வரதட்சணை கொடுமை; மகன் இதயத்தில் ஓட்டை; பணமோசடி; துயரங்களைத் துரத்திய முயல் வளர்ப்பு!
மண வாழ்க்கை அளித்த வலி, மகனுக்கு ஏற்பட்ட இருதய கோளாறு, வேலை வாங்கி தருவதாக பணமோசடி... என தோல்வி மேல் தோல்வி கண்டு துவண்டு போன பெண்ணின் துயரங்களை துரத்தியுள்ளது முயல்வளர்ப்பு.
அம்மா, அப்பா, அண்ணன் என கிராமத்து வாழ்க்கை மேற்கொள்ளும் அழகான குடும்பம் சத்யாவுடையது. அப்பாவின் திடீர்மறைவு தேன்கூட்டில் கல்லெறிந்தார் போல், குடும்பத்தின் இன்பத்தை சிதறடித்தது. டாடியின் லிட்டில் பிரின்சஸ்சாக வளர்ந்த சத்யாவின் துயர்நீக்க மணவாழ்வினை தீர்வாக எண்ணினர். ஆனால், மணவாழ்வோ பெருந்துயரத்தினை அள்ளிக் கொடுத்திட காத்திருந்தது. ஏமாற்று திருமணம், வரதட்சணை கொடுமை, தினம் அடி, உதைகள் என சத்யாவின் வாழ்வு இருள் சூழ்ந்தது.
பிஞ்சு முகம் பார்த்தால் கவலைகள் பறந்தோடும் என்பார்கள், சத்யாவுக்கு அந்த சந்தோஷமும் 40 நாட்களே நீடித்தன. மகனுக்கு இதயத்தில் ஓட்டை என்ற பெரும் இடி விழுந்தது. அதையும் எதிர்கொண்டார். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் விழுந்த அடிகளை தகர்த்தெறிந்து, முயல் பண்ணை நடத்தி, தானும் வளர்ந்து பிறருக்கும் உறுதுணையாகி இன்று 'முயல் சத்யா' ஆக மக்களால் அடையாளப்படுத்தப்படுகிறார்.
மதுரை கொட்டாம்பட்டியைச் சேர்ந்த அவர், முயல், வான்கோழி, வாத்து, கோழி, ஆடு, மாடு, குதிரைகளுடன் ஒருங்கிணைந்த பண்ணை அமைத்து மாதம் ரூ.80,000 வருமானம் ஈட்டி, 27 பேர் முயல் பண்ணை அமைக்கக் காரணமாக விளங்குகிறார்.
தன்னம்பிக்கை அளிக்கும் கதையாக உள்ளது சத்யாவின் வாழ்வு. ஆனால், அவரோ முயல் வளர்ப்பு குறித்து புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறார்.
"எங்க அப்பாவும் நானும் திக் ப்ரெண்ட்ஸ் மாதிரி தான் இருப்போம். நல்லா சம்பாதிச்சு, எங்க எல்லாத்தையும் நல்லா படிக்க வச்சாரு. நல்லா பேசிக்கிட்டு இருந்தவரு தான். எந்த நோய்வாயும்படலை. திடீர்னு இறந்துபோயிட்டாரு. எப்பவும் அப்பாக்கூடவே இருந்த எனக்கு, அவரு இல்லாததை ஏத்துக்கவே முடியல. இப்படியே இருந்தா சரிபடாதுனு, மனசு மாறட்டும்னு வீட்டில எனக்கு கல்யாண ஏற்பாடு பண்ணாங்க. அந்த கல்யாணம் பேசின நாளில் இருந்து சண்டை தான். தினமும் ஏதாச்சும் பஞ்சாயத்து இருக்கும்.
மாப்பிள்ளை டீச்சரா இருக்காருனு சொல்லிதான் கல்யாணம் பண்ணாங்க. கல்யாணத்துக்கு அப்புறம் தான் தெரிஞ்சது, அவரு எந்த வேலைக்கும் போகலை. எங்கள ஏமாத்தி தான் கல்யாணம் பண்ணிருக்காங்க. நகைகளை எல்லாம் அடகு வச்சுக்கிட்டு வரதட்சணை கொடுமை பண்ண ஆரம்பிச்சாங்க. அதோட, அவங்க வீட்டில் ஏகப்பட்ட கட்டுபாடுகள் போட்டாங்க. நானும் எல்லாத்தையும் பொறுத்துகிட்டு தான் அங்க வாழ்ந்தேன்.
