முதலீடே இல்லாமல் ஃபேஸ்புக்கில் தொடங்கிய தொழில்: ஆண்டுக்கு ரூ.3 கோடி டர்ன்ஓவர் செய்யும் 29 வயது பிரியங்கா!
சிறிய செல்போனில் ஆரம்பித்த தனது ஆடை விற்பனைத் தொழிலை இன்று 4,500 சதுர அடி தொழிற்சாலையாக மாற்றி, ஆண்டுக்கு ரூ.3 கோடி டர்ன் ஓவர் செய்யும் திருப்பூரைச் சேர்ந்த 29 வயது பிரியங்கா கடந்து வந்து வெற்றிக்கண்ட பாதை.
ஒவ்வொரு தொழில் முனைவோரின் பின்னணியிலும், அவர்களைத் தொழில்முனைவோர் ஆக்கியதற்கு உணர்வுப்பூர்வமான ஒரு கதை இருக்கும். பெரும்பாலும் அவை குடும்பப் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதாகத்தான் இருக்கும். திருப்பூரில் இயங்கும் ‘J & JP Clothing Company’ நிறுவனத்தின் உரிமையாளரான பிரியங்காவும் அப்படி தொழில்முனைவோர் ஆனவர்தான்.
தனது தந்தையின் தொழில் ஏற்பட்ட குடும்ப சரிவை, தன் தொழில் வளர்ச்சியால் மீட்டெடுத்து, சிறிய செல்போனில் ஆரம்பித்த தனது தொழிலை இன்று 4,500 சதுர அடி தொழிற்சாலையாக மாற்றி, ஆண்டுக்கு ரூ.3 கோடி டர்ன் ஓவர் செய்யும், வெற்றியாளராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் இந்த 29 வயது இளம்பெண்.
காலத்தின் கட்டாயம்
நான் ஆசைப்பட்டு படிச்சது நியூட்ரிசியன் படிப்பு. 2 மாதம் கல்லூரியில் அசிஸ்டெண்ட் புரொபசராக வேலையும் பார்த்தேன். ஆனால், அந்தச் சமயத்தில் குடும்பத்தில் திடீரென பொருளாதார பிரச்சினை ஏற்பட்டது. திருப்பூரில் கார்மென்ட்ஸ் கம்பெனி நடத்தி வந்த என் அப்பாவுக்கு திடீரென தொழிலில் பெரும் நஷ்டம்.
“மாதம் 200 பேருக்கு சம்பளம் கொடுத்து வந்த எங்களது வாழ்க்கை திடீரென தலைகீழாக மாறியது. சொந்த வீட்டில் இருந்து வாடகை வீட்டிற்கு மாறினோம். குடும்பத்தின் நிதிச் சிக்கலைச் சரிசெய்ய, நான் ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் மேலோங்கியது.“
ஏதாவது, தொழில் தொடங்க வேண்டும் என நினைத்தபோது, அப்போது கையில் முதலீட்டுக்கென பணம் எதுவும் இல்லை. காசு கொடுத்து உதவும் அளவிற்கு வீட்டிலும் பொருளாதாரச் சூழல் இல்லை. அப்போதைக்கு என் கையில் இருந்த போன் மட்டுமே எனக்கு நம்பிக்கைக் கொடுத்தது. அதையே, முதலீடாக நினைத்து, ஆன்லைனில் குளோத்திங் டிரேடிங் ஆரம்பித்தேன்.
கைகொடுத்த ஃபேஸ்புக்
இப்போதுபோல் சமூகவலைதளப் பக்கங்கள் அப்போது பிரபலமாக இருக்கவில்லை. ஃபேஸ்புக்கில்தான் நிறைய பேர் ஆக்டிவ்வாக இருந்தார்கள். எனவே, 2016ம் ஆண்டு அதில் ஒரு பக்கத்தை ஆரம்பித்து, ஆடைகளை விற்பது என முடிவு செய்தேன். நேரடியாக மொத்த விற்பனைக் கடைகளுக்குச் சென்று, அங்கிருந்த உடைகளை புகைப்படங்களாக எடுத்து, அதன் உண்மையான விலையுடன் எனக்கு பத்து, இருபது ரூபாய் லாபம் வைத்து, அதை ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தேன்.
