7 மாதங்களில் 1,400 குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானம் - கோவை இளம் தாயின் உன்னத செயல்!
கோயம்புத்தூரைச் சேர்ந்த 30 வயது இளம் தாயான சிந்து மோனிகா 7 மாதங்களில் 42 லிட்டர் தாய்ப்பாலை தானமாக கொடுத்து ஏறத்தாழ 1,400 பச்சிளம் குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறார்.
ஒற்றைத் தாயின் உடலில் சுரந்த பால் 7 மாதங்களில் 1400 குழந்தைகளின் உயிரைக் காக்க உதவியுள்ளது.
கேட்பதற்கே வியப்பாக இருக்கிறது இல்லையா?
ஆம்! இத்தகைய செயலை செய்திருப்பவர் கோவை மாவட்டம் கனியூரைச் சேர்ந்த சிந்து மோனிகா. 30 வயது இளம் தாயான சிந்துவிற்கு வெண்பா என்கிற 18 மாத பெண் குழந்தை உள்ளது. இவரது கணவர் மகேஷ்வரன், தனியார் பொறியியல் கல்லூரியில் துணைப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
தாய்பால் தானம் கொடுக்கும் இளம் தாய்
டெலிவரி முடிந்து Post partum depression-இல் சிக்கிக் கொள்ளும் இளம் தாய்மார்களைப் போல சிந்துவும் தனது மகள் பிறந்த பின்னர் மனஅழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார்.
“என்னுடைய மகள் பிறந்த சில நாட்கள் எனக்கு தாய்ப்பால் சுரக்கவில்லை, ஆனால் ஒரு வாரத்திற்குப் பின்னர் தாய்ப்பால் சுரப்பு இருந்த போதும் அவள் என்னிடம் பால் குடிக்கவில்லை என்பது எனக்கு மிகப்பெரிய மனஅழுத்தத்தை ஏற்படுத்தியது. இதனால் என்னுடைய மகள் வெண்பாவிற்கு தாய்ப்பாலை வெளியே எடுத்து பாட்டிலில் ஊற்றித் தான் புகட்டி வந்தேன். என்னுடைய மகளுக்குத் தேவையான பால் போக மீதம் இருந்த தாய்ப்பாலை வீணாக செடிக்கு ஊற்றி வந்தேன். ஒரு வித மன உளைச்சலில் சிக்கிக்கொண்டதை உணர்ந்து அதில் இருந்து நானே விடுபடும் வழியைத் தேடினேன். 90 நாட்கள் இப்படியே கடந்து கொண்டிருக்க ஒரு நாள் யதேச்சையாக இன்ஸ்டாகிராமில் தாய்ப்பால் தானம் கொடுப்பது பற்றி அறிந்தேன்,” என்கிறார் பொறியியல் பட்டதாரிப் பெண்ணான சிந்து மோனிகா.
கோவையைச் சேர்ந்த ’அமிர்தம்’ என்கிற தன்னார்வ அமைப்பு இளம் தாய்மார்களிடம் இருந்து தாய்ப்பாலை தானமாகப் பெற்று அரசு மருத்துவமனைகளில் கொண்டு போய் சேர்க்கிறது என்பது தெரிந்து அவர்களைத் தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டேன்.
தாய்ப்பாலை pumping செய்வதற்கான கருவியை ஏற்கனவே நான் வைத்திருந்தேன். ஆனால், தாய்ப்பாலை எப்படி சேமித்து வைத்து தானம் கொடுப்பது என்பது தெரியவில்லை. பின்னர், அமிர்தம் அமைப்பைத் தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறிந்தேன்.
தாய்ப்பாலை சேமிப்பதற்கென்றே தனியாக storage bag-கள் இருக்கின்றன, அவற்றை வாங்கிக் கொள்வதற்கான வசதி இருந்தால் நாமே வாங்கிக் கொள்ளலாம். இல்லாவிட்டால் தன்னார்வ அமைப்பு தந்து உதவி செய்கிறது. என்னால் வாங்கிக் கொள்ள முடியும் என்பதால் நானே தனியாக ஆர்டர் செய்து வாங்கினேன். 50 pouchகள் ரூ.700 என்கிற விலையில் பல இ-காமர்ஸ் தளங்களிலேயே கிடைக்கின்றன.
“இந்த பேகுகளில் தேதி மற்றும் நேரத்தை முன்னரே குறிப்பிட்டு தாய்ப்பாலை எடுத்து அதில் ஊற்றி fridge-இல் உறையவைத்துவிட வேண்டும். ஒரு பவுச்சில் 250மிலி தாய்ப்பாலை பதப்படுத்தி வைக்கலாம். தேதி மற்றும் நேரம் வாரியாக குறிப்பிடுவதனால் தன்னார்வலர்கள் அரசு மருத்துவமனையில் அவற்றைக் கொண்டு சேர்த்த பின்னர் நாட்களை கணக்கு செய்து பச்சிளம் குழந்தைகளுக்கு பால் புகட்டுவதற்கு உதவியாக இருக்கும்,” என்கிறார் சிந்து.
Breast pump செய்யும் கருவியை மட்டும் ஸ்டெரிலைஸ் செய்வது அவசியம். என்னால் ஸ்டெர்லைஸ் மெஷின் வாங்க முடியவில்லை என்பதால் சுடு நீரில் நன்றாக சுத்தம் செய்து அதன் பின்னரே அடுத்த முறை பயன்படுத்துவேன்.
