Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

'வானம் எல்லை அல்ல, அது ஆரம்பம்' - பினாகா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தை உயரத்திற்கு கொண்டு சென்ற விஞ்ஞானி ராதிகா!

17 ஆண்டுகள் வெற்றிகரமாக டிஆர்டிஓ-வில் அறிவியல் விஞ்ஞானியாக பணியாற்றிய ராதிகா, 2007ம் ஆண்டில் பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறைக்கான அதிநவீன தீர்வுகள் மற்றும் தொழில்நுட்பத்தை வழங்குவதற்காக பினாகா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தைத் தொடங்கினார்.

'வானம் எல்லை அல்ல, அது ஆரம்பம்' - பினாகா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தை உயரத்திற்கு கொண்டு சென்ற விஞ்ஞானி ராதிகா!

Tuesday October 08, 2024 , 4 min Read

17 ஆண்டுகள் வெற்றிகரமாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டிஆர்டிஓ) அறிவியல் விஞ்ஞானியாக பணியாற்றிய ராதிகா.பி, 2007ம் ஆண்டில் பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறைக்கான அதிநவீன தீர்வுகள் மற்றும் தொழில்நுட்பத்தை வழங்குவதற்காக 'பினாகா ஏரோஸ்பேஸ்' (PINAKA AEROSPACE) நிறுவனத்தைத் தொடங்கினார். நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியமான கடல்வழி, தரை அடிப்படையிலான மற்றும் வான்வழி அமைப்புகளை உள்நாட்டிலே உருவாக்குவதில் நிறுவனத்தின் முக்கிய தொழில்நுட்பங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

பெண்கள் அரிதாகவே காணப்பட்ட ஏரோஸ்பேஸ் துறையில் ராதிகா காலடி எடுத்து வைத்தார். ஆனால், அவர் ஒரு தனித்துவமான வாழ்க்கைப் பாதையை உருவாக்குவது இது முதல் முறை அல்ல. ஹைதராபாத்தில் பிஎஸ்சி முடித்த பிறகு, மைசூருவில் கணினி அறிவியலில் எம்எஸ்சி படித்தார். அதற்குக் காரணம் அப்பட்டப்படிப்பில் தேர்ச்சி பெறுபவர்கள், டிஆர்டிஓவில் இணைக்கப்படுவார்கள் என்று அப்போதைய அறிவியல் ஆலோசகராக இருந்த டாக்டர் வி.எஸ். அருணாச்சலம் அறிவித்திருந்தார்.

Pinaka Aerospace

மின்னணுப் போர்

1991ம் ஆண்டில், ராதிகா ஹைதராபாத்தில் உள்ள டிஆர்டிஓவின் பாதுகாப்பு மின்னணு ஆராய்ச்சி ஆய்வகத்தில் (டிஇஆர்எல்) பணியில் சேர்ந்தார். அடுத்த 17 ஆண்டுகளுக்கு அவர் வான்வழி மற்றும் தரை அடிப்படையிலான மின்னணு போர் மற்றும் தகவல் தொடர்பு நுண்ணறிவு அமைப்புகளின் துறையில் புதிய முயற்சிகளை முன்னெடுத்தார்.

ஆரம்பத்தில், எலக்ட்ரானிக்ஸின் "டிஜிட்டல் பகுதியை" புரிந்துகொள்வதற்கு அவர் அதிகம் மெனக்கெட வேண்டியிருந்ததாக நினைவு கூர்ந்தார். 5 வருடங்கள் ஆராய்ச்சிக் கூடத்தில் இருந்த பிறகு, மற்றொரு டிஆர்டிஓ ஆய்வகமான - டிஃபென்ஸ் ஏவியனிக்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிய பெங்களூருக்குச் சென்றார். ஹைதராபாத்தில் அவர் தரை மற்றும் கப்பல் அடிப்படையிலான மின்னணுப் போர்களில் பணிபுரிந்த நிலையில், ​​பெங்களூரில் அவரது பணி வான்வழி அமைப்புகளின் மீது மாறியது.

