Motivational Quote | உங்களிடமே நீங்கள் கருணை காட்ட வேண்டும். எப்போது?
எது வெற்றி, எது தோல்வி என்பதை துல்லியமாக வரையறுக்கும் வின்ஸ்டன் சர்ச்சில், இது இரண்டையும் தாண்டி எது முக்கியம் என்பதையும் சொல்கிறார்.
வாழ்க்கையில் வெற்றி, தோல்வி இரண்டையும் ஆரத் தழுவுவதன் முக்கியத்துவத்தை ஆராய வேண்டும். மீண்டெழுதல் சாத்தியம் என்பதை மனதில் வளர்த்தெடுக்க வேண்டும். தோல்வியிலிருந்து, வீழ்ச்சியிலிருந்து மீண்டும் வளர்வோம் என்ற மனப்பான்மை மிகவும் நிறைவான வெற்றிகரமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்பதை கண்டடைவது அவசியம்.
நாம் எல்லோரும் வெற்றிதான் வாழ்க்கையின் ஒரே இலக்கு என்ற நோக்கில், ஒரே திக்கில் செல்வதனால் சரிவு ஏற்படும்போதும், பின்னடைவு ஏற்படும்போதும் மீண்டு எழுவது எப்படி சாத்தியம் என்பதையும், மன உறுதியையும் இழந்து விடுகின்றோம்.
கடினமான தருணங்களில்தான் நமது செயலுறுதியின் உண்மையான மதிப்பு பிரகாசமாக வெளிவரும்.
"SUCCESS IS NOT FINAL, FAILURE IS NOT FATAL: IT IS THE COURAGE TO CONTINUE THAT COUNTS."
வின்ஸ்டன் சர்ச்சிலின் இந்தப் புகழ்பெற்ற மேற்கோள் சொல்வது இதுதான்:
“வெற்றி என்பது இறுதியானது அல்ல, தோல்வி என்பது மரணமும் அல்ல: மீண்டெழுந்து தொடர்வதற்கான உத்வேகமே முக்கியம்.”
சர்ச்சில் பொன்மொழியின் சாராம்சம்
புனித ஸ்தலங்கள் அல்ல, புனித யாத்திரைகளே முக்கியம் என்று பிரபல வீதி நாடகாசிரியர் பாதல் சர்க்காரின் ஒரு நாடகத்தில் வரும் வசனம் போல் பயணம்தான் முக்கியம், போய்ச்சேருமிடமல்ல.
வெற்றி நமக்கு ஒரு நிறைவான மனநிலையை அளித்தாலும் வெற்றியே நமது முன்னேற்றத்திற்கு குறுக்கீடாகவும் அமைந்துவிடும். மறுபுறம், தோல்வி என்பது வளர்ச்சிக்கு ஓர் ஊக்கியாக இருக்கலாம், நமது தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு முன்னேற நம்மைத் தூண்டுவது தோல்வியே.
தோல்வி ஏற்பட்டால் உடனே துவண்டுபோய் எல்லாம் முடிந்து விட்டது என்பதல்ல. அதையும் மீறி நம் பணிகளில் தொடர்வதுதான் வின்ஸ்டன் சர்ச்சில் கூற வருவது. நாஜி ஜெர்மனியின் படையெடுப்புக்கு எதிராக அவருடன் இருந்தவர்கள், அரசியல் நண்பர்கள் கூட ஹிட்லர் அளித்த சமாதான தூதை ஏற்று சர்ச்சிலை அதற்குப் பணிவதே உசிதம் என்று கூறி, அவரை பணிந்து போகவே அழைத்தனர்.
ஆனால், அவரோ மக்களின் உண்மையான மனநிலையை அறிய மக்களிடம் சென்று மக்கள் பாசிசத்தை வேரோடு அழிக்க வேண்டும் அடிபணிய இடமில்லை என்று கருதுவதை உணர்ந்து முழு எதிர்ப்புக் காட்டும் உத்வேகத்தை அடைந்தார். எனவே, அவர் வாழ்க்கையிலேயே தடுத்தாட்கொள்ளும் சக்திகளுக்கு எதிராக அவரின் செயலுறுதியினால் விளைந்ததன் அனுபவமே இந்த பொன்மொழி... அல்ல அனுபவ மொழி!
தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம்
தோல்வி என்பது வாழ்க்கையின் ஒரு தவிர்க்க முடியாத பகுதியாகும். மேலும், அதை நமது வளர்ச்சி செயல்பாட்டில் தேவையான படியாக ஏற்றுக்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும். தோல்விக்கு பயப்படுவதற்குப் பதிலாக, அதைக் கற்றுக்கொள்வதற்கும் மேம்படுத்துவதற்கும் ஒரு வாய்ப்பாகக் கருதுங்கள். தோல்வி என்பது ஒரு நபராக உங்களுடைய மதிப்பின் மீதான பிரதிபலிப்பு அல்ல, மாறாக வளர ஒரு வாய்ப்பு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
வளர்ச்சி மனப்பான்மை
சவால்களைத் தழுவி, மீண்டெழுவது எப்படி என்பதை கற்றுக்கொள்வதற்கும் பின்னடைவிலிருந்து வளர்ச்சியடைவதற்கும் வாய்ப்பாகக் கருதும் மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள். வளர்ச்சி மனப்பான்மை கொண்டவர்கள், கேடு ஏற்படும்போது அதை எதிர்கொண்டு மாற்றத்தை தழுவும் நபர்களாக மாறிவிடுவார்கள்.
சுய-கருணையை வளர்த்துக் கொள்ளுங்கள்
நீங்கள் பின்னடைவுகள் அல்லது ஏமாற்றங்களை சந்திக்கும்போது, உங்களை நீங்களே கருணையுடனும் புரிதலுடனும் நடத்திக் கொள்ளுங்கள். எல்லோரும் தவறு செய்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும், இந்த தவறான செயல்களின் மூலம் நாம் மதிப்புமிக்க பாடங்களைக் கற்றுக்கொள்கிறோம். சுய கருணை அல்லது தன்னிரக்கம் நமது சொந்த வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான நேர்மறையான அணுகுமுறையை வளர்ப்பதன் மூலம் மீண்டெழுவதை துரிதப்படுத்துகின்றது.
தோல்வியிலும் உங்களை ஆதரிக்கும் நட்பு வலைப்பின்னலை உருவாக்குதல்
உங்கள் திறன்களை நம்பும், உங்கள் இலக்குகளை ஆதரிக்கும் உங்களுடன் பயணிக்கும் நபர்களுடன் உங்களைச் சுற்றி ஒரு நட்பு வலைப்பின்னலை உருவாக்குங்கள். பின்னடைவுகள் மற்றும் தோல்விகளை எதிர்கொள்ளும்போது வலுவான ஆதரவு நெட்வொர்க் ஊக்கம், உந்துதலின் சக்திவாய்ந்த ஆதாரமாக இருக்கும்.
சிந்திக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்
தோல்வி ஏற்படுகின்றதா, அது எங்கிருந்து ஏற்பட்டது என்பதைச் சிந்தித்து அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும், செய்த தவறுகள் அதன் பின்னணி, அதற்கான தூண்டுகோல்கள், காரணங்களைத் திரும்பிப் பார்த்தல் மீண்டும் அந்தத் தவறுகளைச் செய்வதிலிருந்து நம்மைத் தடுக்கும். கடந்த கால அனுபவங்களிலிருந்து எதிர்காலம் நோக்கிய உந்துதல் பிறக்கும்.
வெற்றியும் தோல்வியும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். தனிப்பட்ட வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் இந்த இரண்டுமே உதவக்கூடியது.
சர்ச்சில் கூறுவது போல், எதுவந்தாலும் தொடர்ந்து செயல்படுவதுதான் கடைசியில் நிற்கும். வெற்றிப் பாதையில் தொடர்ந்து செல்வது சில வேளைகளில் மீள முடியா தோல்விக்கு இட்டுச் செல்லும் என்பதைப் போல் தோல்விகள் எப்போதும் நிலைகுலையச் செய்வதல்ல, மீட்டெழுச்சியை முற்றிலும் புதிய ஒரு கோணத்தையும் சிந்தனையையும் தரவல்லது என்பதையே சர்ச்சில் பொன்மொழி வலியுறுத்துகின்றது. 'courage to be' என்பதுதான் கிரேக்க வீர காவிய மரபின் ஞானம். இது நம் காலத்திற்கும் பொருந்தக் கூடியதுதான்.
Motivational Quote | தோல்வி பயத்தை தூக்கி எறிந்து வெற்றியைப் பற்றுவது எப்படி?
Edited by Induja Raghunathan