Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

PS-1 Review: 'பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ‘பாகுபலி’ -யை எதிர்ப்பார்க்காதீர்கள்!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பல கதாப்பாத்திரங்களையும் பல்வேறு அடுக்குகளையும் கொண்ட மாபெரும் படைப்பாக உருவாக்கவேண்டும் என்பதே மணிரத்னத்தின் நோக்கம்.

PS-1 Review: 'பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ‘பாகுபலி’ -யை எதிர்ப்பார்க்காதீர்கள்!

Friday September 30, 2022 , 3 min Read

எத்தனையோ பிரபல புத்தகங்கள் திரைப்படங்களாக வருவதுண்டு. இந்தப் புத்தகங்களைப் படித்தவர்கள், அதிலும் அதிகம் விரும்பிப் படித்தவர்கள், அதே கதையை திரையில் பார்க்கும்போது சொல்லும் பொதுவாக கருத்து, “புத்தகத்தில் படித்தது சிறப்பாக இருந்தது,” என்பதே...

மணிரத்னத்தின் தலைசிறந்த படைப்பான 'பொன்னியின் செல்வன்- 1’ கதைக்கும் இது பொருந்தும். கல்கி கிருஷ்ணமூர்த்தியின் படைப்புகளில் தலைசிறந்த புத்தகமான 'பொன்னியின் செல்வன்’ வாசகர்களை வெகுவாகக் கவர்ந்த புத்தகம். மிகவும் விறுவிறுப்புடன் புத்தகத்தை கீழே வைக்கமுடியாதவண்ணம் வாசகர்களை புத்தகத்துடன் கட்டிப்போட்டும்.

Ponniyin Selvan
1950-களில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ தமிழ் இலக்கியத்தில் மிகச்சிறந்த படைப்பாக விளங்குகிறது.

ஆனால், சென்னையில் கூட்டம் நிரம்பி வழிந்த ஒரு திரையரங்கில் காலை 4.30 மணிக்கு நான் சென்றபோது, நான் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்த பொதுவான கருத்து என் மனதில் தோன்றவில்லை. ஆம், நீங்கள் வாசித்தது சரிதான்.

விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா லஷ்மி, ஷோபிதா துலிபலா, பிரபு, ஆர். சரத்குமார், விக்ரம் பிரபு, ஜெயராம், பிரகாஷ் ராஜ், ரஹ்மான் உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கும் இந்தத் திரைப்படத்தைக் காண எல்லா தலைமுறை ரசிகர்கள் திரையரங்குகளில் கூடியிருந்ததைப் பார்க்கமுடிகிறது.

பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களாக வெளியான புத்தகம். இது பின்னாளில் முதலாம் ராஜராஜ சோழராக அறியப்பட்ட அருள்மொழி வர்மனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட வரலாற்றுப் புனைவு. 2,200-க்கும் அதிகமான பக்கங்களைக் கொண்டு இந்தப் புத்தகம் சேர, சோழ, பாண்டிய மன்னர்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டியை மையப்படுத்தி, வரலாற்றையும் புனைவையும் சுவையாகக் கலந்து பிரம்மாண்டமான படைப்பாக வழங்கியிருக்கிறார் கல்கி.

பொன்னியின் செல்வன் கதை இந்தக் காலகட்டத்தில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், போர்களங்களைத் தாண்டி விதவிதமாக உருவாக்கப்பட்ட கதாப்பாத்திரங்களிலும் உரையாடல்களிலும்தான் பொன்னியின் செல்வன் கதையின் உண்மையான பலமே இருக்கிறது எனலாம்.

ponniyin selvan-2

எத்தனையோ பழங்கால சிறப்புக் கதைகள் இன்றைய நவீன உலகில் திரைப்படங்களாக எடுக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு பிருத்விராஜ், ஜோதா அக்பர் போன்றோரின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு வெளியான பத்மாவத், பஜ்ரங்கோ மஸ்தானி போன்ற திரைப்படங்களைப் போல் பொன்னியின் செல்வன் திரைப்படம் இல்லை. சொல்லப்போனால் பாகுபலி திரைப்படத்துடன்கூட இதை ஒப்பிடமுடியாது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பல கதாப்பாத்திரங்களையும் பல்வேறு அடுக்குகளையும் கொண்ட மாபெரும் படைப்பாக உருவாக்கவேண்டும். குறைபாடுகள் அதிகமின்றி தாக்கத்தை ஏற்படுத்தியதாக உருவாக்கவேண்டும். வழக்கமான இதிகாசக் கதைகள் மகிழ்ச்சியாக நிறைவடைந்துவிடுவது போல் இல்லாமல், கதாப்பாத்திரங்களுக்கு உயிரூட்டவேண்டும். இவையே தனது நோக்கம் என்று மணிரத்னம் பல நேர்காணல்களில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த புதினத்தை திரைப்படமாக்க எத்தனையோ தயாரிப்பாளர்கள் முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால், பட்ஜெட் காரணமாக இந்த முயற்சிகள் வெற்றியடையவில்லை.

மணிரத்னம்கூட 1994-2011 ஆண்டுகளிடையே இரண்டு முறை இந்தப் புதினத்தை திரைப்படமாக்க முயற்சி செய்தார். ஆனால், முடியாமல் போனது. இறுதியாக கோவிட்-19 பெருந்தொற்று ஏற்படுத்திய நெருக்கடிகளுக்கு இடையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் புரொடக்‌ஷன் வேலைகள் நிறைவடைந்திருக்கின்றன.

