ஜியோ-ஹாட்ஸ்டார் டொமைனை வாங்கிய ஆப் டெவலப்பர் - நிதியுதவி கேட்டு ரிலையன்ஸுக்கு கடிதம்!
ஜியோ-ஹாட்ஸ்டார் கூட்டிணைவு நடந்தால், ஜியோ-ஹாட்ஸ்டார் டொமைனை ரிலையன்சிடம் விற்றால் கேம்பிரிட்ஜில் மேல் படிப்பைத் தொடரும் அவரின் கனவு நிறைவேறும், என்று கடிதம் எழுதியுள்ளார் டெல்லியைச் சேர்ந்த டெவலப்பர்.
ஆப் டெவலப்பர் ஒருவர் ரிலையன்ஸ் ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனங்களின் கூட்டிணைவை எதிர்நோக்கி ஜியோ-ஹாட்ஸ்டார் டொமைனை வாங்கியுள்ளார். இதோடு தனது மேல்படிப்புக்கு ரிலையன்ஸ் நிதியுதவியையும் கோரி அந்நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றையும் தீட்டியுள்ளார்.
ஜியோ-ஹாட்ஸ்டார், ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் மிகப்பெரிய ஊடக நிறுவனங்களின் கூட்டிணைவாகும் இது. 8.5 பில்லியன் டாலர் ஒப்பந்தமான ஜியோ சினிமா-டிஸ்னி ஹாட்ஸ்டார் ஒப்பந்தம் நவம்பரில் கைகூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஆப் டெவலப்பர் எழுதிய கடிதம் https://jiohotstar.com-ல் வெளியிடப்பட்டது. அதில் அவர் கூறியதாவது:
“இந்த டொமைனை நான் வாங்கியதன் நோக்கம் எளிமையானதே. இந்த ஜியோ-ஹாட்ஸ்டார் கூட்டிணைவு நடந்தால் நான் கேம்பிரிட்ஜில் என் மேல் படிப்பைத் தொடரும் கனவு நிறைவேறும்,” என்று கூறியுள்ளார். கடிதத்தின் முடிவில் ‘a dreamer' என்று கையெழுத்திட்டுள்ளார் அவர்.
டெல்லியைச் சேர்ந்த இந்த ஆப் டெவலப்பர் தற்போது ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஐபிஎல் ஸ்ட்ரீமிங் ஒப்பந்தத்தை இழந்த பிறகே டிஸ்னி + ஹாட்ஸ்டார் பயனர்களை இழந்து வருவதாக எங்கோ ஒரு செய்தி வெளியானதை வாசித்திருக்கிறார். எனவே, டிஸ்னி ஒன்று ரிலையன்ஸுக்கு விற்க வேண்டும் இல்லையெனில் கூட்டிணைவு ஒப்பந்தம் நிறைவேற்றிக் கொள்ளப்பட வேண்டும் என்ற செய்தியையும் இவர் அறிந்து வைத்துள்ளார்.
“ஜியோ சினிமா ஹாட்ஸ்டாரை வாங்கினால் அவர்கள் இதற்கு ஜியோ-ஹாட்ஸ்டார்.காம் என்று பெயரிடலாம் என்று யூகித்தேன். நான் டொமைனுக்காக செக் செய்த போது இதே டொமைன் கிடைக்கப்பெற்றது. இதனால் உற்சாகமடைந்தேன் எனவே, இந்த மெர்ஜர் நடந்தால் நான் கேம்பிரிட்ஜில் படிக்கும் என் கனவு நிறைவேறும் என்று கருதினேன்,” என்று தன் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரிலியன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் Viacom 18, வால்ட் டிஸ்னியின் ஸ்டார் இந்தியா நிறுவனங்களின் கூட்டிணைவு வரும் நவம்பரில் அனைத்து ஒழுங்குமுறை ஆணைய நிகழ்முறைகளுக்குப் பிறகு கைகூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டிணைவின் மதிப்பு 8.5 பில்லியன் டாலர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மெகா கூட்டிணைவு கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.