயதில் தந்தையை இழந்தார். ஆசிரியர்கள், புரோகிதர்கள் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்த ரங்கா ராவ், சிறு வயதிலேயே குடும்ப பொறுப்பை ஏற்க வேண்டியிருந்தது. சின்ன சின்ன வேலைகள் செய்யத் துவங்கியவர், பதின்ம வயதில் குன்னூரில் சூப்பர்வைசராக பணியாற்றச்சென்றார்.
“என் தாத்தா (ரங்கா ராவ்), எப்போதும் தொழில்முனைவு ஆர்வத்தைக் கொண்டிருந்தார். குன்னூருக்குச் சென்று அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, மைசூருக்கு சென்று, ஊதுபத்தி வர்த்தகத்தை துவக்கி, குடும்பத்தின் பாரம்பரியத்தை தக்க வைத்துக்கொள்வதோடு ஆன்மிகத்திற்கு ஆதரவாக ஏதாவது செய்யலாம் என நினைத்தார்,” என நினைவு கூறுகிறார் மூன்றாம் தலைமுறை தொழில்முனைவோரும், என்.ஆர்.குழும நிர்வாக இயக்குனருமான அர்ஜுன் ரங்கா.
1940-களில் ஊதுபத்தி விற்பனையைத் துவக்கிய ரங்கா ராவ், முதலில் மைசூரு பிராடக்ட்ஸ் அண்ட் ஜெனரல் டிரேடிங் கம்பெனி என பெயர் வைத்து பின்னர் என்.ஆர்.குழுமம் என மாற்றிக்கொண்டார்.
வீட்டில் துவக்கம்
ரங்கா ராவ் தனது பாட்டியின் உதவியுடன் வீட்டில் இருந்து ஊதுபத்திகளை தயார் செய்தார். தினமும் சந்தைக்குச்சென்று மூலப்பொருட்கள் வாங்கி வந்து, அடுத்த நாள் ஊதுபத்தி செய்து விற்பனை செய்து, அடுத்த நாள் அதற்கான பணத்தை பெற்று வந்தார். எஞ்சிய பணத்தில் குடும்பத்தைக் காப்பாற்றினார்.
“என் தாத்தா மிகப்பெரிய தியாகம் செய்து, துணிச்சலுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டார். இந்தியாவில் வர்த்தகத்தில் வெற்றி பெற ஒரு பிராண்ட் தேவை என அவர் விரைவிலேயே புரிந்து கொண்டார். அதனால், வர்த்தகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கத்துடன் சைக்கிள் அகர்பத்திகள் பிராண்டை அறிமுகம் செய்தார்.
1948ல் மிகவும் முயற்சி செய்து, மைசூருவில் ஆலை அமைத்தார். அதன் பிறகு வளர்ச்சிப் பாதையில் முன்னேறினார்.
அர்ஜுனின் தந்தை ஆர்.வி.மூர்த்தி ரங்கா மற்றும் மாமா குரு ரங்கா, வாசு ரங்கா, வர்த்தகத்தில் இணைந்த போது விரிவாக்கமும் வளர்ச்சியும் சாத்தியமானது.
“சந்தையில் வலுவாக நிலைத்து நிற்க, புதுமையாக்கம் செய்து கொண்டிருக்க வேண்டும் என தாத்தா அறிந்திருந்தார். இணையம் இல்லாத காலத்தில் அவர் தானாக வாசனை திரவிய நுட்பத்தை கற்றுக்கொண்டார். அவரிடன் சிறிதளவே பணம் இருந்தாலும், அவர் தனது திறனைக் கொண்டு ஊதுபத்திகள் தயார் செய்தார்,” என்கிறார் அர்ஜுன்.
என்.ஆர்.குழுமத்தின் முக்கிய வர்த்தகம், சைக்கிள் பியூர் ஊதுவத்திகள் மற்றும் பூஜை பொருட்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. குழுமம், ரிப்பிள் பிரேகரன்ஸ் லிட் மூலம், ஏர்கேர் வாழ்வியல் பொருட்கள் தயாரிப்பிலும் விரிவாக்கம் செய்துள்ளது.
ரிப்பிள் பிராகரன்சஸ் கீழ், நிறுவனம், லியா மற்றும் IRIS Home Fragrances பிராண்ட்களை கொண்டுள்ளது. லியா பிராண்ட் ரூம் பிரஷ்னர்ஸ், கார் பிரஷ்னர்ஸ் , வாசனை ஊதுபத்திகள் ஆகியவற்றை வழங்குகிறது. IRIS Home Fragrances பரிசுப்பொருட்கள் மற்றும் உள் அலங்காரத் தேவைகளை பூர்த்தி செய்கிறது.
வர்த்தகத்தை புதுமையாக்கத்தால் விரிவாக்கம் செய்வது குழுமத்தின் முக்கிய உத்தியாக அமைகிறது. நிறுவனம் டின் பெட்டிகளில் இருந்து அட்டை பெட்டி பேக்கிங்கிற்கு முதலில் மாறியது. இது செலவுகளைக் குறைக்க உதவியது என்கிறார் அர்ஜுன்.
2011ல் என்.ஆர்.குழுமம், ராங்சன்ஸ் டிபென்ஸ் சொல்யூஷன் மூலம் பாதுகாப்புத் துறையிலும் நுழைந்தது. அதன் பிறகு, Senzopt மற்றும் Vyoda மூலம், ஐ.ஓ மற்றும் சோலார் பாசனத்தில் ஈடுபட்டது.