நம்முடைய குழந்தைக்கு பால் புகட்டும் போது எந்த அளவிற்கு தூய்மையை பின்பற்றுகிறோமோ அதே போன்று மற்ற குழந்தைகளுக்குத் தாய்ப்பாலை தானமாகக் கொடுக்கும் போதும் அதே அக்கறை இருக்க வேண்டும் என்று சொல்கிறார் சிந்து.
“தாய்ப்பால் தானம் கொடுக்கலாம் என்கிற எண்ணம் தோன்றியதுமே என்னுடைய கணவரிடம் முதலில் வெளிப்படுத்தினேன். என்னால் செய்ய முடியும் என்றால் எந்த தயக்கமும் வேண்டாம் என்று கூறி எனக்கு ஆதரவு தெரிவித்தார். குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் கூட தாய்ப்பால் தானம் முடிவிற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் எனக்கு உறுதுணையாக இருக்கின்றனர்,” என்கிறார்.
தாய்ப்பால் தானத்தின் அவசியம்
அரசு மருத்துவமனைகளில் தாய்ப்பால் கிடைக்காமலும் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருக்கும் பச்சிளம் குழந்தைகளைப் பார்க்கும் போது நெஞ்சம் பதறுகிறது. திருமணமாகி 6 ஆண்டுகளுக்குப் பிறகே எனக்கு வெண்பா பிறந்தாள், இந்த இடைபட்ட காலத்தில் புதிதாக ஒரு உயிரை பூமிக்கு கொண்டு வருவதற்கு ஏங்கும் தாய்களில் நானும் ஒருத்தியாக இருந்தேன்.
அப்படி ஒரு உயிரின் மதிப்பு எனக்குத் தெரிந்ததால் தான் தயங்காமல் இயற்கையின் வரமான கலப்படமில்லாத தாய்ப்பாலை மற்ற உயிர்களுக்கும் கொடுத்து உதவ வேண்டும் என்று நினைத்தேன். தாய்ப்பாலை pump செய்து எடுப்பதற்கு சுமார் 45 நிமிடங்கள் ஆகும், இடையில் வெண்பாவை பராமரிக்க வேண்டும், வீட்டு வேலைகள் என தொடக்கத்தில் இது கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருந்தது. ஆனால் போகப் போக அது பழகிவிட்டது.
தாய்ப்பால் சுரப்பு என்பது நாம் எந்த அளவிற்கு எடுக்கிறோமோ அந்த அளவிற்கு தேவை இருக்கிறது என்பதை உணர்ந்து உடல் தானாகவே சுரக்கும். இதற்காக நான் தனியான ஊட்டச்சத்துகளை, அதிக உணவை உட்கொள்வது போன்ற எதையும் செய்யவில்லை.
சொல்லப்போனால் பிரசவத்திற்குப் பின்னர் நான் 15 கிலோ எடை குறைந்திருக்கிறேன் ஆனாலும், தாய்ப்பால் கொடுப்பதில் அதனால் எந்த குறைவும் ஏற்படவில்லை.
“வெண்பா பிறந்த 100வது நாளில் இருந்து நான் தாய்ப்பால் தானம் செய்து கொண்டிருக்கிறேன். தொடக்க மாதங்களில் அதிக அளவில் பால் தானம் செய்தேன், இப்போது அளவு குறைந்தாலும் தொடர்ந்து தானம் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். கடந்த ஆண்டு தொடங்கி ஏப்ரல் 2022 வரை 7 மாதங்களில் 42 லிட்டர் அளவிற்கு தாய்ப்பால் தானம் கொடுத்திருக்கிறேன்.”
அதிக தாய்ப்பால் தானம் செய்து சாதனை
இப்போதும் தாய்ப்பால் தானத்தை தொடர்கிறேன், என்று கூறும் சிந்து, இதுவரை யாரும் இப்படியான தானத்தை செய்யவில்லை இது ஒரு சாதனை மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் இதனை சாதனை புத்தகத்தில் பதிவு செய்யலாம் என்று அமிர்தம் அமைப்பு எனக்கு அறிவுரை கூறியது.
இதனால் ’இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ மற்றும் ’ஆசியன் புக் ஆஃப் ரெக்காட்ஸ்’ இரண்டிலும் தாய்ப்பால் தானத்தை சாதனையாக பதிவு செய்து சான்றிதழை பெற்றிருக்கிறேன்.
“விளம்பரம் தேடிக் கொள்ள வேண்டும் என்பதற்காக நான் இவற்றில் பதிவு செய்யவில்லை, என்னைப் பார்த்து மற்ற இளம் தாய்மார்களும் தாய்ப்பால் தானம் செய்ய முன் வர வேண்டும். வாழ்வில் ஒரு முறையேனும் தாயாகும் பெண்கள் தாய்ப்பாலை தானமளிக்க வேண்டும். தேவையில் இருக்கும் பல குழந்தைகளுக்கு இது உயிர்காக்கும் மருந்து,” என்று கூறுகிறார் சிந்து.
ஆரம்பத்திலேயே இது பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் சுமார் 15 லிட்டர் வரை தாய்ப்பாலை வீணடித்திருக்கிறேன். அடுத்த முறை தாய்மை வரம் கிடைத்தால் நிச்சயமாக இந்தத் தவறை செய்ய மாட்டேன் என்கிறார்.
மேலும், தாய்ப்பால் தானம் கொடுக்கப் போகும் பெண்களை ஊக்குவிக்கும் விதத்தில் storage bagகள் வாங்க முடியாதவர்களுக்கு பைகளை வாங்கிக் கொடுத்து உதவ இருப்பதாகவும் கூறுகிறார்.
'உலக தாய்ப்பால் வாரம்'- தாய்ப்பால் குறித்த கட்டுக் கதைகளும், உண்மைகளும்!