காலேஜ் படிச்சிட்டு இருக்கும் போதே கல்யாணம் பண்ணி வச்சிட்டனால, எக்ஸாம் எழுத வேண்டியிருந்தது. அம்மாவுக்கும் கண் ஆப்ரேஷன் பண்ணாங்க. அவங்களுக்கு கொஞ்சம் ஒத்தாசையா இருக்காலம்னு வீட்டுக்கு போகலாம் நினைச்சா, அதுக்குகூட விடமாட்டேன் சொல்லிட்டாங்க.
அப்புறம் ஆடி மாதம் அம்மா வீட்டுக்கு அழைச்சிட்டு போனாங்க. நாங்களும் இப்ப வந்து கூட்டிட்டு போவாங்க, அப்ப வருவாங்கனு காத்திட்டு இருந்தோம். அவங்க வீட்டில இருந்து வரவேயில்லை. வீட்டுக்கு முன்னுக்கு இருந்த மரத்தில் இளைப்பாற உட்காந்த பெரியவர் ஒருவர் என் நாடி பிடிச்சு பாத்து, மாசமா இருக்கிறதா சொன்னாரு. அந்த விஷயத்தை சொல்லிவிட்டும், அவங்க வரல. என்னன்னா, அப்பா யூனியன் ஆபிஸ்ல வேலை பாத்தாரு. அவரோட வேலைய அண்ணனுக்கு கொடுக்காமல், எனக்கு எழுதி வாங்க சொல்லி தான் அவ்ளோ பிரச்னை பண்ணாங்க. 3வது மாசம் ஆகும் போது, உடம்பு வீக்-ஆ இருக்குனு சொன்னாங்க. அப்புறம் பெரியவங்கலாம் இரு வீட்லையும் பேசி, என்னை அவங்க வீட்டுக்கு அனுப்பினாங்க.
மாசமா இருக்கேனு தெரிஞ்சும் தினம், ஏதாச்சும் பிரச்சனை பண்ணி அடிப்பாரு. அதுக்காகவே நேரத்துக்கே துாங்கிருவேன். அப்பவும் விடமா, எழுப்பி அடிப்பாங்க. 9வது மாசம் வளைகாப்பு போடுற வரைக்கும் என்னால அந்த வீட்ல தாக்கு பிடிக்கவே முடியல.
குழந்தை பிறந்தான். நல்லா கொழுகொழுனு அவன் முகம் பார்க்க பார்க்க கொஞ்சம் நிம்மதியா இருந்துச்சு.
அவன் பிறந்த 40வது நாள் உடம்பு நீல கலரில் மாறிடுச்சு. குளத்து வேலைக்கு போன அம்மா ஓடியாந்து பாத்துட்டு, துாக்கிகிட்டு ஹாஸ்பிட்டலுக்கு ஓடினோம். அவனுக்கு இதயத்தில் சளி அடைச்சிட்டு இருக்கிறதாவும், 4 இல்ல 5 வாரம் தான் உயிர் வாழ்வான்னு டாக்டர் சொல்லிட்டாங்க.
எங்களுக்கு என்ன பண்ணனே தெரில. எப்படியாச்சும், அவனை காப்பாத்திடனும் ரொம்ப போராடினோம். கடன் வாங்கி காசு செலவாகினாலும் பரவாயில்லனு கவர்மென்ட் ஹாஸ்பிட்டலில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு மாத்தினோம்.
