அன்று உத்ரகாண்டில் பால்காரர்; இன்று 35 படங்களில் நடித்த சீன நடிகர்!
உங்கள் ஃபேஷனைத் தொடர நீங்கள் எவ்வளவு தூரம் செல்வீர்கள்? புரூஸ் லீயின் ரசிகரான தேவ் ரதுரியை, அவரது தற்காப்புக் கலைகள் மற்றும் நடிப்பின் மீதான ஈர்ப்பு உத்தரகாண்டின் குக்கிராமத்திலிருந்து சீனா வரை அழைத்து சென்றுள்ளது. 35க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வெற்றிகர சீனநடிகராக உருவெடுத்துள்ளார்.
உங்கள் ஃபேஷனைத் தொடர நீங்கள் எவ்வளவு தூரம் செல்வீர்கள்? புரூஸ் லீயின் ரசிகரான தேவ் ரதுரியை, அவரது தற்காப்புக் கலைகள் மற்றும் நடிப்பின் மீதான ஈர்ப்பு உத்தரகாண்டின் குக்கிராமத்திலிருந்து சீனா வரை அழைத்து சென்றுள்ளது. 35க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வெற்றிகர சீனநடிகராகவும், தொழில் முனைவராகவும் உருவெடுத்துள்ளது.
உத்தரகாண்டில் உள்ள தெஹ்ரி கர்வால் மாவட்டத்தின் கெம்ரியா எனும் குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் தேவ் ரதுரி. விவசாயக் குடும்பத்தை சேர்ந்த அவர், 5 உடன் பிறப்புகளுடன் ஒரு சிறிய கல் வீட்டில் வசித்து வந்துள்ளார். சொந்தமாக வீடு இல்லை, குடும்பம் பெரும் கஷ்டத்தில் வாடிக் கொண்டிருந்தது.
குடும்பத்தின் நிலை எல்லாம் அப்போது சிறுவனாக இருந்த தேவ்வுக்கு தெரியாது. அவரது வாழ்வின் லட்சியமே புரூஸ் லீ போன்று தற்காப்புக் கலை கற்க வேண்டும். லட்சிய மனிதனரான புரூஸ் லீயால் கவரப்பட்டு அவர் போன்றாக வேண்டும் என்ற லட்சியத்தையும் அடைந்த தேவ்வின் தெம்பூட்டும் கதை...

இலட்சிய மனிதரான புரூஸ் லீ...
1997ம் ஆண்டில் ஒரு நாள் பள்ளிக்கு சென்று திரும்பிய தேவ் வீட்டிற்கு வேகமாக ஓடிவந்தார். அந்த ஓட்டம் வேறு எதற்காகவுமில்லை. சிறுவனான தேவ், எப்படியோ சமாளித்து 'டிராகன்: தி புரூஸ் லீ' பட வீடியோ கேசட்டை வாடகைக்கு எடுத்துள்ளான். அப்படத்தை பார்க்கவே ஓடிவந்துள்ளார்.
அரசுப்பள்ளியில் படித்த அவருக்கு ஆங்கிலம் புரியவில்லை. ஏனெனில், அவர் 6ம் வகுப்பு படிக்கும் போது தான் ஏபிசிடி-யே கற்றுள்ளார். ஆனாலும், படங்களில் நடிகர்கள் மெதுவாக ஆங்கிலம் பேசியதால், மொழியை புரிந்துள்ளார். ஆனால், தேவ்விற்கு வசனங்கள் முக்கியமில்லை, அதிலுள்ள காட்சிகளும், புருஸ் லீ மட்டும் தான். தற்காப்பு கலையின் சூப்பர் ஸ்டாரான புரூஸ் லீயின் வாழ்க்கை அவரை கவர்ந்தது.
புரூஸ் லீ வாழ்க்கையை பற்றி தேவ் சேகரித்த கற்பனையான விவரங்கள், பள்ளி மாணவனாகயிருந்த அவரை இன்றைய நிலைக்கு வடிவமைத்துள்ளது. ஆம், தி ட்ராப்ட், மை ரூம்மேட் இஸ் எ டிடெக்டிவ், ஸ்ட்ரேஞ்ச் லெஜண்ட் ஆஃப் டாங் டைனஸ்டி, வுல்ஃப் பேக் உட்பட குறைந்தது 35 சீனப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடகங்களில் நடித்த ஒரு வெற்றிகரமான நடிகராக மாற்றியதுடன், 13 ரெஸ்டாரென்ட்களை துவங்கி தொழில் முனைவராகவும் ஆகி வியக்க வைக்கிறார். கூடுதல் சுவாரஸ்யம் என்னவெனில், தேவ்வின் உத்வேகப் பயணம் இன்று சீனாவிலுள்ள பள்ளிகளில் பாடமாகக் கற்பிக்கப்படுகிறது.
ஹீரோவாக வலம் வந்தாலும், படங்களில் காட்சிப்படுத்தவது போல் அவரடைந்த இன்றைய உயரத்தை அத்தனை எளிதில் அடையவில்லை. திரைப்படங்களில் நடிக்கும் ஆசையும் ஆர்வமும் தேவ்விற்கு பெருக்கெடுத்து இருந்தாலும், குடும்பம் இருக்கும் நிலையில் அவர்களுக்கு உதவாமல் இருக்க முடியவில்லை. குடும்பத்தின் பொருளாதார நிலையை உயர்த்த வேலைக்கு செல்ல முடிவெடுத்தார்.
பத்தாம் வகுப்பு வரை மட்டும் படித்திருந்த நிலையில் டெல்லிக்கு சென்று வேலைத் தேடியுள்ளார். பால் விற்பனை, கார் ஓட்டுதல், வெயிட்டர் என கிடைக்கும் எந்த வேலையையும் மறுக்காமல் உழைத்தார்.

