Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

7 வயதில் பார்வை இழந்தும்; சிஏ, எம்பிஏ முடித்து மாற்றுத்திறனாளிகளின் குரலாக இருக்கும் அபூர்வ் குல்கர்னி!

சிஏ முடித்து ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில்ட் எம்பிஏ பட்டம் பெற்றுள்ள பட்டதாரியான, பார்வை மாற்றுத்திறனாளி அபூர்வ் குல்கர்னி உயரிய விருதான Sarvshresth Divyangian விருது பெற்றிருக்கிறார்.

7 வயதில் பார்வை இழந்தும்; சிஏ, எம்பிஏ முடித்து மாற்றுத்திறனாளிகளின் குரலாக இருக்கும் அபூர்வ் குல்கர்னி!

Monday January 02, 2023 , 3 min Read

அபூர்வ் குல்கர்னி - அப்போது ஏழு வயதிருக்கும். பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தார். அடிக்கடி பள்ளியில் தவறி கீழே விழுந்துவிடுவார். இது அவரது குடும்பத்தினருக்குத் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து கண் பார்வையும் மங்கத்தொடங்கியது. வழக்கமான வேலைகளைக்கூட செய்துகொள்ள முடியாமல் போனது. பள்ளியில் ஆசிரியர் கரும்பலகையில் என்ன எழுதுகிறார் என்பது அவருக்குத் தெரியவில்லை.

ஏராளமான மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. கண் மருத்துவரையும் பார்த்தார்கள். கடைசியாக அவருக்கு ஏற்பட்டிருப்பது Stargardt நோய் என்பது கண்டறியப்பட்டது. இந்த மரபணு குறைபாடு ரெடினாவை பாதிக்கும். இந்த நோய் பாதிக்கப்பட்டவர்கள் முற்றிலும் கண் பார்வையை இழக்கமாட்டார்கள்.

ஆனால், பார்வைத்திறன் மிகவும் மோசமாக இருக்கும். சிறுவயதிலோ அல்லது இளமைப் பருவத்தின் தொடக்கத்திலோ இந்த பாதிப்பு ஏற்பட ஆரம்பிக்கும். படிப்படியாக மோசமாகிக்கொண்டே போகும்.

apoorv kulkarni

இந்த நோய் தாக்கம் காரணமாக அபூர்வின் அன்றாட வேலைகள் மாறிப்போயின. மற்றவர்களை சார்ந்து இருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. புத்தகங்களை யாராவது  அவருக்குப் படித்துக்காட்ட வேண்டும். அவருக்கு பதிலாக யாராவது தேர்வு எழுதவேண்டும். மற்ற மாணவர்கள் விளையாடும்போது அவரை சேர்த்துக்கொள்ள மறுத்தார்கள். இப்படிப்பட்ட சூழலில் அவருக்கு மரம் ஏறுவது, சைக்கிள் ஓட்டுவது போன்றவற்றில் ஆர்வம் பிறந்தது.

“அந்த வயதில் இப்படி ஒரு சூழலை சமாளிப்பது மிகவும் கடினமாக இருந்தது,” என்று அவர் சிறுவயது நாட்களை நினைவுகூர்ந்தார்.

அவர் தொடர்ந்து குறிப்பிடும்போது,

“ஒரு வகையில் சிறு வயதிற்கே உரிய அறியாமையும் உற்சாகமும் எனக்கு கைகொடுத்தது. அந்த வயதில் எதையும் பெரிதாக ஆராய்ந்து பார்க்கமாட்டோம். இதுபோன்ற பிரச்சனையின் தீவிரதன்மை என்ன என்பது அப்போது எனக்குப் புரியவில்லை,” என்கிறார்.

பிரச்சனையை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து முன்னேற பழகிக்கொண்டார். அதற்காக கூடுதல் முயற்சிகள் மேற்கொண்டார்.

ஒருகட்டத்தில் தொழில்நுட்பம் அவருக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக மாறியது. பாடபுத்தகங்களில் இருக்கும் நூற்றுக்கணக்கான பக்கங்களை அவரோ அல்லது அவரது பெற்றோரோ ஸ்கேன் செய்தனர். இது ஆப்டிகல் கேரக்டர் ரீடரில் ஃபீட் செய்யப்பட்டது.

மென்பொருள் உதவியுடன் அந்தப் பக்கங்களில் இருந்த வாசகங்கள் வாசித்துக்காட்டப்பட்டன. தொழில்நுட்பம் எத்தனை சக்தி வாய்ந்தது என்பது அபூர்விற்குப் புரிந்தது.

அன்று முதல் மாற்றுத்திறனாளிகளின் அன்றாட வாழ்க்கைக்கு உதவும் வகையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் அபூர்வ் தீவிரம் காட்டி வருகிறார். அதேபோல், கொள்கை வகுப்பவர்களும் அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்கத் தூண்டுகிறார்.

அபூர்விற்கு பார்வை குறைபாடு பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பித்து தற்போது 30 ஆண்டுகள் கடந்துவிட்டன. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவவேண்டும் என்பதில் அவர் தீவிர முனைப்புடன் இருந்து வருகிறார். தற்போது இவருக்கு 35 வயதாகிறது. சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான டிசம்பர் 3-ம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் Sarvshresth Divyangian விருது பெற்றுள்ளார்.

