Sunita Williams returns: பத்திரமாக பூமி திரும்பிய வீரர்கள் - விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் செய்த சாதனைகள் என்னென்ன?
வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமி திரும்பி விட்டார் சுனிதா வில்லியம்ஸ். 286 நாட்கள் விண்ணில் தங்கி இருந்த அந்த 59 வயது இரும்புப்பெண், 150க்கும் மேற்பட்ட அறிவியல் தொழில்நுட்பப் பரிசோதனைகளில் சுமார் 900 மணி நேர ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கிறார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 286 நாட்களுக்குப் பிறகு வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பி விட்டார் சுனிதா வில்லியம்ஸ். அவருடன் புட்ச் வில்மோர் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சக பணியாளர்களான அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக், ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோரும் பூமிக்கு திரும்பியுள்ளனர்.

Image courtesy : NASA
விண்வெளியில் சிக்கிக்கொண்ட வீரர்கள்
சுனிதா வில்லியம்சும், புட்ச் வில்மோரும் போயிங் ஸ்டார்லைனர் மூலமாக கடந்தாண்டு ஜூன் 5ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றனர். எட்டு நாள் பயணமாக சென்ற அவர்கள் எதிர்பாராத நிகழ்வுகளால் அங்கே மாதக்கணக்கில் தங்க நேரிட்டு விட்டது.
கடந்த 2003ம் ஆண்டு விண்வெளியில் இருந்து திரும்பும் போது கல்பனா சாவ்லாவின் விண்கலம் வெடித்து சிதறியது. இதில் கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 பேரும் உயிரிழந்தனர். இதனால், சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்பும் பயணத்திலும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்பட்டுவிடக் கூடாதே என மக்கள் பயத்தில் இருந்தனர்.
இதனால் எப்போது சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அப்போதிருந்தே ஆரம்பமாகி விட்டது. விஞ்ஞானிகள் அவர்களை பத்திரமாக பூமி அழைத்து வர ஒருபுறம் தேவையான முயற்சிகளைச் செய்து கொண்டிருந்த வேளையில், சுனிதா வில்லியம்ஸ், அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதால், அவர் பத்திரமாக பூமிக்குத் திரும்ப வேண்டும் என அமெரிக்க மக்களோடு, இந்திய மக்களும் சேர்ந்து பிரார்த்தனை செய்து வந்தனர்.

Image Courtesy : NASA
குஜராத் மக்கள் கொண்டாட்டம்
இன்று (19.03.2025) காலை, இந்திய நேரப்படி 3.27 மணிக்கு சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் டிராகன் விண்கலம் மூலம் பாதுகாப்பாக ஃபுளோரிடா கடலில் தரையிறங்கினர். மீட்புக் குழுவினர் அவர்களைப் பத்திரமாக அழைத்துச் சென்றனர். மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு சுனிதா உள்ளிட்ட அனைத்து வீரர்களும் ஆரோக்கியமாக இருப்பதாக நாசா அறிவித்துள்ளது.
59 வயதான சுனிதா வில்லியம்ஸ், சிரித்த முகத்துடன் விண்கலத்தில் இருந்து வெளியில் வந்த காட்சிகளை நாசா நேரடி ஒளிபரப்பு செய்தது. சுனிதா நல்லபடியாக பூமிக்குத் திரும்பி வந்த மகிழ்ச்சியை, அவரது தந்தை பிறந்த குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள ஜூலாசன் கிராமத்தினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். ஊரே விழாக்கோலம் பூண்டு சந்தோசத்தில் திளைத்துள்ளது. முன்னதாக பிரதமர் மோடியும், சுனிதா வில்லியம்ஸை இந்தியாவுக்கு வரவேற்றுள்ளார்.

Image Courtesy : NASA
யார் இந்த சுனிதா வில்லியம்ஸ்?
கல்பனா சாவ்லாவைத் தொடர்ந்து நாசாவில் பணிபுரியும் இரண்டாவது இந்திய வம்வாவளி அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஆவார். 1965ம் ஆண்டு அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் பிறந்த இவருடைய அப்பா தீபக் பாண்டியா, குஜராத் மாநிலத்தின் அமதாபாத்தை பூர்வீகமாகக் கொண்டவர். தீபக் பாண்டியா, 1958ம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறினார். சுனிதாவின் அம்மா போனி பாண்டியா. சுனிதாவின் கணவர் மைக்கேல் வில்லியம்ஸ். அவரும் ஒரு விமானியாக பணியாற்றியவர். தற்போது அவர் காவல்துறையில் பணியாற்றி வருகிறார்.
சுனிதா அமெரிக்க கடற்படை அகாடமியில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அவர் ஒரு திறமையான போர் விமானியும்கூட. கல்பனா சாவ்லாவுக்கு அடுத்தபடியாக, 1998ம் ஆண்டு சர்வதேச விண்வெளி நிலையத்தின் 'எக்ஸ்பெடிஷன் -14' குழுவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதாவை நாசா சேர்த்துக் கொண்டது
சுனிதா இதுவரை 30 வகையான விமானங்களை இயக்கியுள்ளார். அதில் அவர் 2,700 மணி நேரம் பறந்த அனுபவத்தையும் பெற்றிருக்கிறார். பூமியில் செய்த சாதனைகளும், சாகசங்களும் போதாதென்று, அவர் விண்வெளியிலும் பல சாதனைகளைச் செய்திருக்கிறார்.