"டிஆர்டிஓவில் இருந்தபோது நேரடியாக ஆயுதப்படைகளுடன் இணைந்து பணியாற்றும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது. திட்டமிடல், நிரலாக்கம் மற்றும் விமானிகள் கணினியை திறம்பட பயன்படுத்துவதற்கு நாங்கள் பொறுப்பாக இருந்தோம்," என்று அவர் விளக்குகிறார்.

கார்கில் போர் மற்றும் ஆபரேஷன் பராக்ரம் ஆகியவற்றின் ஒரு பகுதியாக இருந்தது ராதிகாவுக்கு சிஸ்டம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றிய நுண்ணறிவைக் கொடுத்தது. அவர் டிஆர்டிஓவில் சேர்ந்த பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு, முன்னாள் IAF அதிகாரி சுபோத் ஷர்மாவுடன் இணைந்து தொழில்முனைவில் ஈடுபட முடிவு செய்தார். இது பினாகா ஏரோஸ்பேஸின் பிறப்பிற்கு வழிவகுத்தது.

தொடக்கத்தில் 3 ஊழியர்களுடன் ஒரு மென்பொருள் மற்றும் சேவை நிறுவனமாகத் தொடங்கப்பட்ட 'பினாகா ஏரோஸ்பேஸ்', பின்னாளில் ஒரு தயாரிப்பு சார்ந்த நிறுவனமாக வளர்ந்தது.

"அந்த காலக்கட்டத்தில், பாதுகாப்பு கொள்முதல் நடைமுறை (DPP) உருவாக்கபடவில்லை. அப்போது தேஜஸ் போர் விமானம் வடிவம் எடுத்துக்கொண்டு இருந்தது. ஆனால், அது இன்னும் பறக்கவில்லை. அச்சமயத்தில் நாங்கள் மென்பொருள் மேம்பாடு, சரிபார்ப்பு மற்றும் சேவைகளை வழங்கி கொண்டிருந்தோம். வாடிக்கையாளர்கள் எங்களை ஏற்றுக்கொள்ளத் தொடங்கியபோது, ​​நாங்கள் ஒரு தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறோம் என்பதை உணர்ந்தோம். பிறகு வடிவமைப்பு மற்றும் உற்பத்திக்கு மாறினோம்," என்று அவர் விவரித்தார்.

சிக்கலான மென்பொருளுக்கான சுயதீன சரிபார்ப்பு மற்றும் வான்வழி வன்பொருள்களின் பராமரிப்பு, பழுதுபார்ப்பு என பினாகா இன்று பலவிதமான சேவைகளை வழங்கி தொழில் துறையில் முன்னணியில் உள்ளது. நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியமான கடல்வழி, தரை அடிப்படையிலான மற்றும் வான்வழி அமைப்புகளை உள்நாட்டில் உருவாக்குவதில் நிறுவனத்தின் முக்கிய தொழில்நுட்பங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

3 ஊழியர்களுடன் தொடங்கிய நிறுவனம் இன்று பெங்களூரில் ஒரு லட்சம் சதுர அடியில் 200க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் பிரம்மாண்டமாக செயல்பட்டு வருகிறது. மேலும், ஏவுகணைகளுக்கான சீரமைப்பு அமைப்புகளையும் வழங்குகிறது, சமீபத்தில், பாதுகாப்பு உற்பத்தியை விரிவுப்படுத்தும் நோக்கில் பினாகா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தை ZETWERK கையகப்படுத்தி உள்ளது.

