RIP Ratan Tata: 3,800 கோடி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய ‘தனி ஒருவன்’ ரத்தன் டாடா!
இந்திய மக்கள் அனைவருமே கொண்டாடும், ரத்தினமான நல்ல உள்ளம் கொண்ட தொழிலதிபரான ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் நேற்றிரவு காலமானார். அவரது மறைவுக்கு உலகத் தலைவர்கள், இந்திய தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது இரங்கல்களை சமூகவலைதளப் பக்கங்கள் வாயிலாகத் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவில், பொதுவாக நடிகை, நடிகைகள், விளையாட்டு வீரர்களைக் கொண்டாடும் அளவிற்கு தொழிலதிபர்கள் பிரபலமானவர்களாக இல்லை. ஆனால், இதில் ரத்தன் டாடா மட்டும் விதிவிலக்கானவர். அவர், 140 கோடி இந்தியர்களின் அன்பையும் பெற்றவராக இருக்கிறார்.
டாடா நிறுவனத்தின் பொருட்களை அல்லது தயாரிப்புகளைப் பார்க்காமல் நிச்சயம் நீங்கள் ஒரு தெருவைக் கடந்து செல்ல முடியாது. அந்தளவிற்கு தனது குடும்பத் தொழிலை இன்று ஒரு சாம்ராஜ்ஜியமாக மாற்றியதில் ரத்தன் டாடாவின் பங்கு முக்கியமானது.
தனது புத்திசாலித்தனமான முடிவுகளாலும், அனுபவ அறிவாலும், தொலைநோக்கு சிந்தனைகளாலும், சமூகசேவைகளாலும் இன்று பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கும் ரத்தன் டாடா, தனது 86 வயதில், மோசமான உடல்நிலை காரணமாக நேற்று மாலை மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி நள்ளிரவு காலமானார்.
பாசத்திற்கு ஏங்கிய குழந்தைப்பருவம்
வெற்றிகரமான தொழிலதிபராக மட்டுமின்றி, தனது தொலைநோக்குப் பார்வை மற்றும் சேவைகளாலும் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரத்தன் டாடா. ஆனால், இந்த வெற்றிகளைத் தன் வசப்படுத்த அவர் கடந்து வந்த பாதை கரடுமுரடானது.
டாடா என்னும் மாபெரும் வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய ஜாம்செட்ஜி டாடாவின் தத்து பேரப்பிள்ளையான நேவல் டாடா-வின் மகனாக, கடந்த 1937ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி மும்பையில் பிறந்தார் ரத்தன் டாடா. ஆனால், அவரது 10 வயதில் பெற்றோரின் பிரிவால், ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டார். பின்னர், அவரது பாட்டி நவாஜ்பாய் டாடாவால் வளர்க்கப்பட்டார்.
இருந்தபோதும் பெற்றோரின் பாசம் கிடைக்காத சூழல் ஒருபுறம் அவரை வாட்ட, அடுத்தடுத்து அவரது பெற்றோரின் இரண்டாவது திருமணங்கள் அவரது நண்பர்கள் மத்தியில் கேலி கிண்டலுக்கு ஆளாக்கியது.
ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல், மும்பை, கதீட்ரல் மற்றும் ஜான் கானான் பள்ளி, மும்பை, பிஷப் காட்டன் பள்ளி, சிம்லா, மற்றும் நியூயார்க் நகரத்தில் உள்ள ரிவர்டேல் கண்ட்ரி பள்ளி ஆகியவற்றில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர், கார்னெல் பல்கலைக்கழகம் மற்றும் ஹார்வர்ட் பிசினஸ் பள்ளியில் தனது தொழில் தொடர்பான படிப்புகளை நிறைவு செய்தார்.
அனுபவங்களைச் சேகரித்தார்
படித்து முடித்ததும் தனது நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துவிடவில்லை ரத்தன் டாடா. 1962ம் ஆண்டு டாடா மோட்டார்ஸ் கடைத் தளத்தில் வேலை செய்யத் தொடங்கிய அவர், தனது தொழில் வாழ்க்கையை மிகவும் அடித்தளத்தில் இருந்து உருவாக்க ஆரம்பித்தார். அதன் தொடர்ச்சியாக டாடா குழுமத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்களிலும் பணிபுரிந்து அதில் அனுபவங்களைச் சேர்க்கத் தொடங்கினார்.
இறுதியில் 1971ம் ஆண்டு நேஷனல் ரேடியோ மற்றும் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு இயக்குனரானார். தொழிற்பயிற்சியிலிருந்து இயக்குனராக மாற அவருக்கு 9 ஆண்டுகள் எடுத்தது. ஆனால், அப்போதும் அவர் பின்வாங்கவில்லை. சாதாரண மனிதனின் எதார்த்த நுணுக்கங்களை புரிந்து கொள்வதில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை கொண்டவராக இருந்தார் ரத்தன் டாட்டா. அதுமட்டுமின்றி, டாட்டா குழுமம் முழுவதும் உள்ள பல்வேறு தொழில்களிலும் விலைமதிப்பற்ற அனுபவத்தையும் அவர் சேகரித்து வைத்திருந்தார்.