கல்கியின் இந்த சிக்கலான, பிரம்மாண்டமான கதைக் களத்தை புரிந்துகொள்வதற்கு முன்பே, நடிகர்கள் எப்படி கதையுடன் இணக்கமாக பயணித்துச் செல்கிறார்கள் என பாராட்டுவதற்கு முன்பே, ரவி வர்மாவின் ஒளிப்பதிவு உங்களை மெய்மறக்கச் செய்துவிடும். ஒவ்வொரு காட்சியும் ஆழமான சிந்தனைகளுடன் சோழ ராஜ்ஜியத்தை மிக அழகாக நம் கண் முன்னே விரியச் செய்கிறது.

பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் 2 இரண்டின் படப்பிடிப்புகளும் வெறும் 150 நாட்களில் நிறைவடைந்தது என்பது நம்பமுடியாத அளவிற்கு ஆச்சரியமூட்டுகிறது.

vikram

இந்த அளவிற்கு ஒரு பிரம்மாண்டமான திரைப்படம் எடுப்பதற்கு பட்ஜெட் மட்டுமே முக்கிய சவால் இல்லை. VFX தொழில்நுட்பம் இல்லாமல் இது சாத்தியமாகி இருக்காது. உண்மையான கதைக் களத்தை அதே காலகட்டத்தில் நடப்பது போல் சித்தரிப்பதற்கு விஷுவல் எஃபெக்ட் கைகொடுத்திருக்கிறது.

ஒளிப்பதிவு மட்டுமல்ல, காஸ்ட்யூம் டிசைனர் ஏகா லகானி கதையின் அமைப்பையும் சூழலையும் சரிவர புரிந்துகொண்டு செயல்பட்டிருக்கிறார். வரலாற்று படைப்பை கச்சிதமாக வழங்குவதற்கு ஆடை அணிகலன்கள் மட்டுமல்ல ஆயுதங்களும் எந்த ஒரு குறையும் இல்லாமல் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஏ.ஆர் ரஹ்மானின் இசை மிகச்சிறப்பாக உள்ளது. பொன்னி நதி, சோழா சோழா, அலைகடல் போன்ற பாடல் வரிகள் நம்மை கட்டிப்போட்டுவிடுகிறது.

ஆழமான ஆக்‌ஷன் காட்சியமைப்புகள் உண்மையான கதைகளத்துக்கு நம்மை அழைத்துச் சென்றுவிடுகிறது.

திரைப்படம் உண்மையான கதைக்களத்துடன் ஒன்றியிருக்கிறதா? அப்படித்தான் மணிரத்னம் இதை உருவாக்கி வழங்கியிருக்கிறாரா?

கல்கியின் புத்தகத்தில் இருக்கும் மையக்கருத்து திரைப்படத்துடன் ஒன்றி இருந்தாலும் புத்தகத்திற்கும் திரைப்படத்திற்கும் இடையில் வித்தியாசம் இருப்பதும் உண்மைதான். உதாரணத்திற்கு கதையில் வரும் கதாப்பத்திரத்திற்கும் திரையில் வரும் கதாப்பத்திரங்களும் வயது வித்தியாசம் இருப்பதைக் காணலாம். இருப்பினும் இது கதையை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.

ponniyin selvan-3

ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வல்லவராயன் வந்தியத்தேவனாக கார்த்தியும் திரையில் தோன்றி அசத்துகிறார்கள். ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா இருவருமே நேர்த்தியான அழகுடன் கதையில் ஒன்றிவிடுகிறார்கள். வழக்கமான ஆண் கதாப்பாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் இருப்பது போல் இல்லாமல் பெண் கதாப்பாத்திரங்களும் இணையான முக்கியத்துவம் பெறுகின்றனர்.

படத்தில் பலம்:

  • ரவிவர்மாவின் ஒளிப்பதிவு பாராட்டத்தக்கது.
  • கல்கியின் புத்தகம் திறம்பட காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கதாப்பாத்திரங்கள் உருவாக்கப்பட்ட நோக்கம் மாறாமல் திரையில் வழங்கப்பட்டுள்ளது.
  • விக்ரம், கார்த்தி இருவரின் அபார நடிப்பு.

படத்தின் பலவீனம்:

  • பழங்கால கதைக்களம் என்பதால் தூய தமிழில் உரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. பல நகைச்சுவை உரையாடல்கள் மக்களுக்கு சரிவர சென்று சேரவில்லை.
  • திரைப்படத்தின் முதல் பாதியில் பெரும்பாலும் உரையாடல்களே ஆக்கிரமித்திருந்த நிலையில் இரண்டாம் பாதியில் ஆக்‌ஷன் காட்சிகள் அதிகமிருந்தன.
  • புத்தகத்தை விரும்பிப் படித்த வாசகர்கள் அவர்களுக்கு மிக நெருக்கமான காட்சிகள் இதில் இடம்பெறவில்லை என்கிற ஏமாற்றத்தை வெளிப்படுத்தினாலும்கூட கதையின் மையக்கருத்தில் எந்தவித மாறுதலும் இல்லை எனலாம்.

மொத்தத்தில் நீங்கள் கல்கியின் புதினத்தின் ரசிகராக இருந்தாலும் இல்லாமல் போனாலும் பொன்னியின் செல்வன் பாகம் 1 நிச்சயம் பார்க்கவேண்டிய திரைப்படம்.

தமிழில்: ஸ்ரீவித்யா