ரூ.52 கோடிக்கு ஏலம் போன டேப் போட்டு சுவற்றில் ஒட்டிய ஒற்றை வாழைப்பழம்!
நியூயார்க் ஏல மையத்தில், செவிற்றில் சில்வர் டேப் வைத்து ஒட்டப்பட்ட மஞ்சள் வாழைப்பழத்தை, கிரிப்டோ தொழிலதிபர் ஜஸ்டின் சன் ரூ.52.35 கோடிக்கு ஏலம் எடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
அட இப்படியும்கூட நடக்குமா? என ஆச்சர்யப்படும் அளவிற்கு அவ்வப்போது வியப்பை ஏற்படுத்தும் சம்பவங்கள் உலகில் நடப்பதுண்டு. தற்போது இணையத்தின் பயனால் அது உடனுக்குடனே சமூகவலைதளப் பக்கங்களில் பகிரப்பட்டு வைரலாகி விடுகிறது.
இப்போதும்கூட அப்படித்தான், நியூயார்க்கில் உள்ள ஏல மையம் ஒன்றில், சில்வர் டக்ட் டேப் வைத்து சுவற்றில் ஒட்டப்பட்ட ஒற்றை வாழைப்பழம், சுமார் 6.2 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு வாழைப்பழம் ரூ.52 கோடி!
இத்தாலியைச் சேர்ந்த பிரபல கைவினைக் கலைஞரான மொரிசியோ கட்டெலன் என்பவர் உருவாக்கிய படைப்புதான் இந்த ஒற்றை வாழைப்பழம். இந்த ஏலத்தில் 6 பேர் கலந்து கொண்டனர். 8,00,000 டாலரில் தொடங்கிய ஏலத்தில் சீனாவைச் சேர்ந்த கிரிப்டோ கரன்சி தொழிலதிபரான ஜஸ்டின் சன், 6.2 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து, அந்த வாழைப்பழத்தை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டார். இது இந்திய மதிப்பில் ரூ.52.35 கோடி ஆகும்.
ஒரு வாழைப்பழம் ரூ.52.35 கோடிக்கு ஏலம் போனது உலகின் பல முன்னணி கலைஞர்களின் மத்தியில் பெரும் பேசுப்பொருளாக மாறியுள்ளது. சமூகவலைதளப் பக்கங்களிலும் இந்த வாழைப்பழத்தின் புகைப்படம் வைரலாகி இருக்கிறது.
இப்படி வித்தியாசமான படைப்புகளை உண்டாக்கி, அதனை அதிக தொகைக்கு ஏலத்தில் விடுவது இது முதன்முறையல்ல... இதனை உருவாக்கிய மொரிசியோ கட்டெலன் இதற்கு முன்னர் பலமுறை இதுபோன்ற படைப்புகளால் ஊடகத்தில் பேசுபொருளாகி இருக்கிறார்.
யார் இந்த மொரிசியோ கட்டெலன்?
இத்தாலியை சேர்ந்தவர் இந்த மொரிசியோ கட்டெலன். பிரபல கைவினைக் கலைஞரான இவர், வித்தியாசமான கலைப் பொருட்களை உருவாக்குவதில் வல்லவர். தனது வித்தியாசமான படைப்புகள் மூலம் அவ்வப்போது ஊடகங்களில் பேசப்பட்டு, மக்கள் மத்தியில் பிரபலமானவர். இதனால் மரிஷியொ கேட்டலனின் கலை படைப்புகளை வாங்குவதற்கு பெரும் போட்டா போட்டி இருக்கும்.
கடந்த 2016ம் ஆண்டு 18 கேரட் தங்கத்தைக் கொண்டு, 1.25 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.8 கோடியே 88 லட்சம்) மதிப்பில் தங்க கழிப்பறை கோப்பையை உருவாக்கி உலகம் முழுவதும் பிரபலமானார்.
அதன் தொடர்ச்சியாக, கடந்த 2019ம் ஆண்டு மியாமி நகரில் உள்ள கலைப்பொருள் அருங்காட்சியத்தில் வாழைப்பழத்தை சுவற்றில் ஒட்டி, வித்தியாசமான கலைப்பொருள் ஒன்றை வடிவமைத்து, பார்வையாளர்களின் பார்வைக்கு வைத்தார். தன்னுடைய இந்த படைப்புக்கு ‘காமெடியன்’ என அப்போதே அவர் பெயர் சூட்டினார்.