டாடா சன்ஸ் தலைவரானார்
இந்த சூழ்நிலையில்தான், டாடா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்து, கடந்த 1991ம் ஆண்டு பதவி விலகிய ஜே.ஆர்.டி.டாடா, தனது பதவியில் ரத்தன் டாடாவை நியமித்தார். ஜே.ஆர்.டி.டாடாவின் இந்த முடிவு, பல தசாப்தங்களாக அந்த நிறுவனங்களில் பணியாற்றிய பல தலைவர்களுக்குப் பிடிக்கவில்லை. இதனால் ஆரம்பத்திலேயே உடன் பணிபுரிபவர்களின் எதிர்ப்பை எதிர்கொண்டார் ரத்தன் டாடா.
ஆனால், தொடர்ச்சியான தனது தொழில் சம்பந்தமான முடிவுகளால் அந்த எதிர்ப்புகளை விரைவிலேயே மாற்றிக் காட்டினார் அவர். அவரது 21 ஆண்டு காலப் பொறுப்பில், டாடா சன்ஸ் நிறுவனங்களின் வருவாய் 40 மடங்குக்கும், லாபம் 50 மடங்குக்கும் அதிகமாக வளர்ந்தது. அவரது தலைமையின் கீழ், டாடா சன்ஸ் நிறுவனங்களின் ஒன்றுடன் ஒன்று ஒருங்கிணைந்த ஒட்டுமொத்த நிறுவனங்களாக நெறிப்படுத்தப்பட்டன.
டெட்லியை வாங்க அவர் டாடா டீயையும், ஜாகுவார் லேண்ட் ரோவரை வாங்க டாடா மோட்டார்ஸையும், கோரஸை வாங்க டாடா ஸ்டீலையும் நிறுவினார். இந்த நிறுவனத்தை இந்தியாவை மையமாகக் கொண்ட குழுவிலிருந்து உலகளாவிய வணிகமாக மாற்றினார். அதோடு நடுத்தர வர்க்க மக்களின் கார் கனவை நினைவாக்கும் வகையில் அவர் அறிமுகப்படுத்திய, மலிவு விலை டாடா நானோ கார் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
ரத்தன் டாடாவின் புத்திசாலித்தனமான தலைமையின் கீழ் டாடா குழுமம் அதன் உலகளாவிய தடத்தை விரிவுபடுத்தத் தொடங்கியது. சுமார் 100 நாடுகளுக்கும் மேல் விரிவடைந்தது. இதனால் இந்திய தொழில்துறைக்கு குறிப்பிடத்தக்க ஊக்கம் ஏற்பட்டது. இந்தியாவை மையமாகக் கொண்ட டாடா நிறுவனத்தை உலகளாவிய வணிகமாக மாற்றிய பெருமை ரத்தம் டாட்டாவுக்கு உண்டு.
3,800 கோடி சாம்ராஜ்ஜியம்
2022ம் ஆண்டில் அவரது நிகர மதிப்பு ரூ.3,800 கோடியாக மதிப்பிடப்பட்டது. ஐஐஎஃப்எல் வெல்த் ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில் 421-வது இடத்தைப் பிடித்தார். அதற்கும் முந்தைய ஆண்டு ரூ.3,500 கோடியுடன் 433-வது இடத்தில் இருந்தார்.
டாடா குழுமம் தனது நிறுவனங்களின் ஒட்டுமொத்த வருவாயில் 66 சதவீதத்தை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்குகிறது. ஜூலை 31, 2023ம் ஆண்டு நிலவரப்படி, டாடா குழுமம் 29 பொது வர்த்தக நிறுவனங்களை கொண்டுள்ளது. இதன் மொத்த சந்தை மூலதனம் $300 பில்லியன் ஆகும். .
வாரிசுக்கான தேடல்
தனது 75வது வயதில், அடுத்தவர்களுக்கு வழி விடும் வகையில் தனது பிறந்தநாளன்று டாடா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்து விலகினார் ரத்தன் டாடா. அதன் தொடர்ச்சியாக சைரஸ் மிஸ்திரி அவரது வாரிசாக நியமிக்கப்பட்டார். ஆனால், சைரஸ் மிஸ்திரியை நீக்குவதற்காக டாடா குழும இயக்குநர்கள் குழு மற்றும் சட்டப்பிரிவு வாக்களித்ததால், மீண்டும் ரத்தன் டாடாவே அதே பதவியை ஏற்றுக் கொண்டார். குழுவின் இடைக்காலத் தலைவராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் அவர்.
