யூனியன் பேங்க் ஆப் இந்தியாவிற்கு புது சிஇஓ: யார் இந்த மணிமேகலை?
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக கனரா வங்கியின் செயல் இயக்குநர் மணிமேகலை நியமிக்கப்பட்டுள்ளார்.
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக கனரா வங்கியின் செயல் இயக்குநர் மணிமேகலை நியமிக்கப்பட்டுள்ளார்.
“பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்...” என்ற பாரதியாரின் பாடல் வரிகளை மெய்ப்பிக்கும் விதமாக ஆட்டோவில் ஆரம்பித்து விண்வெளி ஆராய்ச்சி வரை, பெயிண்டிங்கில் ஆரம்பித்து பன்னாட்டு நிறுவனத்தின் தலைமை அதிகாரி பொறுப்பு வரை ஆணுக்கு நிகராக பெண்களும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
தற்போது அரசின் யூனின் பேங்க ஆப் இந்தியாவிற்கு புதிய சிஇஓ பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். பொதுத்துறை வங்கியின் தலைமை நிர்வாக பொறுப்பில் அமரவைக்கப்பட்டுள்ள மணிமேகலை யார் என விரிவாக பார்க்கலாம்:
மத்திய அரசு கடந்த ஜூன் 2ம் தேதி, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவின் புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக (MD & CEO) கனரா வங்கியின் செயல் இயக்குநர் A. மணிமேகலையை நியமித்துள்ளது.
யார் இந்த மணிமேகலை?
மணிமேகலை பெங்களூர் பல்கலைக்கழகத்தில் மார்க்கெட்டிங் துறையில் முதுகலை வணிக நிர்வாக (MBA) பட்டம் பெற்றுள்ளார். மேலும், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் அண்ட் ஃபைனான்ஸ் நடத்திய பிரீமியம் தேர்வான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கர்ஸ் (CAIIB) தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
1988ல் விஜயா வங்கியில் தனது பணியைத் தொடங்கிய மணிமேகலை, அங்கு அவர் பொது மேலாளர், கிளைத் தலைவர், மண்டலத் தலைவர் மற்றும் கடன் வழங்குபவரின் கார்ப்பரேட் அலுவலகத்தில் பல்வேறு துறைகளின் செயல்பாட்டுத் தலைவர் போன்ற பல்வேறு தலைமைப் பொறுப்புகளை வகித்துள்ளார்.
2019ம் ஆண்டு விஜயா வங்கி பாங்க் ஆப் பரோடாவுடன் இணைக்கப்பட்டதை அடுத்து, கனரா வங்கியின் நிர்வாக இயக்குநராக மணிமேகலையை மூன்று ஆண்டுகளுக்கு அரசு நியமித்தது. இவரது பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், அரசால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது.
மணிமேகலை கான்பேங்க் ஃபேக்டர்ஸ் உட்பட நான்கு கனரா வங்கி துணை நிறுவனங்களில் இயக்குனராகவும், ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் உள்ளார்.
விஜயா மற்றும் கனரா வங்கியில் கொள்கை உருவாக்கம், மூலோபாய திட்டமிடல், நிறுவன இலக்குகளை நிர்ணயித்தல் மற்றும் ஒழுங்குமுறை அதிகாரிகளுடன் தொடர்புகொள்வது போன்ற பணிகளை மேற்கொண்டார். வணிக வளர்ச்சி மற்றும் திறம்பட மோசமான கடன் மேலாண்மை மற்றும் பல்வேறு சில்லறை கடன் மற்றும் டெபாசிட் தயாரிப்புகளை கருத்தியல், வடிவமைத்தல் மற்றும் தொடங்குதல் ஆகியவற்றிலும் முக்கிய பங்கு வகித்தார்.
விஜயா வங்கியில் பல்வேறு சந்தைப்படுத்தல் யுக்திகள் மற்றும் ஆபத்து காலத்தில் மேற்பார்வை பணிகளை மேற்கொள்வது போன்ற பணிகளுக்கு பொறுப்பு வகித்தார். கையேட்டு முறையில் இருந்து விஜயா வங்கியை முற்றிலும் கணினிமயமாக்கப்பட்ட ஆன்லைன் அமைப்பிற்கு மாற்றுவதற்கான குழுவிற்கு தலைமை வகித்துள்ளார்.
பாங்க் ஆஃப் பரோடாவுடன் விஜயா வங்கியை இணைக்கும் போது, அந்த பணிகளை மேற்பார்வையிடவும், விஜயா வங்கியின் சேவைகளை பாங்க் ஆஃப் பரோடாவுக்கு சீராக மாற்றும் பணிகளை நிர்வாகிக்கவும் தலைமை அதிகாரியாக மணிமேகலை நியமிக்கப்பட்டார்.
மணிமேகலை தனது பல ஆண்டுகால தொழில்முறை செயல்திறன் மற்றும் தகுதியின் அடிப்படையில் தனது தொழில் வாழ்க்கையின் உச்சத்தை எட்டியுள்ளார். அரசு தாமதமாக மணிமேகலையை தலைமைப் பொறுப்பிற்கு நியமித்திருந்தாலும், இந்திய வங்கிகளில் தலைமைத்துவ அளவில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கு இது ஒரு நடவடிக்கையாக இருக்கும் என பல்வேறு தரப்பினரும் வரவேற்று வருகின்றனர்.
வங்கித் துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையும், தொழிலாளர் தொகுப்பில் பெண்களின் ஒட்டுமொத்த பங்களிப்பும் குறைந்து வரும் நேரத்தில் மணிமேகலையின் நியமனம் கவனம் ஈர்த்துள்ளது.
தொகுப்பு - கனிமொழி