சென்னையில் 24 மணி நேர ஆட்டோ வாடகைச் சேவையை துவக்கியது உபெர்!
இணைய கால் டாக்சி நிறுவனமான உபெர் பெங்களூரு, சென்னை, தில்லி, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் வாடகை ஆட்டோ சேவையை அறிமுகம் செய்கிறது.
இணைய கால் டாக்சி நிறுவனமான உபெர் இந்தியாவில், 24 மணி நேர வாடகை ஆட்டோ சேவையை அறிமுகம் செய்துள்ளது.
இந்த சேவை ஆட்டோ மற்றும் அதன் டிரைவரை பல மணி நேரத்திற்கு வாடகைக்கு அமர்த்திக் கொள்ளவும், இடையே பல இடங்களில் நிறுத்திக்கொள்ளவும் வழி செய்கிறது. பெங்களூருவில் துவக்கப்பட்டுள்ள இந்த சேவை, சென்னை, மும்பை, தில்லி, ஐதராபாத் ஆகிய நகரங்களில் தற்போது செயல்பட இருக்கிறது.

ஒரு மணி நேரம் அல்லது பத்து கிமீ தொலைவுக்கு ரூ.169 எனும் கட்டணத்தில் இந்த சேவை துவங்குகிறது. அதிகபட்சமாக எட்டு மணி நேரத்திற்கும் பதிவு செய்து கொள்ளலாம் என உபெர் நிறுவனம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
"இது இந்தியாவில் முதலில் அறிமுகம் செய்யப்படும் புதிய சேவையாகும். டிரைவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என இருதரப்பினருக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாங்கள் எத்தகைய தீர்வுகளை வழங்குகிறோம், என்பதற்கான அடையாளாகும்,” என உபெர் இந்தியா மற்றும் தெற்காசிய சந்தை மற்றும் வகைகள் தலைவர் நிதிஷ் பூஷன் கூறியுள்ளார்.
டிரைவர்களுக்கான முகக்கவசம், கையுரைகள், சானிடைசர்கள், கிருமிநாசினிகள் ஆகியவை வாங்க உபெர் உலக அளவில் 50 மில்லியன் டாலர் ஒதுக்கியுள்ளது.
இந்தியாவில், செயல்பாடுகள் மீண்டும் துவங்கியுள்ள 70க்கும் மேற்பட்ட நகரங்களில் டிரைவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை விநியோகிக்கும் பணி ஏற்கனவே துவங்கி விட்டது.
உபெரின் செயலியில் உள்ள பாதுகாப்பு அம்சம், டிரைவர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் டிரிப்களை பூர்த்தி செய்ததும் பாதுகாப்பு உபகரணங்களை புதுப்பிக்க வலியுறுத்தும்.
கடந்த மாதம், உபெர் மற்றும் பஜாஜ் இணைந்து நாடு முழுவதும் உள்ள ஒரு லட்சம் ஆட்டோக்களில் பயணிகளுக்கும் டிரைவர்களுக்கும் இடையிலான பாதுகாப்பு ஸ்கிரீன் அமைக்க, கூட்டு ஏற்படுத்திக்கொண்டன.
மேலும், தில்லி, சென்னை, பெங்களூரு, குர்கான், ஐதராபாத், மும்பை உள்ளிட்ட 20 நகரங்களில் ஒரு லட்சம் ஆட்டோ டிரைவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை இந்த நிறுவனங்கள் வழங்கியுள்ளன.
கடந்த ஜூன் மாதம் உபெர், 24 மணி நேர நகரக்களுக்கு இடையிலான வாடகை வாகன சேவையை அறிமுகம் செய்தது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பல மணி நேரத்திற்கு டிரைவரை வாடகைக்கு அமர்த்திக்கொள்ளலாம்.
இந்த புதிய சேவை மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் சொந்த காரில் கிடைக்கக் கூடிய வசதியை மணிக்கு ரூ.189 எனும் கட்டணத்தில் பெறுவது சாத்தியமாகிறது.
செய்தி உதவி: பிடிஐ