பின்னர், ரத்தன் டாடாவின் வாரிசைக் கண்டறிய ரத்தன் டாடா, டிவிஎஸ் குழுமத் தலைவர் வேணு சீனிவாசன், பெயின் கேபிட்டலின் அமித் சந்திரா, முன்னாள் தூதர் ரோனென் சென், லார்ட் குமார் பட்டாச்சார்யா ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் முடிவின்படி, 2017ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி டாடா சன்ஸ் தலைவராக நடராஜன் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டார்.
நன்கொடை கொடுத்து சிவந்த கைகள்
தொழில் சார்ந்து சமூகநலனிலும் அக்கறைக் கொண்டவராக ரத்தன் டாடா திகழ்ந்தார். கல்வி, மருத்துவம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டின் ஆதரவாளராக செயல்பட்ட அவர், நியூ சவுத் வேல்ஸ் பொறியியல் பல்கலைக்கழகத்தின் மூலம் தண்ணீர் இல்லாத பகுதிகளுக்கு தண்ணீரை வழங்குவதற்கு முயற்சிகளை முன்னெடுத்தார்.
வருடம் தோறும், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சுமார் 20 மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், டாடா கல்வி மற்றும் மேம்பாட்டு அறக்கட்டளையானது $28 மில்லியன் டாடா ஸ்காலர்ஷிப் நிதியை வழங்கி வருகிறது.
அதோடு டாடா குழும நிறுவனங்களும், டாடா தொண்டு நிறுவனங்களும் 2010ல் $50 மில்லியனை ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலுக்கு (HBS) நிர்வாக மையத்தின் கட்டுமானத்திற்காக நன்கொடையாக அளித்தன. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) கார்னகி மெலன் பல்கலைக்கழகத்திற்கு (CMU) $35 மில்லியனை நன்கொடையாக வழங்கியது. இதுவே ஒரு நிறுவனம் வழங்கிய மிகப்பெரிய நன்கொடையாகக் கூறப்படுகிறது.
2014ம் ஆண்டு டாடா குழுமம் ரூ.950 மில்லியன் மதிப்பில், மும்பையில் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்புக்கான டாடா மையத்தை (TCTD) உருவாக்கியது. இது கல்வி நிறுவன வரலாற்றில் பெறப்பட்ட மிகப்பெரிய நன்கொடையாகும்.
அல்சைமர் நோய்க்கான காரணத்தை அடிப்படையாகக் கொண்ட வழிமுறைகளை ஆய்வு செய்வதற்கும் அதன் ஆரம்பகால நோயறிதல் மற்றும் சிகிச்சைக்கான வழிமுறைகளை உருவாக்குவதற்கும் `டாடா டிரஸ்ட்ஸ்`, இந்திய அறிவியல் கழகமான நியூரோ சயின்ஸ் மையத்திற்கு ரூ.750 மில்லியன் மானியத்தை வழங்கியது.
இப்படியாக டாடா குழுமம் செய்த உதவிகளைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். ரத்தன் டாடா தனது நிறுவனங்களின் வருமானத்தை இப்படி சமூக மற்றும் பொதுநலச் சேவைகளுக்குப் பயன்படுத்தாமல் இருந்திருந்தால், தற்போது இந்தியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்திருப்பார் என அவரது கொடை எண்ணத்தைப் பாராட்டுபவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
எளிமையான வாழ்க்கை
இவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தும் தன்னை எளிமையாகவே காட்டிக் கொண்டார் ரத்தன் டாடா. இந்தியாவில் முன்னணி தொழிலதிபர்கள் பலர் அவர்களது ஆடம்பரத்தினாலேயே பிரபலமான நிலையில், அவர்களில் இருந்து வேறுபட்டு தனது சமூகசேவைகளால் மக்கள் மத்தியில் நல்ல மதிப்பைப் பெற்றார் ரத்தன் டாடா.
ரத்தன் டாடா தனது தனிப்பட்ட சேமிப்பை ஸ்டார்ட்-அப் நிறுவனங்களான Snapdeal, Teabox மற்றும் CashKaro.com, Ola Cabs, Xiaomi, Nestaway மற்றும் Dogspot ஆகியவற்றிலும் முதலீடு செய்தார்.