"பாதுகாப்புத் துறையில் நிதி திரட்டுவது கடினம். எங்களுக்கு நிதி கிடைத்தால் போதும் என்ற எண்ணத்தில் முதலீட்டாளர்களை தேடுவதில்லை. அவர்களும் அதே ஆர்வத்துடனும் நோக்கத்துடனும் பணியாற்ற வேண்டும். நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதப் படைகளால் எங்கள் பிரிவுகள் பயன்படுத்தப்படுவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ZETWERK எங்களுக்கு முழு சுதந்திரத்தை அளித்துள்ளது. அவற்றுடன் இணைந்து மிக அதிக எண்ணிக்கையில் தயாரிப்புகளை உற்பத்தி செய்து, லாபகரமான இடத்தில் இருக்கிறோம்," என்றார்.
Pinaka Aerospace

'மேக் இன் இந்தியா' மிக முக்கியம்...

OSA-AK SAM-8 ஏவுகணையின் சீரமைப்பு அமைப்பை மேம்படுத்தியதற்காக பிரதமர் நரேந்திர மோடியின் பாராட்டு முதல் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வழங்கும் சிறந்த விற்பனையாளர் விருது வரை, பினாகா அதன் பயணத்தில் பல பாராட்டுகளைப் பெற்றுள்ளது. குறிப்பாக மேக் இன் இந்தியா மற்றும் ஆத்மநிர்பார் பாரத் மீதான உந்துதலுடன் பினாகாவின் எதிர்காலம் குறித்து ராதிகா நம்பிக்கையுடன் இருக்கிறார்.

"நாட்டிற்குத் தேவையான பல அமைப்புகள் இங்கேயே உருவாக்கப்படுகின்றன. நாங்கள் மிகப்பெரிய திட்டங்களின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறோம். மேலும் உலகின் பிற பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்ய விரும்புகிறோம்," என்றார்.

ஒரு முன்னாள் விஞ்ஞானியாக, ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக, ராதிகா தொடர்ந்து ஆண்களுக்கான பணி என்று விளங்கும் தொழில் துறையில் சிறந்து விளங்கி சமூகத்தில் நிலவும் ஸ்டீரியோடைப்பை உடைத்து வருகிறார். ஆயினும் அதை அத்தனை எளிதில் அவர் செய்யவில்லை.

ஒரு விஞ்ஞானியாக பணிபுரிகையில், அவர் கர்ப்பமாக இருந்தபோது சிஸ்டமைச் சோதிக்க தயக்கம் காட்டாமல் ஏணியில் ஏறி விமானி அறைக்குச் சென்றுள்ளார். பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறையில் பயணிக்கும் ஒரு சில பெண் தொழில்முனைவோர்களில் ஒருவர் ராதிகா. இது அவர்களின் நிறுவனத்தை குறிப்பிடத்தக்க உயரத்திற்கு இட்டுச் சென்றது. இறுதியாக, பாதுகாப்பு துறையில் தொழில்பாதையை தொடங்க விரும்பும் பெண்களுக்கு ராதிகா சில முக்கிய ஆலோசனைகளை கூறினார்.

"முதலில், நீங்கள் ஒரு உறுதியான கல்வி அடித்தளத்தை வைத்திருக்க வேண்டும். நீங்கள் பாதுகாப்புத் துறையில் கால் பதிக்க விரும்பினால், நீங்கள் படித்தவற்றை பிராக்டிக்லாக அப்ளை செய்யும் பணியிடங்களுக்கு இன்டர்ன்ஷிப் திட்டத்தில் செல்லுங்கள். சிம்போசியங்களில் கலந்து கொள்ளுங்கள். மிக முக்கியமாக, உறுதியுடன் இருங்கள், ஏனென்றால் நீங்கள் பணி மற்றும் பாதுகாப்பு முக்கியமான தொழில்நுட்பங்களைக் கையாள போகிறீர்கள். மேலும் எந்த வகையான கேள்விகளுக்கும் பதிலளிக்க தயாராக இருங்கள். வேலை மற்றும் சொந்த வாழ்க்கை இரண்டையும் சமநிலையுடன் வைத்திருப்பதும் முக்கியம்.

'வானம் எல்லை அல்ல, அது ஆரம்பம் தான்" என்று நிறைவாக கூறி முடித்தார்.