10 நாளில் ரூ.1.5 லட்சம் செலவாகியது. கொச்சினில் ஆப்ரேஷனுக்கு ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. 80,000 கட்டினா தான் அட்மிஷன் சொன்னாங்க, காப்பீடு திட்டத்தில் செய்யலாம்னா, அதுக்கு அவங்க ரேஷன் கார்டுகூட கொடுக்கமாட்டேன் சொல்லிட்டாங்க. அண்ணனும், அம்மாவும் நகைய வித்து காசை புரட்டினாங்க. வாழ்வா, சாவானு தான் ஆப்ரேஷன் முடிவு இருக்கும்னு சொன்னாங்க. நம்பிக்கையோட போராடினோம். இப்போ பிள்ள 1-வது படிக்கிறான். சிலம்பத்துல கலக்குவான்.
ஆபரேஷனுக்கு மட்டும் ரூ.2.5 லட்சம் செலவாகுச்சு. குடும்பத்தை பாத்துக்கணும், பிள்ளைய படிக்க வைக்கனும், வட்டி போட்டிருக்க கடனை அடைக்கனும். சுமைகள் அதிகமாகிருச்சு. எம். ஏ., பி.எட் முடிச்சிருக்கேன். முதல்ல நான் படிச்ச ஸ்கூல்லே வேலைக்கு போனேன். அதுக்கு அப்பறம் கருங்காலகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துல தினக்கூலியா வேலை கிடைச்சு, தினமும் வேலைக்கு போயிக்கிட்டு வருவேன். எப்பவும், சோகமா இருக்கிறதை பாத்து மனசு நிம்மதியா இருக்கும்னு அண்ணே 5 முயல் வாங்கி கொடுத்தாங்க.
நானும் முயல்களை பிள்ளை மாதிரி பாத்திட்டு இருந்தேன். வேலைக்கு போற இடத்துல பெரியவர் ஒருத்தரை பார்த்தேன். அவருக்கு அஞ்சு பிள்ளைங்க, யாருமே இப்போ அவர கண்டுக்கடல, முயல் தான் எனக்கு சோறு போடுதுனு சொன்னாரு.
அவ்ளோ வயசானவர் அவராலே முடியுதுனா, நாமும் செய்யலாம்னு ஒரு தன்னம்பிக்கை வந்தது. ஆசைக்கும், ஆறுதலுக்கும் வாங்கின முயல்களை தொழிலாக்க முடிவெடுத்தேன்.
அண்ணன் ஒவ்வொரு பண்ணைக்கா போயி தகவல் சேகரித்து வந்து சொல்லி கொடுத்தாங்க. 2017-ம் ஆண்டு கொட்டகை போட்டு கூண்டு வாங்கி ஒரு யூனிட் முயல்களை வளர்க்க ஆரம்பிச்சேன். ஒரு யூனிட்ங்கிறது 7 பெண், 3 ஆண் முயல்களைக் கொண்டது. முயல்களை பாத்துகிட்டபடியே வேலைக்கும் போயிட்டு வந்தேன். ஒரு வருஷம் எந்த வருமானமும் இல்லனாலும், பண்ணை பெருகியது.
முயல்களை பிள்ளைகளாக தான் பாத்துகிட்டேன். சம்பாத்தியம் இல்லனாலும், அதுகள வளர்க்கிறது ரிலாக்ஸா இருந்தது. கொஞ்சம் கொஞ்சமா தேடி வந்து முயல் வாங்க ஆரம்பிச்சாங்க. பெட் ஷாப்களுக்கு வியாபாரத்துக்கு கொடுத்தேன். அப்புறம், நானே முயல் கறிக்கடை போட்டேன். கறி முயல் ஒரு கிலோ ரூ.400-க்கும், மொத்தமாக வாங்குவோருக்கு ரூ.300-க் கும் கொடுக்கிறேன். வளர்ப்புக்கு என்றால் ஒரு மாத முயலை ரூ.600 முதல் 800 வரை விற்பனை செய்கிறேன். மொத்தமாக வாங்கினால் விலைகுறைத்து கொடுப்பேன்.
முயலை கவனமாக பார்த்துகணும். முயல்களால் அதிக வெப்பத்தை தாங்க முடியாது. அதனால் கூரை கொட்டகைதான் நல்லது. அது, காற்று மழையைத் தாங்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். முயல்களை நல்லா பாத்துக்கிட்டா, அதுவும் நம்மள நல்லா பாத்துக்கும். நல்லா தான் பாத்திட்டு இருந்துச்சு.