சக விண்வெளி வீரர்களுடன் சுனிதா வில்லியம்ஸ் - Image Courtesy : NASA
சுனிதா வில்லியம்ஸ்] செய்த சாதனைகள்
ஒன்பது மாதங்களுக்கும் மேலாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கிய முதல் பெண் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் சுனிதா வில்லியம்ஸ். ஆனால் இது சுனிதாவின் முதல் வரலாற்று சாதனை அல்ல.
8 ஆண்டுகள் கடுமையான பயிற்சிக்கு பின்னர், கடந்த 2006ம் ஆண்டு டிசம்பர் 5ந் தேதி டிஸ்கவரி விணகலம் மூலம் முதன் முதலாக விண்வெளிக்குப் பயணித்தார் சுனிதா வில்லியம்ஸ். சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 14-வது குழுவின் உறுப்பினராக பயணித்த சுனிதா, அதன் பொறியியல் வல்லுநர் பணியை மேற்கொண்டார். அப்போது அவர், 29 மணி நேரம் விண்நடை மேற்கொண்டு, சாதனை படைத்தார்.
இதுவே இதுவரை ஒரு பெண் பதிவு செய்த மிக நீண்ட விண்வெளி நடையாகும். மேலே குறிப்பிட்ட இந்த காலகட்டத்தில் அவர் நான்கு முறை விண்வெளியில் நடந்துள்ளார். விண்வெளி ஆய்வுகளை நிறைவு செய்துவிட்டு 2007-ம் ஆண்டு ஜூன் 22-ல் பூமிக்கு திரும்பியது சுனிதா வில்லியம்ஸ் குழு.

Image Courtesy : NASA
நான்கு விண்கல அனுபவம்
2012-ஆம் ஆண்டு மீண்டும், விண்வெளிக்கு பயணித்த சுனிதா, சர்வதேச விண்வெளி நிலையத்தில் 4 மாதங்கள் தங்கியிருந்து பல்வேறு ஆராய்ச்சிகளை செய்தார். அதன் தொடர்ச்சியாக 2015ல் வர்த்தக அடிப்படையிலான நாசாவின் விண்வெளி பயணங்களுக்கான வீரராக அறிவிக்கப்பட்டார் சுனிதா வில்லியம்ஸ்.
இதன் பின்னர், போயிங், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து அவர்களின் விண்கலங்களை ஓட்டும் பயிற்சியைப் பெற்றார். இதனடிப்படையில்தான் கடந்த ஆண்டு (2024) ஜூன் 5-ந் தேதி மீண்டும் விண்வெளிக்குப் புறப்பட்டார் சுனிதா வில்லியம்ஸ். 8 நாட்கள் மட்டுமே திட்டமிடப்பட்ட இந்த பயணம், தற்போது 9 மாதங்களுக்குப் பின்னர் நிறைவு பெற்றுள்ளது.
இதுவரை விண்வெளி வீரர், வீராங்கனைகள் அதிகபட்சமாக இரண்டு வெவ்வேறு விண்கலங்களில் மட்டுமே பயணம் செய்துள்ளனர். ஆனால், சுனிதா வில்லியம்ஸ் ஸ்பேஸ் ஷட்டில், சோயூஸ், போயிங் ஸ்டார்லைனர், ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் ஆகிய நான்கு வெவ்வேறு விண்கலங்களில் பயணம் செய்த அனுபவத்தைப் பெற்றிருக்கிறார்.