“கொஞ்சம் கொஞ்சமாக ஆர்டர் வர ஆரம்பித்தது. நான் தினமும் ஃபேஸ்புக்கில் புதுப்புது பதிவுகள் போட்டேன். அதைப் பார்த்து மக்கள் முன்பதிவு (pre order) ஆர்டர் முறையில், என்னிடம் ஆர்டர் செய்தனர். அவர்கள் அனுப்பிய பணத்தில், நேரடியாக கடைக்குச் சென்று, அந்த உடைகளை வாங்கிக் கொண்டு வந்து கூரியர் செய்தேன். இப்படித்தான் இந்தத் தொழிலில் நான் வளர ஆரம்பித்தேன்,” என்கிறார் பிரியங்கா.
தொழில் ஓரளவுக்கு விரிவடையத் தொடங்கியதும், வாட்ஸ்-அப் மற்றும் இணையதளம் மூலம் தனது விற்பனையை ஆரம்பித்திருக்கிறார் பிரியங்கா. நேரடியாக வாடிக்கையாளருக்கு ஆடைகளை விற்பது மட்டுமல்லாமல், வீட்டிலிருந்தபடியே பெண்கள் ரீசெல்லர்களாக ஆடைகளை வாங்கி விற்கவும் வழி செய்திருக்கிறார். இதன்மூலம் அவரது தொழில் மேலும் விரிவடைந்துள்ளது.
ஏகப்பட்ட சவால்கள்
“ஆரம்பத்தில் இந்தத் தொழிலைப் பற்றி எதுவுமே எனக்குத் தெரியாது. எங்கள் வீட்டில் நான் வேலைக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்தெல்லாம் என்னைப் படிக்க வைக்கவில்லை. எதிர்காலத்தில் எனக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று சொல்லிச் சொல்லித்தான் என்னைப் படிக்கவே வைத்தார்கள். என்னால் வீட்டில் இருந்து இருந்து ரயில்வே நிலையத்திற்கு சென்று, எப்படி அடுத்த ஊருக்குச் செல்வது என்றுகூட தெரியாது. அப்படித்தான் என்னைப் பொத்தி பொத்தி வளர்த்தார்கள். குடும்பத்தைத் தாண்டி வேறு எதுவுமே தெரியாது. ஒண்ணுமே தெரியாமல்தான் தொழில் தொடங்கினேன்.
“அந்த காலங்களில் நிறைய ஐடியா தோன்றும். ஆனால், அதை எப்படி செயல்படுத்துவது என்றெல்லாம் எனக்குத் தெரியாது. என்னை தொழிலில் சரியாக வழிநடத்ததுவும் அப்போது யாரும் இல்லை. அதுவே எனக்குப் பெரிய சவாலாக இருந்தது. அப்போது யூடியூப் தான் எனக்கு உதவியாக இருந்தது. 2-3 வருடங்களுக்குப் பிறகுதான் தொழிலில் நான் நினைத்த அறிவைப் பெற முடிந்தது. நான் எப்படி இன்று இப்படி ஒரு தொழில்முனைவோர் ஆனேன் என்பதை நினைத்துப் பார்த்தால், எனக்கே ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. முதலீடே இல்லாமல் இன்று இப்படி ஒரு நிறுவனத்தை உருவாக்கி இருக்கிறேன் என்று சொன்னால் நிச்சயம் கேட்பவர்கள் நம்ப மாட்டார்கள்,” என பெருமையுடன் கூறுகிறார் பிரியங்கா.