பின், 1998ம் ஆண்டில், அவருடைய கனவினை நெருங்குவதற்காக சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அவரது சகோதரை நாடி மும்பைக்கு சென்றுள்ளார். பெருநகரத்தில் உயிர்வாழ்வதற்காக செக்யூரிட்டி பணியினை மேற்கொண்டார். கிடைக்கும் சந்தர்ப்பங்களில் சகோதரருடன் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று வந்துள்ளார்.
அங்குதான் முதன்முதலில் இந்துஸ்தானி தொடரை இயக்கிய மகாபாரதம் காவியத் தொடரில் துரியோதனனாக நடித்த புனித் இஸ்ஸரை சந்தித்துள்ளார். ஒரு நாள், தேவ் கேமரா முன் சில வசனங்களைப் பேசுவதற்கான வாய்ப்பையும் பெற்றார்.
"ஒரு நடிகராக மாறுவதற்காக எனக்கு கிடைத்த முதல்படி இது என்று உணர்ந்தேன். வாய்ப்பு கிடைத்ததும் பயங்கர உற்சாகத்துடன் கொடுத்த டைலாக்கை மனப்பாடம் செய்து கொண்டேன். ஆனால், 'லைட்ஸ், கேமரா, ஆக்ஷன்' என்று அவர் சொன்னவுடன் என் முகத்தில் ஒரு பிரகாசமான ஒளி பட, என் கால்கள் நடுங்க ஆரம்பித்தன. என்னால் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை. நடிப்பு அவ்வளவு எளிதல்ல என்பதை அன்று தான் உணர்ந்தேன்," என்று நினைவுக் கூர்கிறார்.
ஓட்டல் சர்வர் டூ ஓட்டல் முதலாளி!
மனம் உடைந்த தேவ், டெல்லிக்குத் திரும்பி உணவகம் ஒன்றில் பணியாளராகப் பணியாற்றினார். மேஜைகளையும் பாத்திரங்களையும் சுத்தம் செய்து கொண்டே அவரது நாட்கள் கழிந்தன.
"ஒரு நாள், என் நண்பர் என்னிடம் 'உன் கனவு என்னாச்சு? சீனாவுக்கு சென்று தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொண்டு நடிகராக ஆசைப்பட்டல? என்று கேட்டார் அவருக்கு பதிலளிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. ஆனால், புரூஸ் லீ மீதிருந்த ஈர்ப்பும், தற்காப்புகலையினை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் தணியவில்லை. காலம் கனிந்தது. சீனா செல்வதற்கான வாய்ப்பு வந்தது.”
சீனாவில் சில இந்திய உணவகங்களை வைத்திருந்த உணவக உரிமையாளரை சந்திக்கும் வாய்ப்பு பெற்றார் தேவ். சீனாவில் பணியாளராக பணிபுரிவதற்கான வாய்ப்பையும் வழங்கினார். இத்தனை ஆண்டுகளாக இதற்காக காத்திருந்த தேவ், வாய்ப்பினை இறுகப் பற்றிக்கொண்டார். 2005ம் ஆண்டு சீனாவுக்கு பறந்து, அங்கு பணியாளராக பணிக்கு சேர்ந்தார். ஆனால், அவருடைய நோக்கம் பணியாளராக பணிபுரிவது மட்டுமல்ல அல்லவா. அதனால், பகலில் ஓட்டலில் பணியாளராகவும், இரவில் தற்காப்பு கலையினையும் கற்றுக் கொண்டார்.