சக விண்வெளி வீரர் புட்ச் வில்மோருடன் சுனிதா - Image Courtesy : NASA
ஆர்த்ரோஸ்பைரா சி
தனது மூன்று பயணத்திலும் சேர்த்து மொத்தமாக ஒன்பது முறை விண்வெளியில் நடந்துள்ளார் சுனிதா. இந்தக் காலகட்டத்தில் மொத்தம் 62 மணி நேரம் 6 நிமிடங்களை அவர் விண்வெளி நடையில் செலவிட்டுள்ளார்.
அதோடு, விண்வெளியில் 900 மணிநேரங்கள் மற்றும் 190 பரிசோதனைகளை தனது சக விண்வெளி வீரரான புட்ச்சோடு சேர்ந்து சுனிதா வில்லியம்ஸ் மேற்கொண்டுள்ளார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் வீரர்கள் வெளியிடும் கார்பன்-டை-ஆக்சைடை ஆக்சிஜனாக மாற்றும் 'ஆர்த்ரோஸ்பைரா சி' (Arthrospira c) என்ற நுண்பாசியை வெற்றிகரமாக அவர்கள் வளர்த்துள்ளனர்.

Image Courtesy : NASA
லெட்யுஸ் கீரைச்செடி
எதிர்காலத்தில் நீண்ட நாள்கள் விண்வெளிப் பயணம் மேற்கொண்டால் விண்வெளியில் பயிர்த் தொழில் செய்து உணவை உற்பத்தி செய்ய முடியுமா என ஆய்வு செய்ய லெட்யுஸ் எனப்படும் கீரைச் செடியை வளர்த்து ஈர்ப்பு விசையின் இழுவை அற்ற விண்வெளியில் தாவர வளர்ச்சி குறித்து ஆய்வுகளையும் அவர் மேற்கொண்டார்.
இதேபோல், ஆவி பறக்கும் சூடான உணவிலிருந்தும் வியர்வை மூலம் ஆவியாகும் நீர் விண்வெளி நிலையத்தின் காற்றில் கலந்துவிடும். இந்த நீரைப் பிரித்து எடுக்கும் புதிய கருவி ஒன்றை வடிவமைத்துள்ளனர். இந்தக் கருவியையும் அவர் பரிசோதனை செய்துபார்த்தார்.
ரோடியம் உயிரி உற்பத்திப் பரிசோதனையில் விண்வெளி நிலையத்தில் ஈஸ்ட் போன்ற பாக்டீரியா வளர்ச்சி குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இதில் சுனிதாவும் பங்கு கொண்டார். விண்வெளி நிலையத்தின் உள்ளே சுவர்களில் வாழும் நுண்ணுயிரிகளை இனம் கண்டு சோதனை செய்தார்.
பதப்படுத்தி நீண்ட நாள்கள் வைக்கப்பட்ட உணவில் ஊட்டம் குறையும். ஈஸ்ட் போன்ற நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தி உணவில் உள்ள வைட்டமின்கள் போன்ற ஊட்டச் சத்துகளைத் தயாரிக்கும் உயிரித் தொழில்நுட்ப ஆய்வுகளில் அவர் ஈடுபட்டார்.
இப்படிச் சிறிதும் பெரிதுமாக 150-க்கும் மேற்பட்ட அறிவியல் தொழில்நுட்பப் பரிசோதனைகளில் சுமார் 900 மணி நேர ஆராய்ச்சியை அவர் விண்வெளி ஆய்வு மையத்தில் மேற்கொண்டிருக்கிறார்.