மீஷோவைவிட சிறந்த மாடல்
2018ம் ஆண்டு தான் ஆரம்பித்த வெப்சைட் மாடம், Meesho-வைவிட சிறந்ததாக இருந்ததாகக் கூறும் பிரியங்கா, கொரோனா காலகட்டத்தில் அதற்கு நல்ல வரவேற்பு இருந்ததாகவும், ஆனாலும், போதிய தொழில்நுட்ப அறிவு இல்லாததால், அதனை பாதியில் விடும்படி ஆகி விட்டதாகவும் கூறுகிறார். தொடர்ந்து அந்த வெப்சைட்டை செயல்முறைப் படுத்தியிருந்தால், அது தற்போது மீஷோவைவிட அதிக மக்களிடம் சென்று சேர்ந்திருக்கும் என்கிறார் அவர்.
“திருப்பூரில் நன்றாக படித்தவர்கள் சென்னை அல்லது பெங்களூருக்கு தான் வேலைக்குச் செல்ல வேண்டும் என்று பெரும்பாலும் நினைக்கிறார்கள். இங்கேயே நல்ல வேலை கிடைக்குமென்ற புரிதல் அவர்களிடம் இல்லை. அதனால், ஆரம்பத்தில் சரியான, திறமைமிக்க தொழிலாளர்களை எங்கள் நிறுவனத்திற்குள் கொண்டு வருவதுதான் எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. பின்னர் அதையும் சாத்தியப்படுத்தினேன்.“
தற்போது என்னிடம் 60க்கும் மேற்பட்டோர் வேலை பார்க்கின்றனர். கல்லூரி மாணவ, மாணவியர் பலர் பார்ட் டைம்மாகவும் வேலை பார்க்கின்றனர். இது தவிர வீட்டிலேயே இருந்து வேலை பார்ப்பவர்கள் 5-6 பேர் உள்ளனர். என்னிடம் 10,000 ரீசேல்லர்கள் உள்ளனர். மிந்த்ரா, அஜியோ, மீஷோ, ஃபிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் தளங்களுக்கு மட்டுமின்றி, 10-15 கடைகளுக்கு நேரடியாகவும் ஆடைகள் தயாரித்துக் கொடுக்கிறோம், என்கிறார் பிரியங்கா.
செல்லப்பிராணிகளுக்கும் உடை
3,500 சதுர அடியில் இயங்கும் இவரது தொழிற்சாலையில், குழந்தைகள் மற்றும் பெண்களின் டிசர்ட், ஹூடிஸ், நைட் சூட்ஸ் போன்ற உடைகளை ஆரம்பத்தில் தைத்துக் கொடுத்து வந்துள்ளனர். தற்போது ஆண்களுக்குமான உடைகளோடு, செல்லப் பிராணிகளுக்கான உடைகளையும் தைத்துக் கொடுக்கின்றனர்.
“உடை இல்லாமல் மனிதர்களின் வாழ்க்கை இல்லை. ஆள் பாதி, ஆடை பாதி. எனவே, ஆடைகள் விசயத்தில் நாம் செய்வதற்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. ஆனால், அதனை சமூகப் பொறுப்புடன் செய்ய வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. என்ன உடை அணிகிறோம் என்பதை கருத்துடனும், காரணத்துடனும் மக்கள் அணியும் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்.“
குளோபல் பேமிலி நிட்வேர்
அதோடு, குளோபல் பேமிலி நிட்வேர் பிராண்ட் என்று இதுவரை எதுவும் இல்லை. எனவே, எங்கள் நிறுவனத்தை குளோபல் நிட்வேர் பிராண்டாக சர்வதேச அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் எனது எதிர்காலத் திட்டம், எனக் கூறுகிறார் பிரியங்கா.
கடந்த நிதியாண்டில் ரூ.3 கோடி டர்ன் ஓவர் செய்துள்ள ‘J & JP Clothing Company’, இந்த நிதியாண்டில் 4 கோடி டர்ன் ஓவரைத் தொடும் என எதிர்பார்ப்பதாக பிரியங்கா நம்பிக்கையுடன் கூறுகிறார்.