ஆனால், பொதுவாழ்க்கையில் கால் வைத்த இடங்களில் எல்லாம் வெற்றிக் கொடி நாட்டிய ரத்தன் டாடாவுக்கு திருமண வாழ்க்கை என்பது மட்டும் கடைசி வரை வாய்க்கவேயில்லை. தனது இளவயதில் ஏற்பட்ட காதல் தோல்வி காரணமாக, கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்து விட்டதாகக் கூறப்படுகிறது. அதனால்தான் அவருக்குப் பிறகு டாடா குழுமத்தை நிர்வகிக்கும் தலைவரை மற்றும் அவரது சொத்துக்களை நிர்வகிக்கும் வாரிசைத் தேர்ந்தெடுப்பதற்கு குழுவே அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
விருதுகளும், கௌரவங்களும்:
தன் நலன் பற்றி மட்டும் யோசிக்காமல், பொதுநலன் பற்றியும் அதிகம் யோசித்த ரத்தன் டாடாவுக்கு விருதுகள் குவிந்தன. அதில் சில குறிப்பிடத்தக்க விருதுகள் மற்றும் கௌரவங்கள் பற்றி கீழே பார்க்கலாம்...
- பத்ம பூஷன் விருதை மத்திய அரசு 2000ம் ஆண்டில் வழங்கியது.
- 2008ம் ஆண்டில் பத்ம விபூஷன் விருது மத்திய அரசால் வழங்கப்பட்டது.
- 2001ம் ஆண்டு வணிக நிர்வாகத்தின் கௌரவ டாக்டர் பட்டத்தை ஓஹியோ மாநில பல்கலைக்கழகம் வழங்கியது.
- உருகுவே ஓரியண்டல் குடியரசின் பதக்கம் உருகுவே அரசு கடந்த 2004 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.
- ஆசிய தொழில்நுட்ப நிறுவனத்தால் 2004ம் ஆண்டு தொழில்நுட்பத்தின் கௌரவ டாக்டர் பட்டமானது வழங்கப்பட்டது.
- 2005ம் ஆண்டு சர்வதேச சிறப்புமிக்க சாதனையாளர் விருது B'nai B'rith இண்டர்நேஷனல்ஸ் வழங்கப் பட்டது.
- 2005ம் ஆண்டு கௌரவ டாக்டர் ஆஃப் சயின்ஸ் பட்டத்தை வார்விக் பல்கலைக்கழகம் வழங்கியது.
- 2006ம் ஆண்டில் கௌரவ டாக்டர் ஆஃப் சயின்ஸ் பட்டத்தை இந்திய தொழில்நுட்ப கழகம் மெட்ராஸ் வழங்கியது.
- 2009ம் ஆண்டு பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் (KBE) கௌரவ நைட் கமாண்டர் விருது ராணி எலிசபெத் II கையால் வழங்கப்பட்டது.
எப்படி ரத்தன் டாடா செய்த உதவிகளை பட்டியலிட தனியாக ஒரு புத்தகமே போட வேண்டி இருக்குமோ, அதேபோல் தான் அவர் பெற்ற விருதுகளும், கௌரவங்களும் ஏராளமானவை. மேற்கூறியவை எல்லாம் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் மாதிரிதான்.
தன்னம்பிக்கை வார்த்தைகள்
தனது செயல்கள் மூலம் மட்டுமின்றி, அவ்வப்போது வார்த்தைகள் மூலமும் வளரத் துடிப்பவர்களுக்கு நம்பிக்கை உரம் விதைத்தார் ரத்தன் டாடா.
அவற்றில்,
“சரியான முடிவுகளை எடுப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் முடிவுகளை எடுக்கிறேன். பின்னர் அவற்றை சரிசெய்வேன்”,
“இரும்பை யாராலும் அழிக்க முடியாது, ஆனால் அதன் துருவால் முடியும்! அதுபோலவே, ஒரு மனிதனை யாராலும் அழிக்க முடியாது, ஆனால் அவனுடைய சொந்த மனப்பான்மையால் முடியும்”,
“வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் நம்மைத் தொடர மிகவும் முக்கியம், ஏனென்றால் ஈசிஜியில் கூட நேர் கோடு இருந்தால் நாம் உயிருடன் இல்லை”,
“மக்கள் உங்கள் மீது எறியும் கற்களை எடுத்து ஒரு நினைவுச்சின்னம் கட்ட அவற்றைப் பயன்படுத்துங்கள்...” போன்றவை பலரின் முன்னேற்றத்திற்கு உந்துகோலாக இருந்தது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
குவியும் இரங்கல்கள்
ரத்தன் டாடாவின் மறைவிற்கு, பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் திரௌபதி, கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, தொழிலதிபர் அம்பானி, ஆனந்த் மஹிந்திரா, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தற்போது டாடா குழுமத்தின் தலைவராக இருக்கும் என்.சந்திரசேகரன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் எனப் பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
ரத்தன் டாடாவின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளதாக மகாராஷ்டிரத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். அதோடு, முழு அரசு மரியாதையும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ரத்தன் டாடா மறைந்தாலும், அவர் தந்த பொருட்கள் மூலம் எப்போதும் அவர் நம் மனதில் வாழ்வார் என்பதில் சந்தேகமில்லை.