எதிர் நோக்கி இருக்கும் சவால்கள்
பூமியில் வாழ்வதே கடினம் எனும் சூழல் உருவாகி வருகிறது. இதில் விண்வெளியில் வாழ்வதெல்லாம் அவ்வளவு எளிதான காரியமல்ல... தற்போது வெற்றிகரமாக சுனிதா தனது குழுவினரோடு பூமிக்குத் திரும்பி விட்டாலும், அவர்கள் விண்வெளியில் இருந்ததால் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்புகளைச் சந்தித்திருப்பார்கள். அதில் இருந்து மீண்டு வர அவர்களுக்கு வருடக்கணக்கில் காலம் தேவைப்படலாம் என்கிறார்கள்.
அதாவது, விண்வெளியில் தொடர்ந்து ஈர்ப்பு விசை இல்லாத சூழலில் இருக்கும்போது, தசை மற்றும் எலும்புகளின் நிறை விரைவாக குறையத் தொடங்குகிறது. முதுகு, கழுத்து, கெண்டைக்கால் ஆகிய பகுதிகளில் உள்ள, நமது உடல் அமைப்பை தீர்மானிக்க உதவும் தசைகளை மிகவும் பாதிக்கின்றன.
இதேபோல், விண்வெளி வீரர்கள் ஈர்ப்பு விசையுடன் பூமியில் இருக்கும்போது, தங்களின் எலும்புகளை பயன்படுத்துவதுபோல, விண்வெளியில் பயன்படுத்தாததால், அவர்களின் எலும்புகளில் உள்ள சத்துகள் நீங்கி, அவை வலிமையை இழக்கத் தொடங்குகின்றன. விண்வெளி வீரர்கள் விண்வெளியில் செலவிடும் ஒவ்வொரு மாதமும் 1-2% எலும்பு நிறை இழக்க நேரிடும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். பூமியில், வயதான ஆண்களும் பெண்களும் ஒவ்வொரு ஆண்டும் 0.5%-1% என்ற விகிதத்தில் எலும்பு நிறை இழக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உடற்பயிற்சி
பூமிக்குத் திரும்பிய பிறகு, விண்வெளி வீரர்களின் எலும்பு நிறை இயல்பு நிலைக்குத் திரும்ப நான்கு ஆண்டுகள் வரை ஆகலாம். அதோடு, அவர்களது முதுகெலும்பு வளர்ந்து, உயரம் கூடுதல், கண்பார்வை பாதித்தல் போன்ற பிரச்சினைகளையும் எதிர்கொள்கின்றனர்.
முடிந்தவரை இந்த உடல்நலப் பிரச்சினைகளைத் தடுக்க சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி இருக்கும் வீரர்கள் தினமும் இரண்டரை மணி நேரம் உடற்பயிற்சியை மேற்கொள்கின்றனர். சைக்கிளிங், துடுப்பு போடுதல், உள்ளிட்ட உடற்பயிற்சிகளை ஒருங்கிணைந்து செய்யக்கூடிய E4D என்ற கருவியை சர்வதேச விண்வெளி நிலையத்தில் விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.
ஆனால், இந்த உடற்பயிற்சிக் கருவிகளைப் பயன்படுத்தியும் விண்வெளியில் இருந்தவாறே பூமியில் சில சாதனைகளையும் படைத்துள்ளார் சுனிதா வில்லியம்ஸ்.

Image Courtesy : NASA
பறந்தபடியே நடந்து சாதனை
விண்வெளி நிலையத்தின் ரேடியேட்டரில் அம்மோனியா கசிவை சரிசெய்ய சுனிதா மூன்று விண்வெளி நடைப்பயணங்களை மேற்கொண்டுள்ளார். இது மட்டுமல்லாமல், அப்போது, விண்வெளியில் மராத்தானில் ஈடுப்பட்ட முதல் நபர் என்ற சாதனையையும் புரிந்துள்ளார். புகழ்பெற்ற பாஸ்டன் மராத்தானில் பங்கேற்க பதிவு செய்திருந்த சுனிதா, விண் பயணம் மேற்கொண்டதால், 2012-ஆம் ஆண்டு விண்வெளி நிலையத்தில் உள்ள டிரெட்மில்லில் நடந்து நான்கரை மணி நேரத்தில் பாஸ்டன் மராத்தானுக்காக நிர்ணயித்த தூரத்தை கடந்தார்.
இதேபோல், விண்வெளியில் டிரையத்லான் மேற்கொண்டு சாதனை படைத்தார். எதிர்ப்பு பயிற்சிகளைப் பயன்படுத்தி நீச்சல் அடித்து, நிறுத்தி வைக்கப்பட்ட கைக்கிளை ஒட்டி, டிரெட்மில்லில் நடந்து டிரையத்லானை நிறைவு செய்தார்.
பகவத் கீதை சர்ச்சை
தனது முந்தைய விண்வெளி பயணத்தின் போது, தன்னுடன் பகவத் கீதை மற்றும் சமோசாவை எடுத்துச் சென்றதாக அவர் பேட்டியொன்றில் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால்,
“பகவத் கீதை மற்றும் சமோசா இவை இரண்டுமே என்னுடைய மனதிற்கு மிகவும் நெருக்கமானவை. எனது தந்தை எனக்கு அளித்த பரிசு பகவத் கீதை. பூமியில் உள்ள மனிதர்கள் போலவே விண்வெளியிலும் நான் இருக்கிறேன் என்பதை உணர்த்துவதற்கு இது உதவுகிறது,” என இதற்கு உரிய விளக்கம் தந்தார் சுனிதா வில்லியம்ஸ்.
சுனிதாவின் கணவர் பெயர் மைக்கேல் ஜெ. வில்லியம்ஸ், அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. சுனிதா வில்லியம்சின் பூர்வீக இடமான அகமதாபாத்திலிருந்து பெண் குழந்தை ஒன்றை தத்து எடுத்து வளர்க்க ஏற்கெனவே விருப்பம் தெரிவித்திருந்தார். சுனிதாவுக்கு 2008-ஆம் ஆண்டு, மத்திய அரசு பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.