தற்போது அபூர்வ் ஆய்வுப் பணிகளை வழிநடத்தி வருகிறார். அத்துடன் OMI Foundation-ன் Centre of Inclusive Mobility தலைவராகவும் இருக்கிறார்.

ஓலா ரைட்-புக்கிங் ஆப் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்க உதவியுள்ளார். ஊழியர்களை பணியமர்த்தும்போது மாற்றுத்திறனாளிகளையும் இணைத்துக்கொள்ளவேண்டும் என்பது குறித்து மனிதவள மேம்பாட்டுத் துறையுடன் கலந்துரையாடியிருக்கிறார்.

“டாக்சியிலோ பேருந்திலோ ஏறி இறங்குவது மட்டும் பிரச்சனையில்லை. ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதில் பிரச்சனைகள் இருப்பதுதான் உண்மை. இதற்குத் தீர்வு காணும் வகையில் கொள்கைகள் வகுக்கப்படவேண்டும். இதில் என்னுடைய பங்களிப்பு இருக்கவேண்டும் என்று நினைத்தேன்,” என்கிறார்.

இந்த எண்ணத்தை செயல்படுத்தவும் செய்தார்.

“பேருந்துகளை வாங்கும்போதே இது தொடர்பான அம்சங்களைக் கவனிக்கும் வகையில் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வர ஊக்குவித்தேன்,” என்கிறார்.

அபூர்வ் On The Move என்கிற அறிக்கையை எழுதியிருக்கிறார். இது மாற்றுத்திறானிகளின் பயண அனுபவம் பற்றியது. உலக வங்கியின் நிபுணர்கள் இதை ஆய்வு செய்துள்ளனர்.

“முதியவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் பயண சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதில் இரண்டு அம்சங்களை நாம் கவனிக்கவேண்டியுள்ளது. இந்த சலுகையைப் பயனர்கள் போராடிப் பெறவேண்டியிருக்கிறது. அடுத்ததாக இப்படிப்பட்ட சலுகைகள் இருப்பது பலருக்குத் தெரிவதில்லை,” என்கிறார் அபூர்வ்.

“இப்படிப்பட்ட கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டிய துறைகள் அரசிடமிருந்து பணத்தைப் பெறுவதற்கு பல காலம் காத்திருக்கவேண்டியுள்ளது. இதுவும் இத்தகைய கொள்கைகள் நடைமுறைப்படுத்துவதற்கு தடையாக இருப்பதைப் பார்க்கமுடிகிறது,” என்கிறார்.

”நாங்கள் India Stack பயன்படுத்தி ஒரு தொழில்நுட்பத் தீர்வை உருவாக்கினோம். இதனால் மொத்த செயல்முறையும் டிஜிட்டல்மயமாக்கப்படுகிறது. எனவே, பயணம் செய்ய விரும்புபவர் அந்த குறிப்பிட்ட பயணத்திற்கான கட்டணத்தை மரியாதையான முறையில் செலுத்தலாம். மானியம் தொடர்பான பரிவத்தனை பேக் எண்டில் நடக்கும். ஆபரேட்டருக்கு பணம் கிடைத்துவிடும். பயனர்களுக்கு நிதிச்சுமை இருக்காது.

இந்தத் தீர்வை நாடு முழுவதும் அறிமுகப்படுத்துவதற்கு முன்பு சில குறிப்பிட்ட நகரங்களில் சோதனை முயற்சி செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது. இதற்காக அபூர்வ் குழுவினர் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், ஸ்மார்ட் சிட்டி திட்டம் ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

இத்தகைய நீண்ட பயணத்தைக் கடந்து வந்துள்ள அபூர்வ் ஆரம்பத்தில் ஒரு வேலையில் சேர மிகவும் சிரமப்பட்டுள்ளார். அதிலும் இவர் ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முடித்துள்ளார். மேலும், சார்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பும் முடித்திருக்கிறார்.

“நான் இந்திய நிறுவனங்கள் மட்டுமின்றி பன்னாட்டு நிறுவனங்களுக்கும் நேர்காணலுக்கு சென்றிருந்தேன். ஆனால், அவர்கள் என் திறமைக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. என் வேலையை திறம்பட செய்து முடிப்பதில் என் உடலில் இருக்கும் குறைபாடு எந்த விதத்தில் தடையாக இருக்கும் என்பதை மட்டுமே யோசித்தார்கள்,” என்கிறார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு மெழுகுவர்த்தி தயாரிப்பும் கூடை பின்னவும் கற்றுக்கொடுத்தால் போதாது என்று குறிப்பிடும் அபூர்வ் அவர்களுக்கு டிஜிட்டல் திறன்களில் பயிற்சியளிக்கப்படவேண்டும் என்கிறார்.

அதேசமயம் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குபவர்கள் அவற்றை மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தவேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கவேண்டும் என்கிறார்.

“வெப்3 தொழில்நுட்பம் நம்பிக்கையளிப்பதாக உள்ளது. ஆனால் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த உகந்ததாக இந்தத் தீர்வுகள் உருவாக்கப்படவேண்டும். அப்போதுதான் இதன் மதிப்பு உயரும். இதுபோன்ற தளங்கள் கிரியேடிவாக பயன்படுத்தப்பட ஊக்குவிக்கப்படும்,” என்கிறார்.

ஆங்கில கட்டுரையாளர்: ஃபெரோஸ் ஜமால் | தமிழில்: ஸ்ரீவித்யா