தற்காப்பு கலை பயிற்சியின் போது
"புரூஸ் லீயும் சைனீஸ் ரெஸ்டாரண்டில் பாத்திரம் கழுவும் தொழிலாளியாக வேலை செய்துள்ளார். நான் சீனாவுக்கு வந்தபோது என் வாழ்க்கையும் அப்படிதான் இருந்தது" என்றார் தேவ்.
வெறும் ஐந்தே ஆண்டுகளில், பணியாளராக இருந்து மேற்பார்வையாளராகி, பின்னர் பொது மேலாளராக ஆனார். சீனா முழுவதிலும் உள்ள முக்கிய மாவட்டங்களில் 13 உணவகங்களை தொடங்கி வெற்றிகரமான பிராண்டையும் நிறுவியுள்ளார் தேவ்.
"இந்த முன்னேற்றத்திற்குக் காரணம், நான் குறுக்குவழிகளை ஒருபோதும் நம்பியதில்லை. இணையத்தைப் பயன்படுத்தி தோல்வியுற்றவர்களின் நேர்காணல்களை கண்டு என்னுடைய திறனை மேம்படுத்தினேன். ஓட்டல் மேனேஜ்மென்ட் பட்டம் எதுவும் இல்லாமல், மாதம் ரூ.15,000 முதல் ரூ.3.5 லட்சம் வரை சம்பாதித்தேன். எட்டு மணிநேரம் வேலை செய்வதற்குப் பதிலாக, எனது திறமையை மேம்படுத்த 18 மணிநேரம் உழைத்தேன்," என்கிறார் சியானில் உள்ள ஆம்பர் பேலஸ் உணவகத்தின் உரிமையாளரான தேவ்.
சினிமாப் பாதைக்கு வழிவகுத்த உணவகம்!
2015ம் ஆண்டில் செங்டு மாகாணத்தில் ஒரு அழகிய உணவகத்தை நிறுவினார். தற்செயலாக, அவ்வுணவகத்திற்கு வந்த சீனே இயக்குனர் டாங் அதன் அமைப்பைக் கண்டு ஈர்க்கப்பட்டார். தேவ்வின் உணவகத்தில் ஒரு சிறிய காட்சியை படமாக்க திட்டமிட்டார். உணவகத்தில் படப்பிடிப்பு நடந்த போது, தேவ்விற்கு சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பையும் வழங்கினார். அங்கு தான் தொடங்கியது தேவ்வின் சினிமா பயணம்.
முதன் முதலில் 'ஸ்வாட்' எனும் தொலைக்காட்சி தொடரின்மூலம் அறிமுகமானார். இன்று 35க்கும் மேற்பட்ட திரைபடங்களில் நடித்த வெற்றிகரமான நடிகர். அதுமட்டுமின்றி தேவ்வின் உத்வேகப் பயணம் இன்று சீனப் பள்ளிகளில் பாடமாகக் கற்பிக்கப்படுகிறது. ஒரு இந்தியராக, சீனாவில் வெற்றியை ருசித்த பிறகு தேவ் அவரது வேர்களை மறக்கவில்லை.

சீனப் பள்ளிகளில் பாடமாகக் கற்பிக்கப்படும் தேவ் ரதுரியின் வாழ்க்கை கதை
அவரது ஊரைச் சேர்ந்த தொழிலாளர்கள் உட்பட கிட்டத்தட்ட 100 பேரை வேலைக்கு அமர்த்தியுள்ளார். அவர் சம்பாதிக்கும் பணத்தில் 30 சதவிகிதத்தை இந்தியா மற்றும் சீனாவில் உள்ள தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்கிறார். ஓட்டல் நிர்வாகத்தில் பட்டதாரியோ, பயிற்சி பெற்ற நடிகரோ இல்லை என்றாலும், மாணவர்களுக்கு கற்பிக்க சீனாவில் உள்ள பல பல்கலைக்கழகங்களுக்கு அழைக்கப்படுகிறார். அவரது வாழ்க்கையைப் பற்றி குறைந்தது 20 ஆவணப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இவையனைத்திற்கும் காரணம் அவரது அயரா விடாமுயற்சியும், கடின உழைப்பும்.
"நீங்கள் எதில் மேலவாது ஆர்வமாக இருந்தால், அந்த ஆர்வத்தை இறக்க விடாதீர்கள். உத்தரகாண்ட் மாநிலத்தின் ஒரு சிறிய மலைக்கிராமத்திலிருந்து நான் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத உயரங்களை அடைய இந்த மந்திரமே எனக்கு உதவியது," என்று குறிப்பிட்டார் தேவ்.

தகவல் மற்றும் படங்கள் உதவி: The better India