சமீபத்தில், ஒரு தோப்பை குத்தகைக்கு எடுத்து முயலோடு சேர்ந்து வான்கோழி, வாத்து, கோழி, ஆடு, மாடு, என ஒருங்கிணைந்த பண்ணையா அமைத்துள்ளேன். மாசமாகினா ரூ.80,000 வரை வருமானம் கொடுக்கின்றன.
பண்ணை தொடங்கி முயல் வளர்க்க ஆரம்பிச்சதில் இருந்தே பெரியளவில் பாதிப்பை அது எனக்குக் கொடுக்கலை. ஆனா, இந்த கஜா புயல் வந்தப்போ கொட்டகை முழுக்க தண்ணீர் புகுந்து, ரொம்ப பெரிய இழப்பை ஏற்படுத்திருச்சு. மாட்டை தவிர எல்லாமே அதிகம் பாதிக்கப்பட்டுச்சு. கிட்டத்தட்ட 200 முயல்கள் இறந்து போச்சு. 2,00,000ரூபாய்க்கும் மேல நஷ்டமாகிருச்சு. அதுக்கு இடையில, அரசு வேலை வாங்கி தருவதா சொல்லி ரூ.3,00,000 ஏமாத்திட்டாங்க.
வாழ்க்கையில எந்திருச்சு நிக்கிறப்போலாம் அடி மேல் அடி. என்னடா, இது பொழப்பு, பேசாம மாச வேலைக்கு போயிட்டு கடனை அடைச்சிட்டு கடக்கலாம்னு தோணும். ஆனாலும், இதுவும் கடந்துபோகும்னு எடுத்துகிட்டேன். போராடி வந்திடுவோம்னு நம்பிக்கையா மீண்டும் உழைச்சேன்.
இப்போ, எங்க குடும்பத்தில 2 வெள்ளை குதிரையும் சேர்ந்திருக்காங்க. சின்ன வயசுல இருந்தே குதிரை வளர்க்க ஆசைப்பட்டேன். ஆனா, அத வளர்க்கிறது ஈஸியே கிடையாது. குதிரை குட்டியா தான் வாங்கினோம். அத எப்படியாச்சும் வளர்த்து பிள்ளைகளை சவாரி போக வைக்கணும்னு சிரமம் பார்க்கமா வளர்க்கிறேன்.
பண்ணையில இப்போ 6 பேர் வேலை பார்க்கிறாங்க. முயல் வளர்ப்பு குறித்து பயிற்சி வகுப்புகளும் எடுக்கிறேன். என்கிட்ட பயிற்சி எடுத்துகிட்டதில் 27 பேர் இப்போ பண்ணை வச்சிருக்காங்க. பயிற்சியும் வழங்கி, முயல் வளர்க்க 1 யூனிட் முயல்,கூண்டு எல்லாம் நானே கொடுக்கிறேன். முயல்களை வளர்த்து கஸ்டமர்களை பிடிக்கிற வரை என்கிட்டயே கொடுக்கலாம். ஏன்னா, நான் நிறைய கஷ்டத்தை தாண்டி வந்ததால, யாரும் சிரமம்பட்டுற கூடாதுனு செய்கிறேன்.
முயல் வாழ்க்கைக்குள்ள வந்த அப்புறம் தான் வலிகள் குறைஞ்சிருக்கு. ஆனால், சுமைகள் குறையவில்லை. கடன்களை எல்லாம் அடைக்கணும். பேங்கில் லோன் கேட்டு வருஷக் கணக்கா அலைஞ்சிட்டு இருக்கேன். இன்னும் லோன் கொடுத்தபாடா இல்லை. லோன் கிடைச்சா நிறைய புராஜெக்ட் வச்சிருக்கேன். என்னை மாதிரி பல பேரை உருவாக்கணும். முயல் வளர்ப்பு குறித்த புத்தகம் எழுதிக் கொண்டிருக்கேன்," என்று கூறிய' முயல்' சத்யாவின் பேச்சிலே அத்தனை நம்பிக்கைகள்!