ரூ. 85 லட்சத்துக்கு ஏலம்
அவரது இந்த படைப்பு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.85 லட்சத்து 38 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இந்த வாழைப்பழம் ஏலத்தில் எடுக்கப்பட்டாலும் மக்களின் பார்வைக்காக தொடர்ந்து அதே கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது. கண்காட்சியை பார்வையிட வந்தவர்கள், அனைவரும் அந்த வாழைப்பழத்துடன் ‘செல்பி’ படம் எடுத்து மகிழ்ந்தனர்.
ஆனால், சில தினங்களில் அந்தக் கண்காட்சியைப் பார்வையிட வந்த, அமெரிக்காவை சேர்ந்த பிரபல கலைஞரான டேவிட் டதுனா, யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அந்த வாழைப்பழத்தை எடுத்து சாப்பிட்டு விட்டார். இதைக் கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தபோதும், டேவிட் டதுனா மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
மீண்டும் அதே இடத்தில் வேறொரு வாழைப்பழம் ஒட்டிவைக்கப்பட்டு, அதற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கண்காட்சி முடிந்ததும் அந்த வாழைப்பழம் ஏலம் எடுக்கப்பட்டவரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.
அறிவுசார் உரிமை
அப்போது அந்த வாழைப்பழ கலைப் பொருளுக்கு கிடைத்த வரவேற்பை வைத்துத்தான், தற்போது மீண்டும் அதேபோன்ற கலைப்பொருளை (அதாங்க வாழைப்பழத்தை சுவற்றில் டேப் வைத்து ஒட்ட வைப்பது) படைத்திருக்கிறார் மரிஷியோ.
கடந்தமுறையைவிட இந்தமுறை இந்த படைப்பு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. அப்போது ஏலத்தில் எடுக்கப்பட்ட தொகையைவிட தற்போது பல மடங்கு அதிகமாக ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, அதை உருவாக்கிய மரிஷியோ கூறுகையில்,
”காமெடியன் என்ற இந்தப் படைப்பின் அடிப்படை சாரம்சம் அதன் கருத்தில் தான் அமைந்துள்ளதே தவிர வாழைப்பழத்தில் அல்ல. இதனை வாங்குபவர்கள், வாழைப்பழத்தையும் டக் டேப்பை மட்டும் வாங்கவில்லை. அதனை மறு உருவாக்கம் செய்யும் அறிவுசார் உரிமையையும் பெறுகின்றனர்,” எனத் தெரிவித்துள்ளார்.
அதாவது, இந்த பழத்தை வாங்கிய ஜஸ்டின் சன்க்கு, எதிர்காலத்தில் அதேபோன்று வாழைப்பழத்தை சுவற்றில் ஒட்டி அதை 'comedian' என பெயரிடுவதற்கான காப்புரிமையும் வழங்கப்பட்டுள்ளது.
கலாச்சார நிகழ்வின் பிரதிபலிப்பு
இது குறித்து இந்தப் பழத்தை வாங்கிய ஜஸ்டின் சன் கூறுகையில்,
“இது வெறும் பழம் மட்டுமல்ல, இது கலை, மீம்ஸ் மற்றும் கிரிப்டோகரன்சி சமூகத்தின் உலகங்களை இணைக்கும் ஒரு கலாச்சார நிகழ்வை பிரதிபலிக்கிறது. இந்த வாழைப்பழத்தின் பெருமைக்குரிய உரிமையாளராக இருப்பதில் நான் பெருமையடைகிறேன்,” என்றுள்ளார்.
கலை வரலாறு மற்றும் பிரபலமான கலாச்சாரம் இரண்டிலும் அதன் இடத்தை கௌரவிக்கும் வகையில் இந்த வாழைப்பழத்தை தனிப்பட்ட முறையில் சாப்பிடுவேன், என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
ஸ்டீவ் ஜாப்ஸ் அணிந்திருந்த செருப்புக்கு இவ்வளவு மதிப்பா? எவ்வளவு கோடிக்கு ஏலம் போயிருக்கு பாருங்க!