இன்று 75 நாடுகளில் செயல்பாடுகளைக் கொண்டுள்ள என்.ஆர் குழுமம் ஆண்டுக்குரூ.1,700 கோடி விற்றுமுதலை பெற்றுள்ளது. ஆண்டுக்கு, ரூ.1,000 கோடி மதிப்புள்ள 12 பில்லியன் ஊதுபத்திகளை விற்பனை செய்கிறது. அண்மையில் உற்பத்தியை மேலும் சீராக்க, நவீன தொழில்நுட்பத்தையும் புகுத்தியுள்ளது.
நிறுவனம் பியூர் பிரேயர் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள், திருக்கோயில்கள் ஸ்டீரிம்களை காண்பதோடு, புரோகிதர்களையும் தருவித்துக் கொள்ளலாம். அண்மையில், ஒரு ஊதுபத்தியில் இரண்டு வாசனை வரும் காப்புரிமை பெற்ற PFIS (Pure Fragrance Infusion System) நுட்பத்தையும் அறிமுகம் செய்துள்ளது.
“20 ஆண்டுகளுக்கு முன் நான் வர்த்தகத்தில் நுழைந்த போது இதன் வேர் ஆழமாக இருந்தது. இந்த பாரம்பரியத்தை முன்னோக்கிக் கொண்டு செல்லும் பொறுப்பு இருக்கிறது என்கிறார் அர்ஜுன்.
சந்தை போட்டி
துவக்கத்தில் இருந்தே போட்டி இருக்கிறது என்கிறார் அர்ஜுன். “என் தாத்தா வீட்டிலேயே ஊதுபத்திகளை தயார் செய்யத்துவங்கிய போது சந்தையில் பெரிய பிராண்ட்கள் இருந்தன. ஆனால் அவர் போட்டி கண்டு அஞ்சவில்லை. மாறாக விடாமுயற்சி மற்றும் உறுதி மூலம் அவர் சந்தையில் நிலைத்து நின்றார்,” என்கிறார் அர்ஜுன்.
விரிவாக்கம் ஒரு போதும் சவாலாக இல்லை என்கிறார் அர்ஜுன். எனினும், உள்ளூர் சந்தையில் முறைபடுத்தப்படாத வர்த்தககர்கள் தான் சவால் என்கிறார். ஊதுபத்தி சந்தையில் சைக்கிள் பியூர் 16 சதவீத சந்தை பங்கு கொண்டுள்ளது.
“சொந்தமான வாசனை ஆய்வுக் கூடம் கொண்டுள்ள ஒரு சில நிறுவனங்களில் எங்கள் நிறுவனமும் ஒன்று. மற்ற நிறுவனங்கள் வாசனையை பிற இடங்களிடம் இருந்து தருவிக்கின்றனர். இது தான் சந்தையில் எங்களை வேறுபடுத்திக்காட்டுகிறது,” என்கிறார் அர்ஜுன்.
நிறுவனம் சுற்றுச்சூழலுக்கு நட்பான உற்பத்தியில் கவனம் செலுத்துகிறது. கார்பன் நியூட்ரல் ஊதுபத்தி உற்பத்தி சான்றிதழும் பெற்றுள்ளது.
நிறுவனம் மீண்டும் வளர்க்கப்படும் காடுகளில் இருந்து பொருட்களை தருவிக்கிறது என்கிறார் அர்ஜுன். எங்கள் துறையில் ISO 45001:2018 சான்றிதழ் பெற்ற உலகின் முதல் நிறுவனம் என்றும் கூறுகிறார்.
சமூக நலன்
நிறுவனம், மைசூரு கோயில்களில் அளிக்கப்படும் மலர்களைக் கொண்டு, மறுசுழற்சி செய்து ஊதுபத்திகளை தயார் செய்கிறது. இந்த மலர்கள் அகற்றப்படும் போது சாக்கடைகளில் அடைத்துக்கொண்டு பாதிப்பை ஏற்படுத்தும்.
நிறுவனம் மாற்றுத்திறனாளிகளுக்கான ரங்கா ராவ் நினைவுப் பள்ளியை நடத்தி வருகிறது. என்.ஆர் அறக்கட்டளை மைசூரு குடிசைப்பகுதியிலும் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
சைக்கிள் பியூர் அகர்பத்தி, கிராமப்புற பெண்களுக்காக ஊரக, ஊதுபத்தித் தொகுப்புக்ளை உருவாக்குகிறது. என்.ஆர் குழுமம் 2009 மற்றும் 2010ல் தரத்திற்கான விருது பெற்றுள்ளது.
ஒன்பது Chemexcil விருதுகள், Visvesvaraya Industrial Trade Centre விருதுகள் உள்ளிட்டவற்றையும் வென்றுள்ளது.
எதிர்காலம்
நிறுவனம் எதிர்கால நோக்கில் புதுமையான திட்டங்களை கொண்டுள்ளது. ஓம் சாந்தி பிராண்ட் கீழ், பூஜா சம்கிரி வரிசைகளை அறிமுகம் செய்துள்ளது. லியா ரூம் பிரஷ்னர் மற்றும் கார் பிரஷ்னர் பிரிவிலும் வலுவான இருப்பைக் கொண்டுள்ளது.
அண்மையில் என்.ஆர்.குழுமம், குளியலறை பொருட்கள் பிரிவிலும் விரிவாக்கம் செய்துள்ளது. பியூர் பூஜா செயலி மூலம், ஸ்லோகங்கள் மற்றும் இல்ல பூஜைகளுக்கு உதவி வருகிறது.
ஆங்கில கட்டுரையாளர்: பலக் அகர்வால் | தமிழில்-சைபர்சிம்மன்