தித்திக்கும் லாபம் தரும் தேன் வணிகம்!
விவசாயிகளிடமிருந்து தேன் வாங்கியோ அல்லது தேனீ வளர்ப்பு மூலம் தேன் சேகரித்தோ பிராண்டிங் செய்து சந்தையில் விற்பனை செய்யலாம்.
தொழில் செய்யவேண்டும் என்கிற எண்ணம் பலருக்கும் உண்டு. தொழில் சிறப்பாக வளர்ச்சியடைந்து நல்ல லாபம் கிடைக்கவேண்டும் என்கிற நோக்கத்தை முன்னிறுத்தியே அனைவரும் தொழில் செய்வது வழக்கம்.
எந்தத் தொழிலைத் தேர்வு செய்வது என்பதுதான் தொழில்முனைவோர் தீர்மானிக்கவேண்டிய முதல் விஷயம். ஏராளமான தொழில் வாய்ப்புகள் இருப்பினும் பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தொழிலைத் தீர்மானிப்பர்.
தேன் வணிகம் மிகவும் லாபகரமானது. தேனீ வளர்ப்பு தொழிலையும் தேன் வணிகத்தையும் ஒருசேர கவனித்துக்கொள்ளலாம். இதன் மூலம் லாபம் மேலும் அதிகரிக்கும். இந்த வணிகத்தை எப்படி செய்யலாம், எவ்வளவு லாபம் கிடைக்கும் போன்ற விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம்.
தேன் வணிக வழிமுறைகள்
தேன் வணிகத்தை இரண்டு வழிகளில் மேற்கொள்ளலாம்.
விவசாயிகளிடமிருந்து தேன் வாங்கி சொந்தமாக பிராண்டிங் செய்து சந்தையில் விற்பனை செய்யலாம். அல்லது தேனீ வளர்ப்பு மூலம் தேன் சேகரித்து பிராண்டிங் செய்து சந்தையில் விற்பனை செய்யலாம்.
இதில் எந்த வழியில் வணிகத்தை மேற்கொள்ளலாம் என தீர்மானித்துக்கொள்ளவேண்டும்.
தேனீ வளர்ப்பு
தேனீ வளர்ப்பு நல்ல லாபம் தரக்கூடிய தொழில். இதற்கு அரசாங்கமும் பல்வேறு திட்டங்கள் மூலம் உதவி செய்கிறது.
உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் தேன் தேவை அதிகரித்துள்ளது. இதனால் தேன் ஏற்றுமதி செய்தும் லாபம் ஈட்டலாம். வெறும் 10 பெட்டிகளுடன் சிறியளவில் தேனீ வளர்ப்பைத் தொடங்கலாம். இதற்கு சுமார் 35,000-40,000 ரூபாய் வரை செலவாகும். தேனீக்களின் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்து லாபமும் அதிகரிக்கும். உதாரணத்திற்கு மேலே குறிப்பிட்டது போல 10 பெட்டிகளுடன் தொடங்கினால் ஓராண்டு காலத்தில் 20 பெட்டிகளுக்கும் மேல் அதிகரிக்கும்.
தேனீ வளர்ப்பின் முக்கிய நோக்கம் தேன் அறுவடைதான் என்றாலும் இதன் மூலம் பயனுள்ள இதர தயாரிப்புகளும் கிடைக்கும்.
தேன்மெழுகு, ராயல் ஜெல்லி, புரோபோலிஸ், மகரந்தம் போன்றவை இதன் மூலம் கிடைக்கக்கூடிய இதர துணை பொருட்கள். இவற்றின் சந்தை தேவை அதிகமிருப்பதால் லாபமும் அதிகம் கிடைக்கும். ஒரு கிலோ தேன் 700 முதல் 1000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
அரசாங்க மானியம்
விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் தேனீ வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் துறையை மேம்படுத்தி, உற்பத்தியை அதிகரித்து, விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கம். தேசிய தேனீக்கள் வாரியம் (NBB) நபார்ட் உடன் இணைந்து இந்தியாவில் தேனீ வளர்ப்பு வணிகத்தை ஊக்குவிப்பதற்காக நிதியுதவி செய்கிறது.
தேசிய தேனீக்கள் வாரியத்திடமோ அல்லது அதன் வலைதளத்திலோ இதுதொடர்பான தகவல்களைப் பெறலாம். மத்திய அரசாங்கம் தேனீ வளர்ப்பிற்காக 80 முதல் 85 சதவீதம் மானியம் வழங்குகிறது.
தேன் விற்பனை
தேன் மருத்துவ குணங்கள் கொண்டது. தேன் பற்றி ஆய்வு மேற்கொண்டு அதன் பலன்களைத் தெரிந்துகொள்ளவேண்டும். தேன் விற்பனை செய்ய முதலில் அதன் பலன்களைத் தெரிந்துகொள்வது முக்கியம். அப்போதுதான் அவற்றை வாடிக்கையாளர்களிடம் தெரிவிக்கமுடியும். இது தெரிந்தால் மட்டுமே வாடிக்கையாளர்கள் இதை வாங்க முன்வருவார்கள்.
லாபம்
சந்தையில் கிலோவிற்கு 1,000 ரூபாய் வரை தேன் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு வருடத்தில் ஒரு பெட்டியின் மூலம் 40 கிலோ வரை தேன் கிடைக்கும். 10 பெட்டிகளில் 400 கிலோ வரை தேன் கிடைக்கும். இவை சந்தையில் 5 லட்ச ரூபாய் வரை விற்பனை செய்யப்படும். மொத்தமாக விற்பனை செய்தால் 4 லட்ச ரூபாய் வரை கிடைக்கும். பிராண்டிங், போக்குவரத்து, பேக்கேஜிங் உள்ளிட்ட செலவுகள் போனாலும் இந்த வணிகத்தில் 20-30 சதவீதம் லாபம் ஈட்டமுடியும்.